Chapter 11

0Shares

“மெல்ல.. கடல் போல முழிச்சுப் பாக்க வேணாம்.. நான் எப்படி ஒரே வாரத்தில உன் வேலைகளை முடிச்சு வைச்சேன்னு நினைக்கிற..?” அவன் காருண்யத்துடன் கேட்டான்..

“எப்படி..?” அறியாக் குழந்தை போல அவள் கேட்டாள்..

அவளின் அந்த அறியாமையில் அவன் மனம் நனைந்தது..

“உன் வேலைகளை ஏறக்குறைய நீ முடிச்சு வைச்சிருந்த சுசரிதா.. உனக்கே அது தெரியலை..” அவன் சிரித்தான்..

“நிஜமாவா..?” அவள் முகத்தில் வெளிச்சம் பரவியது..

“இதில் பொய் சொல்லலை.. நீ முடித்து வைத்திருந்தது நிஜம்தான்.. பட்.. எந்த பிகரை 

எந்தக் காலத்தில போஸ்ட் பண்ணனும்கிறது மட்டும் உனக்குச் சரியாத் தெரியலை.. சில பிகர் இடம் மாறிப் போஸ்டாகியிருந்துச்சு.. அதனாலதான் டோட்டலா எல்லா ஸ்டேட்மென்ட்ஸீம் உனக்கு டேலி ஆகலை..”

“நீங்க மட்டும் டேலி பண்ணிட்டிங்களே..”

“உன் இடமாற்று தோற்றப் பிழையை மட்டும் சரி செய்தேன்.. போக வேண்டிய இடங்களுக்கு அந்தந்த பிகர் போனதும் பிராப்ளம் சால்வ் ஆகிடுச்சு.. ஸ்டேட்மென்ட்ஸ் ரெடியாகிருச்சு.. ஜஸ்ட் ப்ளஸ் அன்ட் மைனஸ்தான்.. மத்தபடி பெரிசா எதையும் வெட்டி முறிக்கலை..”

“தேங்க்ஸ்..” உண்மையான குதூகலத்துடன் சொன்னாள் சுசரிதா..

அதில் அவன் மனம் கனிந்தது.. ஆதுரத்துடன் அவளைப் பார்த்தான்..

“நீ எப்பவும் இதே போலவே சிரிச்சுக்கிட்டு இருக்கனும் சுசரிதா.. அது நீ வேலை செய்ததுக்கான சம்பளப் பணம்தான்.. உரிமையோடு எடுத்துக்க.. இனிமே இப்படி தொட்டதுக்கெல்லாம் ரோசப்பட்டு கோபப்படாதே..”

“நீங்களும் இப்படி சீண்டி விட்டு வேடிக்கை பார்க்காதீங்க..”

“பாக்கலாம்..”

“அப்ப என் பதிலும் ‘பாக்கலாம்..’தான்..”

“ஊஹீம்..?”

அவன் வாய் விட்டுச் சிரித்தபடி அவனுடைய இரண்டு சக்கர வாகனத்தில் ஆரோகணித்தான்.. அவளுக்கு கையசைத்து விட்டு காற்றை விட வேகமாக பறந்தான்..

தெரு முனையில் அவன் மறையும் வரை கையசைத்தபடி நின்றிருந்த சுசரிதாவிற்கு மனம் மிக லேசானதாக மாறியிருந்தது..

அன்று முழுவதும் அவளை மலை போல அழுத்திக் கொண்டிருந்த மன பாரத்தை கரைத்து விட்டு அவளை இறகை விட லேசானவளாக மாறி குதூகலத்தில் பறக்க வைத்து விட்டுப் போய்விட்ட அந்த பொய்காரனுக்கு அவள் மனம் நன்றி சொன்னது..

‘யாரவன்..? அந்த மாயவன்..!’

அவள் மனம் ஒற்றை வரியில் கவிதையை சிந்தியது.. முதல் மாதச் சம்பளம் இனி அவள் சொந்தம்.. மனதில் சந்தோச மழை பொழிய ஏதோ ஒரு பாடலை ஹம் பண்ணியபடி அவள் வீட்டுக்குள் போனாள்..

