Chapter 09

0Shares

கபிலனின் எல்லாக் கேள்விகளுக்கும் ஆர்த்தியிடம் பதில் இருந்தது.. ‘முதல் நாள் பேச வாய் திறந்து… பேச முடியாமல் தவித்த பெண்ணா..? இவள் என்று கபிலன் ஆச்சரியப்பட்டுப் போகும் விதத்தில் அவள் டாண்டாணென்று பதில் கூறினாள்..’

“என்னோடு.. கோயிலுக்கு வந்திருக்கிறாயே.. இதற்கு என்ன சொல்லப் போகிறாய்..?”

“என்னால்தானே உங்களுக்கு காய்ச்சல் வந்து விட்டதுன்னு கில்ட்டியாய் ஃபீல் பண்ணினேன்.. உங்களுக்கு சீக்கிரம் சரியாகணும்னு சாமிகிட்ட வேண்டிக் கிட்டேன்.. சரியானதும் உங்களைக் கோயிலுக்கு கூப்பிட்டுக் கொண்டு வந்து சாமிகிட்ட தேங்க்ஸ் சொன்னேன்..”

“நான் காலேஜுக்கு வராததால் நீயும் காலேஜுக்குப் போகாமல் இருந்தது..?”

“உங்களைக் காய்ச்சலில் விழ வைத்துவிட்டு என்னால் நிம்மதியாகப் படிக்க முடியுமா..?”

கபிலன் பல்லைக் கடித்தான்.. அவன் முகம் கடுமையாக மாறியிருந்தது..

“நீ அப்பாவின்னு நினைத்துக் கொண்டிருந்தேன் ஆர்த்தி…”

“இப்போது மட்டும் என்ன.. நான் படுபாவி ஆகிவிட்டேனா..?”

“கெட்டிக்காரியாகி விட்டாய்..!”

“உங்கள் வாயால் எத்தனை தடவை என்னை ‘மக்கு’ன்னு திட்டியிருப்பீங்க..? இப்ப கெட்டிக்காரின்னு நீங்களே சொல்வதைக் கேட்கும்போது எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா..?”

அதற்கு மேல் தாங்கமாட்டாதவனாய் கபிலன் எழுந்து விட்டான்.. அவன் எழுந்து கொண்ட வேகத்தைக் கவனித்த ஆர்த்தியின் மனம் வலித்தது..

ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவளும் எழுந்து கொண்டாள்.. “நேரமாகிவிட்டது.. போகலாம்ன்னு நான் நினைத்தேன்… நீங்க எழுந்துட்டீங்க..” என்று பாராட்டுதலாய் சொன்னாள்..

கபிலன் பதில் சொல்லாமல் வேகமாய் நடந்தான்.. அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாதவளாய் ஏறக்குறைய அவன் பின்னால் ஆர்த்தி ஓடினாள்..

“ஆட்டோ..”

கபிலன் கைதட்டி அழைக்க, சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ பிரேக்கடித்து நின்றது..

“ஏறிக்கொள்..” என்றான் ஆர்த்தியிடம்..

“தனியாகவா..?” அவள் தயங்கினாள்..

“நான் என் டூவீலரில் ஃபாலோ பண்ணிக் கொண்டு வருகிறேன்.. உன் வீடு வரைக்கும் வந்து விட்டுப் போகிறேன்..” அவன் அவள் முகம் பார்க்காமல் தன் டூவீலரை ஸ்டார்ட் செய்தான்..

“வீணாய் ஆட்டோ எதற்கு..? நான் உங்கள் பின்னாலே உட்கார்ந்து கொள்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டிருந்த ஆர்த்தி.. கபிலனின் எரிப்பது 

போன்ற பார்வையைக் கண்டதும் பாதியில் பேச்சை விழுங்கினாள்..

“இனி என் பின்னால் நீ உட்கார்ந்து வரமுடியாது..” தீக்கங்குகளாய் அவன் வார்த்தைகளைக் கொட்டினான்..

ஆர்த்தி உடைந்து போன மனதுடன் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.. வீட்டின் முன்னால் இறங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள்.. தெரு முனையில் கபிலன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது..

