Chapter 03

0Shares

 சந்தியா ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு.. கல்பனாவைத் தேடிப் போனாள்.. அழுது அழுது வீங்கிய கண்களுடன் மரத்தடியில் அமர்ந்திருந்தாள் கல்பனா.. சந்தியாவைக் கண்டதும் அவள் கண்கள் மடை திறந்த வெள்ளமாகப் பொழிய ஆரம்பித்து விட்டன.. தோழியை அந்த நிலைமையில் கண்ட சந்தியாவின் மனம் வலித்தது.. கல்பணாவின் கண்ணீர் துளிகளை துடைத்து விட்டாள்…

“உனக்கு அழுகக்கூடத் தெரியும்ன்னு எனக்கு இப்பத்தான் தெரியுது கல்பனா.. நீ ஸ்ட்ராங்க் மைன்ட்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்… நீயென்னடான்னா காலேஜில வந்து உட்கார்ந்துக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்க.. கண்ட்ரோல் யுவர் ஷெல்ப்..”

“முடியலை சந்தியா.. வீட்டில இருந்தா அம்மாவின் முன்னாலே அழுது வைச்சிருவேன்னுதான் காலேஜிக்கு வந்தேன்…”

“ஸோ.. இன்னைக்கு அழுகத்தான் நீ காலேஜிக்கு வந்திருக்கிற.. படிக்கிறதுக்கு இல்லை…”

“அப்படித்தான்னு வைத்துக்கயேன்..”

கல்பனா அழுகையை அடக்க முடியாமல் தவித்தபடி சொன்னாள்.. சந்தியாவிற்கு அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது.. மரத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த மேடையில்.. அவளின் அருகே.. சந்தியாவும் உட்கார்ந்தாள்.

“என்னதாண்டி ஆச்சு..?” என்று கேட்டாள்..

“என்னன்னு சொல்லுவேன் சந்தியா.. திடிர்ன்னு டாடி குண்டைத் தூக்கிப் போடறார்.. வீடு ஏலத்துக்கு வருதாம்..”

“எப்படி கல்பனா..? உங்க பேமிலி வசதியானது தானே..?”

“ம்ம்ம்.. ஆனா டாடி யாருக்கோ வீட்டுப் பத்திரத்தை கேரண்டியாய் கொடுத்து கேரண்டி கையெழுத்து போட்டிருக்கிறார்… அதுக்குத்தான் இப்ப வீட்டை ஏலத்துக்கு விடப் போகிறாங்களாம்..”

“மை காட்..! உன் அப்பா யோசிக்காம இதையெல்லாம் செய்வாரா..?”

“டாடியைக் கேட்டால் இல்லைன்னு சொல்கிறார் சந்தியா..”

“அப்படியில்லாம இது எப்படி நடக்கும் கல்பனா..? ஹௌ இஸ் இட் பாஸிபில்..?”

“அதுதான் எங்க யாருக்குமே தெரியலை சந்தியா.. வீடுன்னு வெறும் வார்த்தையில் சொல்லிடறாங்க.. அதை பணத்தைக் கொண்டு மதிப்பு போடறாங்க.. வீடுங்கிறது அதில்ல சந்தியா.. அது உணர்வுகள் நிறைந்தது.. அந்த வீட்டில்தான் நான் பிறந்தேன்.. தவழ்ந்தேன்.. வளர்ந்தேன்.. அதன் ஒவ்வொரு செங்கலும் எங்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்திருக்கிறது.. எங்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக் கின்றது… இன்றைக்கு அதைப் பிரியனும்னு சொன்னா எப்படி சந்தியா..? எங்களாலே அது முடியுமா..?”

முடியாதுதான்.. கல்லினாலும்.. சிமிண்டினாலும் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு உயிர் உண்டு.. அதை உணர்ந்தவர்கள் அதை விட்டுப் பிரிய மறுப்பார்கள்…

“அதனால்தான் டாடி.. எங்க வீட்டுக்கு நல்ல விலை கொடுக்கிறேன்னு சொன்னபோதும் விற்க மாட்டேன்னு சொல்லிட்டார்..” கல்பனாவின் கண்கள் பொலபொல வென்று கண்ணீரை உகுத்தன..

