Chapter 23

0Shares

கார்த்திகாவிற்கு உதவியாக சமையலறையில் காய் நறுக்கிக் கொண்டிருந்தாள் சுசரிதா.. அவளின் ஈர முடியின் நுனி பின்னலில் ஹாலில் இருந்த மோகனின் மனம் சிக்கி ஆடியது.. விருந்துகள் முடிந்த பின்னால் அவனுக்கும் சுசரிதாவுக்கும் இடையில் பழைய நெருக்கம் வந்து விட்டிருந்தது..

அவன் பேப்பரில் முக்கால்வாசி முகத்தை மறைத்துக் கொண்டு.. கண்களை மட்டும் பேப்பருக்கு மேல் தெரிய விட்டவனாக சமையலறையில் இருந்த மனைவியை கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்..

“என்னடா அண்ணா செய்கிற..?” மாளவிகா கேட்டாள்..

“பார்த்தாத் தெரியலை.. பேப்பர் படிக்கிறேன்..” கடுகடுத்தான் மோகன்..

“ஓஹோ.. எந்த ஊரில பேப்பரை தலை கீழாய் படிக்கிறாங்க..?”

மாளவிகா பேப்பரைப் பிடுங்கி அவன் முன்னால் காட்டி அவனது குட்டை உடைத்தாள்..

“இதையெல்லாம் ஏன் நீ கண்டுக்கிற..?” என்றான் மோகன்..

“அப்படியொரு வேண்டுதல் எனக்குகிருக்கு பாரு.. எனக்கென்ன தலைவிதியா..? வாசலில உன் பிரண்டுன்னு சொல்லிக்கிட்டு ஒரு பரதேசி வந்து நிக்கிறான்.. போயி என்னன்னு கேளு..”

“யாரு… ‘அதர்வா..’ வா..?”

“உன் மூஞ்சிக்கு ‘அதர்வா’ தான் பிரண்டா மாட்டுவாரா..? அன்பழகன்தான் மாட்டுவான்..”

மாளவிகாவின் கொதிப்பைக் கவனித்தபடி அவளுக்கு காபியுடன் வந்த சுசரிதா.. அவளிடம் காபியை நீட்டியபடி..

“அன்பழகனை உனக்குப் பிடிக்காதா..?” என்று விசாரித்தாள்..

“அந்த மூஞ்சியை யாருக்குத்தான் பிடிக்கும்..?” கடுகடுத்தபடி காபியை உறிஞ்சினாள் மாளவிகா..

“எங்க ஆபிசில எல்லோருக்கும் பிடிக்கும் மாலு..” என்றாள் சுசரிதா..

“அது உங்க ஆபிஸ் அண்ணி.. இது நம்ம வீடு..”

“நல்ல மனிதர் மாலு.. யாருக்கும் தீங்கு நினைக்காதவர்…”

“யாரு இவனா..? ஊருக்கெல்லாம் தீங்கு நினைக்க மாட்டான்.. ஊரான் வீட்டுப் பெண்ணுக்குத்தான் நினைப்பான்.. வேணாம் அண்ணி அவனைப் பத்தி என்கிட்டப் பேசி வாயைக் கிளராதீங்க.. எனக்கு நல்லா வந்திரும் வாயில..”

விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில் எதற்காக மாளவிகாவை நல்ல நல்ல வார்த்தைகளைப் பேச வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்.. அவள் வாயில் நல்ல வார்த்தைகள் வெளிவராமல் காத்து விடும் நோக்கத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்று வாசல் பக்கமாக போனாள் சுசரிதா..

அங்கே தோட்டத்தில் அன்பழகனுடன் அளவளாவிக் கொண்டிருந்தான் மோகன்.. இவளைக் கண்டதும் பாசமலர் அண்ணனாகி..

“எப்படிம்மா இருக்கிற தங்கச்சி..” என்று அவள் கட்சியாகி நலம் விசாரித்தான் அன்பழகன்..

“ஃபைன் அண்ணா…” சுசரிதா உடனடித் தங்கையானாள்..

