Chapter 21

0Shares

“எங்கே போறோம் கண்ணன்..?”

தான்யா அறுபதாவது முறையா இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாள்..

“சொன்னாத்தான் வருவியா..?”

இதுதான் கண்ணனின் பதிலாக இருந்தது..

சந்தடிகள் நிறைந்த புறநகர் பகுதியில் அவன் யமஹா திரும்பி ஒரு சிறிய வீட்டின் முன்னால் நின்றது..

“வா.. மறக்காம வலது காலை எடுத்து வைச்சு வா..” என்றான் கண்ணன்..

“இது யார் வீடு கண்ணன்..?”

சிறியதாக இருந்தாலும்.. அழகாக.. சுத்தமாக.. வீட்டைச் சுற்றி மரங்கள்.. பூச்செடிகள் என்று பசுமை சூழ இருந்த வீட்டை பார்த்தபடி.. கேட்டாள் தான்யா..

“உன் வீடு.. நீ வாழப்போகும் வீடு..” அவன் கண் சிமிட்டினான்..

“கண்ணன்..” தான்யா பரவசமாகிவிட்டாள்..

‘இது கண்ணனின் வீடா…’ அவள் விழிகள் ஆவலுடன் வீட்டின் மேல் படர்ந்து புதிய பார்வை பார்த்தது.

“உன் பிறந்த வீட்டைப் போல இங்கே பணம் கொட்டிக் கிடக்காதுடி.. ஆனா பாசம் கொட்டிக்கிடக்குது.. இது மாட மாளிகை கூட கோபுரமில்லை.. ஒரு கிளார்க்கோட சம்பாத்தியத்தில் லோன் வாங்கிக் கடன் வாங்கி.. சிறுகசிறுகச் கட்டி முடிச்ச எளிமையான வீடு.. ஆனா.. உன் வீடு மாளிகைடி..”

கண்ணன் பேசப்பேச.. அவளுக்குக் அந்த வீட்டின் மீதான வாஞ்சை அதிகமாகியது.. வலது காலை கவனமாக எடுத்து வைத்து வீட்டுக்குள் சென்றாள் தான்யலட்சுமி..

“வாம்மா..”  ஆரத்தி எடுக்காத குறையாக வரவேற்ற அம்பிகா மங்களகரமான முகத்துடன் இருந்தாள்..

“இது அம்மாடி..” கண்ணன் மெதுவாக முணுமுணுத்தான்..

“நீங்க சொல்லவே வேணாம்..” சட்டென்று கரம் குவித்தாள் தான்யா..

“உன்னைப் பற்றி கண்ணன் நிறையச் சொல்வான்.. அது அத்தனையும் உண்மைன்னு பார்த்தவுடனேயே புரிய வைச்சிட்ட.. அன்புடன் அணைத்துக்கொண்டாள் அம்பிகா..”

“ஹாய்.. அண்ணி..”

ஆரவாரமாக வந்து.. தான்யாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கிய சுவாதி.. கண்ணனின் ஜாடையில் இருந்தாள்.. அது ஒன்றிலேயே அவள் மேல் தான்யாவுக்கு எல்லையற்ற பிரியம் பொங்கியது..

வாசலில் டுர்.. டுர்.. என்ற இனம் விளங்காத சப்தம் ஒன்று கேட்டது.. தான்யா கண்ணனைப் பார்த்தாள்..

“அப்பா வர்றார் போல..” அவன் சொன்னதும்.. அவளுக்குள் லேசான பதட்டம் எழுந்தது..

‘அவனுடைய அம்மாவும்.. தங்கையும் இயல்பாக அவளை ஏற்றுக் கொண்டதைப் போல அவரும் அவளை ஏற்றுக்கொள்வாரா..?’

“வண்டிச் சத்தத்தைக் கேட்டிங்களா அண்ணி.. அப்பா எட்டு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் வந்தாலும் இந்த சப்தம் அவரைக் காட்டிக் கொடுத்து விடும்.. பொலுசன் கண்ட்ரோல் போர்டுக்கு யார்.. யாரோ.. மொட்டைக் கடிதம் வேற போட்டிருக்காங்களாம்..?”

“எதுக்கு..?”

“வேற எதுக்கு.. எல்லாம் காற்றழுத்த மண்டலத்தை கரும்புகையாய் விட்டு.. மாசு படுத்தற குற்றத்துக் காகத்தான்.. அப்பாவோட வண்டி விடற கரும்புகையை நீங்க பார்த்ததில்லையே..”

சுவாதி கலகலத்து சிரிக்க.. அம்பிகா அவள் காதைப் பிடித்துத் திருகினாள்..

“போடி அரட்டை.. அவர் அப்படி கரும்புகைக்கு மத்தியில நீச்சலடிச்சு வரலைன்னா.. இந்த குடும்ப வண்டி எப்படி ஓடும்..?”

இதுபோன்ற குடும்பச் சூழ்நிலையைப் பார்த்தறியாத தான்யாவுக்கு இதயம் வலித்தது.. அவள் வீட்டில் இது போன்ற பணத்தட்டுப்பாடுகளைப் பற்றிய பேச்சே எழுந்த தில்லை.. அவள் வீட்டில் வேலை செய்யும் வேலையாள்கள் கூட வசதியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார்கள்..

“அவளுடைய கண்ணன் வீட்டில் மட்டும் இத்தனை சிரமமா..?”

வீட்டுக்குள் வந்த சாமிநாதன்.. தான்யாவைக் கண்டதும் புருவங்களை உயர்த்தினார்.. அவள் தயக்கத்துடன் எழுந்து நின்று கரம் குவித்தாள்..

“நான்..” அவள் திக்கித் திணறியபோது..

“தான்யா.. முழுப்பெயர் தான்யலட்சுமி.. இந்த வீட்டோட மருமகள்.. எங்களுக்கு இன்னொரு மகள்.. போதுமா.. உட்காரும்மா..”

விழிகள் விரிய பார்த்தவளை வாத்சல்யத்துடன் பார்த்தபடி எதிரே அமர்ந்தார் சாமிநாதன்.. அவளைக் கனிவுடன் பார்த்த கண்ணனின் குடும்பத்தார் காட்டிய பாசத்தில் அவள் கட்டுண்டு போனாள்..

“எப்படி கண்ணன்..? என்னை அவங்க பார்த்தது கூட இல்லை.. ஆனா என்னை வேற்று மனுசியாவே அவங்க ட்ரீட் பண்ணலை.. உன் வொய்பா பாக்கிறாங்க.. ட்ரீட் பண்றாங்க.. இது எப்படி சாத்தியம்..?”

மறுநாள் அவர்களின் கடற்கரைச் சந்திப்பில்.. திரும்பத் திரும்பக் கேட்ட அவள் விழிகளுக்குள் கண்ணனின் வீடுதான் தெரிந்தது..

“இங்கே வா..” அவளை அமைதிப்படுத்த கைபிரித்து அழைத்தான் கண்ணன்.. அந்த கைகளுக்குள் ஒன்றிக் கொண்டவள்.. பேச மறந்து கண்மூடினாள்..

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link