Chapter 06
சோமசுந்தரத்தின் வீட்டில் முன்னாலிருந்த பிரம்மாண்டமான கேட்டையும் அதன் முகப்பிலிருந்த ஆடம்பரமான செக்யூரிட்டியின் அறையையும் பார்த்தவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை..
‘இந்த வீட்டில் இருக்கிறவர்களை.. இவளுக்கு எப்படித் தெரியும்..?’ சந்தேகம் நெஞ்சில் எழுந்தது..
அதை அவளிடமே கேட்டுவிடலாம் என்று திரும்பி பார்த்தால்.. அவளைக் கண்ட செக்யூரிட்டி அலறியடித்துக் கொண்டு.. “சின்னம்மா.. நீங்களா..?” என்று ஓடி வந்தான்..
“சின்னம்மாவா..? இவளா..?”
அவன் திகைப்பில் ஆழ்ந்த போது… அந்த பிரம்மாண்டமான கேட் திறந்து அவர்களுக்காக வழிவிட்டது…
“வாங்க..” அவனை வரவேற்றபடி.. உரிமையுடன் உள்ளே நடந்தாள் தான்யலட்சுமி..
அந்த வீட்டின் சுற்றுப் புற வளாகத்தையும்.. தோட்டத்தையும்.. நீச்சல் குளத்தையும் பார்த்தவனுக்கு.. ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வழிதப்பி வந்து விட்ட உணர்வு ஏற்பட்டது..
போர்டிகோவில் அணிவகுத்து நின்ற கார்களின் வரிசையைக் கண்டவனுக்கு.. எதனால் அவளுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் ஏறவேண்டிய அவசியமில்லாமல் போனது என்று புரிந்தது..
‘இவளுக்கு டூ வீலரில் ஏறிப் பழக்கமிருந்திருக்காது.. அதை நான் வேற மாதிரி நினைச்சிட்டேன்.. இவளுக்கு வேற அட்வைஸ் பண்ணித் தொலைச்சிட்டேன்.. இவ என்னை என்னன்னு நினைச்சிருப்பா..’
அவளைப் பார்த்தவனின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்டதைப் போல் மென்மையாகச் சிரித்தாள்..
“இது உன் வீடா..?”
“ம்ம்ம்..”
“அப்புறமெதுக்கு அப்படியிருந்த…?”
“எப்படி..?”
“நான் அட்வைஸ் பண்றப்போ.. கோவில் மாட்டைப் போல தலையைத் தலையை ஆட்டிக் கேட்டுக்கிட்டியே.. ஏன்..?”
“வேற என்ன செய்யச் சொல்றீங்க..?”
“உண்மையைச் சொல்லலாமில்ல..?”
அவனது கேள்வியில் இருந்த நியாயம் அவளுக்குப் புரியத்தான் செய்தது..
ஏன் அவள் அதை சொல்லவில்லை..?
அவளுக்கே அதற்கான காரணத்தை இனம் விளங்கிக் கொள்ள முடியவில்லையெனும் போது.. அவனிடம் என்னவென்று அதைச் சொல்லுவாள்..?
“தோணல..”
“இது ஒரு பதிலா..? ஏன் தோணல..?”
“தெரியலை..”
“ம்த்சு.. நீ யென்ன மனிரத்னம் படத்தின் கதாநாயகியா..? ஒற்றை வார்த்தையிலேயே பதில் சொல்லனும்னு பிடிவாதமா பேசி வைக்கறியே.. முடியலைம்மா.. உனக்காக அத்தனை தூரத்துக்கு மெனக்கெட்டு.. பரிதாபப்பட்டு.. பாவப்பட்டு.. நான் அட்வைஸ் பண்ணிக்கிட்டு வந்தா.. நீ அதைக் கேட்டுட்டு மனசுக்குள் சிரிச்சிக்கிட்டு இருந்தியா…?”
‘பட்டு.. பட்டு..’ என்று அவன் பட்ட பாட்டை சொன்னவன் கோபப்பட்டு விட்டான்..
“ஐயையோ.. நான் அப்படிச் செய்வேனா..?”
“எனக்கு உன்னைப் பத்தி என்ன தெரியும்..? நீ செஞ்சாலும் செஞ்சிருப்ப.. அப்படி செய்யக் கூடிய ஆள்தான்..”
“அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடாதீங்க.. இது எங்க வீடு.. நாளைக்கு இதுக்கான பதிலைச் சொல்கிறேனே.. இப்ப எதையும் பேச வேணாமே ப்ளீஸ்..”
அவள் தாழ்ந்த குரலில் கெஞ்சியதும்.. எதுவும் பேசாமல் அவளுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.. கோகுல கண்ணன் அங்கே நடந்து கொண்டிருந்த விசாரணை மன்றத்தை ஒரு பார்வையாலேயே அவனால் எடை போட முடிந்தது.. அவள் அறியமுகம் படுத்திய நபரிடம் கை கொடுத்தவன் சோமசுந்தரத்தின் முகம் போன போக்கை கவனிக்காமல் விட்டு விட்டான்..