“பாருடா.. இங்க பவர்ஃபுல் அண்ணன் தங்கச்சி பாசம் பத்திக்கிட்டத..” மோகன் தாடையைத் தடவினான்..

“காபி சாப்பிடுங்கண்ணா..?”

“இப்பத்தான் தெரு முக்கு காபி ஷாப்பில காபி குடிச்சிட்டு வந்தேம்மா..”

“ஏண்ணா..? உங்க வீட்டில காபி குடிச்சிட்டு வந்திங்கன்னு சொன்னா அதில ஒரு அர்த்தமிருக்கு.. இங்கே வரைக்கும் வந்திட்டு.. இந்தத் தெருவோட முனைக் கடையில காபி குடிச்சிட்டு வந்தீங்கன்னு சொன்னா அது நல்லாவா இருக்கு..?”

“அம்மா.. எழுந்திருக்க டயமாகும் சுசி.. அதான்.. அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு காபி கேட்கலை..”

“நான் அதைக் கேட்கலை.. எங்க வீட்டில காபி குடிக்காம எங்க வீடு இருக்கிற தெரு முனைக் கடையில எதுக்காக காபியைக் குடிச்சிட்டு வந்தீங்கன்னுதான் கேட்கறேன்..”

“தொண்டை வறண்டிருந்துச்சும்மா..”

அந்தப் பேச்சை அப்படியே முடித்துக் கொண்ட அன்பழகன் மோகனை பார்த்து..

“எப்படா வேலையில ஜாயின் பண்ணப் போறிங்க..? ஹனிமூன் டிரிப்பெல்லாம் முடிஞ்சிருச்சுன்னு கேள்விப் பட்டேன்..” என்றான்..

“அதெல்லாம் முடிஞ்சிருச்சு.. மறுவீட்டு விருந்து.. மாமன் வீட்டு விருந்து அத்தை வீட்டு விருந்துன்னு அத்னை விருந்தும் சேர்ந்து முடிஞ்சிருச்சு..” மனைவியைப் பார்த்தபடியே சொன்னான் மோகன்..

“ஆமாமா.. அத்தனை விருந்தோட.. அத்தை மகளோடும்.. மாமன் மகளோடும் டூயட் பாடற விருந்தும் சேர்ந்து முடிஞ்சிருச்சு..” நொடித்தாள் சுசரிதா..

“டூயட்டா..?” அன்பழகனின் கண்கள் நண்பனைப் பார்த்து.. ‘அடேய் பாவி..’ என்றது..

“ஏண்டா.. புதுப் பெண்டாட்டியைப் பக்கத்தில வைச்சுக்கிட்டா லூட்டியடிச்சே.. நீ திருந்தவே மாட்டேடா..”

“அதை நீ சொல்லாதே.. பெண்டாட்டிகிட்ட கோள் மூட்டி விடறயே.. உனக்கு இந்தப் பிறவியிலே கல்யாணம் கிடையாதுடா..” என்றான் மேகான்..

“ம்ப்ச்..” அதிருப்திக் குரல் எழுப்பினாள் சுசரிதா..

“விட்ட விடிகாலையில என்ன வார்த்தை பேசறிங்க..? அச்சாணியமா பேசி வைக்காதீங்க.. பலிச்சுரப் போகுது.. அண்ணனுக்கா கல்யாணம் ஆகாது..? அவரோட நல்ல குணத்துக்கு அவரைக் கட்டிக்க ‘நீ’ ‘நான்’னு பெண்கள் வரிசை கட்டிக்கிட்டு போட்டி போடுவாங்களே..”

சுசரிதா விவரித்துக் கொண்டிருந்த போதே அங்கே வந்த மாளவிகா..

“ஆமாமாம்.. வரிசை கட்டிக்கிட்டு வர்றாங்க.. நீங்க போயி வரிசையை சரி செய்து விடுங்கண்ணி..” என்று கடுப்படித்தாள்..

அன்பழகன் அமைதியாக ஓர் பார்வை பார்த்து வைக்க மாளவிகா பற்களை நறநறத்தாள்.. தங்கையின் கொலை வெறியைக் காணச் சகிக்காத மோகன்..