“என்னவோ காலையில ஆசை காட்டிட்டுப் போனயே.. சர்ப்ரைஸ்கிப்ட் கொடுக்கிறன்னு.. இப்படி சம்பளப் பணத்த கோட்டை விட்டுட்டு வர்றவதான் சர்ப்ரைஸ் கிட்ட கொடுக்கப் போறியா..?” சோபாவில் ஏட்டிக்குப் போட்டியாக சரிந்து.. தலையை கீழேயும் கால்களை சோபாவின் முதுகுப் பகுதியிலும் தொங்க விட்டபடி டிவியின் ரிமோட்டை நோண்டிக் கொண்டிருந்த சுரேஷ் கேட்டான்..

“அவளே சம்பளப் பணத்தை விட்டுட்டு வந்துட்டமேங்கிற பதட்டத்தில் இருந்து இப்பத்தான் வெளியே வந்திருக்கிறா… அவளப் போயி வம்புக்கு இழுக்கறியேடா..” சிவகாமி மகனை கடிந்து பேசினாள்..

“கையில பணமிருந்தாலும் இவ சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கிக் கொடுத்துட்டுத்தான் வேற வேலை பார்ப்பா..” என்றான் சுரேஷ்…

“வாங்கிக் கொடுப்பேண்டா.. இன்னைக்கு சம்பளப் பணத்தை பூஜையறையிலே வைச்சுக் கும்பிட்டுட்டு நாளைக்கு அதில இருந்து பணத்தை எடுத்து செலவளிக் கலாம்ன்னுதான் ஏற்கனெவே பிளான் பண்ணியிருந்தேன்..” தம்பிக்கு சமாதானம் சொன்னாள் சுசரிதா..

“எங்கேடி உன் புள்ள..?”

உள்ளேயிருந்து வந்த பூபாலன் சோபாவின் முதுகுப் பகுதியில் தொங்கிய கால்களைக் கண்டதும் பல்லைக் கடித்தார்..

“இவனைப் பாரு.. தலை இருக்க வேண்டிய கால் இருக்கு.. கால் இருக்க வேண்டிய தலை இருக்கு.. ஏண்டா.. இப்படித் தலைகீழா படுத்துக்கிட்டு யோகாசனம் பண்ணினாலாவது உருப்படியா இருக்கும்.. இப்படிப் பண்ணினா என்னடா பிரயோசனம்..?”

“நீங்கதானேப்பா பெண்கள் இருக்கிற பக்கம் தலை வைச்சுப் படுக்கக் கூடாதுன்னு சொன்னீங்க..?”

“அதுக்கு..?”

“இப்படி எக்குத்தப்பா படுத்தால்தான் எந்த திசையில தலை வைச்சிருக்கோம்ன்னு தெரியாதுப்பா..”

பூபாலன் பதில் பேச முடியாமல் பல்லைக் கடித்தபடி வாசல் பக்கம் காற்று வாங்கப் போனார்.. சிவகாமி மகள் கொடுத்த சம்பளக் கவரை பூஜையறையில் வைத்து வணங்கி எடுத்துக் கொடுத்தாள்..

“நீங்களே பத்திரமா வைச்சிருங்கம்மா.. நாளைக்கு வாங்கிக்கறேன்..” என்று சொன்ன சுசரிதா தம்பியின் தலைமுடியை செல்லமாக கலைத்து விட்டு..

“நீ இருக்கியேடா.. ஸ்வீட் ராஸ்கல்.. அப்பாவை இப்படியாடா டென்சனாக்குவ..” என்று செல்லமாக கடிந்தாள்..

“அவர் மட்டும் நான் எங்கே போறேன்.. வாரேன்னு.. துப்பு துலக்கிக்கிட்டே இருக்கலாமா..?” என்றான் சுரேஷ்..

சுசரிதாவின் மனம் மட்டுமல்ல.. அப்போது வீட்டை நோக்கிப் போய் கொண்டிருந்த மோகனின் மனமும் லேசாகத்தான் இருந்தது..

சுசரிதாவின் மலர்ந்த முகமே அப்போது அவன் மனதில் நின்றது.. அந்தப் பெண்ணின் முக வாட்டமும்.. மலர்ச்சியும் எதற்காக தன்னை இந்த அளவுக்குப் பாதிக்கின்றது என்று அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்..

