Chapter 10

0Shares

சுந்தரின் கணிப்பு மிகச் சரியாக இருந்தது.. தினேஷ், ஹாஸ்டலில் இருந்த தன் சகாக்களை சந்தித்து சதி ஆலோசனை ஒன்றில் இறங்கினான்.. அதை அறிந்து கொள்ளாமல் கபிலன் தன் போக்கில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தான்.. கபிலன் அறிந்து கொள்ளாத அந்தச் சதியை ஆர்த்தி தற்செயலாக அறிந்து கொள்ள நேர்ந்தது.. அது காதில் விழுந்த போது ஆர்த்தி பயத்தில் உறைந்து விட்டாள்..

லைப்ரரியில் எடுத்த புக்கை திருப்பிக் கொடுக்க மறந்து விட்ட ஆர்த்தி, மாலையில்தான் அதைக் கவனித்தாள்..

‘அடடா.. இன்றைக்குத்தானே திருப்பிக் கொடுக்க வேண்டிய டியூடேட்..’

ஓட்டமும் நடையுமாக லைப்ரரிக்குப் போய் புக்கைக் கொடுத்தவள், அவளுக்கு வேண்டிய இன்னொரு புக்கை எடுத்துக் கொண்டு திரும்பி வந்த போது, லைப்ரரியின் அருகேயிருந்த மரத்தின் அடியில் பேச்சுக் குரல்கள் கேட்டன..

‘கபிலன்..’ என்ற பெயர் அடிபட்டதும், ஆர்த்தியின் கால்கள் நகர மறுத்து நின்று விட்டன..

அவள் லைப்ரரியின் பக்கவாட்டு சுவர் மறைவில் நின்று கொண்டாள்.. லேசாக நகர்ந்து எட்டிப் பார்த்தாள்..

‘அது.. தினேஷ் போல இருக்கிறதே..’

ஆர்த்தியின் யூகம் சரியாகவே இருந்தது.. அவர்களில் ஒருவன்,

“தினேஷ்.. இது சரியாக வரும்ன்னு நினைக் கிறாயா..?” என்றுகேட்டு வைத்தான்..

‘தினேஷ் தான்.. இவன் ஏன் கபிலனின் பெயரைச் சொல்லி, அவனைப் பற்றிப் பேசுகிறான்..?’ ஆர்த்தி நகம் கடித்தாள்..

“நிச்சயம் சரியாக வரும்டா.. அவனை வம்புக்கு இழுப்போம்.. நீ வேண்டுமென்றே அவனிடம் மோது.. அவன் இரத்தம் கொதித்தவன்.. நிச்சயம் பதிலுக்கு உன்னுடன் மோதுவான்.. உடனே நீ அதை ஜாதிப் பிரச்சினையாக மாற்றி விடு..” என்று தினேஷ் சொல்லிக் கொண்டிருந்தான்..

‘கடவுளே.. ஜாதிப் பிரச்சினையில் கபிலனை மாட்டி விடப் போகிறாங்களா.. என் கபிலனைக் காப்பாற்று..’ ஆர்த்தி மானசீகமாய் கடவுளை துணைக்கு அழைத்தாள்..

“அதை நீயே செய்ய வேண்டியதுதானேடா தினேஷ்..? நீயும் நம்ம ஜாதிக்காரன்தானே.. உனக் கொண்ணுன்னா நாங்க வரமாட்டோமா..? அதைப் போல சீன் கிரியேட் பண்ணி அவனைக் காலி பண்ணி விடுகிறோம்..” என்றான் பரசு..

‘அடப்பாவிகளா..’ மனதுக்குள் அலறினாள் ஆர்த்தி..

“இல்லைடா பரசு.. என் ஃபிரண்ட்ஸ் என்னைப் போட்டு மொத்தி விடுவான்க.. ஏற்கனவே அவங்க எல்லாரும் என்னை எதிரியை பார்ப்பது போல தான் பார்த்துகிட்டு.. கபிலனுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இதில் நான் வெளிப்படையாய் கபிலனுடன் மோதினால் என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடு வாங்க..” தினேஷ் மறுத்தான்..

