Chapter 13

0Shares

கலவரமான முகத்துடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்று விட்டவளை, அன்போடு அணைத்துக் கொண்டான் கபிலன்..

“இந்தச் சாவியினால் என்னைத் தடுத்து நிறுத்த முடியுமா..? நான் போக வேண்டும்ன்னு நினைத்தால் கதவை உடைத்துக் கொண்டாவது போய் விடுவேன்.. தெரியுமா..?”

“ப்ளீஸ்.. அப்படியெல்லாம் செய்து விடாதீங்க..”

“இதுக்குப் போய் ஏண்டி கெஞ்சறே.. நீ போகா தேன்னு சொன்னால் கேட்டுக் கொள்ளப் போகிறேன்.. அதை விட்டு விட்டு.. பூட்டும் சாவியும் எதற்கு..?”

கபிலன் சாவியைக் கதவில் பொருத்திவிட்டு ஆர்த்தியைப் பார்த்து கனிவாய் சிரித்தான்..

“போ.. போ தோசை ஊற்று..”

ஆர்த்தியின் சந்தோசத்திற்கு அளவே இல்லை.. அவள் உல்லாசமாய் அவனைப் பார்த்துச் சிரித்தாள்..

“அடேங்கப்பா.. அதிகாரமெல்லாம் தூள்பறக்குது..”

“ஆமாம்.. அதுக்கென்ன இப்ப..?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீ கட்டிக் கிட்டவ மாதிரிதான்.. இப்போ, நான் கட்டிக்கிட்டவ நீதான்..”

ஆர்த்தி பேச்சிழந்தாள்.. கபிலன் அவளது கன்னத்தில் முத்தமிட.. அவனைத் தள்ளி விட்டுச் சிரித்தாள்..

“நீங்கள் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் ஆசாமி.. எட்டியே நில்லுங்க..”

சமையலறைக்குள் புகுந்து அடுப்பைப் பற்ற வைத்து தோசைக் கல்லை வைத்தாள்.. பிரிட்ஜைத் திறந்து மாவை எடுத்தாள்.. தோசை வார்த்து விட்டு மிக்சியில் சட்னிக்கு தேங்காய் வில்லைகளை நறுக்கிப் போட ஆரம்பித்தாள்..

“என்ன செய்கிற..?”

“சட்னி அரைக்கப் போகிறேன்..”

“நான் அரைக்கிறேன்.. நகரு..”

“வேண்டாம் நானே அரைத்துக் கொள்வேன்..”

“நீ தோசை ஊற்றுவாயா..? சட்னியை அரைப்பாயா..?”

“இந்தியப் பெண்கள் இரண்டையும் செய்வார்கள்..”

ஆர்த்தி அவனுடன் பேசி கொண்டே தோசை வார்த்தாள்.. சட்னியையும் அரைத்துத் தாளித்தாள்..

“ம்.. பரவாயில்லை.. நான் கொடுத்து வைத்தவன் தான்.. பட்.. இட்லிப்பொடி இருக்கிறதே.. சட்னி எதற்கு..?”

“அது போதாது..”

“டப்பா நிறைய இருக்கிறதும்மா..”

“அம்மான்னு கூப்பிடாதீங்க.. எனக்கு அது அலர்ஜி..”

“அதுசரி.. அதை என்பிள்ளைதானே கூப்பிடனும்..?”

ஆர்த்தி கைவேலையை நிறுத்தி விட்டு சட்டென்று நிமிர்ந்து கபிலனைப் பார்த்தாள்.. அவள் மனக்கண்ணில் காட்சி விரிந்தது..

கபிலனைப் போலவே ஒரு குட்டி கபிலன்.. அவனைப் போலவே கோபக்காரனாய்.. குறும்புக் காரனாய்.. பாசக்காரனாய்.. இரு கரம் நீட்டி, அவளைப் பார்த்து..

‘அம்மா..’ என்று அழைத்தான்..

கற்பனையில் மிதந்து கொண்டிருந்த ஆர்த்தியின் முன்னால் விரல் சொடுக்கினான் கபிலன்..

“என்ன ஆச்சு.. கனவுகாண ஆரம்பித்து விட்டாயா..?”

‘கனவா..?’

ஏமாற்றத்துடன் கபிலனின் முகம் பார்த்தாள் அவள்..

“எதுக்கு இந்தப் பார்வை? என்றைக்கு இருந்தாலும் என் மகன் உன்னை அம்மான்னு கூப்பிடத்தானே போகிறான்..?”

ஆர்த்தி, கபிலனின் முன்னால் தட்டை வைத்துப் பரிமாற ஆரம்பித்தாள்..

