Chapter 13
“உங்க புத்தி தெரிஞ்சுதான் நான் அதில கையெழுத்தே போடலை… இப்படித்தான் யார் கையிலயாவது கடிதத்த மாட்ட விட்டு என் உயிரை குறைப்பீங்கன்னுதான் கையில எழுதாம டைப் அடிச்சு பிரிண்ட் அவுட் எடுத்த பேப்பரை கையில கொடுத்தேன்.. இத்தனை முன்ஜாக்கிரதையாய் இருந்தும் நீங்க உங்க அப்பா கையில அந்த லெட்டரை மாட்டவிட்டு.. அவரை படிக்கவும் வைச்சு.. நான்தான் கொடுத்தேன்னு என் பெயரையும் சொல்லியிருக்கீங்க.. உங்களை என்ன செய்தால் தேவலாம்..?”
மாளவிகா கொதித்தாள்.. அன்பழகன் அவளை சமாதானப் படுத்த வார்த்தைகள் கிடைக்குமா என்று தேடினான்..
“உனக்குத்தான் தெரியுமே.. எனக்குப் பொய் சொல்ல வராது..”
“ஆனா.. எனக்கு வரும்.. அதனாலதான் உங்கப்பா என் காலேஜிக்கே வந்து கேட்டப்ப.. நானில்ல அங்கிள்.. எங்க பக்கத்து தெருவில ஒரு பொண்ணு உங்க பையன ஃபாலோ பண்றாளாம்.. அவதான் இந்தக் கவரக் கொடுக்கச் சொன்னான்னு சொல்லிட்டேன்…”
“அதை எப்படி மாளவிகா என் அப்பா நம்பினாரு..?”
“அது ஒரு குறையாய் உங்க மனசில இருக்கா..?”
மாளவிகா பக்கத்தில் பெரிய கல் இருந்தால் தூக்கி அவன் தலையில் போட்டு விடலாம் என்று தேடினாள்.. கிடைக்கவில்லை.. அதனால் அன்று அன்பழகன் தப்பித்தான்..
“சந்தேகம் கேட்டா பதில் சொல்லு.. அத விட்டுட்டு எதையோ ஏன் தேடற..?”
“எதையும் தேடலை.. உங்க தலையில தூக்கிப் போட தோதா ஒரு கல்லைத் தேடறேன்..”
மாளவிகாவின் கோபத்தில் பதறிப்போய் அன்பழகன் நகர்ந்து நின்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை.. மாறாக.. போதி மரத்தடியின் ஞானம் பெற்றவனைப் போல..
“போடு.. தாராளமா தலையைக் கொடுக்கறேன்.. அதனால உன் கோபம் தீரும்ன்னா அதில எனக்கு சந்தோசம்தான்..” என்று அருள் வாக்கை அருளினான்..
“கடவுளே..” மாளவிகா தலையில் அடித்துக் கொண்டாள்..
அன்பழகன் அவள் தலையைத் தொடப் போக தள்ளி நின்றாள்..
“கிட்ட வந்தீங்க.. கத்திக் கூச்சல் போட்டு உங்க உத்தம புத்திரன் வேசத்தைக் கலைச்சுருவேன்…” எச்சரித்தாள்..
“மாளவிகா..”
“என் பேரைச் சொல்லிக் கூப்பிடாதீங்க.. உங்க அப்பா எப்படி நம்பினாருன்னு என்கிட்ட விளக்கம் கேக்கறிங்களா..? நம்பாம என்ன செய்வாரு..? அந்த லெட்டரை நான்தான் எழுதினேங்கிறதுக்கு எந்த ஒரு அடையாளமும் அதில இல்லையே.. மொட்டையா டைப் ஆகியிருந்துச்சு..”
“நீதான் அதைக் கொடுத்தேன்னு நான் சொன்னேனே..”
“நீங்க சொன்னதை நான் இல்லேன்னு சொல்லலையே..”
“பக்கத்து தெருப் பொண்ணுன்னு சொன்னதை அவர் விசாரிச்சிருப்பாரே..”
“அங்கே நிஜமாவே ஒரு பெண் இருந்தா.. உங்க அப்பா வந்து கேட்டதுக்கு முதல்நாள்தான் அவள் குடும்பம் வீட்டைக் காலி பண்ணிட்டு வேற ஊருக்குப் போனது..”
“இது தப்பில்லையா..?”
“உங்களைப் போல ஒரு மாங்காய் மடையனைக் காதலிச்சுட்டா.. எதுவுமே தப்பில்லை..”
“மாளவிகா..”
“கிளம்புங்க..”
“ஐ ஆம் ஸாரி..”
“கிளம்புங்கன்னு சொல்றேன்..”
“இதோட கோடி முறை உன்கிட்ட நான் ஸாரி சொல்லிட்டேன்..”
“அந்த கோடி முறையும் நான் உங்களை மன்னிக்க முடியாது.. உங்க வழியைப் பார்த்துக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டேன்…”
“”நீதான் விளக்கமா என்கிட்ட சொல்லியிருக்க வேணாமா..?
