Chapter 07

0Shares

ஆர்த்தி கபிலனின் கையை இறுக்கிப் பிடித்தாள்.. அதுவரை நான்கடி தள்ளி நின்று பேசிப் பழகியவள்.. பஸ்ஸில் அவளருகில் அவன் அமர்ந்ததற்கு சுற்று முற்றும் பார்த்து வைத்தவள் – காலேஜ் கேண்டீனுக்குக் கூட வரத் தயங்கியவள், இன்று கையைப் பிடித்ததும் கபிலனுக்கு ஆச்சரியம் ஊற்றாகப் பெருகியது..

“வாங்க போகலாம்..” என்றாள் ஆர்த்தி..

அவள் தன் டூவீலரில் ஏறிக்கொள்ள முன்வருவாள் என்பதைக் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்காத கபிலன், ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனான்..

தினேஷை அவன் பார்த்த பார்வையில் வெற்றிச் செய்தி இருந்தது.. இப்போது தினேஷ் முகம் கருத்தான்..

“கொஞ்சம் இரு ஆர்த்தி..”

கபிலன் தான் போட்டிருந்த ரெயின் கோட்டை அவிழ்த்து.. ஆர்த்திக்கு மாட்டி விட்டான்.. தொப்பியை அவள் தலையில் வைத்து விட்டான்..

“புக்ஸ் இருக்கும் பேக்கை.. ரெயின் கோட்டுக்குள் மறைத்துக்கொள்..”

“நீங்க நனைவீங்களே..”

“நான் நனைந்தால் பரவாயில்லை.. நீ நனையக் கூடாது வா..”

கபிலனின் டூவீலரில்.. ஆர்த்தி ஏறிக்கொள்வதைப் பார்த்தபடி நின்றிருந்த தினேஷின் கண்கள் சிவந்தன..

ஊசிச் சரமாய் மழை நீர்.. கபிலனின் முகத்தில் கொட்டிக் கொண்டிருந்தது.. சொட்டச் சொட்ட நனைவதைப் பற்றி அவன் கொஞ்சம்கூடக் கவலைப் படவில்லை..

“மழையே.. மழையே..

இளமை முழுதும்..

நனையும் வரையில் வா..

சாரல் விடும் நேரம்..

தேவ மயக்கம்..

கூந்தல் மலரில்.. தேனைக் குடிக்க..

காத்துக் கிடந்தேன்..

கால்கள் கடுக்க..

இதயம் துடிக்க..”

வைரமுத்துவின் பாடல் வரிகளை வாய் விட்டுப் பாடினான் கபிலன்.. ஆர்த்தி.. அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டு மெதுவாக வினவினாள்..

“இந்த பாட்டை நான் கேட்டதில்லையே..”

“அதிகம் கேட்டிருக்க மாட்டாய்.. ரொம்பப் பழைய பாடல்களை.. ‘என்றும் இனியவை’ன்னு அடிக்கடி போடுவாங்க.. புதுப் பாடல்களை யூசுவலாய்க் கேட்டு விடுவோம்.. இது இரண்டிற்கும் இடைப்பட்ட பாடல்..”

“எதுவோ ஒன்று.. பட்.. இந்த மழை நேரத்திற்குக் கேட்க நன்றாக இருக்கிறது..”

வீடு இருந்த தெரு முனையிலேயே இறங்கிக் கொண்டாள் ஆர்த்தி..

“வீட்டு வாசலில் இறங்கினால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும்..” என்றாள்..

ரெயின் கோட்டைக் கழட்டப் போனவளை..

“வேண்டாம்..” என்று தடுத்தான் கபிலன்..

“ஏன்..?”

“வீட்டிற்குப் போவதற்குள் நனைந்து விடுவாய்..”

“இது உங்களின் ரெயின் கோட்..”

“உன்னிடமே இருக்கட்டுமே..”

அரை வட்டமடித்து டூவீலரைத் திருப்பி கொட்டும் மழையில் நனைந்து கொண்டே போய் விட்டான் அவன்..

கண்பார்வையிலிருந்து கபிலன் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த ஆர்த்தி.. வீட்டை நோக்கி நடந்தாள்..

மறுநாள் கல்லூரியில் கபிலனை அவள் பார்த்தபோது.. அவன் கடுமையான காய்ச்சலோடு இருந்தான்.. ஆர்த்தி பதறிப் போய் அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.. அனலாய் சுட்டது..

