Chapter 22

0Shares

“மோகன்.. ஆயிரம் தான் இருந்தாலும் உன் அத்தை சாந்தி உன்னை மடியில் போட்டு வளர்த்தவ.. பெத்தது நானுன்னாலும் வளத்தது அவதான்.. ம்ஹீம்.. அப்படிப் பட்டவ பெத்த பெண்ணை மருமகளாக்கிற கொடுப்பினை தான் எனக்கு இல்லாம போயிருச்சு.. நீ அவ வீட்டுக்கே முதல்ல விருந்துக்கு போயிட்டுவா..” கண்கள் கலங்க பெருந்தன்மையின் வடிவாய் நாத்தனாரின் பெருமைகளைப் பேசி வருந்தினாள் கார்த்திகா..

“அதெல்லாம் வேணாம்டா மோகன்.. ஆயிரம்தான் இருந்தாலும் முறைன்னு ஒன்னு இருக்கு.. தாய்மாமனுக்குத் தான் முதல் மரியாதை கொடுக்கனும்.. உன் மாமன் மகள் இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கனும்.. ம்ஹீம்.. நாம ஒன்னு நினைக்க தெய்வம் வேற ஒன்னை நினைச்சிருச்சு.. அதனால நீ உன் மாமன் வீட்டு விருந்துக்கே முதலில் போயிட்டு வா..”

கண்ணாடியைக் கழற்றிக் கைக்குட்டையால் துடைத்த வண்ணம் உணர்ச்சி பொங்கப் பேசினார் சரவணன்.. கார்த்திகாவின் முகம் விகசித்தது.. விட்டால் இருவரும் ஒரே சால்வையை ஒன்றாகப் போர்த்திக் கொண்ட கண்ணீர் வழிய கடலோரம் நடந்து விட்டு வந்து விடுவார்கள் போல தோற்றமளித்ததில்..

“அம்மா..” என்று ஆட்சேபக்குரல் எழுப்பினான் மோகன்..

“என்னாச்சு மாளவிகா..? இந்த அளவுக்கு ஒருத்தர் குடும்பத்துமேல மத்தவங்க பாசமா இருந்துட்டு எதுக்காக சண்டை போட்டுக்கிட்டாங்க..?” சுசரிதா கேட்டாள்..

“நீங்க வேற.. இது உங்களுக்கு எதிரா அமைஞ்சிருக்க கூட்டணி.. ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்கிறவங்க மூணாவதா ஒருத்தங்க வந்தா பகையை மறந்து ஒன்னாச் சேந்து மூணாவதா வந்தவங்களை எதிர்த்து நிப்பாங்க இல்லையா..? அதைப் போலதான் இதுவும்.. இத்தனை நாளா அம்மாவுக்கு அத்தையைக் கண்டா ஆகாது.. அப்பாவுக்கு மாமாவைக் கண்டா ஆகாது.. இப்ப மகனுக்கு கல்யாணமாகி மூன்றாவதா ஒரு சொந்தமா சம்பந்தகாரங்க வீடு வந்திருச்சுல்ல..? மகன் மாமனார் வீட்டுப் பக்கம் சாய்ந்திரக் கூடாதுன்னு இவங்க ரெண்டு பேரும் ஒத்துமையா உடுக்கடிக்கறாங்க..”

“எங்க வீட்டில அப்படியெல்லாம் இன்வால்வ் ஆக மாட்டாங்க மாலு..”

“அது இப்பத் தெரியாதில்ல அண்ணி.. போகப் போகத் தானே தெரியும்.. அதுவரைக்கும் இப்படித்தான்.. பழைய பாட்டு வசனங்க அப்பப்ப வந்து விழுகும்.. கொஞ்சநாள் கேட்டுக்கங்க.. அதுதான் பகல் நேரத்தில தப்பிச்சு ஆபிஸ் பக்கம் போயிருவிங்கள்ல..”

இலகுவாய் வழி சொல்லிக் கொடுத்த நாத்தனாரின் மீது சுசரிதாவுக்கு பிரியம் வந்தது.. இது போன்ற தோழமையுடன் நாத்தனார் இருக்கக்கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.. மோகனைப் போலவே சிரித்த முகமாய் எதையும் இலகுவாக எதிர் கொள்ளும் இயல்புடன் இருந்த மாளவிகாவின் கையை நட்புடன் பற்றிக் கொண்டாள் சுசரிதா..