“அழாதேடி..” இரக்கத்துடன் சொன்னாள் சந்தியா..

“அழாம இருக்க முடியலடி.. நிறைய பேர் எங்க வீட்டை விலைக்கு கேட்டாங்க.. சுத்தி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்.. மல்ட்டி இன்டர்நேசனல் கம்பெனி.. அது இதுன்னு.. எங்க வீட்டைச் சுற்றிக் கமர்ஷியல் கட்டிடங்களா மாறிப் போச்சு.. எங்க வீட்டை விலைக்கு கேட்டவங்க.. இதைப் போல வேறு ஒரு ஏரியாவில் வீட்டைக் கட்டித் தந்து.. கையில் பணமும் தருகிறதாச் சொன்னாங்க.. டாடி ஸ்ட்ரிக்டா முடியாதுன்னு சொல்லிட்டார்.. அப்படியெல்லாம் காப்பாற்றி வந்த வீடு அது சந்தியா.. இப்ப எப்படிக் கை மாறப் போகுதுன்னு பார்த்தியா..?”

“உன் அப்பா கிட்டப் பேசிப் பார்த்தியா..? அவர் அவ்வளவு சீக்கிரத்தில் யாரிடமும் ஏமாறுகிற ஆள் இல்லையே கல்பனா…”

“ஐ நோ இட்.. டாடி ரொம்ப அலர்ட் சந்தியா.. அவர் யாருக்கும் சூரிட்டி கையெழுத்துப் போடவே இல்லைன்னு அடிச்சுச் சொல்கிறார்.. கடன் வாங்கின அந்த ஆளையும் டாடிக்குத் தெரியாதாம்.. பட்.. அந்த ஆள் வாங்கின கடனுக்கான கேரண்டி கையெழுத்தாய் டாடியின் கையெழுத்து இருக்கிறது.. சூரிட்டியாய் வீட்டின் ஒர்ஜினல் டாக்குமென்டும் இருக்கிறது..”

“எப்படி இது நடந்திருக்க முடியும்..?”

“அதுதான் எங்க யாருக்கும் தெரியலை…”

கல்பனா அழுது அழுது ஓய்ந்தாள்.. தோழியிடம் ஆறுதலாகப் பேசி அவள் கூடவே இருந்த சந்தியா.. அன்று மாலையில் அவள் வீட்டுக்கு கூடவே சென்றாள்.. கல்பானவின் தாய் சோகமாக வரவேற்றாள்.. காபி கலக்கப் போனவளை தடுத்து நிறுத்திய சந்தியா..

“அங்கிள் எங்கே ஆண்ட்டி..?” என்று கேட்டாள்..

“யாரிடமாவது பணம் புரட்ட முடியுமா என்று பார்க்கப் போயிருக்கிறார்.. எங்க தலைவிதியப் பார்த்தியா சந்தியா.. எங்க வீட்டை நாங்களே விலை கொடுத்து வாங்கும்படியா ஆகியிருக்கு..” உடைந்து போய் அழுதாள் அபிராமி..

“அழாதீங்க ஆண்ட்டி.. எல்லாம் சரியாகிவிடும்..”

எப்படிச் சரியாகும் என்று தெரியாமல் தேறுதலாகச் சொல்லி வைத்தாள் சந்தியா.. வேறு என்ன செய்வது..? அழுகின்றவர்களை நன்றாக அழட்டும் என்று விட்டு விட முடியுமா..? இல்லை அவர்கள் கூடச் சேர்ந்துதான் அழ முடியுமா..?

மூழ்கிக் கொண்டிருப்பவர்களுக்கு கை கொடுக்க முடியாவிட்டாலும்… கவலைப் படாதீர்கள்.. கடவுள் காப்பாற்றுவர் என்று சொல்லத்தானே வாய் வருகிறது..? ஒருவேளை அந்த வார்த்தைகளுக்குச் சக்தியிருந்தால் கடவுள் ஓடிவந்து காப்பாற்றி விட மாட்டாரா என்ற அடிமனதின் ஆசையினால் வெளிவரும் ஆறுதல் வார்த்தைகள்தானே அவை..?