‘அவங்க மட்டும்தான் உனக்கு ஃபிரண்ட்ஸா..? கபிலன் உனக்குப் பிரண்ட் இல்லையா..?’ ஆர்த்தி மனம் எரிந்தாள்..

“அப்படி உன் ஃபிரண்ட்ஸ் உன்னைப் போட்டு அடித்தால் நாங்க பார்த்துக்கிட்டு சும்மாவா இருப்போம்..? போட்டுத் தாக்கி விட மாட்டோமா..?” பரசு முறுக்கினான்..

‘தீபிகா சொன்னது சரியாகத்தான் இருக்கும் போல இருக்கே.. இவங்க ஸ்டூடண்ட்ஸ் போல பேசவில்லையே.. அசல் ரௌடிகள் கூட்டம் போல் பேசுகிறாங்களே..’ ஆர்த்திக்கு பயமாக இருந்தது..

ஆர்த்தி கலவரப்பட்டாள்.. செயல்படும் வகை தெரியாமல் திகைத்து விழித்தாள்.. தினேஷ், பரசுவை தொடர்ந்து வற்புறுத்தினான்..

“அது சரிவராதுடா.. பிரச்சினை பெரிசாகி விடும்.. அஜய்யின் அப்பா பெரிய அரசியல்வாதி.. செல்வாக் குள்ளவர்.. அவனுக தலைகொடுக்காம காரியத்தை முடிக்கணுமுன்னா ஜாதிப் பிரச்சினையைக் கிளப்பி விடுவதுதான் சரியான வழி..”

“சரிடா தினேஷ்.. நீ இவ்வளவு சொல்லும் போது நான் அதைச் செய்யாமல் இருப்பேனா..? என்றைக்கு கச்சேரியை வைத்துக் கொள்ளலாம்..?”

“அதற்கு நாள் கிழமையா பார்க்க வேண்டும்..? நாளைக்கே வைத்துக் கொள்ளலாம்..”

அவர்கள் கலைந்து போய் விட்டார்கள்.. ஆர்த்தியின் காலடியில் பூமி நழுவுவதைப் போல இருந்தது.. அவள் மெதுவாக மறைவிடத்தை விட்டு வெளியில் வந்தாள்..

‘இப்போது என்ன செய்வது..?’ கவலையுடன்.. காலேஜ் வாசலை நோக்கி நடந்தாள்.. அன்று இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தாள்..

பால் பொங்கிவர, அடுப்பை அணைத்த கபிலன், காபிப் பொடியை தேடிக் கொண்டிருக்கையில் அழைப்பு மணி ஒலித்தது..

‘யாராக இருக்கும்..’ என்ற யோசனையுடன் கதவைத் தறந்தவன் திகைத்து நின்றான்..

அங்கே ஆர்த்தி நின்று கொண்டிருந்தாள்..

வெற்று மார்புடன் நின்று கொண்டிருந்தவன், டவலைத் தேட.. பார்வையைத் தழைத்தவாறு ஆர்த்தி உள்ளே வந்தாள்.. டவலைக் கண்ட பிடித்தவன் அதைத் தோளில் போட்டுக் கொண்டு, சோபாவில் சுவாதீனமாக அமர்ந்திருந்த ஆர்த்தியைப் பார்த்தான்.. முகம் கடுத்தான்..

“காலேஜுக்குப் போகாமல் இங்கே எதற்கு வந்தீங்க..?” அவன் கேள்வியில் தெரிந்த வெப்பம் அவளைச் சுட்டது..

“உங்களுடன் பேச வேண்டும்…” ஆர்த்தி தடு மாறினாள்..

யாரோ ஒருத்தியைப் பேசுவது போல.. அவன் ‘வாங்க போங்க..’ என்று அழைத்தது அவளை மிகவும் பாதித்தது.. மனம் புழுங்கினாள்.. கண் கலங்கினாள்..

“பேச வேண்டியதையெல்லாம் நிறைய பேசிட் டீங்களே, ஊமைபோல இருந்துக்கிட்டு என்னமாய் காரியம் சாதிச்சீங்க.. எவ்வளவு கெட்டிக்காரத் தனமாய் நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னீங்க… இனிப் பேச என்ன இருக்கிறது..? நான் காலேஜுக்கு கிளம்பனும்.. நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க..” அவன் அவளை உறுத்துப் பார்த்தான்..

