Chapter 11

0Shares

கபிலனால் அவளது அந்தப் பார்வையைத் தாங்க முடியவில்லை.. அவன் வேகமாக ஆர்த்தியை விலக்கித் தள்ளி விட்டான்.. அவள் சுவரில் மோதி விழுந்தாள்..

கபிலன் அவள் முன்னால் கை நீட்டி கர்ஜித்தான்.. “போ.. போய் விடு இங்கேயிருந்து.. என் கண்முன்னால் நிற்காதே.. நான் உன்னை ஏதாவது செய்து விடுவேன்.. போடி..”

ஆர்த்தி அசையவில்லை.. சுவரோடு சாய்ந்து அமர்ந்து அவனையே கண்ணீர் மல்கப் பார்த்தாள்..

“நான் போகிறேன்.. ஆனால் நீங்க காலேஜுக்குப் போகக்கூடாது.. இன்றைக்கு மட்டுமில்லை.. இன்னும் கொஞ்ச நாளைக்கு..”

“உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..? சொல்லுடி.. பைத்தியமாடி நீ..?”

அவன் எரிச்சலுடன் கேட்க.. அவள் மனதிற்குள்.. ‘ஆமாம்.. உன் மேல் எனக்குப் பைத்தியம்தான்..’ என்று சொல்லிக் கொண்டாள்..

“இன்னும் ஒரு மாதம்தான் கிளாஸ் நடக்கும்.. அதற்குப் பிறகு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது.. இது எனக்கு ஃபைனல் இயர்.. இந்தப் படிப்பை முடித்தால்தான் எனக்கு எதிர்காலம்.. இதெல்லாம் சொன்னால் உன் மரமண்டையில் ஏறாது.. உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கணும்னு எனக்கு அவசியமும் இல்லை.. நீ கிளம்பு.. கிளம்பு…”

“தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்க..”

“நீ சொல்வதை நான் ஏன் கேட்கணும்..?”

“உங்க நன்மைக்காக..”

“என் நன்மையைத் தீர்மானிக்க நீ யார்..?”

“உங்களுக்குத் தெரிந்த ஒருத்திதானே..?”

“வெறுமனே தெரிந்தவள் எல்லாம் என் வீட்டிற்குள் வந்து நிற்கக்கூட முடியாது.. இதில் நீ சட்டமாய் உட்கார்ந்து கொண்டு கதை விடுகிறாயா..?”

“நானும் உங்க காலேஜ்தானே..?”

“என் காலேஜில் ஆயிரம் பெண்கள் படிக்கிறாங்க.. ஒருத்தியிடம்கூட உன்னிடம் பேசியதுபோல் நான் பேசியதில்லை.. உனக்குக் கொடுத்த உரிமையைக் கொடுத்ததில்லை..”

ஆர்த்தி புத்துயிர் பெற்றவளாக நிமிர்ந்தாள்.. அவள் கண்களில் சிறிது நம்பிக்கை துளிர்விட்டது..

“அப்படின்னா நான் சொன்னதைக் கேட்கலாமே…”

“நீ சொன்னதைக் கேட்கணுமுன்னு எனக்கென்னடி அவசியம்..? நீ என்ன எனக்கு மாமன் மகளா..? இல்லை அத்தையின் மகளா..?”

‘இரண்டும் நான்தான்னு நினைத்துக் கொள்ளேன்..’ சொல்ல நினைத்ததை விழுங்கிக் கொண்டாள் ஆர்த்தி..

“இந்த ஒருதடவை மட்டும் நான் சொல்வதைக் கேளுங்க..”

“இந்த ஒரு தடவை மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல்.. ஒரு தடவைங்கிறது இழுத்துக் கொண்டே போகும்.. இனியொரு தடவை, இந்தத்தடவை மட்டும்ன்னு நீ சொல்லிக் கொண்டேயிருக்க, நான் கேட்டுக் கொண்டிருக்க முடியாது…”

“ஐயோ.. நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கக்கூடாதா..?”