“ஆட்டோ சார்ஜ் எவ்வளவு..?” என்று ஆட்டோக் காரரிடம் வினவினாள்..

“அவர் கொடுத்து விட்டாரும்மா..” ஆட்டோவைக் கிளப்பிக் கொண்டு அவர் போய் விட்டார்..

சின்ன விசயத்தைக் கூடப் பார்த்து பார்த்து அவளைக் கவனித்துக் கொண்ட அவனின் அந்தத் தன்மை அவளை ஈர்த்தது.. மீண்டும் தெரு முனையைப் பார்த்தாள்.. அவன் அங்கு இல்லை..

‘போய் விட்டானா..?’

அவள் மனம் வெறுமையானது.. திக்கற்று இருண்ட கானகத்தில் மாட்டிக் கொண்டதைப் போல.. அவள் மருண்டாள்.. இனி கபிலனின் அன்பு தனக்கு கிடைக்கவே கிடைக்காதா என்று மனம் கலங்கினாள்..

“கோயிலில் கூட்டமா..? திரும்பி வர இவ்வளவு நேரமா..? போனால் போன இடம், வந்தால் வந்த இடம்ன்னு இருந்தால் எப்படி ஆர்த்தி, கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா..?” வேதவள்ளி கோபப்பட்டாள்..

“அங்கே என்ன சத்தம்..?”

கனகவேல் உள்ளேயிருந்து குரல் கொடுத்துக் கொண்டே வந்தார்.. சின்ன மகளைப் பார்த்ததும் அவர் முகத்தில் வாத்ஸல்யம் பொங்கியது.. பிரியத்துடன் மகளைப் பார்த்தார்..

“என்னம்மா..?”

மயிலிறகாய் வருடிக் கொடுக்கும் வார்த்தை.. மனதிலிருக்கும் பாசத்தை அப்படியே பிரதிபலிக்கும் குரல்.. ‘இந்த உலகில் எனக்கு உன்னைத்தவிர வேறு யாரும் முக்கியமில்லை’ என்று உணர்த்தும் தொனி..

“அப்பா..”

ஆர்த்திக்கு தொண்டையை அடைத்தது.. அவள் மனம் தாளாமல் விம்மி விட்டாள்.. கனகவேல் பதறிப் போய் அவளருகில் வந்தார்..

“ஏண்டி.. என் மகளை என்ன சொன்ன..?”

“நான் என்னத்தைச் சொன்னேன்..? கோயிலுக்குப் போய் விட்டு வர இவ்வளவு நேரமான்னு கேட்டேன்.. அது ஒரு குத்தமா..?”

“குத்தம்தாண்டி.. என் மகள் காரணமில்லாமல் லேட்டாய் வரமாட்டாள்.. கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கும்.. அதனால் நேரமாகியிருக்கும்.. அதற்குப் போய் குழந்தையைத் திட்டினாயா..?”

கனகவேல் குரலை உயர்த்திப் பேசியதும் வேத வள்ளிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.. அவள் மடைதிறந்த வெள்ளம் போல் பொங்கலானாள்..

“குழந்தையா..? யாரு குழந்தை..? இவளா குழந்தை..? ஏழு கழுதை வயசாகுது.. இவளைப் போய் குழந்தைன்னு கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க.. நாம இருக்கிறது வேணும்னா சென்னையாய் இருக்கலாம்.. பிறந்து வளர்ந்தது திருச்செந்தூர் மண்ணில.. நினைவிருக் கட்டும்..”

“எல்லாம் எங்க நினைப்பிலயும் இருக்குது.. இப்ப அதுக்கு என்னாங்கிற..?”

“பொம்பளைப் புள்ளைகளை வளர்க்கும் விதத்தில் வளர்க்கணும்.. எதையாவது ஏடாகூடமாய் இழுத்துக் கொண்டு வந்து விட்டால் அப்புறம் ஐயோன்னாலும் முடியாது.. அப்பான்னாலும் முடியாது..”

“அடச்சீ.. வாயைக் கழுவு.. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்கிற.. என் பொண்ணு நடக்கும் வழியில் பூ முளைக்கும்டி.. அவள் பத்தரை மாத்துத் தங்கம்.. தப்பு செய்கிற மூஞ்சியாடி இது. பச்சை மண்ணுடி.. இதப்பாரு.. நீ பேசிய பேச்சில் மனசு நொந்து என் பொண்ணு எப்படி அழுகிறாள்ன்னு..”