எதுவும் சரியாகாது என்பது இருண்டு போன முகத்துடன் வீட்டுக்குத் திரும்பிய மந்திர மூர்த்தியின் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது..

“என்ன ஆச்சு அங்கிள்..?”

கேள்வி கேட்கக் கூடத் தெம்பில்லாமல் இடிந்து போய் உட்கார்ந்திருந்த அந்த வீட்டுப் பெண்களின் நிலைமையைப் பார்த்துவிட்டு.. அவர்களின் சார்பாக அந்தக் கேள்வியைக் கேட்டாள் சந்தியா…

“யாரெல்லாம் உதவி செய்வாங்கன்னு நான் நம்பிப் போனேனோ.. அவங்க அத்தனை பேரும் ஒன்று சொன்னதைப் போல கை விரிச்சுட்டாங்க சந்தியா.. அதில ஒருத்தன்.. நான் வாயைத் திறக்கிறதுக்கு முன்னாலேயே என்னிடம் பணமில்லையேன்னு சொல்றான்..”

“அவருக்கு எப்படித் தெரியும் அங்கிள்..”

“எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்மா.. எனக்குத் தான் எதுவும் தெரியாம முட்டாளா இருந்திருக்கேன்.. யார் கிட்டயெல்லாம் நான் பணம் கேட்கப் போவேன்னு அவனுக்கு கிளியரா தெரிஞ்சிருக்கு.. அங்கேயெல்லாம் நான் போகிறதுக்கு முன்னாலேயே அவன் செல்வாக்கு போயிருச்சு சந்தியா…”

‘அவனா..?’ சந்தியா குழப்பத்துடன் கல்பனாவைப் பார்த்தாள்.. அவளுக்கும் அந்த ‘அவன்’.. எவன் என்று தெரியவில்லைபோல..

“யாரைச் சொல்கிறீங்க டாடி..?” என்று தீனமான குரலில் கேட்டாள்..

அபிராமியும் அதே கேள்வியை விழிகளில் தேக்கி கணவனை நோக்கினாள்..

“அவன்தான்.. அந்த ரகுநந்தன்..!” வெறுப்புடன் சொன்னார் மந்திரமூர்த்தி..

“ரகுநந்தனா..?”

பெண்கள் மூவரும் ஒரே குரலில் வினவினார்கள்..

“உங்களுக்கு அவனை யார்ன்னு தெரியாதில்ல.. பாவம்.. நீங்க உண்டு.. உங்க வேலை உண்டுன்னு இருக்கிறவங்களுக்கு அவனைப் பற்றி என்ன தெரியும்..? அவன் பணத்திமிர் பிடிச்ச கோடிஸ்வரன்.. அவன் எது மேலேயாவது ஆசைப்பட்டா அது அவனுக்கு கிடைத் தாகனும்.. கிடைக்கலேன்னா.. எந்த வழியிலேயாவது அதை கைப்பற்றனும்னு அவன் நினைப்பான்.. அதில் யார் அழிந்தாலும் அதைப்பற்றி அவன் கவலைப்படவே மாட்டான்…”

“அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் அங்கிள்..? நீங்க எப்படி அவன் பகையாளியா மாறினீங்க..?”

“விருப்பப்பட்டாம்மா மாறினேன்..? அவன் கண் என் வீட்டு மேல விழுந்துருச்சும்மா.. இந்த வீட்டை விலைக்கு கேட்டான்.. இதை அப்படியே அவன் வைத்திருக்கிறதாய் சொல்லியிருந்தாலாவது நான் எதற்கு வம்பு என்று.. 