“நீ யார்.. நான் யாருன்னு ஏற்கனவே நான் கேட்டு விட்டேன்.. அது உன் மரமண்டையில் ஏறவில்லையா..?”

ஆர்த்தி விசும்ப ஆரம்பித்தாள்.. என்ன நடந்தாலும் கபிலனை காலேஜுக்குப் போக விடக்கூடாது என்ற தீர்க்கமான முடிவு மட்டும் அவள் மனதில் இருந்தது..

அவன் மணியைப் பார்த்தான்.. நேரம் கடந்து கொண்டே இருந்தது.. வேறு நாளாக இருந்தால் கபிலன் காலேஜுக்கு மட்டம் போடுவதைப் பற்றி கவலைப்படவே மாட்டான்..

ஆனால்.. ‘ஆர்த்தி சொல்லிக் கேட்பதா..?’ என்று வீம்பு தலைதூக்க, அவன் காலேஜுக்குப போவதில் பிடிவாதமாக இருந்தான்..

“நேரமாச்சு.. நீ கிளம்பு..”

ஆர்த்தி அசையவில்லை.. அவன் எரிச்சலுடன் அவளருகில் வந்து எழுப்ப முயல.. அவனது கையைத் தட்டி விட்டாள்..

கபிலன் கோபக்காரன் பிறவியிலேயே பிடிவாதக் காரன்.. அவன் ‘போ’ என்று அவ்வளவு தூரம் திட்டிச் சொல்லியும் ஆர்த்தி பிடிவாதமாகப் போக மறுத்தது, அவனுடைய கோபத்தைக் கிளறி விட்டது..

அவன் அவளது முடியைப் பற்றிக் கொத்தாகப் பிடித்து அவளது முகத்தை நிமிர்த்தினான்..

“யாருகிட்ட உன் வேலையைக் காட்டுகிற..? உன்னை ஒரு கையில் தூக்கி வாசலில் போட எனக்கு எவ்வளவு நேரமாகும்ன்னு நினைச்சே..? சொல்லிகிட்டே இருக்கேன்.. அசையாமல் கல்லுக்குண்டு போல உட்கார்ந்துக்கிட்டு இருக்கியே… என்னையென்ன வேலை வெட்டி இல்லாதவன்னு நினைத்தாயா..?”

ஆர்த்தி சட்டென்று அவனது கால்களைப் பிடித்துக் கொண்டாள்.. அவன் காலில் முகம் புதைத்துக் கதற ஆரம்பித்தாள்..

“காலேஜுக்குப் போகாதீங்க.. அங்கே உங்களைக் காலி பண்ண ஒரு கூட்டமே காத்திருக்குது..”

கபிலன் ஆர்த்தியின் சரணாகதியைப் பார்த்து ஸ்தம்பித்து விட்டான்..

அவன்மேல் எவ்வளவு உரிமையும் காதலும் இருந்தால் அவள் அவனது காலைப் பிடித்துக் கதறுவாள்..?

‘ஆனாலும் இவள் அன்று பேசியது..?’

கபிலனின் புருவங்கள் நெளிந்தன.. அவன் அவளது முடியை விட்டான்.. அவள் அப்போதும் அவன் கால்களில் இருந்து முகம் விலக்காமல் அழுது கொண்டிருக்க.. அவளருகில் அமர்ந்தான்..

“என்னன்னு சொல்லித் தொலை..”

“தினேஷ், உங்களை வம்பிழுக்கச் சொல்லி பரசுங்கிறவனிடம் நேற்று சொல்லிக் கொண்டிருந்தான்..”

“ஹாஸ்டலில் இருப்பானே.. அந்தப் பரசுவா..?”

“ம்ம்ம்..”

“இது உனக்கு எப்படித் தெரியும்..?”