மழையில் நனைந்து போயிருந்த மகளை ஏற இறங்க பார்த்த அகிலாண்டேஸ்வரி முகம் சுளித்தாள்..
“எப்படி மழையில நனைஞ்சே தான்யா..?”
“மழை விட்டுருச்சே மம்மி.. இல்லைன்னா.. எப்படி நனைஞ்சேன்னு.. நனைஞ்சு காண்பிச்சிருப்பேனே..”
முன் பின் அறிமுகமில்லாத ஒரு வாலிபனுடன்.. சொட்ட சொட்ட மழையில் நனைந்து.. அவனது இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டிற்கு முன்னால் இறங்கியது மில்லாமல்… அவன் முன்னாலேயே கேலி பேசும் மகளை என்ன செய்தால் தேவலாம் என்று பல்லைக் கடித்தபடி கணவனைப் பார்த்தாள் அகிலாண்டேஸ்வரி.
அவரோ இமை மூடித்திறந்தார்.
“பொறு..” என்று அர்த்தம் அதில் பொதிந்திருக்க அவளால் செய்ய முடியாத அந்தச் செயலை அவளும் செய்து தொலைத்தாள்..
“உன்னைக் கூப்பிட கார் வந்திருக்குமே தான்யா..”
புயலை உள்ளடிக்கிய அமைதியுடன் கேட்டார் சோமசுந்தரம்..
“நான் அதுக்கு முன்னாலேயே காலேஜைவிட்டு கிளம்பிட்டேன் டாடி..”
‘இவள் எதற்காக பொய் சொல்கிறாள்..’ என்று திகைத்து அவள் முகம் பார்த்த கோகுலக் கண்ணனுக்கு அவள் கண்களின் ரகசிய சமிஞ்கை கவனத்தில் பட்டது..
அவனுக்கான அந்த சங்கேத மொழியில் அவன் மனதில் தென்றலடித்தது.. அவன் பேசாமலிருந்துவிட்டான்.
“நான் தான் சொன்னேனேம்மா..”
டிரைவரின் உற்சாகக் குரலையும்.. அவன் முகத்தில் பரவிய வெளிச்சத்தையும் கண்ட பின்னால்தான்.. “ஏன் தான்யா அந்தப் பொய்யை சொன்னாள்..” என்ற விவரம் அவனுக்கு பிடிபட்டது..
மாணிக்கத்தை ஓர் பார்வையில் அடக்கிய சோமசுந்தரம் மகளிடம் கேள்விக் கணையை தொடுத்தார்..
“அவ்வளவு முக்கியமா எங்கே போயிருந்தே தான்யா..?”
இதற்கான பதிலை அவள் எப்படிச் சொல்லப் போகிறாளோ என்று ஏகத்துக்கும் கவலைப்பட்டான் கோகுலக் கண்ணன்..
தான்யா.. அலட்டிக் கொள்ளவேயில்லை.. அதற்குள் அவருக்கான பதிலை அவள் யோசித்து வைத்திருந்தாள்..
“எங்க காலேஜ்மேட் ஒருத்திக்கு செமபீவர் மம்மி.. அந்த பீவரோட கிளாஸூக்கு வந்திட்டா போல.. லன்ச் டயத்தில்.. நான் வெளியே நடக்கிறேன்.. இவ எனக்கு முன்னாலேயே நடக்கிறா.. திடீர்ன்னு பார்த்தா.. தொபுக்கடீர்ன்னு மயக்கம் போட்டு என் மேலேயே விழுந்துட்டா…”
தான்யா கதை சொல்லிய விதத்தில் யாருக்குமே அதை சந்தேகிக்கத் தோன்றவில்லை..
“உன் மேல விழுந்துட்டாளா..? உடனே போய் குளிச்சிட்டு வந்துடு..” அகிலாண்டேஸ்வரி எரிச்சல் பட்டாள்..
“கேளுங்க மம்மி.. அவ என் கிளாஸ் மேட்டில்லை.. சீனியர் போல.. யாருன்னே எனக்கும் தெரியல.. ஆனா பாவமா இருந்துச்சு..”
“உன்கிட்ட இது ஒன்னு இருக்கு தான்யா.. சொன்னாலும் திருந்தமாட்டே…”
மற்றவர்களின் மீது பாவப்படுவது எவ்வளவு பாவமான செயல் என்று மகள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே என்று கடுப்பானாள் அகிலாண்டேஸ்வரி…
“இதில் திருந்த என்ன இருக்கு..?”
