Chapter 09
‘இப்பவாவது எதுக்கு வந்திருக்கேன்னு சொல்லேண்டா..’
மனதுக்குள் திட்டியபடி.. காபியை நீட்டினாள் சிவகாமி.. அதை அறிந்தும் அறியாதவனைப் போல என்னவோ காலம் காலமாக அவளை அறிந்திருப்பதைப் போன்ற முகபாவத்துடன் புன்னகை மன்னனாய் காபி கப்பை எடுத்துக் கொண்டான் மோகன்..
“காபி நல்லாயிருக்குங்க..”
அவனின் பாராட்டுதலில் முகம் மலராமல் இதற்கெல்லாம் வேறு ஆளைப் பார் என்ற கடினமான முக பாவத்துடன் மகளின் பக்கத்தில் உட்கார்ந்தாள் சிவகாமி.. அவள் முகத்தில் அவளுடைய கணவரைப் போல அவள் ஏமாளியல்ல என்ற செய்தி எழுதி ஒட்டப் பட்டிருந்தது..
மோகனா அதை கண்டு கொள்வான்..? வெகு சுவாதீனமாக காபியை உறிஞ்சியபடி இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னென்ன திட்டங்கலை அமல்படுத்த வேண்டும் என்ற அவனது கருத்துக்களை பூபாலனிடம் எடுத்துரைத்து விட்டு காலி காபிக் கப்பை டீப்பாயின்மீது வைத்தான்..
“உங்கப்பா என்ன ஃபைனான்ஸ் மினிஸ்டரா..? நாளைக்கே இவன் சொன்னதை வைச்சு புது பட்ஜெட்டை ரெடி பண்ணி பார்லிமெண்டில தாக்கல் செய்யப் போறாரா..? ரோதனடி.. சுசி..” மகளுக்கு கேட்கும் படி முணுமுணுத்தாள் சிவகாமி..
அவள் ரோதனை என்று சொல்வது யாரை என்ற சந்தேகம் சுசரிதாவின் மனதில் எழுந்தது.. பகல் முழுவதும் பாடம் எடுத்து விட்டு மாலையில் அலுத்து சலித்து வீடு திரும்பியிருப்பவள் வீட்டைக் கவனிப்பாளா.. இல்லை.. இது போன்ற ரம்பத்தை பொறுமையாக காது கொடுத்து கேட்பாளா..?
அதனால் அதை இழுத்து விட்டிருக்கும் மகளையும் அவள் ரோதனை என்று சொல்ல வாய்ப்பிருக்கிறதுதானே..
இதை இழுத்து விட்டிருக்கும் மோகனை மனதார சபித்தாள் சுசரிதா..
‘இவனை யாரு என்வீடு வரைக்கும் வரச் சொன்னது..?’
இதுதான் வரச் சொன்னது என்று அவளிடம் சொல்லாமல் சொல்வதைப் போல சுசரிதாவின் சம்பள கவரை எடுத்து பூபாலனிடம் நீட்டினான் மோகன்..
“உங்க டாட்டர் சேலரி கவரை மறந்து போய் டேபிளில வைச்சுட்டு கிளம்பி வந்துட்டாங்க சார்.. பக்கத்து சீட்டிலதான் நான் வொர்க் பண்றேன்.. யதேச்சையா பாக்கறேன்.. இவங்க சம்பளகவர் இருக்கு.. இவங்களைக் கூப்பிட்டா.. திரும்பிப் பாக்காம வீட்டுக்கு வர்ற அவசரத்தில ஓடி வந்திட்டாங்க.. ஆபிஸ் வாசலிலே இருந்து உங்க டாட்டரை கூப்பிட்டுக்கிட்டே ஃபாலோ பண்ணி உங்க வீட்டு ஹால் வரைக்கும் வந்திட்டேன் சார்.. கடைசி வரைக்கும் இவங்க திரும்பியே பார்க்கலை.. என்னவோ கண்ணுக்கு ரெண்டு பக்கமும் கருப்புபட்டையைக் கட்டிக்கிட்டு ரோட்டை மாத்திரமே பார்த்துக்கிட்டு குதிரை ஓடும்ல.. அதைப் போல திரும்பிப் பார்க்காம.. அக்கம் பக்கம் நின்னு பேசாம.. வீட்டைப் பாத்து ஓடி வந்திட்டாங்க..”
