Chapter 15

0Shares

“நீயோ.. நானோ.. யார் நிலவே..?

அவர் நினைவைக் கவர்ந்தது..

யார் நிலவே…?”

சுசரிதாவின் மனதைப் போலவே தொலைக்காட்சித் திரையின் கருப்பு வெள்ளைத் திரைப்படக் காட்சியில் கதாநாயகி பாடிக் கொண்டிருந்தாள்..

‘அவன் மனசில் என்ன இருக்கு..?’

அவள்தான் இருக்கிறாள் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.. அவன் பொய் சொல்வதில் வல்லவன்.. உண்மைக்கும் அவனுக்கும் வெகு தூரம்.. மற்றவர்கள் ரசிக்கும்படி பொய்களைச் சொன்னாலும் பொய் பொய் தானே..

‘உன்னைத் தொடனும்கிற ஆசை என் மனதில் இருக்கு..’

அவனின் இந்த வார்த்தைகளில் பொய் இல்லை என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது..? நாளைக்கே அவன் நான் சொன்னதை நம்பி விட்டாயா என்று தோளைக் குலுக்கிக் கொண்டு போக மாட்டான் என்று என்ன நிச்சயம்..?

அவன்மீது மனதை வைக்க சுசரிதாவிற்குப் பயமாக இருந்தது.. அவனே தீராத விளையாட்டுப் பிள்ளை.. விளையாட்டால் அவன் பேசுவதை உண்மை என்று நம்பி இவள் ஏமாந்து விடக் கூடாது..

சுசரிதா மோகனிடமிருந்து விலகி நிற்க ஆரம்பித்தாள்.. அவன் முகம் பார்க்காமல் இருக்கப் பழகிக் கொண்டாள்..

‘பாத்தாத்தானே அவன் பாக்கிறது தெரியும்.. பாக்கலைன்னா அந்த வினையே இல்லையே..’

என்னதான் அவள் விலக நினைத்தாலும் மோகனின் சீட் அருகே பெண்குரல் கேட்டால் அவளால் அந்தப் பக்கம் பார்க்காமலிருக்க முடிவதில்லை..

“என்ன கோமளா.. இந்தப் பக்கம் யாரைப் பார்க்க வந்தீங்க..?”

“ஏன் மோகன்.. உங்களைப் பார்க்க நான் வரக்கூடாதா..?”

“அப்படின்னு நான் சொன்னேனா..? நீங்களா அப்படி நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாதுங்க.”

“பின்னே.. யாரைப் பார்க்க வந்தீங்கன்னு கேட்டா எப்படி..? உங்களைப் பார்க்க வராம வேற யாரைப் பார்க்க வருவேன்..?”

கோமளாவின் கொஞ்சலில் சுசரிதாவின் சீட்டுக் கடியில் முள்கள் குவியும்… அவளால் வேலையை ஒழுங்காகப் பார்க்க முடியாது..

‘அவதான் வெக்கமில்லாம இளிச்சு… இளிச்சு பேசறான்னா.. இந்த மனுசனும் பல்லைப் பல்லைக் காட்டிப் பேசறாரே.. கொஞ்சமாவது இந்தப் பக்கம் திரும்புகிறாரா..? அப்படி அவ முகத்தில் என்ன இருக்குன்னு அவளையே பார்த்தாகிறது..’ பொருமித் தவிப்பாள்..

“அன்பழகனைப் பார்க்க வரலாமில்ல..?”

“அன்பு சாரையா..? அவரைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தேன்..?”

“எவ்வளவு தூரம்..?”

மோகன் அவனிருக்கிற இடத்திலிருந்து கோமளாவின் சீட் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை பார்வையால் அளந்தான்..

“அதோ இருக்கிற உங்க சீட்டில இருந்து நாலு எட்டு நடந்து வந்ததுக்கா இவ்வளவு தூரம்ன்னு மலைச்சுப் போறிங்க..”

“அதில்லை மோகன்சார்.. நம்ம அன்புசார் நல்ல மாதிரி..”

“அதுக்கு..?”

“அவரைப் பார்க்கனும்னா வேலை மெனக்கெட்டு எழுந்து வரத்தேவையில்லை.. உட்கார்ந்த இடத்தில இருந்து குரல் கொடுத்தா அவரே எழுந்திருச்சு வந்திருவாரு..”

“அதாவது கேணப்பயல்ங்கிறதை சொல்லாம சொல்றிங்க..”

“போங்க சார்..”

கோமளா வெட்கப் பட்டதில் மோகன் அவள் முகத்தை சுவராஸ்யத்துடன் பார்த்து வைத்து விட்டு சுசரிதாவையும் பார்த்து வைத்தான்..

‘அங்கேயும் பார்வை.. இங்கேயும் பார்வையா..? மகனே.. ஆத்தில ஒருகால்.. சேத்தில ஒரு காலா வைக்கிற..? இப்ப என்ன அலுவலுக்கு என்பக்கமா பார்த்து வைக்கிற..?’

