Chapter 16
மோகன் பாடுவதற்காக மைக்கின் முன்னால் வந்து நின்றான்..
‘பெரிய மைக் மோகன்னு மனசுக்குள்ள நினைப்பு..’ சுசரிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
அவன் என்னவோ பாட்டும் நானே.. பாவமும் நானே என்று பாடப் போகிறவனைப் போல பாவனைகளைச் செய்தபடி அவளைப் பார்த்தான்..
‘இவன் பாடிட்டாலும்..’
விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல முகத்தை வைத்துக் கொண்டாள் அவள்..
‘இந்த பில்ட் அப்பெல்லாம் வேணாம்.. நீ பாடினா கழுதைதான் வரும்..’ என்று அவனுக்கு அபிநயம் பண்ணிக் காண்பித்தாள் அவன் அசையவில்லை..
அவள்மீது நிலைத்திருந்த அவனது பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்றில் அவள் மனம் சிக்கித் தவித்தது..
‘எதுக்கு இப்படிப் பார்க்கிறான்..?’ அவள் மனதை அவன் பார்வை ஏதோ செய்தது..
“ஒரு பொய்யாவது சொல் கண்ணே…”
அவன் ஒற்றை வரியை பாடி விட்டு நிறுத்தியதும் அவள் புரிந்து கொண்டாள்.. அவன்மீது அவளுக்கு ஆசை என்று ஓர்நாள் அவள் சொல்வாள் என்று அவன் சொன்ன போது.. அப்படிச் சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும் என்று அவள் சொன்னதை நினைவு படுத்தி இப்போது பாடி வைக்கிறான்…
‘கடவுளே..! என்ன இது..?’
அவன் முகத்தில் தெரிந்த உண்மையில் அவள் தவித்துப் போனாள்..
“ஒரு பொய்யாவது சொல் கண்ணே..!
உன் காதல் நான்தான் என்று..
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..”
மோகனின் பிசிறில்லாத குரலில் கரைந்து போனாள் சுசரிதா.. அவன் சொல்வது உண்மைதானா என்று அடித்துக் கொண்டது அவள் மனம்.. அவன் பார்வை அதை உண்மையென்றது..
“பூக்களில் உன்னால் ரத்தம் – அடி
மௌனத்தில் உன்னால் யுத்தம்..
இதைத் தாங்குமோ என் நெஞ்சம்..
இதைத் தாங்குமோ என் நெஞ்சம்..?”
தாங்காத நெஞ்சத்துடன் சுசரிதா தவித்துக் கொண்டடிருக்க.. தாங்குமோ என் நெஞ்சம் என்று அவன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்..
பொய்யைத் தவிர வேறு எதையும் பேசியறியாத- வனின் இந்தப் பேச்சில் எந்த அளவுக்கு வாய்மை இருக்கிறது என்று அவள் மனம் அவளைக் கேட்டது.. அவனோ அதற்கும் பதிலைச் சொன்னான்.. அலைபாயும் அவள் மனதை ஆட்டி வைத்தான்.. பாட்டில் கட்டி வைத்தான்.. மனதை இழுத்துச் சென்றான்..
“உண்மையும்.. பொய்மையும்..
பக்கம் பக்கம்தான் – ரொம்பப்
பக்கம் பக்கம்தான்..
பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்..
பாலுக்கும் கள்ளுக்கும்..
வண்ணம் ஒன்றுதான்..
உண்டால் ரெண்டும் வேறுதான்..”
முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அவன் பாடியபோது.. நீ யார்..? என்று மனதுக்குள் கேட்டுத் தவித்தாள் அந்தப் பேதை..
சஞ்சலமும் தவிப்பும் சுசரிதாவுக்குத்தான்.. மோகனிடம் அது இல்லை.. அவன் கண்களில் தீர்மானம் இருந்தது.. நிச்சயமாக இதுதான் என்ற தெளிவு இருந்தது.. எதனால் அவன் மனதில் அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தது என்பதை அவன் பாடலில் சொல்லிக் கொண்டிருந்தான்..
“நிலவினை எனக்கு அருகினில்..
காட்டியது நீதானே..
மலரின் முகவரிகள்..
சொன்னதும் நீதானே..
காற்று பூமி வானம்..
காதல் பேசும் மேகம்..
அறிமுகம் செய்தது யார் யார்..?
அன்பே நீதானே…
கங்கை கங்கை ஆற்றைக்
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஆற்றைக் கண்ணில்
கையில் தந்தவள் நீதானே..”