மோகனின் பேச்சில் என் மகள் இப்படித்தான் என்ற பெருமை பொங்க மகளை பார்த்துக் கொண்டார் பூபாலன்..
“இப்படியா சுசி பண்ணுவ..? முதல் மாதச் சம்பளத்தை தொலைச்சுட்டு நின்னா எவ்வளவு பெரிய அபசகுனம் தெரியுமா..? அதோட வேல்யூ உனக்குத் தெரிய வேணாமா..? நானெல்லம் விடியறப்ப இருந்தே அலர்ட்டா இருந்தேன் தெரியுமா..? சம்பளம் வாங்கினதும் பொக்கிசத்தைப் பாதுகாக்கிறதைப் போல அவ்வளவு பாதுகாப்பா அதை வீடு கொண்டு வந்து சேர்த்தேன்.. எனக்கு மகளா பொறந்துட்டு நீ இப்படி கேர்லெஸ்ஸா இருந்திருக்கிறயே.. கடைசியில உன்னோட சம்பளப் பணத்தை எடுத்து வந்து கொடுத்துட்டுப் போக வந்தவரைப் பார்த்து ‘ரோதனை’ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன்.. வாயைத் தான் கழுவனும்.. இப்படி செஞ்சிட்டயே…”
தாழ்ந்த குரலில் ஆதங்கப்பட்டாள் சிவகாமி.. சுசரிதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. அம்மா அவனை ரோதனையென்று சொல்லவில்லை யென்பதில் ஒரு அற்ப சந்தோசம் நேரம் காலம் பார்க்காமல் அவள் மனதில் வந்து போனது..
“தேங்க்யு சார்.. தேங்க் யு வெரிமச்..”
“சார்.. என் பெயர் மோகன்.. என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம்.. சார்ன்னு சொல்லாதீங்க.. கஷ்டமா இருக்கு.. நீங்க பெரியவங்க.. உங்க வாயாலே என்னைப் போய் சார்ன்னு சொல்லலாமா..?”
மோகனின் பணிவில் சுசரிதாவுக்கு மயக்கம் மயக்கமாக வந்தது.. கால் மேல் கால் போட்டபடி பேசும் அந்த தெனாவெட்டுக்காரனின் வாயிலிருந்தா இப்படியாகப் பட்ட பணிவான பேச்சுக்கள் வந்து விழுகின்றன..?
“அடடா.. என்ன பணிவு..! என்ன மரியாதை..! என்ன நேர்மை..! என்ன உண்மை..! மனுசர்ன்னா நீங்கதான் மனுசர்..” பூபாலன் உணர்ச்சி வசப்பட்டார்..
அவர் உணர்ச்சி வசப்பட்டதைக் கூட சுசரிதாவினால் பார்க்க முடிந்தது.. ஆனால் அவரைப் போன்ற குணவானின் வாயால் மோகனை
‘என்ன உண்மை..!’ என்று வியந்ததைத்தான் அவளால் கேட்க முடியவில்லை..
‘அப்பா.. உண்மைக்கும் இவனுக்கும் ரொம்ப.. ரொம்ப தூரம்ப்பா.. ஏணி வைச்சாக்கூட எட்டாது..’ தலையைப் பிடித்துக் கொண்டாள்..
“எனக்கு உங்க வீட்டு அட்ரஸ் தெரியாதுங்க.. உங்க டாட்டர் கூடக்கூட அவ்வளவா பேசினதில்ல..”
