Chapter 07
“அவனா..?” விழி விரித்தாள் யாமினி…
“ஏண்டி..?” தான்யாவுக்கு அவளது கேள்வி பிடிபட வில்லை..
“அவன் ரௌடிடீ.. காலேஜே அவன் கண்ட்ரோலில் தான் இருக்குது.. யாராவது வாலாட்டினா.. ஓரே அறைதான் அத்தனை பல்லும் உதிர்ந்திடும்..”
“அடேங்கப்பா.. அப்படி யாரை அடிப்பான்..?”
“ரோக்குகளைத்தான் அடிப்பான்.. இந்த கேர்ள்ஸை கிண்டலடிக்கிறது.. அவங்களை டார்ச்சர் பண்ண நினைக் கிறது இதெல்லாம் அவனுக்கு கட்டோடு பிடிக்காது..”
“அப்புறம் எப்படி அவனை ரௌடின்னு சொல்ற..?”
“அடிதடின்னாலே ரௌடிதானேடி..”
“தப்பு பண்ணினா அடிக்கனும்.. அதுதானே ஆண்மை.. ரௌத்திரம் பழகுன்னு பாரதியாரே சொல்லியிருக்கார்.. அவன் ரௌடியில்லை.. ரௌத்திரன்..”
விட்டால் அவனுக்கு கோவிலே கட்டி கும்பாவிஷேகம் பண்ணி விடுபவளைப் போல முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு தான்யலட்சுமி பேசிய விதத்தில் யாமினி அதிசயப்பட்டுப் போனாள்..
“நேத்து ஒரு நாள்தானேடி அவன்கூட பழகியிருக்க..?”
“ஊம்.. அதுக்கென்ன..?”
“அதுக்குள்ள அவனை ஹீரோ ரேஞ்சுக்கு ஏத்திப் பேசி பில்ட்-அப் கொடுக்கிறேயே.. இருந்தாலும் ரொம்பவும் ஓவர்டி..”
“எனக்கொன்னும் அப்படித் தோனலை..”
“தோனாது.. தோனாது..”
உதட்டைச் சுழித்து.. அழகு காட்டிய யாமினி.. தான்ய லட்சுமியின் முதுகிற்கு பின்னால் பார்வையை படற விட்டாள்.. உடனே முகம் மாறினாள்..
“எதுக்கு இப்படி அரண்டு போய் பார்க்கிறா..?”
தான்ய லட்சுமிக்கு புரியவில்லை…
“ஏண்டி பிசாசே.. இந்த முழி முழிக்கறே..” என்று அகிலாண்டேஸ்வரியின் மகளாக அதட்டினாள்..
“அவன் வராண்டி.. நேரா இங்கேதான் வர்றான்..” யாமினியின் குரல் நடுங்கியது..
“என்னவோ… வாரான்.. வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே..” என்று பயமுறுத்துவதைப் போலவே பேசிக் கொண்டிருந்தவளிடம் விவரம் கேட்டு ஓய்ந்து போன தான்யலட்சுமி.. இது வேலைக்கு ஆகாது என்று திரும்பிப் பார்த்தாள்..
பார்த்தவளின் முகம் மலர்ந்து விகசிக்க.. அதை விசித்திரமாகப் பார்த்தாள் யாமினி..
“அவனைப் போய் இப்படி பருகு.. பருகுன்னு பார்த்து வைக்கிறியே.. உனக்கு பயமே இல்லையா..?”
“அவனென்ன சிங்கம்.. புலி.. கரடியா..?”
“அதுக்கும் மேலே.. நேத்தே உன்னை மழையில நனைய விட்டவன்தானேடி அவன்..?”
“அதுக்குத்தான் உனக்கு கோபமா..? நனைஞ்சது நான்.. உனக்கெதுக்கு இத்தனை கோபம்..?”