கோகுல கண்ணனுக்கு அந்த வீட்டில் நிற்கவே பிடிக்கவில்லை…
கோகுலக்கண்ணனைப் பார்த்த தான்யாவின் பார்வையில் தெரிந்த இறைஞ்சலால்.. அங்கிருந்து வெளியேறாமல் தேங்கி நின்றான் கோகுலக் கண்ணன்..
“என்ன மம்மி செய்கிறது..? அப்பத்தான் இவர் ஹெல்புக்கு வந்தார்.. ஒரு ஆட்டோவைப் பிடிச்சு.. அதில எங்க ரெண்டு பேரையும் ஏத்தி விட்டுட்டு.. இவரோட யமஹாவில் பின்னாலேயே வந்தார்..”
“வந்தார்.. வந்தாருன்னு சொல்றியே.. எங்கே வந்தார்..”
மகளின் செய்கையில் கொஞ்சம் கூட உடன் பாடில்லாத அகிலாண்டேஸ்வரி பல்லைக் கடித்தபடி கேட்டாள்..
“வேற எங்கே..? அந்தப் பெண்ணின் வீட்டுக்குத் தான்.. அங்கே அவளை விட்டுவிட்டு.. நாங்க கிளம்பி இங்கே வந்தோம்.. வரும் வழியில் செம மழை.. நனைஞ்சாச்சு.. அவ்வளவுதான்.. போதுமா..”
தான்யா கதை சொல்லி முடித்துவிட.. அப்போதும் கிடுக்குப்பிடி போட்டார் சோமசுந்தரம்..
“இதை ஒரு போன் பண்ணி சொல்லாமில்லையா.. டிரைவர் உன்னை தேடுவான்னு உனக்குத் தோணலையா..?”
“சொல்லியிருக்கலாம் தான்.. பட்.. அந்த அமளியில் எனக்கு அது தோணாம போயிருச்சு டாடி..”
“ஓn.. லீவ் இட்..”
சோமசுந்தரம் வெளியில் கிளம்பிவிட.. மாணிக்கம் நிம்மதியாக மூச்சு விட்டான்..
‘என்ன பிழைப்புடா இது.. இவங்க கொடுக்கிற சம்பளத்துக்காக.. தினமும் செத்துப் பிழைக்கனுமா..? இந்த சம்பளமும் வேணாம்.. இந்த வேலைக் கழுதையும் வேணாம்..’ என்ற முடிவுக்கு அவன் வந்த போது…
“ஸாரிண்ணா..” என்றாள் தான்யா..
அந்த ஒரு வார்த்தையில் அவனின் முடிவு மாறிவிட்டது..
‘இவ எதுக்காக… டிரைவரிடமெல்லாம் ஸாரி கேட்கிறா..’ அகிலாண்டேஸ்வரி கோபம் கொண்டாள்..
“தான்யா..” ஆட்சேபக் குரலில் அவளை அழைத்த தாயிடம்..
“மம்மி.. ப்ளீஸ்.. தலையெல்லாம் வலிக்குது.. எனக்கும் இவருக்கும் காபி சொல்லுங்க.. ப்ளீஸ்..” என்று கெஞ்சுதலாக கேட்டாள் தான்யா..
இப்படிக் கேட்கும் மகளிடம் கோபப்பட அகிலாண்டேஸ்வரியால் முடியவில்லை.. அவள் பார்வையில் காபி வந்து சேர்ந்தது..
“உட்காருங்க.. காபி சாப்பிடுங்க..” உபசரித்தாள் தான்யா…
அகிலாண்டேஸ்வரியின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.. மகளின் செய்கையை கொஞ்சம் கூட அவள் ரசிக்கவில்லை..
‘இவனுக்கெல்லாம் காபி கொடுத்துப் பேசனுமா..?’
அவளது அகத்தை முகம் காட்டிவிட.. அரை கப் காபியோடு எழுந்து விட்டான் கோகுலக் கண்ணன்..
“நான் கிளம்பறேங்க..”
கை குவித்தவனுக்கு.. தலையை அசைத்துக்கூட விடை கொடுக்கவில்லை அகிலாண்டேஸ்வரி..
‘இப்படிப்பட்ட பெண்ணுக்கு.. இப்படிப்பட்ட பெற்றவர்களா..?’
மற்றவர்களைப் போலவே.. அவனாலும் அதை நம்ப முடியவில்லை..
வாசல்வரை வந்து வழியனுப்பினாள் தான்யலட்சுமி.. போதாக்குறைக்கு..
“தேங்க்ஸ்..” என்று சொன்னாள்..
“இதை நான் சொல்லனும்..”
அவள் விழிகளுக்குள் ஊடுறுவிப் பார்த்தான் அவன்.. அவள் முகத்திலும் செம்மை படர்ந்தது.. அவன் மனதில் சாரல் அடித்தது…
“ஏன் என்னை காட்டிக் கொடுக்கலை..?”
