Chapter 02
“குட் மார்னிங் சார்…”
எதிர்பட்ட சிவராஜின் காலை வணக்கத்திற்கு தலையசைத்து விட்டு.. மேனேஜர் என்ற பெயர் பொதித்த கண்ணாடி அறைக்குள் நுழைந்தார் கல்யாணராமன்…
அவர் இருக்கையில் உட்காருவதற்காக காத்திருந் ததைப் போல அறைவாசலில் விரல் மடக்கித் தட்டப்படும் சப்தம் கேட்க..
“யெஸ்.. கமின்..” என்றார்..
கண்ணாடித் தடுப்புக்கு அப்பால் தெரிந்த கூட்டத்தில் அவருக்குள் லேசான களைப்பு வந்தது.. அது காலை நேர வேலையின் களைப்பு.. அப்போது ஆரம்பிக்கும் அந்த வேலை.. இரவுதான் முடியப் போகிறது என்பதை அவர் உணர்ந்திருந்ததினால் ஏற்பட்ட களைப்பு…
அவர் மட்டுமல்ல.. தேசிய உடைமையாக்கப்பட்ட அந்த வங்கியில் பணிபுரிந்த எல்லோருமே.. நிமிர்ந்து பார்க்க நேரமின்றித்தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள்..
‘மனித இயந்திரம்..’ கல்யாணராமன் நினைத்துக் கொண்டார்..
“நடையாய் நடக்கிறேன் சார்… லோன் ஆபிசர் இன்னைக்கு.. நாளைக்குன்னு இழுத்தடிச்சார்… இப்பக் கேட்டா லோன் சேங்சன் ஆக பாஸிபிலிட்டி இல்லேங் கிறார்…” கல்யாண ராமனுக்கு எதிரே அமர்ந்திருந்தவர் அங்கலாய்த்தாள்..
“ஏன்னு கேட்டிங்களா..? அதுக்கு அவர் சரியான காரணத்தைச் சொல்லியிருப்பாரே..”
“கேட்டோம் சார்.. அது குறை.. இது குறைன்னு இல்லாததையும்.. பொல்லாததையும் சொல்றார்..”
“அப்படிச் சொல்ல.. அவருக்கும்.. உங்களுக்கும் என்ன வரப்புத் தகராறா இருக்கு..? உங்கள் முன்னே.. பின்னே அவருக்குத் தெரியுமா..?”
“இல்லைதான் சார்.. ஆனாலும்..”
“இங்கே ஆனா.. ஆவன்னாவிற்கே இடமில்லை சார்.. அவர் கேட்ட டாகுமெண்ட்ஸை நீங்க கொடுத்திருக்க மாட்டிங்க.. அதனால அப்படிச் சொல்லியிருப்பார்..”
“அதை முதலிலேயே சொல்லியிருக்கலா மில்லையா..?”
எப்படிச் சொல்வது..? கல்யாணராமன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டார்.. தினமும் இதுபோன்ற முறையீடுகளை அவர் சந்திக்க நேரிடுகிறது.. லோன் கேட்பவர்களிடம் தேவையான டாக்குமெண்டுகளும்.. கேரண்டியும் இருந்தால்தான் லோனை சேங்சன் பண்ண முடியும் என்பதை லோன் போட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துக்கு ஆளானவர்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை என்ற கேள்வி அவர் நெஞ்சில் எழுந்தது…
“ஸ்டெப் பை ஸ்டெப்பாத்தான் போக முடியும் சார்.. அவர் ஒவ்வொண்ணா உங்களிடம் கேட்டிருப்பார்.. அவர் கேட்டது கிடைக்காததில் லோன் சேங்சன் ஆக பாஸி பிலிட்டி இல்லைன்னு சொல்லியிருப்பார்.. தட்ஸ் ஆல்..”