தகப்பனார் சொல்லச் சொல்ல.. ஆர்த்தி பெருங் குரலெடுத்து அழுதாள்.. கையிலிருந்த கரண்டியை சமையல் மேடையில் கடாசி விட்டுப் பதறிப் போய் மகளின் அருகே ஓடி வந்தாள் வேதவள்ளி..

புத்தகத்தில் தலையைக் கொடுத்திருந்த ஆஷாவும், டி.வியில் ஆழ்ந்திருந்த அனிதாவும் ஏக காலத்தில் கவனம் கலைந்து எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

“எதுக்குடி இவ இப்படி அழுகிறா..?”

“அதானே..! லேசில் இவள் அழ மாட்டாளே..!”

யோசனையாய் தங்கையைப் பார்த்துக் கொண்டே தாயின் அருகே சென்ற ஆஷா,

“எதுக்கும்மா அழுகிறா.. நீங்க எதுவும் திட்டினீங்களா..?” என்று வினவினாள்..

“ஆமாண்டி.. உன் அப்பாவைப் போல நீயும் என்மேல பழியைப் போடு.. கோயிலுக்கு போனால், காலாகாலத்தில் வீட்டுக்கு வரக்கூடாதான்னு கேட்டு விட்டேன்.. அதுக்குப் போய் இப்படி அழுது ஊரைக் கூட்டுகிறா..” என்று தலைமேல் கை வைத்துக் கொண்டாள் வேதவள்ளி..

“இவ்வளவுதானா.. நான் என்னவோ.. ஏதோன்னு நினைத்தேன்..” என்றபடி அனிதா தன் தங்கையின் அருகே அமர்ந்து கொண்டாள்..

“ஏண்டி.. இரண்டு காதுகளை ஏன் கடவுள் நமக்குக் கொடுத்து வைத்திருக்கிறார் தெரியுமா..? இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடத்தான்.. அம்மா சொன்னதை ஏன் மண்டையில் ஏத்திக்கறே…? ஒரு காதில் வாங்கி மறு காதில் விடவேண்டியதுதானே..? நானும் ஆஷாவும் அதைத்தானே செய்கிறோம்.. என்னடி ஆஷா..?”

“ஆமாம்..”

பெரிய பெண்களின் பேச்சைக் கேட்ட வேதவள்ளி தலையில் லேசாய் அடித்துக் கொண்டு எழுந்து போய்விட்டாள்..

கனகவேல் ஆர்த்தியை தேற்றிக் கொண்டிருந்தார்.. “அவ கிடக்கிறா விடும்மா.. அவளுக்குப் பேசத் தெரிந்தது அவ்வளவுதான்.. நீ கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்திரு..”

ஒரு வழியாய் அழுது ஓய்ந்த அர்த்தி, அரை குறையாய் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டாள்..

‘இந்நேரம் அவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? சாப்பிட்டிருப்பானா.. இல்லை.. என்மேலிருக்கும் கோபத்தில் சாப்பிடாமல் படுத்திருப்பானா..? அவள் மனம் தவித்தது..’

இரவின் இருளில் அருகில் படுத்திருந்த ஆஷாவும், அனிதாவும் அறியாமல் கண்ணீர் விட்டாள் ஆர்த்தி..

‘காதலிக்கிறாயா என்று கேட்டானே.. எப்படி நான் அவனைக் காதலிக்கிறேன்னு சொல்ல முடியும்..? என் அப்பா என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை என்னால் சிதைக்க முடியாதே.. என் அம்மா வளர்த்த வளர்ப்பு.. என்னைக் காதலை ஒப்புக் கொள்ள விடவில்லையே..’

அவள் தலையணையை தன் கண்ணீரால் நனைத்தபடி உறங்கிப் போனாள்..

கபிலன் அவளைக் கண்டும் காணாதவன் போல் விலகிச் சென்று விட்டான்.. ஆர்த்தியின் மனம் துடித்தாலும் நிறைவேறாது என நிச்சயமாய் தெரிந்த பின்னும் காதல் பயிரை வளர விடக்கூடாது என்று தன்னைத்தானே கடிந்து கொண்ட பொங்கும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்..