“கடவுளே.. இவ்வளவு காய்ச்சலோடு ஏன் காலேஜுக்கு வந்தீங்க..? டாக்டரிடம் காண்பித்தீங்களா..?”

“இல்லை.. டேப்லெட் போட்டுக்கிட்டேன்..”

“நீங்களாக மருத்துவம் பார்த்துக் கொண்டீங்களா..? நீங்கள் என்ன டாக்டரா..?”

கடிந்து கொண்டே.. அவனை டாக்டரிடம் அழைத்துப் போனாள்.. கபிலன் அந்த நிலையிலும் டூவீலரை ஓட்டினான்..

“டைபாயிடு ஜுரம் போல இருக்கு..”

டாக்டர் நிறைய பரிசோதனைகளை எழுதித்தர.. பொறுமையாய் எல்லா இடங்களுக்கும் அவனுடன் துணைக்குச் சென்று நின்றாள்..

“டைபாயிடு இல்லை.. மழையில் நனைந்ததால் வந்த வைரஸ் பீவர்தான்.. ரெஸ்ட் அவசியம்..”

டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொண்டு அவனுடன் டூவீலரில் ஏறிக்கொண்டாள்.

“எங்கே போகிறீங்க..?”

“காலேஜுக்குத்தான்..”

“வேண்டாம்.. உங்க வீட்டிற்குப் போங்க..”

“நீ காலேஜுக்குப் போக வேண்டாமா..?”

“உங்களை வீட்டில் விட்டுவிட்டு.. நான் ஆட்டோ பிடித்து காலேஜ் போய்க்கொள்கிறேன்..”

“சொன்னால் கேள் ஆர்த்தி..”

“நான் சொல்வதை நீங்க முதலில் கேளுங்க..”

“நீ பிடிவாதம் பிடிக்க மாட்டாயே..”

“என்னைப்போல ஒரு பிடிவாதக்காரியை நீங்க பார்த்திருக்கவே முடியாது.. அவ்வளவு பிடிவாதக்காரி நான்.. நீங்கதான் என்னை மக்காக்கி உட்கார வைத்து 

விட்டிங்க..”

“இப்போ.. எதுக்கு என் வீட்டிற்கு வரணும்கிற..?”

“பயமா..?”

“பயமா..? எனக்கா..? ஹ…”

“உங்கள் குடும்பத்தாரிடம் உங்களைப் பத்திரமாய் ஒப்படைத்தால்தான் எனக்கு நிம்மதி.. காலேஜில் என்னை இறக்கிவிட்டு விட்டு நீங்க கிளம்பிப் போனீங்கன்னா, நான் நிம்மதியில்லாமல் இருப்பேன்..”

“என் குடும்பத்தாரிடம் என்னை ஒப்படைக்கப் போகிறாயா..?”

கபிலன்.. வெறுமையான குரலில் வினவினான்.. ஆர்த்தி கபிலனின் உடல் நிலைமையைப் பற்றிய கவலையில்.. அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள்..

குரோம்பேட்டையில்.. ஒரு வீட்டின் மாடி போர்சனின் கதவைத் திறந்தான் கபிலன்..

“உள்ளே வா..”

“வீட்டில் யாருமில்லை போலத் தெரிகிறதே..”

“ஆமாம்..”

“வெளியில் போயிருக்கிறாங்களா..?”

“வீட்டில் இருந்தால்தானே.. வெளியில் போவதற்கு..?”

“புரியவில்லை..”

ஆர்த்தி கபிலனின் முகத்தையே பார்த்தாள்.. அவன் அவளுக்கு உட்கார சோபாவைக் காட்டி விட்டு.. எதிரே அமர்ந்தான்..

“பிளாட்பாரத்தில் குழந்தையாய் கிடந்தேனாம்.. இட்லி சுட்டு விற்கும் ஆயா எடுத்து வளர்த்ததாம்.. கொஞ்ச நாள்குக்கு முன்னால் ஆயாவும் டிக்கட் வாங்கிருச்சு.. நான் மட்டும் தனியாக இங்கே இருக்கிறேன்.. பகலில் படிப்பு.. ஈவினிங்கில் கால்சென்டரில் வேலை.. கான்வென்ட் படிப்பு எல்லாம் ஆயா கொடுத்ததுதான்.. இப்ப கை கொடுக்குது..”