வந்தவர் முறைப்பாய் எழுந்து போனார்.. கல்யாண ராமன் கம்யூட்டரை உயிர்ப்பித்தார்.. மெயிலை செக் பண்ண ஆரம்பித்தார்..
“மே ஐ கமின்..?”
கம்பீரமான குரலில் நிமிர்ந்து பார்த்தவர்.. அவசரமாக எழுந்து கை நீட்டினார்..
“நீங்க உள்ளே வர பெர்மிசன் கேட்கனுமா..?”
அவர் நீட்டிய கையைப் பற்றிக் குழுக்கிய ரகுநந்தன் ஆறடி உயரத்தில்.. கருநீல கோட்.. சூட்.. டையுடன் ரேமண்ட் விளம்பர மாடலைப் போன்ற கச்சிதமான ஆணழகனாக இருந்தான்…
“ரூல்ஸ் ஆர் ரூல்ஸ்..” புன்முறுவல் செய்தபடி அவருக்கு எதிரே தோரணையாக அமர்ந்தான்…
“வாட் கேன் ஐ டு ஃபார் யு சார்…”
அந்த வங்கிக் கிளையின் மேலாளரான கல்யாணராமன் அந்த அளவுக்கு நயந்து வினவுகிற அளவுக்கு ரகுநந்தனிடம் பணம் கொட்டிக் கிடந்தது.. அவன் கணக்கு வைத்திருக்கும் பல்வேறு வங்கிக் கிளைகளில் அவருடைய வங்கிக் கிளையும் ஒன்று என்பதில் அவருக்கு அசாத்திய பெருமையும் நிம்மதியும் உண்டு…
“உனக்கென்னய்யா.. ரகுநந்தன் கஸ்டமரா இருக்கிற பிரான்ச் .. எத்தனை கோடி டெபாசிட்டை டார்கெட்டா சொன்னாலும் அந்த டார்கெட்டை மீறி உன் பிரான்ச்சில் டெபாசிட் இருக்கும்.. நாங்க அப்படியா..? ஒவ்வொரு வருசமும் இயர் எண்டு கணக்கு முடிக்கிறதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது..”
மற்ற கிளைகளின் மேலாளர்கள் பொறாமைப் படுவார்கள்.. வருடாந்திரக் கணக்கைக் கண்டு பயப்பட வேண்டாத அந்த அஞ்சாமையை அவருக்குக் கொடுத் திருக்கும் ரகுநந்தனிடம் அவர் நயந்து பேசாமல் என்ன செய்வார்..?
“ஒன் குரோர் டெபாசிட் செய்யப் போறேன்..”
“தேங்க்யு சார்.. தேங்க்யு…”
என்னவோ அந்த ஒரு கோடியை அவரின் வீட்டுக்கே கொண்டு போகப் போகிறவரைப் போல மகிழ்ந்து போனார் கல்யாண ராமன்..
“இப்ப ஷேப்டி லாக்கர்ல இருக்கிற சம் டாக்கு மெண்ட்ஸை நான் கொண்டு போக வேண்டியிருக்கு..”
கல்யாணராமன் எழுந்தார்.. லாக்கர்கள் இருந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றார்.. ரகுநந்தனின் லாக்கரைத் திறந்து விட்டு அவர் வெளியேற.. சற்று நேரத்தில் ரகுநந்தனும் அந்த இடத்தை பிட்டு வெளியேறினான்..
சூர்யா அவசரகதியில் ஸ்கூட்டியை செழுத்திக் கொண்டிருந்தாள்.. இன்னும் ஆறு நிமிடங்கள்தான் பாக்கியிருந்தன.. அதற்குள் அவளும்.. பூஜாவும்.. அந்தத் தனியார் பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்து விட வேண்டும்.. இல்லையென்றால் அந்தப் பள்ளியின் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டு.. அவளும் பூஜாவும் கதவுக்கு வெளியில் நிற்க வேண்டி வந்து விடும்…
பூஜாவாவது பரவாயில்லை.. அந்தப் பள்ளியில் பிரி.கே.ஜி. படிக்கும் குழந்தை.. சூர்யா அப்படியில்லை.. அந்தப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியை.. அவள் அப்படி நின்றால் நன்றாக இருக்குமா..?