“வெறும் இட்லிப் பொடியுடன் நான் இல்லாத போது நீங்கள் சாப்பிடலாம்.. நானிருக்கும் போது.. அப்படிச் சாப்பிட விடமாட்டேன்..”

கபிலன் அவள் முகம் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான்.. வீட்டைப் பெருக்கினாள்.. காய் நறுக்கி மதிய சமையல் செய்தாள்.. அவனுடைய துணிமணிகளைத் துவைத்துப் போட்டாள்.. பேசிக்கொண்டே இரண்டு பேரும் மதியச் சாப்பாட்டை சாப்பிட்டார்கள்.. அவன் மார்பில் தலை வைத்து அவள் உறங்கிப் போக, அவள் கூந்தலில் முகம் புதைத்த வண்ணம் அவனும் உறங்கிப் போனான்..

தெருவில் பால் மணியின் சத்தம் கேட்டுப் பதறி எழுந்தாள்.. காபி போட்டாள்.. அவனுக்குக் கொடுத்து விட்டு அவளும் குடித்தாள்.. அவனுடைய துணிகளை மடித்து அயர்ன் பண்ணி அடுக்கினாள்..

“அப்போ.. நான் கிளம்புகிறேன்.. நேரமாச்சு.. அம்மா.. கவலைப்படுவாங்க..” என்று கூறியபடி கிளம்பி விட்டாள்..

அதுவரை நடந்ததெல்லாம் கனவென்பது போல அவள் கிளம்ப, கபிலன், அவள் கைப்பிடித்து தடுத்து நிறுத்தினான்..

“போகாதே..”

“போகாமல்..? வேறு என்ன செய்ய..?”

“நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்..”

“எனக்கு முன்னால் இரண்டு அக்காக்கள் இருக்கிறாங்களே.. அவங்களுக்கு முன்னால் நான் எப்படி கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்..?”

“எனக்குத்தான் யாருமே இல்லையே..”

“நான் இல்லையா.. இனியும்.. இப்படி நீங்க பேசலாமா..?”

“‘இனியும்’ன்னு ஏன் சொல்கிறாய் ஆர்த்தி..? கிளம்பிப் போக நினைப்பவள், அந்த ‘இனியும்’கிற வார்த்தையைச் சொல்லக்கூடாது.. எது நடந்தாலும் அது உன்னைப் பாதிக்கவே பாதிக்காதா..?”

“நான் போகாமல் இங்கேயே இருக்க முடியுமா..?”

“ஏன்.. இருந்தால் என்ன..?”

“புரியாமல் பேசாதீங்க..”

“நீ புரிந்துதான் பேசுகிறாயா..?”

ஆர்த்தி, கபிலனின் அருகே வந்து, அவன் கழுத்தினில் தன் கரங்களை மாலையாக்கி விழியோடு விழி கலந்து பார்த்தாள்..

“நான் உங்களுடையவள்.. இதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்.. கல்யாணம் என்பது ஊருக்காக நாம் பண்ணிக்கொள்வது.. உங்களுக்கும் எனக்கும் அது நடந்து முடிந்து விட்டது.. நான் போக வேண்டும். என் குடும்பம் எனக்காகக் காத்திருக்கிறது.. திரும்பி ஒருநாள் உங்களிடம் வருவேன்.. அதுவரை காத்திருங்கள்..”

ஆர்த்தி போய் விட்டாள்.. அவளில்லாத வீடு வெறிச்சென்று இருந்தது.. என்றைக்கும் வராத தனிமை உணர்வு அன்று கபிலனுக்கு வந்தது..

அவன் படுக்கையறைக்குள் சென்றான்.. கசங்கிய கட்டில் விரிப்பு.. அவனுக்கு ஆர்த்தியை ஞாபகப் படுத்தியது.. அவன் கட்டிலில் மல்லாந்து படுத்து கண்மூடினான்.. செல்ஃபோன் மணியொலித்தது.. எடுத்து நம்பர்களைப் பார்த்தான்.. அஜய் அழைத்துக் கொண்டிருந்தான்..

“சொல்லு அஜய்..”

“ஆர்த்தி ஃபோன் பண்ணியிருந்தாள்டா..”

வீட்டிற்குப் போகுமுன்னால் கபிலனின் பாதுகாப்பு குறித்து அவனுடைய நண்பனிடம் பேசியிருக்கிறாள்.. அவளின் கவலை அவன் மனதிற்கு இதத்தை தந்தது..

“உன் நம்பரை எப்படி அவள் கண்டு பிடித்தாள்..?”

“உன் செல்ஃபோனிலிருந்துதான் சுட்டாளாம்… அதை விடுடா.. இந்த தினேஷ் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்..? கேட்பதற்கு ஆளில்லைன்னு நினைத்தானா..?”