“என்னன்னு..?” மாளவிகா இடக்காக கேட்டாள்..
“இப்படியிப்படி.. நான் உங்களை காதலிக்கிறேன்.. உங்களுக்காக காதல் கடிதம் எழுதி இந்தக் கவரில் வைச்சிருக்கேன்.. இதை யார் கையிலயும் கொடுக்காம நீங்க மட்டும் தனியா உக்காந்து படிச்சுப் பாருங்க.. இப்படின்னு சொல்லியிருக்க வேண்டாமா..?”
“இப்படி விளக்கவுரை.. தெளிவுரை.. பொழிவுரை யெல்லாம் சொல்லிட்டுத்தான் உங்களைக் காதலிக்கனும்னா அந்தக் கருமாந்திரமே எனக்கு வேணாம்.. நான் பாட்டுக்கு நிம்மதியா எங்க அப்பாம்மா பார்த்துக் கொடுக்கிற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டிட்டு போய்க்கிறேன்..”
“போயிருவியா..?”
“பின்னே..? போக மாட்டேனா..?”
“அந்த மாப்பிள்ளை நானா இருக்க மாட்டேன் மாளவிகா..”
“அதுக்காகவே அந்த மாப்பிள்ளைக்கு பாதபூஜை பண்ணி காலம் பூராவும் அவர் காலடியில் கிடந்து சேவகம் பண்ண வேண்டாமா..?”
அன்பழகன் அழமாட்டாக் குறையாய் மாளவிகாவை பார்த்தான்.. அவள் இரக்கம் காட்டாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
“இன்னுமாடா நீ கிளம்பலை..” என்றபடி அங்கே வந்த மோகன் மாளவிகாவை பார்த்ததும்..
“ஓ.. இவ இங்கே நிக்கிறாளா..?” என்று அர்த்தத்துடன் சொன்னான்..
“மோகன்.. நீயாவது உன் தங்கைகிட்டச் சொல்லக் கூடாதா..?”
“ஊஹீம்.. நீ பண்ணி வைச்ச வேலைக்கு உன்னைக் கிட்டத்திலேயே சேர்த்திருக்கக் கூடாது.. பழகின பாவத்துக்கு விட்டு வைச்சிருக்கேன்.. இந்த ரெகமென் டேசனுக்கெல்லாம் என்னை இழுக்காதே.. நீதானே உப்பைத் தின்ன..?”
“எப்படா தின்னேன்..”
“எட்டப்பன் மாதிரி உங்கப்பாகிட்ட என் தங்கையை காட்டிக் கொடுத்தப்ப திங்கல…?”
“ஏண்டா நீயும் அதை நினைவு படுத்தற..?”
“நினைவு படுத்தலைன்னா என் தங்கை காலங் காலத்துக்கும் என்னை மன்னிக்க மாட்டா..”
“சரிடா.. நான் உப்பைத் தின்னவன்தான்.. அதுக்கு..?”
“தண்ணியை நீதான் குடிக்கனும்..”
“இவ வேறொரு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டு வேன்னு சொல்றாடா..”
“அப்படியா மாலு..?”
“ஆமாண்டா அண்ணா..”
“வெரிகுட் டிசிசன்.. எனக்கெல்லாம் இப்படியொரு தங்கச்சி புருசன் ஷீட் ஆக மாட்டான்.. நீ நாளைக்கே ஓகே சொல்லு.. மாப்பிள்ளைகளை உன் முன்னாலே வரிசை கட்டி நிக்க வைக்கிறேன்..”
“நாளைக்கு என்ன ஓகே சொல்றது.. இப்பவே சொல்றேன் கேட்டுக்க.. ஓகே..”
“தேங்க்ஸ்டா அன்பு.. இத்தனை நாளா ஓகே சொல்லாத என் தங்கை இப்ப ஓகே சொல்லிட்டா.. நாளையில இருந்து தீயாய் வேலை செய்யனும்டா..”
“எதுக்குடா..?”
“என் தங்கச்சி கல்யாணத்துக்காகத்தான்.. எனக்கிருக்கிறது ஒத்தை தங்கச்சி.. அவ கல்யாணத்தை சீரும் சிறப்புமா நான் நடத்திவைக்க நண்பன்.. உன் உதவி வேணாமா..?”
“அடேய்.. பாவி..”
“உன்னைவிட பாவியில்ல.. உனக்கெல்லாம் ஒருத்தி லவ்லெட்டர் எழுதிக் கையில கொடுத்தா.. அவ காலில விழுந்து வணங்கி வாங்கிக்காம உங்கப்பா கையிலயா போயி கொடுத்த..? மகனே.. காலம் பூராவும் நீ பிரம்மச்சாரிதாண்டா..”
“என்னடா இப்படிச் சொல்ற..?”
“வேற எப்படிச் சொல்லச் சொல்ற…? நீதான் அநியாயத்துக்கு நல்லவனா இருந்து தொலைக்கிறயே… எப்படியும் மாளவிகாவை நினைச்ச மனசில வேற ஒருத்தியை நினைக்க மாட்ட..”