“எல்லோரும் இன்ஜினியரிங்.. அது இதுன்னு படிக்குதுக.. நம்ம பெண்ணை டிகிரியில சேர்த்து விட்டிருக்கீங்க..” ஜானகி கோபப்பட்டபோது…
“சூர்யாவோட நேச்சருக்கு டீச்சீங் புரபொசனல்தான் பெட்டர் ஜானு.. மத்த வேலைகளில் இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸை அவதாங்க மாட்டா..” என்று சொல்லி விட்டார் கல்யாணராமன்..
அவர் சொன்னதைப் போல.. ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவள்.. கூடுதலாக பி.எட் படிப்பை படித்து முடித்தாள் அரசாங்க வேலை கிடைக்கும் வரை தனியார் பள்ளியில் பணி புரியட்டும் என்றுதான் அந்தப் பள்ளியில் அவளைச் சேரச் சொன்னார் கல்யாணராமன்.. அவளது திருமணத்திற்கு அந்த தனியார் பள்ளியின் ஆசிரியை வேலையே ஒரு கூடுதல் தகுதியாக அமைந்துவிட.. அவளால் அந்த வேலையிலிருந்து விலக முடியாமல் போய் விட்டது…
சும்மாவே சூர்யாவுக்கு பூஞ்சை மனது.. யாரும் கடிந்து ஒரு சொல் சொல்லி விட்டால் தாங்க மாட்டாள்.. அவளைக் கொண்டு வந்து கண்டிப்புக்கு பெயர் பெற்ற அந்தத் தனியார் பள்ளியில் வாழ்க்கை விட்டு விட்டது.. அவளும் வேறு வழியின்றி பல்லைக் கடித்தபடி அந்த வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தாள்..
தூரத்தில் வரும்போதே.. வாசல் கேட்டின் கதவுகள் மூட ஆரம்பிக்கப் படுவதை அவள் கவனித்து விட்டாள்.. ஸ்கூட்டியின் ஹாரனை அழுத்தி அலற விட்டபடி அவள் வேகம் கூட்ட.. அவளுக்காக பாவம் பார்த்து கதவை மூடாமல் சில வினாடிகள் தாமதித்தான் வாயிற்காவலாளி..
வெற்றிகரமாக வாசல் கேட்டைக் கடந்து பள்ளியின் வளாகத்திற்குள் பிரவேசித்தவளுக்கு…
‘ஸ்ஸ்.. அம்மாடி.. இப்பவே கண்ணைக் கட்டுதே..’ என்று ஆயாசமாக இருந்தது…
பூஜாவை அவளது வகுப்பறையில் விட்டு விட்டு.. அவசரமாக அலுவலக அறையை நோக்கி நடந்தாள்.. வருகைப் பதிவேட்டில் அவளது கையொப்பத்தை இட்டு நிமிர்ந்த போது..
“உங்களை பிரின்ஸிபால் மேடம் கூப்பிடறாங்க..” என்று வந்து நின்றான் அந்தப் பள்ளியின் பியூன் குணசேகரன்..
“கோபமா இருக்காங்களா குணா..?” கவலையுடன் விசாரித்தாள் சூர்யா…
“அந்தம்மா எப்பத்தான் கோபமில்லாம இருந்தாங்க..?” பதிலுக்கு கேள்வி கேட்டான் அவன்..
இதற்கு அவனிடம் எதையும் கேட்காமலே இருந்திருக்கலாம் என்று தனக்குள் நொந்து கொண்டபடி பிரின்ஸிபாலின் அறையை நோக்கி நடந்தாள் சூர்யா.. மனதுக்குள் பிரின்ஸிபால் சகுந்தலா தேவி எதற்காக அழைத்திருப்பாள் என்ற கேள்வி சுழன்று கொண்டே இருந்தது…
“மே ஐ கமின் மேடம்..?”