சுசரிதா கையில் இருந்த பேனாவை உயர்த்தி கண்களால் மோகனை எச்சரித்தாள்.. அவன் கண்களில் மின்னல் வந்தது.. அதற்காகவே அவனை நான்கு மொத்து மொத்த வேண்டும் போல அவளுக்கு வெறி வந்தது..

“வேலையைப் பார்க்காம வீட்டுக்குப் போனா தாரா மேடத்துக்கு யார் பதில் சொல்றது..? நீங்க சொல்வீங்களா..?” மோகன் கேட்டான்..

“நான் சொன்னா அவங்க கேட்டுக்குவாங்களா..? நீங்க சொன்னாத்தான் அவங்க கேட்டுக்குவாங்கன்னு இந்த ஆபிஸ் மொத்ததுக்கும் தெரியுமே..” கோமளா குழைந்தாள்.

‘அடப்பாவி..’ என்றிருந்தது சுசரிதாவுக்கு..

இப்படியொரு கீர்த்தியுடன் இருப்பதில் அவனுக்கு இத்தனை பெருமையா..? அது எப்படி அந்த அலுவகலத்தில் வேலை பார்க்கும் தாய்க்குலத்தின் ஒட்டு மொத்த பார்வையும் மோகனின் மீதே கவிந்திருக்கிறது.. அவனைத் தவிர திறமைசாலி வேறு யாருமே அங்கே இல்லையா..?

“இல்லையே..” சிணுங்கினாள் கோமளா..

“இருக்கும்.. போய் தேடிப்பாருங்க.. மார்ட்டின் சீட்டில அதைப் பார்த்ததா ஞாபகம்..”

“பார்த்தீங்களா.. உங்ககிட்ட வந்தா எல்லா பிராப்ளத்துக்கும் ஒரு சொலுசன் கிடைச்சிரும்..”

கோமளா.. மார்ட்டினைப் பார்க்கப் போனாள்.. அவள் வந்து போன பிரக்ஞையின்றி கடமையே 

கண்கண்ட தெய்மென்று கம்யூட்டருடன் காதல் செய்து கொண்டிருந்த அன்பழகனைப் பார்த்தான் மோகன்..

“ம்ஹீம்.. எப்பவும் நீ தப்பிருச்சுறடா..” என்றான்..

“அடேங்கப்பா.. மாட்டிக்கிட்டதில இவருக்கு ரொம்ப வருத்தம் போல..” கடுப்புடன் சொன்னாள் சுசரிதா..

“ஆமான்னு சொன்னா நீ நம்பவா போற..” என்றான் அவன்..

“இல்லேன்னு தெரியுதில்ல..? அதனால பொய் சொல்றதை விட்டுட்டு வேலையைப் பாருங்க..” வெடுக்கென்று பதில் சொன்னாள் அவள்..

யார் அடித்துக் கொண்டு கிடந்தால் எனக்கென்ன என்ற அன்பழகன் பிரிண்ட் அவுட் எடுத்திருந்த ஸ்டேட் மெண்ட்களில் தாராவின் கையெழுத்தை வாங்கப் போனான்..

மோகன் சுழல் நாற்காலியில் சறுக்கியபடி சுசரிதாவின் அருகே வந்தான்.. அவள் முறைத்தாள்..

“போன ஜென்மத்தில நீ எனக்கு முறைப் பெண்ணாய் பிறந்திருப்பியோ..?”

“ஊஹீம்.. எதிரிக்காரியாய் பிறந்திருப்பேன்..”

“இந்த முறை முறைக்கிறயே.. அதனால கேட்டேன்.”

“நீங்க எதனால வேணும்னாலும் கேளுங்க.. ஆனா என்கிட்ட கேட்காதீங்க… உங்க கேள்விகளை காது கொடுத்துக் கேட்கிற மத்த பொண்ணுக கிட்டப் போய் கேளுங்க..”

சுசரிதா சிடுசிடுத்தாள்.. மோகன் அவளையே பார்த்தான்.. அவள் மனம் தடுமாறியது.. அவனைப் பார்க்காமலிருக்கும் பிரயத்தனங்களை அவள் மேற் கொண்டாள்.. அவனுடைய துளைக்கும் பார்வை அவள் மன உணர்வுகளை அனுமானித்து விடுமோ என்று அவள் மனம் நடுங்கியது..

“எனக்கு உன்கிட்டக் கேட்க மட்டும்தான் ஆசைன்னு சொன்னா..?”

“பொய்ன்னு சொல்லுவேன்..”

“உனக்கு என்மேல மட்டும்தான் ஆசைன்னு சொன்னா..?”

“நீங்களாத்தான் சொல்லிக்கனும்.. நான் ஒருநாளும் சொல்ல மாட்டேன்..”

“சொல்ல வைச்சிட்டா..?”

“அப்படி நான் சொன்னா அது பொய்யாகத்தான் இருக்கும்..”

மோகன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.. அவளது கன்னி மனம் சலனப்பட்டது.. அவனுடைய பார்வையில் தஞ்சமடைய நினைத்த அவள் மனதை அதட்டி அவள் கட்டுக்குள் கொண்டு வர படாத பாடுபட்டாள்..