“என்னடா.. கொஞ்ச நாளாய் பட்சி இந்தப் பக்கம் பறந்து வரக் காணோம்.. வேறு மரத்தை தேடிவிட்டதா..?” தினேஷ் கபிலனை ஜாடையாகப் பார்த்தபடி சுந்தரிடம் வினவினான்..

கபிலன் கண்கள் சிவக்க தினேஷை முறைக்க ஆரம்பித்தான்.. சுந்தர் சுதாரித்துக் கொண்டு பேச்சை மாற்றி விட்டான்..

ஆனால், தினேஷ் அந்த விசயத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடத் தயாராக இல்லை.. மறுநாள்.. அடுத்தநாள் என்று தினந்தோறும் ஜாடையாகப் பேசி கபிலனை மறைமுகமாக வம்புக்கு இழுத்தான்..

“இப்ப வர்ற பொண்ணுக எல்லாம் ரொம்ப விவரம்டா.. யாரை.. எதுவரைக்கும் யூஸ் பண்ணிக்கணும்னு நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்குதுக.. காரியம் முடிஞ்சதும் சத்தமில்லாமல் கழட்டி விட்டுருதுக.. ஹா.. ஹா..”

“மலருக்கு மலர் தாவும் வண்டுங்கிறதெல்லாம் பழைய பழமொழி மச்சான், இப்ப இருக்கிற புதுமொழியே வேற.. அதுதான் மரத்துக்கு மரம் தாவும் பட்சி.. ஹா..ஹா..”

“ஒருத்தி நம்மளப் பார்த்துச் சிரிச்சா.. நம்மள கவுக்க பிளான் போடறான்னுதான் அர்த்தம் மச்சி.. சில ஜென்மங்க அதைப் புரியாமல்.. மஜ்னு ரேன்ஜுக்கு சிலுப்பிக்கிட்டு சுத்துச்சுங்க.. இப்ப பார்த்தியானா.. இருக்கிற இடம் தெரியாம அடங்கிப் போயிருச்சுங்க.. இதுக்குத்தான் ஆழம்  தெரியாமல் காலை விடக் கூடாதுங்கிறது ஹா.. ஹா..”

“மச்சி.. விவேக் ஒரு படத்தில் ஒரு வசனம் சொல்வான் பாரு.. என்னைக்கும் அந்த டயலாக்கை என்னால் மறக்கவே முடியாது.. அது எப்படி.. எப்படி.. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..’ ஹா.. ஹா..” 

தினமும் தினேஷ் இதேபோல் பேசிக் கொண்டிருக்க, ஒருநாள் பொறுக்க முடியாமல் கபிலன் அவன் மேல் பாய்ந்து விட்டான்..

இரண்டு பேரும் கட்டிப் புரண்டு மணலில் உருண்டு சண்டை போட்டுக் கொண்டார்கள்.. இருவரையும் பிரித்து விட்டான் அஜய்..

“ஏண்டா.. ஒன்றாய் படிக்க வந்தோம்.. இதோ ஒரு மாதத்தில் நம்ம படிப்பு முடியப் போகுது.. லாயராய் வெளியே போகப் போகிறோம்.. இத்தனை வருசமும் ஒற்றுமையாய் இருந்துவிட்டு இப்போப்போய் அடித்துக் கொள்ளலாமா..? நமக்கே அது அசிங்கமில்லையா..?”

கபிலன் அஜய்யின் வார்த்தைக்குக் கட்டுப் பட்டுப் போய் விட்டான்.. தினேஷ் மாணவர் விடுதி பக்கம் நடையைக் கட்டினான்.. அவன் போவதை தாடையை தடவியபடி பார்த்த சுந்தர், கவலையுடன் அஜய்யைப் பார்த்தான்..

“இவன் போக்கே சரியில்லை அஜய்.. நிச்சயமாய் இவன் ஏதோ வினையைக் கிளப்பத்தான் போகிறான்னு என் மனசுக்குள் ஒரு பட்சி சொல்லுது..”

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link