அறைவாசலில் நின்று கேட்டவளுக்கு.. ‘யெஸ் கமின்’ என்ற பதில் வரவில்லை.. மாறாக.. தலையை நிமிர்ந்து அவளை முறைத்த சகுந்தலாதேவியின் அனல் பார்வைதான் வந்தது..
“நான் வரச்சொல்லித்தானே வந்திருக்கீங்க…? அப்புறமும் என்ன கேள்வி வேண்டிக்கிடக்கு..?”
“நத்திங் மேம்.. ஜஸ்ட் ஃபார் எ கர்ட்டஸி…”
“உங்க கர்ட்டஸியைக் கொண்டு போய் குப்பையில் போடுங்க.. வர்றது லேட்.. இதில கர்ட்டஸியைப் பத்திப் பேச்சு என்ன வேண்டிக்கிடக்கு..? டீச்சர்ஸே இப்படி வந்தா.. ஸ்டூடண்ட்ஸை நாம எப்படிக் கேள்வி கேட்க முடியும்..?”
“நான் லேட்டா வரலையே மேடம்…”
“கேட் மூடப் போகிற சமயத்தில வந்தீங்க..”
“கரெக்ட் டயத்தில வந்திட்டேனே மேம்..”
“கன் டயத்தில வந்திட்டிங்கன்னு சொல்லுங்க.. சப்போஸ் ஒரு நிமிசம் லேட்டா வந்திருந்தா நீங்க கேட்டுக்கு வெளியிலே நிற்க வேண்டி வந்திருக்குமா.. இல்லையா..? டெல் மீ…”
அப்படி அவளை வெளியே நிற்க வைக்க முடியவில்லையே என்ற சகுந்தலாதேவியின் ஆதங்கம் அப்பட்டமாக அவளின் வார்த்தைகளில் தெரிந்ததில் நொந்து போனாள் சூர்யா…
சகுந்தலாதேவியின் நீண்டநாள் ஆசை அது என்று அவளின் அடி மனதுக்குத் தெரியும்.. எப்போது.. சகுந்தலா தேவியின் உறவுக்காரப் பெண்ணொருத்திக்காக ஒதுக்கி வைத்திருந்த வேலையில் சூர்யா அமர்ந்து விட்டாளோ அப்போதிருந்தே அவளின் ஆழ்ந்த வெறுப்பிற்கு சூர்யா ஆளாகி விட்டாள்..
நின்றால் குற்றம்.. உட்கார்ந்தால் குற்றம்.. என்று தொட்டதற்கெல்லாம் சகுந்தலாதேவி குற்றம் கண்டு பிடித்து வறுத்து எடுக்கையில் அரசாங்க வேலை கிடைத்து.. அந்தப் பள்ளியை விட்டு ஓடிவிட மாட்டோமா என்று சூர்யாவின் மனம் ஏங்கும்.. ஆனால் அது கிடைக்க வேண்டுமே..
அது கிடைக்காதவரைக்கும்.. இருக்கின்ற வேலை யையும் அவள் விட்டுவிட முடியாது.. அவளுடைய புகுந்த வீட்டில் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்..
பெண் பார்க்க வந்த போதே சூர்யாவின் சம்பளத் தொகை எவ்வளவு என்பதைக் கேட்டு உறுதி படுத்திக் கொண்டவள் தான் சூர்யாவின் மாமியாரான வனஜா…
“எங்க சாய்நாத்துக்கு பெரிய பெரிய இடத்தில இருந்தெல்லாம் பெண் கொடுக்கிறேன்னு வந்தாங்க.. நான்தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.. என்னதான் லாரி.. லாரியா சீர்வரிசைகளை அள்ளிக் கொடுத்தாலும்.. ஆயுள் பூராவும் அள்ளிக் கொடுக்கிற சம்பளத்துக்கு ஈடாகுமா..?” என்று சொன்னவள் அவள்..