“இப்ப யார் வீட்டு விருந்துக்கு முதல்ல போகனுமாம்..”

“அண்ணன் அதுக்கும் ஒரு வழிபண்ணுவான் பொறுத்திருந்து பாருங்க..”

மோகன் சீட்டுக் குலுக்கிப் போடும் யோசனையைச் சொன்னான்.. அது ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.. கார்த்திகா அவ்வபோது முந்தானையில் கண்களை துடைத்துக் கொள்ள.. சரவணன் அவள் தோள்மீது கை போட்டு தேறுதல் சொன்னார்..

“இந்தக் கொடுமையில இருந்து தப்பிக்கவாவது எங்கேயாவது போயிட்டு வந்தாத் தேவலை” என்றான் மோகன்..

மாளவிகா எடுத்துக் கொடுத்த சீட்டில் அவர்களின் தாய் மாமனின் பெயர் வர..

“தர்மம் ஜெயித்தது..” என்றார் சரவணன்..

கார்த்திகா அவரைப் பார்த்த பார்வையில் அடுத்த தேநிலவுப் பயணத்திற்கு அவர்கள் ஆயத்தமாவதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தன..

“பார்த்து அண்ணி.. இரண்டும் இரண்டு கரண்டி.. இரண்டுமே வில்லங்கம் பிடிச்ச கரண்டி..” என்றாள் மாளவிகா..

“புரியலையே..”

“உங்களுக்குப் புரியாதுதான்.. நீங்க என்ன செய்வீங்க பாவம்.. உங்க புருசன் இருக்கானே.. அவன் சரியான காதல் மன்னன்.. அத்தை மகளையும் ஓரம் கட்டிக்கிட்டு.. மாமன் மகளுக்கும் நூல் விட்டுக்கிட்டு இருந்தான்.. இரண்டில் ஒன்னைத்தான் கை காட்டுவான்னு பார்த்தா திடிர்ன்னு உங்க பக்கம் கை காட்டிட்டான்.. அதுக இருக்க வீட்டுக்கு விருந்துக்குப் போறிங்க.. பார்த்து.. பத்திரமா உங்க புருசனை காபந்து பண்ணிக் கூப்பிட்டுக்கிட்டு வந்திருங்க.”

மாளவிகாவின் பயமுறுத்தலில் அப்போதே கவலையாகிப் போனாள் சுசரிதா.. இரவில் நெருங்கிய மோகனிடம்..

“உங்களுக்கு அத்தை மகளைப் பிடிக்குமா.. இல்லை மாமன் மகளைப் பிடிக்குமா..?” என்று கேட்டு விட்டு படபடக்கும் மனத்தோடு அவன் பதிலுக்காக காத்திருந்தாள்..

அந்த பொய் சொல்லிதான் அவளிடம் மயங்கி விட்டால் உண்மையை மட்டும் உளறிவைப்பானே.. புது மனைவி இதுபோன்ற இரவு நேர நெருக்கத்தில் எக்குத் தப்பான கேள்வியை கேட்டு வைத்தால்..

‘எனக்கு அவங்க ரெண்டு பேரையும் பிடிக்காதுடி மக்கு.. உன் ஒருத்தியை மட்டும்தான் பிடிக்கும்..’ என்று தானே பிழைக்கத் தெரிந்த காதலன் சொல்லுவான்…?

இவனே பொய்யை கரைத்துக் குடித்தவன்.. பொய் சொல்ல இவனுக்குச் சொல்லியா தர வேண்டும்..? அதை விட்டுவிட்டு.. உண்மையைச் சொல்லுகிறேன் பேர்வழி என்று…

“எனக்கு ரெண்டு பேரையும் ரொம்பவும் பிடிக்கும்டி சுசி..” என்று சொல்லி விட்டான்..

அதற்குமேல் நெருங்கினால் அந்த ‘சுசி’ உடன்பட்டு விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பாளா..? போய்யா.. உன் பேச்சு காய் என்று ‘டூ’ விட்டுவிட்டு கும்பகர்ணி போல குப்புறப் படுத்து குறட்டைவிட்டுத் தூங்கி விட்டாள்..

எதுக்குடா உண்மையைச் சொன்னோம் என்று மோகன் விடிய விடிய தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததுதான் மிச்சமானது..