இத்தனையையுமா அவள் அவனுக்குத் தந்தாள்..? இதைப் போலக்கூட அந்த பொய்காரனால் உணர்வு பொங்க பாட முடியும் என்பதை அன்றுதான் அறிந்தாள் சுசரிதா.. அதுவும் பொய்யாய் இருக்கக் கூடுமோ என்று அவள் மனம் சந்தேகம் கொண்டு தடுமாறியது.. அதை உணர்ந்தவனைப் போல அவன் பார்வை அவளைச் சாடியது..
“ஆனால்… உயிரே..! நெஞ்சை..
மட்டும் மூடி வைத்தாய்..
கானல் நீரே..!”
சுசரிதா பொங்கும் மனதை உதட்டைக் கடித்து அழுத்தி அடக்கிக் கொண்டாள்.. அங்கிருந்த அனைவரையும் அவனது குரலினிமை கட்டிப் போட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.. பொருள் பொதிந்த அந்தப் பாட்டின் உணர்வு வெள்ளத்தில் சங்கமித்தவளாக அசையாமல் அமர்ந்திருந்த தாராவைப் பார்த்தபோது இவள்.. இவனின் திறமைகளை அறிந்தவள் என்ற எண்ணம் சுசரிதாவின் மனதில் தோன்றியது..
அதனாலதான் மோகன் சொல்லும் பொய்களை சிரித்துக் கொண்டே அவள் ரசிக்கிறாள்.. காரணமில்லாமல் எதையும் அவள் செய்யக் கூடியவள் அல்ல என்பது அந்த நொடியில் சுசரிதாவின் நினைவில் எழுந்தது..
பாடல் முடிந்தது.. கரவொலியின் ஓசை காதைப் பிளந்தது.. மோகனின் கண்கள் சுசரிதாவைத் தேடின.. அவள் வாசலுக்குப் போயிருந்தாள்.. இவனும் விரைந்தான்.. ஸ்கூட்டியை உயிர்ப்பித்துக் கொண்டிருந்த சுசரிதா.
“ஒரு நிமிசம்..” என்ற மோகனின் குரலில் நின்றாள்..
“எல்லாரும் என் பாட்டைப் பாராட்டறாங்க.. நீ மட்டும் ஒரு வார்த்தை கூடச்சொல்லாமல் ஓடப் பாக்கறியே.. ஏன்..?”
“ஏன்னா.. எனக்கு ஜால்ரா தட்டத் தெரியாது..”
“அப்ப உனக்கு என் பாட்டு பிடிக்கல..?”
“அதை என்வாயால் வேற நான் சொல்லனுமா..?”
“என்னை பொய்காரன்னு சொல்லிட்டு இப்ப நீதான் பொய்காரியாய் மாறிட்டு வர்ற சுசரிதா.. அது உனக்குப் புறியுதா.. இல்லையா..?”
அவன் தீர்க்கமாக கேட்டான்.. அதிலிருந்த உண்மை அவளை அறைந்தது.. அவனுடைய கேள்விக்கணைகளில் இருந்து தப்பித்து அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும் போல அவளுக்குள் வேகம் எழுந்தது..
“நீ எதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிற சசுரிதா..?” அவன் நிதானமாக கேட்டான்..
“ஓடி ஒளிகிறதால மட்டும் உண்மை.. பொய்யாகிடாது..”
“இதை நீங்க சொல்லி நான் கேட்கனும்னு இருக்கு.. பொய்யைப் பத்தி என்னைவிட உங்களுக்குத்தான் நல்லாத் தெரியும்..” அவனைக் காயப்படுத்திவிடும் வேகத்துடன் அவள் பேசினாள்..
“நான் பொய் சொல்லிதான்.. இல்லேன்னு சொன்ன தில்லை.. மறைக்க நினைச்சதில்லை.. இந்த ஆபிசுக்கே அது தெரியும்.. அதனால என் காதலும் பொய்யாகிருமா..?”
சுசரிதாவின் இதயம் தடதடத்தது.. அவன் வெளிப் படையாகவே காதல் சொல்லி விட்டதில் அவள் நிலை குலைந்தாள்.. இனி அவள் என்ன செய்ய வேண்டும்..? என்ன சொல்ல வேண்டும்..? உன்னைப் போல நானும் காதலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன் என்ற உண்மையை அவனிடம் ஒப்புக் கொள்வதா..?
“ஒருவேளை.. பொய்யாய் இருந்தா..?” அவளும் கேட்டு விட்டாள்..
“ஸோ.. நீ அந்த பயத்திலதான் ஓடுற..” அவன் கண்கள் இடுங்கின..