அவன் அடிக்காத லூட்டியா..? அதில் முகம் கூம்பும் பெண்களின் மன உணர்வுகளைப் பற்றி ஒருநாளும் அவன் கவலை கொண்டதில்லையே.. இன்று மட்டும் என்ன வந்தது..?

தெருமுனையில் அவன் வண்டி திரும்பிய போதே- வாசலில் நின்று பக்கத்து வீட்டு மைதிலியுடன் கதை பேசிக் கொண்டிருந்த கார்த்திகாவை பார்த்து விட்டான்..

“அட.. கதை இப்படிப் போகுதா..?” என்று மைதிலியிடம் கேட்டபடி திரும்பிய கார்த்திகாவும் மகனைப் பார்த்து விட்டாள்..

“மோகன் வந்துட்டான்..” என்றாள்..

வாசலில் வண்டியின் டயர்கள் தேய பிரேக் போட்டு நிறுத்தியமோகன் மைதிலியை பார்த்து…

“ஹாய் ஆண்ட்டி..” என்றான்..

“வேலை முடிஞ்சிருச்சா மோகன்..” என்றாள் அவள்.

“அது முடிஞ்சா நமக்கென்ன.. முடியாட்டி நமக்கென்ன.. டான்னு ஆறடிச்சா கிளம்பி வீட்டுக்கு வந்துர வேண்டியது தானே..”

மோகன் நமட்டுச்சிரிப்புடன் சொல்லி மைதிலியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டான்.. மைதிலியின் கணவர் மளிகைக் கடைவைத்திருந்தார்.. மகனோ ஆட்டோ மொபைல் ஷாப் வைத்திருந்தான்.. நல்ல வருமானம்தான் என்றாலும்.. அவர்கள் வீட்டுக்குத் திரும்ப இரவு பத்து மணிக்கு மேலாகி விடும்.. காலையிலும் எட்டு மணிக்கே கடை திறக்க வேண்டும் என்று ஓடி விடுவார்கள்.. வாரத்தில் ஒருநாள்தான் விடுமுறை.. அந்த ஒருநாளிலும் தூங்கியே பொழுதைக் கழிப்பதால் மைதிலியின் மருமகள் அடிக்கடி கணவனுடன் சண்டை போட்டு.. பிறந்த வீட்டுக்கு பெட்டியைக் கட்டி விடுவாள்..

“இதெல்லாம் எத்தனை நாளைக்கு ஓடும்ன்னு நினைக்கிற கார்த்திகா.. தாய் தகப்பன் கை ஓங்கியிருக்கிற வரைக்கும் தான் ஓடும்.. அதுக்குப் பின்னால இவ தானா இந்த வீட்டில முடங்கப் போறா.. நான் பாக்காத தாய்வீடா.. ம்ஹீம்.. நான் ஆரம்பிச்சேன்.. என் மருமக கன்டினியூ பண்றா..” மைதிலி பெருமூச்சு விடுவாள்..

“நீதான் அவளுக்கு புத்தி சொல்லக் கூடாதா..?” என்று கார்த்திகா கேட்டால்..

“இவமேல என்ன தப்பிருக்குன்னு புத்திசொல்லச் சொல்ற கார்த்திகா.. தப்பெல்லாம் என் மகன் மேலதான்..” என்று நியாயமாக பேசுவாள்..

“பெத்தவ… நீயே இப்படிப் பேசினா எப்படி மைதிலி..?”

“பெத்தவங்கிறதுக்காக உள்ளதை பேசக் கூடாதுன்னு இருக்கா.. காலையிலே ஓடிப்போறான்.. நடுஜாமத்திலே தூங்க வர்றான்.. மத்த நாளிலதான் இப்படின்னா.. ஞாயித்துக்கிழமையில நாள் பூராவும் தூங்கித் தீர்க்கிறான்.. மத்த நாளில உழைச்சதுக்கு ரெஸ்ட் எடுத்துக்கிறானாம்.. இப்படி இருந்தா எந்தப் பெண்டாட்டி தான் பொறந்த வீட்டைப் பார்த்து ஓடாம இருப்பா..?”

“யாருக்கா உழைக்கிறாப்புல..? குடும்பத்துக் காகத்தானே உழைக்கிறாப்புல..”