அவளின் அருமை மைந்தனான சாய்நாதன் ஒன்றும் தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையல்ல.. அவனுக்குத் தேவையானதில் தாய்.. தந்தையை எதிர்த்து நிற்பதில் வல்லவன்.. ஆனால் இந்த ஒன்றில் மட்டும் அவன் தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாக இருந்தான்.. எதற்காக அன்னை கிழித்த அந்தக் கோட்டைத் தாண்டவில்லை என்பதற்கு.. முதலிரவு அறையில் சூர்யாவிடம் விளக்கமும் சொன்னான்..
“டபுள் ஏர்னிங் இல்லாம இந்தக் காலத்தில லைஃபை ஃபேஸ் பண்றதுங்கிறது ரொம்பக் கஷ்டம் சூர்யா.. விலைவாசி விசம் போல ஏறிக்கிட்டு இருக்கு.. இந்த நிலைமையில சிங்கிள் ஏர்னிங்கில காலம் தள்ளறதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியலை..”
கை தொடும் தூரத்தில் அமர்ந்திருந்த புதுமனைவியின் அழகையும்.. அவளின் பூவாசத்தையும்.. அறையில் கமழ்ந்த ரம்யமான நறுமணத்தையும் நினைத்துப் பார்க்காமல்.. ஒருவரின் சம்பளத்தில் மட்டுமே ஓட்ட வேண்டிய வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்த்தவனுக்கு மனைவியாகி விட்ட பின்பு.. கை வசமிருக்கும் வேலையை விடுவதைப் பற்றி எப்படி சூர்யாவினால் நினைத்துப் பார்க்க முடியும்..?
அவள் பல்லைக் கடித்துக் கொண்டு.. சகுந்தலா தேவியின் அராஜகங்களைப் பொறுத்துக் கொண்டு போனாள்…
சந்தியா கல்லூரிக்குள் நுழைந்த போது… அவளுடைய வகுப்புத் தோழிகள் எதைப் பற்றியோ பேசி சளசளத்துக் கொண்டிருந்தார்கள்…
“என்னடி..?” எதிர்பட்ட நீரஜாவிடம் வினவினாள் சந்தியா..
“உனக்கு விசயமே தெரியாதா..?” அவள் புதிர் போட்டாள்…
“என்ன விசயம்..?” சந்தியாவுக்கு புரியவில்லை…
“நம்ம கல்பனா அழுதுக்கிட்டு இருக்காடி..”
“எதுக்காம்..?”
“அவ வீட்டை ஏலம் போடப் போறாங்களாம்..”
“வாட்..?” சந்தியா திகைத்துப் போனாள்…
அவர்களுடைய தோழியான கல்பனா ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்… அவளுடைய அப்பா தனியார் கம்பெனியில் மேனேஜராக இருந்தார்.. பெற்றோருக்கு ஒற்றைமகளாக அவள் பிறந்திருந்ததினால் செல்லமாக வளர்க்கப்பட்டவள்..
அவள் வீடு ஏலத்தில் வருகிறதென்றால் அதை நம்ப முடியுமா..?
“உளராதே..” சந்தியா அதட்டினாள்..
“உளரலை..” என்றாள் நீரஜா..
“உனக்கு யார் சொன்னது..?” சந்தியா விசாரித்தாள்..
“வேற யார் சொன்னது..? எல்லாம் கல்பனாதான் சொல்லி அழுதுகிட்டு இருக்கா..”
அப்போது சந்தியாவுக்குத் தெரியவில்லை.. அந்த கல்பனாவின் அழுகை சந்தியாவின் வாழ்வையே புரட்டிப் போடப் போகிறது என்று…
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.