அன்பழகன் வந்து விட்டான்.. மோகன் அதற்குமேல் எதுவும் பேசாமல் அவன் இடத்துக்கு போய் விட்டான்..

‘அவ்வளவு தானா..?’ அவள் மனதில் ஏமாற்றம் கவிந்தது..

லதிகா ஏதோ கேட்டபடி மோகனிடம் வந்து சென்றாள்.. தாரா அழைப்பதாக பியுன் வந்து சொன்னதில் அவன் எழுந்து போய் வந்தான்.. சுசரிதாவிடமிருந்து வெகு தூரமாக அவன் போய் கொண்டிருப்பதைப் போன்ற பிரமை அவளுக்கு ஏற்பட்டது..

‘அவன் எப்ப என்கைக்குள் இருந்தான்..? இப்ப விலகிப் போகிறதுக்கு..’

துக்கத்துடன் நினைத்துக் கொண்டாள் சுசரிதா.. காற்றைக் கைக்குள் பிடிக்க நினைப்பதும்.. மோகனை கைக்குள் அடக்க நினைப்பதும் ஒன்றுதான்.. அவன் ஒரு கட்டுக்குள் அடங்காதவன்..

அவனைப் போன்ற குண இயல்புடையவனின் மீது மனதை வைப்பது மாபெரும் தவறு என்று அவள் தன் மனதைத் திட்டிச் சமன் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.. அவளுடைய மனப் போராட்டத்தினால் பாதிக்கப் படாதவனாக மோகன் எப்போதும் போல தீராத விளையாட்டுப் பிள்ளையாக அலுவலகம் வந்து சென்று கொண்டிருந்தான்..

அலுவலக ரெக்ரேசன் கிளப்பின் ஆண்டு விழா வந்தது.. அலுவலக வேலைகளுக்கு முடிந்தவரை டிமிக்கி கொடுக்கலாம் என்ற உற்சாகம் அனைவரின் முகத்திலும் அப்பிக் கிடந்தது.. பெண்கள் எல்லோரும் ஜரிகைக் கரையிட்ட புடவை கட்டி வந்திருந்தார்கள்..

“இவகூட இன்னைக்கு பாக்கறதைப் போல இருக்காடா..” என்று லதிகாவைப் பற்றி அன்பழகனிடம் சொல்லி விட்டு சுசரிதாவின் சுட்டெரிக்கும் அனல் பார்வைக்கு ஆளானான் மோகன்..

விழா ஆரம்பித்தது.. மோகன் எப்போதும் ஆண்டு விழாவின் போது பாடுவானாம்.. லதிகா சுசரிதாவின் காதை கடித்ததில்..

“இவன் பாடினா.. நாம ஓட வேண்டியதுதான்..” என்றாள் சுசரிதா..

“இல்லயில்லை.. இவன் நல்லாவே பாடுவான்..” லதிகா சான்றிதழ் வழங்கினாள்..

“நீதான் மெச்சிக்கனும்..” சுசரிதா அசுவராஸ்யமாக சொன்னாள்..

லதிகா அதை வேறு விதமாக எடுத்துக் கொண்டு புளகாங்கிதம் அடைந்தாள்..

“நான் கர்னாடிக் மியூசிக்கில எக்ஸ்பர்ட்ஸ்ங்கிற-தினாலதான இதைச் சொல்ற..?”

“நான் எப்ப அப்படிச் சொன்னேன்..?”

“வாய் விட்டுச் சொன்னாத்தானா.. உன் மனசில அந்த எண்ணம் இருக்கிறதாலேதானே இதைச் சொன்ன..”

“எதைடி சொன்னேன்..?”

“நான்தான் மோகனை மெச்சிக்கனும்னு சொன்னயே.. அதுக்கு என்ன அர்த்தம்..?”

“என்னடி அர்த்தம்..?” அழமாட்டாக் குறையாய் வினவினாள் சுசரிதா..

“அந்தத் தகுதி எனக்கு மட்டும்தான் இருக்குங்கிறது தான அர்த்தம்..?”

‘உன் அர்த்தத்தைக் கொண்டு போய் உடைப்பில போட..’

தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள் சுசரிதா.. மோகனைப் போன்ற ஒருவன் பாட.. லதிகாவை போன்ற ஒருத்தி பாராட்ட என்று அந்த விழாவில் கொடுமை கொடுமைகளாய் நிகழ்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டுமா என்றிருந்தது அவளுக்கு..

கிளம்பிப் போய் விடலாம் என்றால் அதற்கும் வழியில்லாம் அந்த ரெக்ரேசன் கிளப்பிற்கு தலைவியாக தாரா இருந்து தொலைத்தாள்.. செயலாளர் மோகனாம்..

‘அதுதானே பார்த்தேன்..’ சுசரிதா பல்லைக்கடித்தாள்.

“பொருளாளர் அன்பழகன்டி.. பாவம்.. கைக்காசைப் போட்டாலும் போடுமே தவிர.. கிளப்பின் காசில இருந்து ஒரு பைசா அநாவசியமாய் செலவளிக்காது..”

நேர்மையானவர்களை இந்த உலகம் பாவம் என்று தானே சொல்லுகிறது..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link