“அது ஒரு அளவுக்குத்தான் கார்த்திகா.. வயசு போனா திரும்ப வருமா..? பணங்காசை எப்ப வேணும்னாலும் சம்பாதிச்சுக்கலாம்.. வயசு..? அதைச் சம்பாதிக்க முடியுமா..? எங்ககிட்ட பணமில்லையா..? வசதியில்லையா..? கட்டிக்கிட்ட பொண்டாட்டி முகத்தப் பார்த்து ஒத்த வார்த்தை பேச முடியாத உழைப்பு என்னத்துங்கிறேன்..”

“விடு மைதிலி.. வியாபாரம்ன்னா அப்படித்தான் இருக்கும்..”

“ம்ஹீம்.. உனக்கென்ன கார்த்திகா.. உன் புருசன் கலெக்டர் ஆபிசில ஆபிசரா இருக்கார்.. மகன் சென்ட்ரல் கவர்ண்மெண்டில வேலை பாக்குது.. மாதச்சம்பளம்.. எட்டு மணிநேர வேலை.. மாதத்துக்கு ரெண்டு நாள் லீவு.. போதாக்குறைக்கு வருச லீவு வேற.. நீயும் கொடுத்து வைச்சவ.. உனக்கு வரப் போற மருமகளும் கொடுத்து வைச்சவ..”

மைதிலி விடும் பெருமூச்சில்.. அவள் காலடி மண்ணை எடுத்து கணவருக்கும் மகனுக்கும் சுற்றிப் போடுவாள் கார்த்திகா..

“கடன்காரி.. காரும் பங்களாவும்.. வைரமுமா பணத்தில புரள்ரா.. அள்ளி அள்ளி செலவளிக்கிறா.. எவ்வளவுதான் செலவளிச்சாலும் ஏன்னு கேட்காத வீட்டு ஆம்பளைக.. என்னை மாதிரியா..? ஒற்றை ரூபாயை செலவளிச்சாலும் ஒன்பத்திரண்டு கணக்கு சொல்ல வேண்டியிருக்கு.. மாசச் சம்பளத்தில குப்பை கொட்டறவளப் பாத்து இவ ஏக்கப் பெருமூச்சு விடறா.. பத்து பேருக்கு சம்பளம் கொடுக்கிறவளுக்கு.. மாசச் சம்பளம் வாங்கறவங்க மேல பொறாமையாம்.. இத எங்கே போய் சொல்றது..?” கார்த்திகா புலம்பித் தீர்ப்பாள்..

இதையறிந்து வைத்திருந்ததினால்தான் மோகன் மைதிலியின் வயிற்றெரிச்சலைக் கிளறி விட்டான்.. அவன் எதிர்பார்த்ததைப் போலவே..

“ம்ஹீம்..” என்று பெருமூச்சு விட்டாள் மைதிலி..

“என்ன ஆண்ட்டி..?” அவன் ஏதுமறியாதவன் போல கேட்டான்..

“உனக்கென்ன மோகன்.. கவர்ண்ட்மெண்ட் வேலை… மாதம் பிறந்தா சம்பளம்… எங்கவீட்டு ஆம்பளகளப் போல நாள் பூரா உழைக்கனும்னு உனக்கென்ன தலையெழுத்தா..?”

“கவர்ண்ட்மென்ட் வேலையில இவ்வளவுதான் சம்பளம்ன்னு ஒரு கணக்கிருக்கு ஆண்ட்டி.. உங்க வீட்டில அப்படியில்லையே.. நான் மாசம் பூரா உழைச்சு வாங்கற சம்பளத்த நீங்க ஒருநாளில சம்பாதிக்கறிங்களாமே..”

மோகன் தூண்டிலை போட்டு விலாங்கை இழுக்க.. மைதிலி மூக்கை உறிஞ்சினாள்..

“ஏதோ தீய்ஞ்சு போன வாசனை வருதில்ல கார்த்திகா.. நான் வர்றேன்..”

“இருங்க ஆண்ட்டி.. அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்த கதைக்கு கிளைமாக்ச சொல்லாம போறிங்க.. அதைச் சொல்லிட்டுப் போங்க..”

மோகன் கேலியாக குரல் கொடுக்க.. அது காதில் விழாததைப் போல ஓடிவிட்டாள் மைதிலி..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link