“நேற்றைக்குச் சாயங்காலம் நான் லைப்ரரியில் புக்கை ரிட்டர்ன் கொடுத்து விட்டு வரும்போது.. பக்கத்திலிருக்கும் மரத்தடியில் அவங்க நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்..”

“அறிவிருக்கா உனக்கு..? உன்னை அவனுக பார்த்திருந்தால் என்ன செய்வது..?”

“உங்க பெயர் காதில் விழுந்த பின்னால் என்னைப் பற்றி யோசிக்க என்னால் எப்படி முடியும்..?” ஆர்த்தி அப்பாவியாய் விழி விரித்துக் கேட்க..

“இதிலொன்னும் குறைச்சல் இல்லை..” என்று சலித்துக் கொண்டான் கபிலன்..

“ஆனால்.. நான் ஒளிந்து கொண்டு விட்டேனே..!”

“கெட்டிக்காரிதான்.. மேலே சொல்லு..”

“பரசு உங்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பான்..”

“உம்ம்.. அப்புறம்..?”

“அதை ஜாதிப் பிரச்சினையாகி, உங்களை அவர்கள் எல்லாரும் அடித்து நொறுக்குவார்கள்..”

“இதுதான் அவர்களின் திட்டமா..?”

“ஆமாம்..”

“இதுக்குப் பயந்து என்னைக் காலேஜுக்குப் போகாமலிருக்கச் சொல்கிறாயா..?”

“ஆமாம்..”

“கபிலனை என்ன சேலைக்கட்டி வளையல் போட்டிருக்கும் பெண் பிள்ளைன்னு நினைத்தாயா..?”

“ஊஹூஹூம்..”

“எதுக்கு இப்படி ராகம் போடுகிற…? நீ கிளம்பு..”

“எங்கே..?”

“காலேஜுக்குத்தான்.. சொல்ல வந்ததைச் சொல்லி விட்டாயே..! அப்புறமும் என்ன..? நடையைக் கட்டு..”

“நீங்க காலேஜுக்கு போகக்கூடாது..”

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.. அவனுக என்னை என்ன செய்து விடுவானுங்க..? அதையும்தான் பார்த்து விடலாமே..”

“இல்லை.. நான் உங்களைக் காலேஜுக்குப் போக விடமாட்டேன்..”

“ஆர்த்தி.. சொன்னால் கேளு..”

“நான் சொல்வதை நீங்க கேளுங்க..”

“முடியாது..”

அவன் கோபத்துடன் படுக்கையறையில் இருக்கும் குளியலறைக்குள் புகுந்து விட்டான்.. குளித்து உடைமாற்றி வண்டிச் சாவியை எடுத்துக் கொண்ட அவன் அறைக்கு வெளியே வந்த போது.. ஆர்த்தி அதே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்..

“என்ன கிளம்பும் உத்தேசம் இல்லையா..?”

“இல்லை..”

“அப்போ நீ இங்கேயே இரு.. நான் போகிறேன்.. கிச்சனில் பாலைக் காய்ச்சி வைத்திருந்தேன்.. காபி கலந்து குடிக்க விடாமல்.. மகராசி.. நீ வந்து கெடுத்து விட்டாய்.. காபி கலந்து நீயே கொட்டிக் கொள்.. பசித்தால் ஃபிரிட்ஜில் மாவு இருக்கிறது.. டப்பாவில் இட்லி மிளகாய்ப் பொடி இருக்கிறது.. எண்ணெய் இருக்கிறது.. தோசை ஊற்றிச் சாப்பிட்டுக்க பை..”

கதவில் கை வைத்தவன் அப்போதுதான் கதவு உள் புறமாய் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான்.. கதவில் சாவியும் இல்லை.. ஆர்த்தியைத் திரும்பிப் பார்த்தான்.. அவள் கையில் சாவி இருந்தது..

அழுத்தமான காலடியுடன் அவள் அருகில் போய் நின்றான்.. ஒரு தீர்மானத்துடன் அவள் நிமிர்ந்து பார்த்தாள்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link