“எப்படிடா நினைக்க முடியும்..?”
“அவளைத் தவிர வேற ஒருத்திக்கு தாலி கட்டவும் மாட்ட…”
“என்னால அது முடியுமாடா..?”
“அப்ப.. நீ காலம் பூராவும் கட்டைப் பிரம்மச்சாரியா கிடக்க வேண்டியதுதான்.. எங்க மாளவிகா வேற ஒரு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி.. தாலி வாங்கிக்கிட்டு ஜாம்.. ஜாம்ன்னு குடும்பம் நடத்தப் போயிருவா.. நீ எங்கிருந்தாலும் வாழ்கன்னு அழுதுகிட்டே அட்சதை தூவி வாழ்த்தப் போற.. வேணும்னா ஒன்னு செய்யலாம்..”
“என்னடா செய்யப் போற..?” ஆவலுடன் கேட்டான் அன்பழகன்..
“மாளவிகாவுக்கு பிறக்கிற குழந்தைக்கு உன் பெயரை வைக்கச் சொல்லலாம்.. அந்த ரெகமென்டேசனை வேணும்னா நான் செய்யறேன்பா என்ன மாளவிகா..” மோகன் கேட்க..
“நோ..” என்று ஒற்றை எழுத்தில் மறுத்து விட்டாள் மாளவிகா..
“பாருடா.. இதைக்கூட செய்ய மாட்டாளாம்.. ஏன் மாளவிகா..?”
“உன் பிரண்டோட பேரெல்லாம் ஒரு பேரு.. அதை என் பிள்ளைகளுக்கு நான் வைக்கனும்..? உவ்வே…”
“அப்படிங்கறே.. அதுவும் சரிதான்.. நீ மாடர்னா வேற பேரை வைச்சுக்க.. ஸாரிடா அன்பு.. உனக்காக இதைக்கூட என்னால செய்ய முடியல.. த்ச்சு.. தச்சு.. நீ ரொம்ப பாவம்டா.. பேசாம காதலில தோற்றுப் போனான் காளை ஒருவன்.. காதலி கடிதத்தை அப்பன் கையில கொடுத்து விட்டால் என்ன பண்ணுவான்னு பாட்டுப் பாடிக்கிட்டே வீடு போய் சேரு..”
தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றி விட்டு அவனை அனுப்பி வைத்த மோகன்.. மாளவிகாவை பார்த்தான்.. அவள் நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள்..
“அவன் நல்லவன் மாலு..”
“ஓவர் நல்லவனா இருந்தா காதலிக்கு ஆகாது அண்ணா..”
“மடையன்.. நீயாவது அவன்கிட்ட விசயத்தை ஓபன் பண்றதுக்கு முன்னால என்காதில போட்டுத் தொலைச் சிருக்கலாம்..”
“லவ்’ல பிரைவசி முக்கியம்ன்னு நினைச்சிட்டேன்.. ம்ஹீம்.. நான் அப்படி நினைக்க.. இந்த மடச்சாம்பிராணி அப்படியே அந்தக் கடிதத்தக் கொண்டு போயி அவங்கப்பா கையில கொடுத்து வைச்சிருக்கு.. அந்த அப்பாவும் என்னைத் தேடிக்கிட்டு காலேஜீக்கே வந்து நிற்கிறாரு.. எனக்கு எப்படியிருந்திருக்கும்..? நீயே சொல்லு..
ஆடிப் போயிட்டேன் தெரியுமா..? எங்கேயாவது கண் காணாம தொலைஞ்சு போயிரலாமான்னு கூடத் தோணிருச்சு.. ஒரு நிமிசம் இருங்க அங்கிள்.. எங்க லெக்சரர்கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு வரேன்னு சொல்லி மறைவாய் வந்து உனக்குப் போன் போட்டேனோ.. பிழைச்சேனோ.. நீ வழி சொல்லிக் கொடுத்த.. நானும் அதை அவர்கிட்ட ஒப்பிச்சிட்டு.. தப்பிப் பிழைச்சேன்.. இல்லேன்னா என்கதி என்னவாகியிருக்கும்..”
“ஒன்னும் ஆகியிருக்காது.. நான் எதுக்கு இருக்கேன்.. அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிர மாட்டேன்..? ஆக்சுவலா நீ அன்பைக் காதலிக்கிறதுக்கு முன்னாலேயே அவன் உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டானாம்.. நண்பனின் தங்கைங்கிறதினாலே மனசுக்குள்ளே போட்டு அடக்கி வைச்சிருந்திருக்கான்.. பாவம் மாலு..”
“அந்த ஊமைக் கோட்டானோட பாவத்தை நீ மட்டுமே பாரு..”
மாளவிகா வேகமாக வீட்டுக்குள் போய் விட்டாள்.. மோகன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான்.. மேகங்கள் இல்லாமல் நிர்மலமாக அது இருந்தது..
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.