“என்னவோ போ தான்யா.. நீ தீக்குள் விரலை விட நினைக்கிற.. நான் அவ்வளவுதான் சொல்வேன்.. அவன் கிட்ட வந்து விட்டான்.. நான் எஸ்கேப் ஆகிடறேன்..”
“ஏண்டி.. இருந்து அவன்கூட நாலு வார்த்தை பேசிட்டுப் போக வேண்டியதுதானே..”
“அவன் கூடப் பேசிட்டாலும்..”
கழுத்தை ஒரு மார்க்கமாக நொடித்துப் பேசிய யாமினி.. அடுத்த நொடியிலேயே அங்கிருந்து கானாமல் போய்விட்டாள்.. அதற்குள் அவன் அவளை சமீபித்திருந்தான்..
“ஹாய்..” வரிசைப் பற்கள் தெரிய சிரித்தாள் தான்யா..
“எப்படியிருக்க..?”
அவள் அமர்ந்திருந்த மரத்தடி மேடையில் அவனும் அமர்ந்து கொண்டான்…
“இதானே வேண்டாம்கிறது.. நேத்து ஈவினிங்தானே என்னை பாத்தீங்க.. அதுக்குள்ளே நல விசாரிப்பா..?”
“என்ன செய்யச் சொல்ற..? ராத்திரியெல்லாம் தூக்கமில்லை.. விடிய.. விடிய.. உன் நினைப்புதான்..”
இயல்பாக அவன் சொல்ல.. சட்டென்று விழியுயர்த்தி அவன் முகம் பார்த்தாள் தான்யா..
‘உங்களுக்குமா..?’ என்ற கேள்வி தொண்டைக்குழி வரை வந்துவிட.. அதை அப்படியே தடுத்து உள்ளே தள்ளினாள்…
‘என்னை நினைத்து இவனுக்கு தூக்கம் போனதா..?’
ஏதேதோ மனம் நினைக்க.. எதிர்பார்ப்புடன் இதயம் படபடக்க கை விரல்களை கோர்த்துப் பிரிக்க ஆரம்பித்தாள்..
அவனுக்கு இதைப் போன்ற அவஸ்தைகள் இல்லை போல.. அவளின் கண்ணுக்குள் பார்த்து.. நேரடியாகப் பேச அவனாள் முடிந்தது..
“வேற ஒன்னுமில்லை.. உன்னை ரொம்ப நேரமா மழையில நனைய வெச்சிட்டேனா.. ஃபீவர்.. ஜன்னின்னு ஏதாச்சும் வந்திருமோன்னு எனக்குள்ளே ஒரு பயம்..”
‘பயமா..? இவனுக்கா..? பயமே இவனைப் பார்த்து பயப்படும்ன்னு யாமினி சொன்னாளே…’
“அதான்.. விடியவிடிய.. தூக்கமில்ல.. காலேஜூக்குள்ள நுழைஞ்சதும் உன்னைத்தான் தேடி வர்றேன்னா பார்த்துக்கயேன்.. சொல்லு.. எப்படியிருக்க..?”
‘இவ்வளவுதானா..?’ ஏமாற்றமடைந்தாள் தான்யா.. அவள் உள்ளம் எதிர்பார்த்தது எதை..? அதைத் தெளிவாக விளக்கிச் சொல்ல அவளிடம் வார்த்தைகளில்லை…
“நோ பிராப்ளம்.. நேற்று நைட்டே.. மம்மி ஆன்டிபயாட்டிக் டேப்லெட்ஸை சாப்பிட வைச்சிட்டாங்க..”
எங்கோ வெறித்தபடி பதில் சொன்னாள் தான்ய லட்சுமி..
“அதானே பார்த்தேன்.. உங்க அம்மான்னா.. சும்மாவா..?”
“உன் கிட்ட ஜூரத்தை அண்ட விட்டிருவாங்களா..?” அவன் பலமாகச் சிரித்தான்.
அவனது சிரிப்புச் சத்தத்தில் மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்க.. கல்லூரிக் கட்டிடத்தை திரும்பிப் பார்த்துக்கொண்டாள் தான்யலட்சுமி..