“ஆமாமா.. அவ இப்பத்தான வேலையில சேர்ந்திருக்கா.. உங்களுக்குள்ள அவ்வளவா பழக்கம் இருந்திருக்காதுதான்..”
மிகப்பெரிய மனபாரம் இறங்கிய உணர்வுடன் சொன்னார் பூபாலன்.. சிவகாமியோ அதை வெளிப்படுத்து வதைப் போல அகலமாக புன்னகை செய்தாள்.. அது நேரம் வரை சிவகாமியின் இதழ்களில் சின்னதான சிரிப்பைக் கூட பார்க்க முடியவில்லை என்பதை மனதுக்குள் குறித்துக் கொண்ட சுசரிதாவிற்கு.. மோகனின் சாகசமான பேச்சின் மீது கொலைவெறி ஏற்பட்டது..
‘இவனா என்கூட பேசினதில்ல..?’
கண்ணாடி அலமாரிக்குள் இருக்கும் வெண்கல சிலையை கைப்பற்றி அவன் தலையில் ஒரு போடு போடலாமா என்று யோசித்தாள்..
அப்படிச் செய்தால் அவள் வீட்டு ஆள்களே அவளை வீடு கட்டி அடித்து விடுவார்கள் என்பதினால் அந்த யோசனையை கைவிட்டாள்..
அவன்தான் அவள் மறந்து (?) விட்டு வந்த சம்பளக் கவரை எடுத்துக் கொண்டு வந்து தர வீடு வரை விலாசம் விசாரித்து வந்திருக்கிறானே.. அவனுக்கு ஒன்று என்றால் அவளுடைய வீட்டைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டி விட கூடவிட மாட்டார்களா..?
எங்கே போகும் இந்த பாதை என்பதைப் போல.. அவனது பொய்யும்.. புனை சுருட்டும் எதுவரை போகிறது என்பதை அறிய அவள் மௌனம் காத்தபடி அவனை பார்த்தாள்..
மின்வெட்டும் நேரத்தில் அவள் பார்வையை சந்தித்து மீண்டது அவன் பார்வை..
‘அதானே பார்த்தேன்.. இந்தப் பூனையாவது சைவப் பூனையா மாறுகிறதாவது..’ அவள் இதழ் வளைந்து சுழித்தது..
அதையும் அவனது மின்வெட்டும் ரகசியப் பார்வை தொட்டு விட்டுப் போனது.. அவளுக்கு சிலிர்ப்பு ஓடியது..
“இந்தக் காலத்தில யாருங்க இப்படி இருப்பாங்க..?” பூபாலன் மோகனைப் பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தார்..
‘ஆமாமா.. இவனப் போல யாராலேயும் இருக்க முடியாதுதான்.. வாயைத் திறந்தா பொய்தான்.. இவனளவுக்கு யாரு பொய் சொல்லுவாங்க..?’ அவள் உதட்டைக் கடித்தாள்..
மோகனால் அவள் மனதை படிக்க முடிந்தது.. அவளை கடுப்பேற்றி விட அவன் பிரியம் கொண்டான்.. அறியாப் பிள்ளை போல முகத்தை வைத்தபடி..
“அதில பாருங்க சார்..” என்று ஆரம்பித்தவன் கடைக் கண்ணால் சுசரிதாவைப் பார்த்துக் கொண்டான்..
அவன் எதில் பார்க்கச் சொன்னான் என்று தெரியாமல் பூபாலன் குழம்பிக் கொண்டிருக்க.. சுசரிதா அவனை பார்த்து வைத்தாள்..
“நான் லேடிஸ்கிட்ட அவ்வளவா பேசினதில்லைங்க.. என் அம்மா.. தங்கை.. இவங்கதான் நான் முகம் பாத்துப் பேசற லேடிஸ்..”
மோகன் சொல்லச் சொல்ல.. சுசரிதாவிற்கு நெஞ்சுவலியே வந்து விட்டது..