“ஏண்டா விடிஞ்சவுடன் எழுந்திருச்சு இங்கே வந்துட்டியா..?” என்று கேட்டான்..

“ஆமாண்டா.. ஆபிஸ்க்கு போகிற அவசரத்தில இங்கே வந்துட்டுப் போனா சரிவராது..”

“அதைச் சொல்லு… அப்ப காலேஜீக்குப் போகிறவங்களும் போயிருப்பாங்க.. உன்னால யாரையும் பார்த்திருக்க முடியாது..”

மோகன் எடுத்துக் கொடுக்க.. அன்பழகனை முறைப்பதை நிறுத்திவிட்டு அண்ணனை முறைக்க ஆரம்பித்தாள் மாளவிகா..

“ஏண்டா..?” என்றான் அன்பழகன்..

“விடுடா.. விடுடா.. இதென்ன புதுசாவா நடக்குது..? நாங்க நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிருவோம்டா..” மோகன் சொன்னான்..

“அப்ப.. கிளம்பவா..?” அன்பழகன் மாளவிகாவை பார்த்தான்..

“டேய்.. நான் இங்கே இருக்கேன்..” அவன் முதுகில் தட்டி விடை கொடுத்தான் மோகன்..

அன்பழகன் கிளம்பிப் போகும் வரை அமைதியில்லாமல் அங்கே நெருப்புப் பொறி பறக்கும் பார்வையுடன் உலா வந்து கொண்டிருந்த மாளவிகா அவன் கிளம்பிப் போனதும் அவனது வண்டி திரும்பி மறைந்த தெரு முனையை வெறித்தாள்.. மூக்கை உறிஞ்சினாள்.. வீட்டுக்குள் போய் விட்டாள்..

“இவளுக்கு அன்பு அண்ணனைப் பிடிக்காதா..?” விசாரித்தாள் சுசரிதா..

“ரொம்பப் பிடிக்கும்.. அதுதான் பிரச்னை..” என்றான் மோகன்..

“புரியலையே..”

“புரிஞ்சா உனக்கும் இவளப் போல கொலைவெறி கிளம்பிரும்.. புரியாத வரைக்கும் பெட்டர்..”

மோகன் வீட்டுக்குள் போகப் போக.. அவனுடைய டிசர்ட்டின் நுனியைப் பிடித்து இழுத்து நிறுத்திய சுசரிதா.. கால்களால் தரையில் உதைத்து அடம் பிடித்தாள்..

“சஸ்பென்ஸ் தாங்கலை.. ம்ம்ம்.. சொல்லிட்டு போங்க.. ம்ம்ம்..”

“என்னடி இது.. நேத்து ராத்திரி மோகினி போல இருந்த.. இப்ப என்னடான்னா அமுல்பேபி போல ஆகிட்ட..?”

மோகனின் கண்சிமிட்டலில் சுசரிதாவின் அடம் நின்று விட்டது.. முதல்நாளிரவின் நினைவில் வெட்கிய வளாக அவள் மோகனின் மார்பில் சாய்ந்தாள்.. அவனது டிசர்ட்டின் பட்டனைத் திருகினாள்..

“அப்படியே அத்தனை பட்டனையும் பிய்ச்சுப் போட்டிரனும்.. அருமையான பெண்டாட்டி..” சிலாகித்தான் மோகன்..

“ஏங்க..” சுசரிதா கொஞ்சினாள்..

“என்னங்க..?” அவளை விட அதிகமாக அவன் கொஞ்சினான்..

“எதுக்காக அன்பு அண்ணன் மேல மாளவிகா கோபமாயிருக்கா..?”

“விட மாட்டியே.. அது ஒரு பெரும் கதைடி..”

“அந்தக் கதையை எனக்குச் சொல்லுங்க..”

“அதுவா..? நம்ம மாலு இருக்காள்ல.. இவளுக்கு நம்ம அன்பு மேல ஒரு கண்ணு..”

“அடச்சீ.. மாலு உங்க தங்கை.. நினைப்பிருக்கட்டும்..”