“என்ன பாக்கிற..? அவன் விசாரித்தான்..”
“இல்ல.. உங்க சிரிப்பு சத்தத்திலே.. காலேஜ் பில்டிங் ஆட்டம் கண்டு போயிருச்சோன்னு ஒரு டவுட்.. அதான்.. திரும்பிப் பார்த்தேன்..” அவள் சிரிக்காமல் விளக்கம் சொல்ல.. அவன் இன்னும் பலமாக சிரித்து வைத்தான்..
பறவைகளின் சிறகுகள் அடித்துக் கொள்ளும் சப்தத்தைக் கேட்ட தான்யலட்சுமி..
“போனாப் போகுது விட்டு விடுங்களேன்.. ப்ளீஸ்..” என்று பறவைகளுக்காக பரிந்து பேசினாள்..
“பார்த்தா சாது போல இருக்க.. பேசிப்பார்த்தா இத்தனை வாயடிக்கிற.. ம்ம்..”
அவனது பார்வை பிரியத்துடன் அவளை வருடிச் செல்வதை அவள் உணர்ந்தாள்..
“இவனா தீ…?”
அவளால் நம்ப முடியவில்லை.. அப்படியே அவன் தீயாக இருந்தாலும் தீண்டிப் பார்த்து விட அவள் மனம் ஆசைகொண்டது..
“தீ.. தித்திக்கும்.. தீ..
உன்னை தீண்டத்
தீண்ட இனிக்கும்..”
வாய்விட்டு பாடியவளை விசித்திரமாகப் பார்த்தாள் யாமினி.. அவளது பார்வையில் தான்யலட்சுமியின் பாட்டு நின்றது…
“என்னடி அப்படிப் பார்க்கிற..?”
“இந்தப் பாட்டை ஏண்டி ரசிச்சு.. அனுபவிச்சுப் பாடற..?”
“நீ ரொம்பக் கண்ட..”
யாமினியின் வாயை அடைத்தாலும்.. அவள் மனம் வெகு நேரத்திற்கு.. அந்தப் பாட்டை அசை போட்டுக் கொண்டிருந்தது…
“அவன் சுட்டெரிக்கும் சூரியனா..?”
அவளுக்கு சூரியகாந்தி மலராகும் ஆசை எதனால் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை…
“அவனைப் பற்றி உனக்கு என்னடி தெரியும்..?”
யாமினியின் கேள்விக்கு தான்யாவிடம் பதிலில்லை.. ஆனால்.. என்னவோ.. அவனை ஆதி நாளிலில் இருந்தே அறிந்து வைத்திருப்பதைப் போன்ற ஓர் உணர்வு.. ஓர் ஈர்ப்பு.. ஓர் சொந்தம்.. இவையாவும் எதனால் வந்தன என்று அவளால் சொல்ல முடியவில்லை…
அவனோடு பழகியிருக்கிறாளா..? சொந்தம் கொண்டாடியிருக்கிறாளா..? நீதான் என் உயிரென்று சொல்லியிருக்கிறாளா..? அந்த வார்த்தைகளை அவன் சொல்லக் கேட்டிருக்கிறாளா..? கூடலை உணர்த்தும் பார்வையோடு உறவாடியிருக்கிறாளா..? இல்லை.. அவனோடு ஊடல் கொண்டுதான் முகம் திரும்பியிருக்கிறாளா..?
இவை எதுவுமேயில்லாமல்.. ஏழேழு ஜென்மத்திலும் அவனோடு இணைபிரியாமல் வாழ்ந்தவளைப் போல ஏன் அவள் நடந்து கொள்கிறாள்..?
அவனை அவளுக்குப் பிடித்திருந்தது.. அவளைச் சுற்றியிருந்த மனிதர்களிடமிருந்து.. ஏதோ ஒரு வகையில் அவன் வேறுபட்டிருந்தான்.. அந்த வேறுபாடே அவளை ஈர்த்தது..
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.