‘அடப்பாவி..’ என்று மனதுக்குள் அலறினாள்..
“ஆஹா.. ஆஹா..” பூபாலன் பேச வார்த்தை வராமல் மகிழ்ந்து கொண்டிருகக மோகன் சுசரிதாவின் ரத்தத்தின் கொதி நிலையை அதிகப்படுத்தும் யத்தனத்தை தொடர்ந்து மேற்கொண்டான்..
“வேலைக்குன்னு போயாச்சு.. நாலு லேடிஸ் மத்தியில வேலை பார்த்துத்தானே ஆகனும்..? முடியாதுன்னு வீட்டுக்கு ஓடி வந்திர முடியுமா..? உத்தியோகம் புருச லட்சணமாச்சுங்களே..”
“ஆமாமா..” பூம்பூம் மாடானார் பூபாலன்..
அவன் எதற்காக புருசலட்சணத்தைப் பற்றிப் பிட்டுப் பிட்டு வைக்கிறான் என்பது சுசரிதாவிற்கு புரிந்துதான் இருந்தது..
அவன் ‘சுந்தர புருசன்..’ என்று சொன்னதற்கு அவள் சண்டைக்கு வந்தாளாம்.. அதனால் ‘புருசன்’ என்றதை தமிழில் ‘ஆண்’ என்றே புரிந்து கொள்வார்கள் என்பதை அவளுக்கு மீண்டும் தெளிவு படுத்துகிறானாம்..
“அதனாலே வேற வழியில்லாம லேடிஸ்கிட்ட பேச வேண்டி வந்தா முகம் பார்க்காம பேசிட்டு என் வேலயப் பாக்கப் போயிருவேன் சார்..”
“பிள்ளைன்னா நீங்க பிள்ளை..”
எதிர்வீட்டு டீன் ஏஜ் பெண்ணிற்கு டாட்டா காட்டியபடி வீட்டுக்குள் வந்த சுரேஷை பார்த்தபடி பல்லைக் கடித்தார் பூபாலன்..
‘ஆரம்பிச்சுட்டாரா..?’
சுரேஷின் பார்வையில் ‘யார் இந்த விரோதி..?’ என்ற கேள்வி தொக்கி நின்றதில்..
“இவர் உன் அக்காகூட வேலை பார்க்கிறவர்டா சுரேஷ்” என்று அறிமுகப் படுத்தி வைத்தாள் சிவகாமி..
“வெறும் கோ-வொர்க்கர் மட்டுமில்ல.. நேர்மையின் சிகரம்.. பண்பாடின் அடையாளம்.. உண்மையின் உறைவிடம்.. முக்கியமா.. பெண்கள் இருக்கிற திசைப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்காத தங்கக் கம்பி.. ம்ஹீம்.. இவரைப் பெத்தவங்க கொடுத்து வைச்சவங்க..”
பூபாலன் எதிர் வீட்டு மாடியில் அந்த டீன் ஏஜ் பெண் இன்னமும் நின்று கொண்டிருக்கிறாளா என்று ஜன்னல் வழி பார்த்தார்.. அவர் கணிப்பு பொய்க்கவில்லை.. அந்தப் பெண் அங்கேதான் நின்று கொண்டிருந்தது..
“பெண்கள் இல்லாத திசை எதுப்பா..?” என்று கேட்ட சுரேஷை மோகனுக்குப் பிடித்துப் போனது..
‘இவன் நம்மாளு..’ அவன் விரோதியைப் போல பார்த்த சுரேஷை சிநேகிதத்துடன் பார்த்தான்..
சுசரிதாவின் செவிகளில்..
‘பதினாறு வயது வந்து..
மயிலே..! மயிலே..!
என்னைப் பாடாய் படுத்துதடி..
மயிலே..! மயிலே..!’
என்ற பாடல் ஒலித்தது.. அவள் பல்லைக் கடித்தாள்..
‘இவன் பெண்களின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டானாம்..’
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.