“இல்லேன்னு சொல்ல மாட்டேன்…” அவன் முகத்தைப் பார்க்கும் திராணியில்லாமல் அவள் தரையைப் பார்த்தாள்..
“உண்மைன்னு நிரூபிக்க நான் என்ன செய்யனும்..?”
“தெரியலை..”
“இது பிடிவாதம்..”
“இருக்கலாம்.. ஆனா இந்த பிடிவாதம் எனக்கு அவசியமானதுன்னு நான் நினைக்கிறேன்..”
“ஏண்டி இப்படி துயரம் பண்ற..?”
“என்னது..?”
அவள் அதிர்ந்து நிமிர்ந்தாள்.. வெகு சுவாதீனமாக அவன் அழைத்த அந்த அழைப்பில் அவள் இதயம் துடித்தது.. அந்த உரிமையை எப்படி அவன் எடுத்துக் கொள்ளலாம்..? இன்னும் அவன் காதலை அவள் ஏற்றுக் கொள்ளவில்லையே..
“எப்படி என்னை நீங்க வாடி.. போடின்னு சொல்லலாம்..?”
“ம்ப்ச்.. சும்மா சீன் கிரியேட் பண்ணாத சுசி..”
“சுசியா..?”
“ம்ம்ம்..”
“என் பெயர் சுசரிதா.. சுசின்னு கூப்பிட வேணாம்..”
“இந்தா.. நான் எப்படிப் பேசனும்.. எப்படிக் கூப்பிடனும்னு நீ ஒன்னும் எனக்கு டியூசன் எடுக்காதே.. ஒரு பொண்ணு வந்து என்கிட்ட நின்னு பேசிறக் கூடாது.. இவ மூஞ்சி சுட்ட கத்தரிக்காயைப் போல சுண்டிப் போயிரும்.. இதில இவ மனசில என்மேல் காதலில்லையாம்..”
“வேலை பார்க்கிற இடத்தில கடலை வறுத்தா கோபம் வராதா..?”
“நான் கடலை வறுத்தேன்..? நீ பார்த்த..?”
“பின்னே.. இல்லையா..?”
“இல்லைடி.. இங்கே நான் கடலை வறுத்திட்டாலும்.. கழுதையில.. விளங்கிரும்.. ஒருத்திகூட சுயமாய் யோசிக்க மாட்டா.. இவர்களில யாருகிட்ட நான் கடலை வறுத்தேன்..?”
சுசரிதாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.. வேண்டுமென்றே யாராவது ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லலாமா என்று நினைத்தாள்.. அது அந்தப் பெண்ணுக்கும்.. மோகனுக்கும் செய்யும் அநியாயம் என்று தோன்றியதில் வாய் மூடிக் கொண்டாள்..
அது அவள் செய்யும் வேலை அல்லவே..
“மத்தவங்க கிட்ட வறுக்க முடியலைன்னா என்கிட்ட வறுத்தாகனுமா..?”
“இப்ப நீதான் என்னைப் போட்டு வறுத்துக்கிட்டு இருக்க.. சொல்லு.. என் காதலை புரூவ் பண்ண நான் என்ன செய்யனும்..?”
“முதல்ல உங்ககிட்ட காதல் இருக்கா.. இல்லையான்னே எனக்குத் தெரியலை.. ஒருவேளை அது இருந்தாலும் அது நிலையா என்மேல மட்டும் இருக்குமாங்கிற சந்தேகம் எனக்குள்ளே இருந்துக்கிட்டே இருக்கும்.. என்னால அந்தப் போராட்டத்தை போராட முடியாது..”
“அப்படியா..?”
மோகனின் ஊடுருவும் பார்வை அவளைத் துளைத்தது.. அவனுக்கு அவளைத் தெரியும்.. கடுமையாக பேசினாலும் அவள் உண்மையை மட்டும் பேசுகிறவள்.. வெகு புத்திசாலி.. அவள் மனதின் போராட்டங்களை வரையறுத்து இதுதான் என்பதை தெளிவாக அவள் சொல்லி விட்டாள்.. இனி அதற்கான தீர்வை அவன்தான் கண்டு பிடிக்க வேண்டும்..
“காதலிச்சாத்தானே இந்தப் பிரச்னை..?”
புருவங்களை ஏற்றி இறக்கி அமர்த்தலாக அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது.. காதலிக்காமல் என்ன செய்யலாம் என்று அவன் நினைக்கிறான் என்ற கோபத்தில் சுசரிதா கொதித்துப் போனாள்..
Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.