“ஏன் நீங்க வீடு வரைக்கும் கொண்டு வந்து என்னை விட்டு விட்டுப் போறீங்க..?”
“இது என்ன கேள்வி..? என்னால்தான் நீ மழையில் நனைஞ்ச.. என்னால் தான் நேரத்தோடு வீட்டுக்கு வர முடியாம தேங்கி நின்ன.. அதான் கொண்டு வந்து விட்டேன்..”
“செஞ்ச தப்புக்கு பரிகாரம் பண்ணிவிட்ட பின்னாலே எதுக்காக உங்களை நான் காட்டிக் கொடுக்கனும்..?”
“ஓ..”
அவளின் அந்த நியாத்தில் அவன் வசீகரிக்கப் பட்டான்.. ஒவ்வொரு தருணத்திலும்.. அவளிடமிருந்து வெளிப்பட்ட பரிமாணங்களின் அழகில் அவன் மயங்கிப் போயிருந்தான்..
“ஓகே.. பை..”
“ஓன் மினிட்..”
“என்ன..?”
“என் பெயர்.. தான்யலட்சுமின்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்..”
“தான்யான்னுதானே உங்கள் வீட்டில் கூப்பிட்டாங்க..?”
“முழுப்பெயர் தான்யலட்சுமி..”
“ஓஹோ..”
“உங்க பெயர் என்னன்னு இதுவரைக்கும் நீங்க சொல்லலையே..” அவளது கேள்வி அவனுக்குப் பிடித்த மானதாக இருந்தது.. அவன் மனம் உல்லாசமாக.. அவன் வாய்விட்டுச் சிரித்தான்..
“நீங்க கேட்கலையே..”
“இப்பத்தான் கேட்டுட்டேனே..”
“கோகுலக் கண்ணன்..”
அவன் மயக்கும் சிரிப்புடன் யமாஹாவை கிளப்பிக் கொண்டு பறந்து விட்டான்.. போகும் போது அவன் தலையசைத்த சிறு அசைவில்.. அவள் மனம் சிக்கித் தவித்தது…
“கங்கைக் கரைத்தோட்டம்..
கன்னிப்பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே..
காலையினால் காற்று..
பாடி வரும் பாட்டு..
எதிலும் அவன் குரலே..”
தோட்டத்தில் பாடல் ஒலித்தது.. தோட்டக்காரனின் எப்.எம். ரேடியோவிற்கு.. அவள் மனம் எப்படிப் புரிந்தது என்ற நினைவுடன் தான்யலட்சுமி வீட்டுக்குள் செல்லத் திரும்பினாள்..
“கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்..
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்..
கண்மயங்கி ஏங்கி நின்றேன்..
கன்னி சிலையாக நின்றேன்..
என்ன நினைத்தேனோ..
தன்னை மறந்தேனோ..
கண்ணீர் பெருகியதே..”
‘பி. சுகிலாவின் இனிமையான குரல்.. கண்ணதாசனின் கண்ணன் பாட்டு.. மயக்கும் மாலைப் பொழுதென்பது இது தானே..’ என்று மயங்கிப் போனாள் தான்யா..
பாடலின் ஒவ்வொருவரியும் அவளது ரத்த நாளத்தில் கலந்தது ஏனோ.. அவளுக்கு வாய்விட்டு அழ வேண்டும் போலத் தோன்றியது.. ஏகாந்தமான அந்தப் பொழுதில் தன்னை முழுவதுமாக கரைத்துக் கொண்டாள் தான்யா..
“கண்ணீர் பெருகியதே..”
அவள் மனம் அந்த வரிகளில் நிலை கொண்டது.. அவளது கண்களில் இருந்து பெருகிய கண்ணீருக்கான காரணம் புரியாமல்.. சொல்லத் தெரியாத சோகத்தில் சிக்குண்டாள் அந்தப் பேதை…
“ஏய்ய்..” அவன் சொடக்குப் போட்டு அழைத்ததைப் போலத் தோன்ற.. பாதித்தூக்கத்தில் புரண்டு படுத்து கண் விழித்து அவனைத் தேடினாள்…
“இறங்கு” அவன் ஒற்றை விரலில் கட்டளை-யிடுவதைப் போலத் தோன்ற கட்டிலை விட்டு இறங்கினாள்..
“நான் வருகிற வரைக்கும் இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது..”
ஆணியடித்ததைப் போல நின்றவளுக்கு.. ‘மழையைக் காணோமே’ என்று தோன்றியது.. சுற்றிலும் இருந்த மெல்லிய வெளிச்சத்தில் பார்வையில் துழாவினாள்..
“த்ச்சு.. இது காலேஜில்லை.. என்னோட ரூம்..”
அன்று இரவு அவள் தூங்க வெகு நேரமானது…
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.