“யாருடி இவ.. அதுக்காக உள்ளதைச் சொல்லாமல் இருக்க முடியுமா..? இவளுக்கு உண்மையாவே அன்பு மேல நோக்கம் தாண்டி..”

“நிஜமாவா..? அப்புறம் எதுக்காக பிடிக்காத மாதிரியே பேசறா..?”

“பயபுள்ள.. இவளை அப்படி ஆக்கி வைச்சிருக்கான்..”

“என்னங்க பண்ணித் தொலைச்சாரு..?”

“இவ அவனுக்கு காதல் கடிதம் வரைஞ்சு கையில கொடுத்திருக்கா..”

“அதைத் தெரிஞ்சு நீங்க அவளைக் கண்டிச்சீங்களா..?”

“முமுசாக் கேட்க மாட்டியா.. நம்ம அறிவு ஜீவி அந்தக் கடிதத்த அப்படியே கொண்டு போயி அவனோட அப்பாகிட்ட கொடுத்துட்டான்..”

“கடவுளே..” வாய் பொத்தினாள் சுசரிதா..

“உனக்கே இப்படியிருக்கில்ல..? எழுதினவளுக்கு எப்படியிருக்கும்..?”

“ஒரு கல்லைத் தூக்கி மண்டையில போட்டு காதலனோட கதையை முடிச்சு வைச்சு அனுப்பிரலாம்ன்னு தான் இருக்கும்..”

“அதே.. இந்தப் படுபாவி அதோட விட்டானா..? இதை யாருடா கொடுத்ததுன்னு அந்த லெட்டரை ஒத்தை எழுத்தைக்கூட விடாம படிச்சு முடிச்ச இவனோட அப்பா கேட்டு வைக்க.. என் பிரண்டோட தங்கை மாளவிகா தான் கொடுத்தாப்பா.. என்ன எழுதியிருக்கான்னு கேட்டு வைச்சிருக்கான்..”

“இப்படியும் ஒருத்தன் இருப்பானா..?” சுசரிதா தலைமேல் கை வைத்தாள்..

“இப்பச் சொல்லு.. இவனைக் கண்டா என் தங்கைக்கு ரத்தம் கொதிக்குமா.. கொதிக்காதா..?”

“கொதிக்கத்தான் செய்யும்.. நிலைமையை எப்படித் தான் சமாளிச்சீங்க..?”

“அன்பழகனோட அப்பா படு ஸ்ட்ரிக்ட்.. மகனை நல்லவனா வளர்த்திருக்கிற மனுசர் எத்தனை மிலிடிரி தனமாக இருப்பார்..?”

“யெஸ்.. யெஸ்..”

“நேரா மாலுவோட காலேஜீக்குப் போயி இதை எப்படி என் மகன் கையில நீ கொடுக்கலாம்ன்னு கேட்டிருக்காரு..”

“கஷ்டகாலம்.. பெண்ணைப் பெத்தவங்க செய்யற வேலையை அன்பைப் பெத்தவர் செஞ்சு வைச்சிருக்கார்..”

“இவனோட அப்பா எப்படியிருப்பார்..? இவனப் போலதான இருப்பார்..? மாலு அவரைக் கண்டதும் ஒரு நிமிசம் அங்கிள் என் லெக்சரர்கிட்ட பர்மிசன் வாங்கிட்டு வந்து உங்ககிட்டப் பேசறேன்னு சொல்லிட்டு எனக்கு போன் போட்டு ‘ஓ’ன்னு அழுதா..”

“நீங்க என்ன செஞ்சீங்க..?”

“முதல்ல திட்டினேன்.. ஆயிரம்தான் இருந்தாலும் அவளுக்கு நான் அண்ணனில்லையா.. அடுத்து வழி சொன்னேன்..”

மோகன் சொல்லச் சொல்ல.. தங்கையைக் காப்பாற்றிய அந்த பொய் காரனின் மீது கரை காணா காதல் சுசரிதாவுக்குள் எழுந்தது..

0Shares

Reviews – Poiselanerangalil Azhakanathu / பொய் சில நேரங்களில் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link