Chapter 09
மறுநாள் மரத்தடி மேடையில் அமர்ந்து அவனுக்காக காத்திருந்த போது.. நொடிகள் நகர்வதை யுகங்கள் நகர்வதைப் போல உணர்ந்தாள் தான்யலட்சுமி..
அவள் முன்னால் நீண்ட நிழல் விழுந்தது.. ஆவலாக நிமிர்ந்து பார்த்தாள்.. அவளையே உறுத்து பார்த்தபடி சிவந்த விழிகளுடன் அவன் நின்றிருந்தான்..
தான்ய லட்சுமி அவனது கோபத்தை உணர்ந்தவளாக உதடுகளைக் கடித்தபடி தலை குனிந்தாள்.. குற்றம் சாட்டும் பார்வையுடன் அவளருகே அமர்ந்தான் அவன்..
“ஏண்டி..?”
மீண்டும் அதே உரிமையான அழைப்பு…
அவள் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.. அவனது அந்தப் பேச்சில் ஆனந்தமாக மூழ்கித் திளைத்து எழுந்தது அவள் மனம்..
“கேட்கிறேனில்ல..” அவன் அதட்டினான்..
அவனது கேள்வி அவளுக்கு புரிந்தது.. அவளது விலகலுக்கான காரணத்தைக் கேட்கிறான்..
“அது.. அது..” சொல்லமுடியாமல் அவள் திக்கித் திணறினாள்..
“என்னன்னு எனக்குத் தெரிஞ்சாகனும்.. உனக்குப் பிடிச்சித்தானே என்கூடப் பேசிப் பழகின.. அப்புறமும் எதுக்காக விலகப் பார்த்த..? உன் கோடிஸ்வரப் புத்தி முழிச்சிருச்சா..? என்னடா.. நம்ம ரேன்ஜூக்கு இவன் கிட்டக்கூட வரமுடியுமான்னு நினைப்பு வந்துருச்சா..?”
அவன் குத்தலாகக் கேட்டான்.. கேள்விகளைக் கேட்பதற்கு கொஞ்சம்கூட அவன் தயங்கவில்லை..
வில்லில் இருந்து விடுபட்டு வரும் அம்புகளைப் போல அவனது கேள்விக் கணைகள் குறிபார்த்து அவள் இதயத்தை தாக்கின.. அவள் அடிபட்ட பறவையாய் வேதனையுடன் அவனைப் பார்த்தாள்…
“இப்படிப் பார்த்தா என்ன அர்த்தம்..? என் கேள்விக்கு பதிலைச் சொல்லு..”
“உங்களை எதுக்காக கேள்ஸ் சுற்றிச்சுற்றி வரனும்..?”
அவள் சொல்லிவிட்டாள்.. அதைக் கேட்டவனின் முகம் முதலில் வியப்புக்கு மாறியது.. பின்னர் வழக்கமான தனது கடகட சிரிப்பை சிரித்தான் அவன்..
அந்த மாயக்கண்ணனின் சிரிப்பைப் போலவே.. அவன் சிரிப்பும்.. மனதை கொள்ளை கொள்வதை உணர்ந்து தவித்துப் போனாள் தான்ய லட்சுமி..
“ப்பூ.. இதுதான் விசயமா..? நான் என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன்.. அவர்களெல்லாம் ப்ரெண்ட்ஸ் தான்யா..”
“ஓ..” நம்பாத குரலில்.. “ஓ..” போட்டாள் தான்யா.. அவனும் அதை புரிந்து கொண்டவனாக.. அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.. அவன் பார்வை மனதை ஏதோ செய்வதை உணர்ந்து கொண்டவளாக விழி தாழ்த்தினாள் தான்யா…
புரியாத பல உணர்வுகளை.. தினம் தினம் உணர்த்திக் கொண்டு இருப்பவனின்.. நிழலைக்கூட யாரும் தொட்டு விடாமல் பத்திரப்படுத்திக் கொள்ளத் துடித்தது அவளது நெஞ்சம்..
“நம்பலைல்ல..?” மனத்தாங்கலுடன் அவன் கேட்டான்..
“நான் நம்பினா உங்களுக்கென்ன..? நம்பாவிட்டால் தான் உங்களுக்கென்ன..?”