அவர்கள் சரவணனின் காரை எடுத்துக் கொண்டு காஞ்சிபுரத்தில் இருந்த கார்த்திகாவின் அண்ணன் வீட்டுக்கு விருந்துக்குப் போனார்கள்… அங்கே ஆவலுடன் ஓடிவந்து வரவேற்றாள் காயத்ரி.. மோகனின் மாமன் மகள்..

“அத்தான்..” என்ற அவளின் அழைப்பிற்கு..

“காயத்ரி..” என்று இவன் உருக..

“நான் வேணும்னா ஊருக்குக் கிளம்பிப் போயிரவா.. உங்க ரெண்டு பேருக்கும் இடைஞ்சலா இருக்கும்.. நீங்க நிறுத்தி நிதானமா விருந்தை என்ஜாய் பண்ணிட்டு வாங்க..” என்று கணவனின் காதோரமாக கனன்றாள் சுசரிதா..

“ஏண்டி.. அத்தைமகனும்.. மாமன்மகளும் ஒருத்தருக் கொருத்தர் பேசிக்கிறக் கூடக் கூடாதா..?”

“இது வெறும் பேச்சா..?”

சுசரிதா அக்கினிப் பிழம்பானாள்.. அதற்கேற்ப கோவிலுக்குப் போனால் கூட வருகிறேன் என்று ஒட்டிக் கொள்ளும் காயத்ரி மோகனின் இந்தப் பக்கமாக சுசரிதா நின்றால் அந்தப் பக்கமாக நின்று சுசரிதாவைக் கடுப்பேற்றினாள்..

“நீங்க என்ன… என்னை தெய்வானையாக்கும் உத்தேசத்தோட இருக்கீங்களா..?” சுசரிதாவுக்கு கோபம் வந்து விட்டது..

அப்போது பார்த்து அங்கே ஓடி வந்த காயத்ரி..

“அத்தான்.. முருகனுக்கு வள்ளி மேலதான் கொள்ளை இஷ்டமாமே..” என்று சந்தேகம் கேட்டு வைத்தாள்..

“ஹி.. ஹி.. அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..” என்று அவளிடம் சொல்லி அனுப்பி வைத்து விட்டு..

“புள்ளிமானைப் போல துள்ளி குதித்து ஓடறாள்ல..?” என்று சுசரிதாவிடம் அபிப்ராயம் கேட்டு விட்டு.. அவள் கையால் மொத்து மொத்து என்று மொத்து வாங்கினான் மோகன்..

அங்கிருந்த நாள்களை.. சண்டையும் சச்சரவுமாக கழித்து விட்டு ஒரு வழியாக விருந்து முடிந்து திரும்பி வந்தார்கள் புதுமணத் தம்பதிகள்..

“என்னாச்சு அண்ணி..?” துக்கம் விசாரித்தாள் மாளவிகா..

“நீ சொன்னதைப் போலதான் ஆச்சு மாளவிகா.. விவஸ்தை கெட்டவ.. வள்ளி.. தெய்வானைங்கிறா.. இவரும் விவஸ்தையில்லாம ‘ஈ’ன்னு பல்லைக் காட்டிக் கிட்டு ஈஷிக்கிறார்..” பொருமினாள் சுசரிதா..

“இவளுக்கே இப்படின்னா.. அவளை எப்படிச் சமாளிக்கப் போறிங்க..?” என்றாள் மாளவிகா..

“எவளை..?”

“மதுரையில இருக்கிற மல்லியை..”

“மாலு..”

“நாளைக்கு நீங்க மதுரைக்குக் கிளம்பிப் போகனும்.. சாந்தி அத்தை வீட்டில விருந்து.. மாமா வீட்டிலயாவது காயத்ரி மட்டும்தான் அண்ணனோட வீக்னெஸ்.. அத்தை வீட்டில மொத்தமா இவன் விழுந்துருவான்.. அத்தை இவனை வளர்த்தவங்களாம்.. அதனால அவங்ககிட்ட அதிகப்படியா செல்லம் கொஞ்சுவான்.. அதைச் சாக்கா வைச்சுக்கிட்டு அவங்க பொண்ணு மயூரி இவனை வெத்தலை பாக்கைப் போல சுருட்டி வாயில போட்டு மென்னு துப்பிருவா..”