ஆர்த்திக்கு கண்கள் கலங்கின.. கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் இறங்க கபிலன் அதட்டினான்..

“இப்ப ஏன் அழுகிற..?”

“உங்களைப் பார்த்துக் கொள்ள யாருமில்லையா..?”

“என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும்.. நீ கிளம்பு..”

அவன் சுள்ளென்று பேசினான்.. ஆர்த்தி எழுந்தாள்.. சமையலறைக்குச் சென்று கஞ்சி வைத்தாள்.. சோபாவில் கண்மூடி சரிந்த கிடந்த கபிலனின் அருகே அமர்ந்து அவனை எழுப்பி கஞ்சி குடிக்க வைத்தாள்.. மாத்திரைகளைத் தந்தாள்.. பெட்ரூமில் படுக்க வைத்து விட்டு, வீட்டைச் சுத்தம் செய்தாள்..

மாலையில் அவனை எழுப்பி, சூடாக காப்பி கொடுத்தாள்.. அவன் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தான்.. வீட்டைச் சுற்றிலும் பார்த்தான்..

தூசியில்லாத வீடும், அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களும், அழகாய் மாற்றி மாட்டப்பட்டிருந்த சுவர் ஓவியங்களும் வீட்டைப் புதிதாகக் காட்டின..

“பொம்பளை கால்பட்டா வீடே மாறி விடும் போல..” என்றான்…

ஆர்த்தி சிரித்துக் கொண்டே தன் கைப்பையை எடுத்துக் கொண்டாள்..

“நைட்டுக்கு கஞ்சி காய்ச்சி ஹாட் பேக்கில் வைத்திருக்கிறேன்.. டேப்லெட் பக்கத்தில் இருக்கிறது.. நான் கிளம்பவா..?”

‘கிளம்பப் போகிறாளா..?’

மனதில் இருந்த வெறுமை வீட்டிலும் பரவுவதை உணர்ந்தான் கபிலன்..

“எப்படிப் போவ..?”

“ஆட்டோவில்..”

“இரு.. நான் கொண்டு வந்து விடுகிறேன்..”

“வேண்டாம்.. உங்களுக்கு ரெஸ்ட் தேவை..”

“இப்ப ஃபீவர் இல்லை ஆர்த்தி.. நீ வேண்டு மானால் தொட்டுப் பார்..”

இயல்பாக அவன் அருகே வந்து.. அவனுடைய நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.. கபிலன், அவளது அருகாமையில் நெகிழ்ந்தான்..

“கொஞ்சம் ஃபீவர் குறைந்திருக்கு..”

“தெரியுதில்ல..”

கபிலன் எழுந்து சட்டையைப் போட்டுக் கொண்டான்.. ஆர்த்தி முன்னால் படியிறங்க, கதவைப் பூட்டிக் கொண்டு அவள் பின்னால் இறங்கினான்..

முதல்நாள் போலவே தெருமுனையில் இறங்கிக் கொண்டாள் ஆர்த்தி.. அவசரமாய் கையாட்டி விட்டு விரைந்தவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான் கபிலன்.. வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னால் அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்து கையாட்டி விட்டுச் சென்று விட்டாள் அவள்..

ஒரு பெருமூச்சுடன் வண்டியைக் கிளப்பி வீட்டை அடைந்தவன், பூட்டைத்திறந்து வீட்டுக்குள் நுழைந்தான்.. சற்று முன் ஆர்த்தி நடமாடிய வீடு.. அவளில்லாமல் அவனை வரவேற்றது..

மறுநாள் காலையில் அவள் வந்தாள்..

“காலேஜுக்குப் போகவில்லையா..?” என்ற அவனின் கேள்விக்கு,

“நீங்க காலேஜுக்கு வரவில்லையே..” என்று பதில் கொடுத்தாள்..

“நான் காலேஜுக்கு வந்தால்தான் நீயும் வருவாயா..?”

அவள் பதில் சொல்லாமல் அவனருகே வந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்..

“காய்ச்சல் இல்லை..”

நிம்மதிப் பெருமூச்சுடன் கூறினாள்.. நெற்றியில் படிந்திருந்த அவளுடைய கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான் கபிலன்..

“ப்ளீஸ்..”

அவள் கரம் நடுங்க.. கெஞ்சினாள்.. விட்டு விட்டான்.. அன்று மாலை வரை கூட இருந்து விட்டுப் போய் விட்டாள்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link