மனதின் உணர்வுகளுக்கு ஆட்பட்டுப் போயிருந்த தான்யா.. அதைச்சொல்ல முடியாதவளாக வெடித்து விட்டாள்..
அவனது முகத்திலிருந்த மென்மை மறைந்து.. பழையபடி ரௌத்திரம் குடி கொண்டது..
“எனக்கு ஒன்னுமேயில்லையா..? எங்கே.. என் முகத்தை பார்த்துச் சொல்லு..”
அவன் முகம் பார்க்க முடியாத தனது நிலையை அவன் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு அழுதுவிட்டாள் தான்யா..
“தான்யா.. ஏய்ய்..”
நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான் கோகுலக் கண்ணன்.. அவன் கண் முன்.. அவளது மாளிகை போன்ற வீடு தெரிந்தது.. அந்த வீட்டின் மகாராணியைப் போன்றவள் அழுகிறாளா..?
“எதுக்குடி இப்படி அழுகிற..?”
“நீங்க எதுக்காக என்கூட சண்டைக்கு வர்றீங்க..?”
“யார் சண்டைக்கு வந்ததுன்னு நினைச்சுப் பார்த்துட்டுப் பேசு.. நானா சண்டைக்கு வந்தேன்..? நீதான்.. உப்புச் சப்பில்லாதயெல்லாம் காரணமாய் சொல்லிக்கிட்டு முகத்தை தூக்கி வெச்சிக்கிட்டு விலகிப் போற..”
“ஏன்னு.. காரணத்தை நான சொல்லிட்டேன்.. அது உங்களுக்கு உப்புச் சப்பில்லாததைப் போல தெரியுது..”
“ஏண்டி.. துயரம் பண்ற..? அவங்களெல்லாம் நிஜமாகவே எனக்கு பிரண்ட்ஸ்தாண்டி..”
“என்னையும் இப்படித்தானே அவங்ககிட்ட சொல்லுவீங்க..?”
“என்னது..?”
முதலில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றே அவனுக்கு புரியவில்லை.. மெதுவாக கேள்வியை உள்வாங்கி யோசித்த பின்னால்தான்.. அவனுக்கு அவளது கேள்வியில் பொதிந்திருந்த அர்த்தம் புரிந்தது..
அவளை ஆழமாக பார்த்தவன்.. அவனது கனத்த குரலில் கேட்டான்..
“அவங்களும்.. நீயும்.. ஒன்றாடி..?”
தான்யாவின் மனதில் பூப்பூத்தது.. எந்த வார்த்தைகளுக்காக அவள் ஏங்கினாளோ.. அந்த வார்த்தைகளை அவன் சமீபித்து விட்டதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது…
இருந்தும் அவளுக்குள் லேசான மனக்கிலேசம் இருக்கத்தான் செய்தது.. இன்னமும் தெளிவாக அவன் மனநிலையை அவன் சொல்லவில்லை..
ஆகையினால் அவள் வார்த்தை வளர்த்தாள்..
“எனக்கென்ன தெரியும்..?”
லேசாக தாழ்ந்திருந்த பார்வை அடிக்கடி உயர்ந்து அவன் முகம் பார்க்க… இமைகள் படபடக்க… விரல் கோர்த்துப் பிரித்துக் கொண்டிருந்தவளை மெல்லிய சிரிப்புடன் பார்த்தான் கோகுல கண்ணன்…
“உனக்கா தெரியாது..?”
கிசுகிசுப்பான அவனது குரல் அவளது செவியினில் நுழைந்து இதயத்தில் கலந்து இதமானதொரு இம்சையை உற்பத்தி பண்ணியது..
இன்பமான அந்த இம்சையில் கிறங்கிப் போனாள் தான்யா..
“தெரியாது..”
வெட்க மிகுதியால் அவள் குரல் நலிந்து ஒலிக்க.. அதை நாதம் போல் உணர்ந்தான் கோகுலக்கண்ணன்..
“ஊஹூம்..? உண்மையிலேயே உனக்கு தெரியாது.. இதை நான் நம்பனுமா..? போடி.. போ.. உனக்கு நல்லாவே தெரியும்.. யார் பின்னாலும் சுத்தாத இந்த கோகுல கண்ணன் உன் பின்னால் மட்டும்தான் சுத்தறான்னு உனக்கு நல்லாவே தெரியும்டி.. யாருகிட்ட நடிக்கிற..?”
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.