“இல்லை.. நீங்க இன்றைக்கு காலேஜுக்குப் போகக்கூடாது..” ஆர்த்தி கண் கலங்கினாள்..

“நான் காலேஜுக்கு போகக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு..? முதலில் நீங்க என் வீட்டிற்கு வந்ததே தப்பு கிளம்புங்க.. கிளம்புங்க..”

“என்னை விரட்டுவதிலேயே ஏன் குறியாய் இருக்கீங்க..?”

“நான் உடைச்சே சொல்கிறேங்க.. எனக்கு இந்தப் பாவ்லா பண்ணுவதெல்லாம் பிடிக்காது.. உங்களை இங்கே உட்கார வைத்துக் கொண்டு நான் எப்படி குளித்து டிரஸ் மாற்ற..? நானும் மனிதன்தானே.. எனக்கும் உணர்ச்சிகள் இருக்குதுல்ல..? நான் என்ன கல்லா, மண்ணா..? இல்லை வெறும் ஜடமா..? நீங்க கண்ணுக்கு முன்னால்.. பார்த்தவுடன் மனசில் பளிச்சுன்னு பதியற மாதிரி பச்சக்குன்னு அழகா இருந்து தொலைப்பீங்க.. கட்டிக்கிட்டவள் போல வீட்டைப் பெருக்கி, துவைத்து, சமையலைப் பண்ணிப் போடுவீங்க.. கிட்ட வந்த நின்னுக்கிட்டு தொட்டுத் தொட்டுப் பேசுவீங்க.. 

மனுசன் சூடாகி கையைப் பிடிச்சால், ப்ளீஸ்ன்னு சொல்லிக்கிட்டு கையை உருவிக்குவீங்க.. ஏன்.. நீங்க என்னைக் காதலிக்கலையான்னு கேட்டால், சும்மா நட்பாய் பழகினேன்னு கதை விடுவீங்க.. இந்த ரோதனையெல்லாம் எனக்கு ஆகாதுங்க.. எனக்கு பொம்பளை ஃபிரண்ட்ஸ் கிடையாது.. அதனால் நீங்க நடையைக் கட்டுங்க..”

அவன் கோபத்துடன் முகத்தில் அடித்தாற் போல் பேசிக் கொண்டிருக்க, அவனுடைய உதாசீன வார்த்தைகளால் சிறிதளவும் பாதிக்கப்படாதவளாய் ஆர்த்தி, அவன் சிந்திய வார்த்தைகளை சேகரித்து மனதிற்குள் பொக்கிஷமாய் பத்திரப்படுத்திக் கொண்டாள்.. அவளது மனம் பொங்கித் ததும்பியது..

‘எவ்வளவு நாள்களாகி விட்டது இவனுடன் பேசி.. இன்றைக்கு இவ்வளவு நேரம் என்னுடன் பேசி விட்டானே..’ என்பதுதான் அவளுடைய எண்ணமாக இருந்தது..

அவன் என்னவோ அவளைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பது போல,  அவள் ஆனந்தத்துடன் அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்தாள்..

மழைக்கு ஏங்கும் சாதகப்பட்சி போல, அவனது உரிமை கலந்த பேச்சைக் கேட்க அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்தாள்..

என்னவோ பொன் முடிப்பை வாங்கிக் கொள்வது போல அவ்வளவு மகிழ்ச்சியாக தனது திட்டுக்களை வாங்கிக் கொள்பவளை.. விசித்திரமாகப் பார்த்தான் கபிலன்..

‘இவளை என்ன செய்து தொலைப்பது..’ பல்லைக் கடித்துக் கொண்டான்..

“இவ்வளவு சொல்லியும் அசையாமல் நெடுமரமாய் உட்கார்ந்து இருக்கீங்களே.. எழுந்து போகும் எண்ணமே இல்லையா..?” சுள்ளென்று பேசினான்..

“இல்லை.. நானும் போவதாக இல்லை.. உங்களையும் போக விடுவதாய் இல்லை..” அவள் அமைதியாய் பதில் சொன்னாள்..

“திமிரா..?” அவன் ஒரு மாதிரி குரலில் வினவினான்.

“அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்..” அவள் விடாமல் பதில் கொடுத்தாள்..

“என் கோபத்தை நீங்க பார்த்ததேயில்லை..”

“இதுவரை நீங்க சாந்தமா பேசிக்கிட்டிருந்ததா நினைப்பா..?”

“அதெல்லாம் ஒரு கோபமேயில்லை..”

“பரவாயில்லை.. உங்களின் கோபம் எந்த அளவுக்கு வந்தாலும் நான் அதைத் தாங்கிக் கொள்வேன்..”

கபிலனின் பொறுமை பறந்து கொண்டிருந்தது.. அவன் அதை இழுத்துப் பிடித்துக் கொண்டு கடைசி முயற்சியாய் அவளிடம் சொல்லிப் பார்த்தான்..

“வேண்டாம் ஆர்த்தி.. என்னை மனுசனா இருக்க விடுங்க.. போய் விடுங்க.. அதுதான் உங்களுக்கு நல்லது..”

“நான் போகிறேன்.. ஆனால் நீங்கள் காலேஜுக்குப் போகக்கூடாது..”

சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாக அவன் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாமல் அவள் அடம் பிடிக்க, கபிலன் பொறுமையை இழந்தான்… வெறி கொண்டவனாய் அவளருகே சென்று, அவளை எழுப்பினான்.. அவள் முகத்தைப் பிடித்து முரட்டுத்தனமாக நிமிர்த்தி அவள் விழிகளுக்குள் ஊடுருவி நெருப்புப் பார்வையைப் பார்த்தான்..

“ஏய்ய்.. என்னடி நினைச்சுக்கிட்டிருக்க உன் மனசில.. பேயாடி நீ..? ஒரு மனதாய் இருக்கமாட்டியா..? நினைத்து நினைத்து முடிவெடுப்பியா..? மனுசனை உயிரைப்போட்டு வாங்கறயேடி..”

அவன் முரட்டுத்தனமாய் அவள் முகத்தை அழுந்தப் பற்றியதில் ஆர்த்திக்கு முகம் வலித்தது.. அவள் இன்பமான அந்த வலியை ஆனந்தத்துடன் அனுபவித்தாள்.. அவளது முகத்தில் தெரிந்த ஆனந்தம் அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது..

“பேசுடி.. ஏண்டி.. என்னைப் போட்டு இப்படி பாடாய் படுத்தறே..? உன் அல்லக்கையாய் என்னை ஆக்கணும்னு நினைத்து விட்டாயா..? நீ நில்லுன்னா நிற்கணும், உட்காருன்னா உட்காரணுமா..? அது இந்த கபிலன்கிட்ட நடக்காது..”

ஆர்த்தி அதற்கும் பதில் சொல்லவில்லை.. அவனுடைய கோபத்தை சந்தோசத்துடன் உட்கிரகித்துக் கொண்டிருந்தாள்.. அவன் கோபமாய் கத்தக்கத்த.. அவள் அவனை விட்டு விலகவுமில்லை.. அவன் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லவுமில்லை..

“இந்தக் கபிலன் எந்த மூக்கணாங்கயிறுக்கும் அடங்காதவன்.. உன் அன்பிற்கு அடங்கினேன்.. நீ போட்ட பூவேலியை இரும்பு வேலியாய் நினைத்து சந்தோசமாய் அதில் சிறைப்பட்டேன்.. நீ கூப்பிட்டவுடன் உன் பின்னால் நான் வந்தது உன் மேல் கொண்ட காதலுக்காக.. என்னவோ இந்த உலகத்திலேயே நீ ஒருத்திதான் பெண் என்கிறது போல அலட்டிக் கொண்டு போனியே.. இப்போது எந்த முகத்துடன் திரும்பி வந்தாய்..?”

அவனுடைய விழிகளில் பறந்த நெருப்புப் பொறி கொஞ்சம் கூட ஆர்த்தியைச் சுடவில்லை.. அவள் தன் முகத்தைப் பிடித்திருந்த அவனது கைகளை இறுக்கிப் பிடித்தபடி கனல் வீசும் அவனது கண்களைக் காதலாகப் பார்த்தாள்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link