“மாலு…”

திகில் கதையைக் கேட்டு விட்ட அரட்சியுடன் மதுரைக்குக் கிளம்பிப் போனாள் சுசரிதா.. அங்கே மயூரி இவளை பார்த்த பார்வையே எனக்கு நீ இணையா என்று கேட்டது..

“உங்களுக்கு இவ பெண்டாட்டியா..? இல்லை நான் பெண்டாட்டியா..?” 

தனிமையில் கணவனிடம் சண்டைக்குப் போனாள் சுசரிதா..

“அவ பெண்டாட்டியா ஆகியிருக்க வேண்டியவ.. நீ பெண்டாட்டியா ஆகிவிட்டவ..”

என்னவோ ஆறு வித்தியாசங்களை வகைப் படுத்து பவனைப் போல சொல்லிவிட்டு அன்று இரவும் பட்டினி கிடந்தான் மோகன்..

“அதை பெரும் மனக்குறையோடு சொல்றாப்புல இருக்கு..”

சுசரிதா அவனுக்கு முதுகு காட்டிப் படுத்து விட்டாள்.. அவனும் அவளை விடிய விடிய கெஞ்சிவிட்டு விடிந்த பின்னால் இது வேலைக்கு ஆகாது என்று படுத்து உறங்கி விட்டான்..

“எதுக்கு அத்தான் கண்ணு சிவந்திருக்கு..? ராத்தூக்கம் இல்லையா..?” என்று அதற்கும் விசாரித்த மயூரியின் முதுகில் நான்கு போடு போட வேண்டுமென்ற ஆசை சுசரிதாவுக்குள் வந்தது..

அருகில் சாந்தி இருக்கும் நினைவில் அடக்கிக் கொண்டாள்.. 

அத்தைமகள் கேட்ட கேள்விக்கு மோகன் என்ன பதிலைச் சொல்லப் போகிறான் என்று அவள் பார்த்தால்.. அவன்..

“எல்லாம் என் பெண்டாட்டியால தான் ராத்தூக்கம் கெட்டுப் போச்சு மயூரி..” என்று யோசிக்காமல் சொல்லி வைத்து சுசரிதாவின் மானத்தை வாங்கி வைத்தான்..

மயூரி பார்த்த பார்வை என்னவோ அவள் கணவனை சுசரிதா தூங்கவிடாமல் செய்து விட்டதைப் போல இருக்க.. சுசரிதா எரிச்சலுடன் மோகன் கட்டிய தாலிச்சரடை டாலர் செயின் போல வெளியில் எடுத்து விட்டாள்..

‘பார்த்துக்கடி.. இதைக்கட்டிய என் புருசனின் ராத்தூக்கத்தைத்தான் நான் கெடுத்தேன்..’

“அவதான் அப்படிக் கேட்கிறான்னா.. நீங்களும் இந்த லட்சணத்திலதான் பதிலைச் சொல்லித் தொலைக்கனுமா..?” மோகனைத் திட்டினாள்..

“நான் உண்மையைத்தாணடி சொன்னேன்..?” அவன் நியாயம் கேட்டான்..

“பொல்லாத உண்மை.. உங்களுக்குப் பொய்யே சொல்லத் தெரியாதா.. மத்த நேரங்களில பொய் சொல்றவருக்கு இதில பொய் பேச வாய் வரலையாம்.. அதை நான் நம்பனுமாம்..”

சுசரிதா பிடித்த பிடியில் பொய் சில நேரங்களில் அத்தியாவசியமானது என்று மோகனுக்கு தோன்றி வைத்தது..

மயூரி கடைந்தெடுத்த வில்லியாக இருந்தாள்.. காயத்திரியை போல இல்லாமல்..

“ஏன் அத்தான்.. தசரதனுக்கு மூன்று பெண்டாட்டி தானே..” என்று மோகனுக்கு மூன்றாம் தாரமாகும் முன் அறிவிப்பை சுசரிதாவுக்கு விட்டாள்..

“இல்லே மயூரி.. அவருக்கு ஆயிரம் பெண்டாட்டிகளுக்கு மேலேயாம்.. உனக்கு ஆயிரத்தில ஒருத்தியாகனும்னு ஆசையிருக்கா..?”

சுசரிதா நன்றாக ஒரு கேள்வி கேட்டு.. தான் கணவனை விட்டுக் கொடுப்பவள் அல்ல என்பதை மயூரிக்கு உணர்த்தி விட்டாள்..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link