“அவனை விடுடா.. நான் பார்த்துக் கொள்கிறேன்..”

“நீ தனியாய் அவனைப் பார்த்துக் கொண்டால், நண்பன்னு நான் ஒருத்தன் உனக்கெதுக்குடா..?”

“அப்படியில்லைடா அஜய்..”

“நீ நாளைக்கு காலேஜுக்கு வா.. அங்கே என்ன நடக்கிறதுன்னு பார்..”

“எனக்காக நீ அவனிடம் மோத வேண்டாம்..”

“நாளைக்கு என்னை எவனாவது வம்பிழுத்தால் இப்படித்தான் நீ கைகட்டி வேடிக்கை பார்ப்பாயா..?”

“டேய்.. என்னடா இப்படிச் சொல்கிற..?”

“நீ வேறு, நான் வேறு இல்லைடா.. நீ வர்ற.. அவ்வளவுதான்.. அவனா நானான்னு பார்த்து விடலாம்..”

அஜய் போனை அணைத்து விட்டான்.. கபிலன் எழுந்து கால்சென்டருக்கு கிளம்பினான்..

காலேஜின் மரத்தடியில் அஜய் தன் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தான்.. தினேஷ் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் போல இருந்தாலும் சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த பரசுவை அடிக்கடி பார்த்து சங்கேதமாய் சைகை செய்து கொண்டிருப்பதை பார்த்தும் பாராதவன் போல, அஜய் சுந்தரிடம் வினவினான்..

“ஆமாண்டா மச்சான்.. நம்ம கபிலன் ஏண்டா நேற்று காலேஜுக்கு வரவில்லை..?”

தினேஷின் முகம் மாறுவதையும் அவன் கூர்மையாக அவர்களின் பேச்சைக் கவனிப்பதையும் சுந்தர் நோட்ட மிட்டுக் கொண்டே அஜய்க்கு பதில் கூறினான்..

“ஏதோ வேலையிருந்ததாம்… இங்கே வந்து என்னத்தைக் கிழிக்கப் போகிறோமுன்னு நினைத்துக் கிட்டு.. உருப்படியாய் அந்த வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தானாம்…”

முதல்நாள் முழுவதும் கபிலனைத் தாக்க வேண்டுமென்ற கொலை வெறியுடன் இருந்த தினேஷ் பல்லைக்கடித்துக் கொண்டான்..

‘போட்டுத் தாக்கணும்னு நினைத்தால் பயபுள்ள.. கையில் சிக்கமாட்டேன் கிறானே..’

தூரத்தில் கபிலனின் டூவீலர் வரவும்.. தினேஷின் முகம் பிரகாசமானது..

“அதோ கபிலன் வருகிறான் போல..” என்று சொல்லிக் கொண்டே அருகில் பார்த்தவன் திகைத்தான்..

அஜய்யும் மற்ற நண்பர்களும் பரசுவைச் சுற்றி வியூகம் அமைத்திருந்தனர்..

“ஏண்டா.. என் அப்பாவின் கட்சியைத் திட்டி ஏதோ சொன்னாயாமே.. நீ பெரிய பருப்பா..?” என்று ஆரம்பித்தான் அஜய்..

பரசு அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தபோதே..

“டேய்.. ‘ஆமாம்.. அப்படித்தான் சொல்லுவேன்’னு சொல்றாண்டா.. போட்டு தாக்குங்கடா..” என்றபடி பரசுவின் மேல் பாய்ந்து விட்டான்..

அடுத்த சில மணி நேரங்கள்.. கல்லூரியே அமளி துமளியானது.. யார் யாரை அடித்துக்கொள்கிறார்கள்..? எதற்கு அடித்துக்கொள்கிறார்கள்..? என்று யாருக்குமே தெரியாமல் ஒருவரையொருவர் சகட்டு மேனிக்கு அடித்துக் கொண்டார்கள்..

தினேஷும் பரசுவும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.. தினேஷின் தந்தைக்கும் பரசுவின் தந்தைக்கும் எச்சரிக்கையாய் இருக்கும்படி அஜய்யின் தரப்பிலிருந்து மிரட்டல் போனது..

கல்லூரி இழுத்து மூடிப்பட்டு தேர்விற்கு மட்டும் திறக்கப்பட்டது.. கபிலன் தேர்வுகளை நன்றாக எழுதினான்.. அடுத்த மூன்று மாதத்தில் வழக்கறிஞராக அவனும் அவனுடைய நண்பர்களும் கல்லூரியை விட்டு வெளியேறினார்கள்..

ஆர்த்தி கபிலன் இல்லாத கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தாள்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link