இந்த வீட்டை விட்டுக் கொடுத்து விட்டு ஒதுங்கிப் போயிருப்பேன்.. அவன் அதையும் சொல்லலை.. என்னிடமே.. இந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டு.. இங்கே ஒரு ஷாப்பிங் மால் கட்டப் போகிறதாய் சொல்கிறான்.. எனக்கு எப்படியிருக்கும்..? நீயே சொல்லு.. நான் பார்த்துப் பார்த்துக் கட்டின வீடும்மா இது.. அந்தத் தோட்டத்திலே இருக்கிற தென்னை மரங்கள் நான் நட்டு வைச்சு வளர்ந்தவை.. இந்தப் பூச்செடிகளெல்லாம் கல்பனா நட்டு வைச்சு மலர்ந்தவை.. இதையெல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கனும்னு என்னிடமே சொல் கிறவனிடம் இந்த வீட்டை விட்டுக் கொடுக்க எனக்கு மனம் வரலைம்மா..”

மந்திரமூர்த்தி பேசப்பேச.. அவர் மனைவியும்.. மகளும் கண்ணீர் சிந்த ஆரம்பித்தார்கள்.. சந்தியாவிற்கும் வருத்தமாக இருந்தது.. அவளுக்கு அவள் வீட்டின் நினைவு வந்தது.. திருமணமாகி அந்த வீட்டை விட்டு வெளியேறிய போது.. சூர்யா.. அவர்களின் வீட்டின் சுவரில் முகம் புதைத்து சொல்லி அழுதது அவள் மனதில் எழுந்தது…

“இந்த வீடு எனக்குச் சொந்தமில்லையா..? இனிமே இதை என் வீடுன்னு சொல்ல முடியாதா..? அப்பாம்மா வீடுன்னுதான் சொல்லனுமா..?”

அவள் பிழியப் பிழிய அழுதபோது வீட்டின்மீது எதற்காக இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் என்று 

தான் மற்றவர்களுக்குத் தோன்றியது.. இப்போது.. இந்த நொடியில்.. மந்திரமூர்த்தியின் பரிதவிப்பைக் கேட்கும் போது.. அன்று சூர்யா அழுத அழுகைக்கான அர்த்தம் சந்தியாவிற்குப் புரிந்தது.. வீடு என்பது அவளைப் பொறுத்த வரை உயிர்ப்புள்ள ஒன்றாக இருந்திருக்கிறது..

“முடியாதுன்னு சொல்லிட்டேன்.. அதை நீங்க சொல்லக் கூடாதுன்னு அவன் சொன்னான்.. எனக்கு இந்த இடம் வேண்டும்ன்னு நான் முடிவு பண்ணிட்டேன்னான்.. அப்பவும் இந்த வீட்டை வீடுன்னு அவன் சொல்லலைம்மா.. இடம்ன்னுதான் சொன்னான்..” மந்திரமூர்த்தி பொருமினார்.

“எவ்வளவு திமிர்..!” கேட்டுக் கொண்டிருந்த சந்தியாவின் ரத்தம் கொதித்தது…

“திமிர்தான்ம்மா.. பணத்திமிர்.. அவன் கோடிஸ்வரன்.. அவன் நினைத்தால் எதையும் விலைக்கு வாங்கி விடலாம்கிற திமிர்.. அந்தத் திமிராலே என்னை என்ன செய்ய முடியும்ன்னு அலட்சியமா இருந்துட்டேன்ம்மா.. இப்ப இந்தக்கதிக்கு ஆளாக்கிட்டான்..”

“அவன்தான்னு நிச்சயமாத் தெரியுமா அங்கிள்..”

“தெரியாதே.. இன்னைக்கு வரைக்கும்.. என் கஷ்டத்துக்கெல்லாம் காரணம் அவன்தான்னு எனக்குத் தெரியாதும்மா.. யாரோ எனக்குக் கெடுதல் பண்றாங்கன்னு தெரிஞ்சது.. அது இவன்தான்னு மதியம்தான்ம்மா எனக்குத் தெரிஞ்சது…”

“எப்படி அங்கிள்..?”

“நான் கடைசியாப் பணம் கேட்டுப் போன இடத்தில் இவன் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கான்.. என்னைக் கண்டதும் எகத்தாளமாச் சிரித்தபடி.. இதுக்கு அப்பவே வீட்டை எழுதிக் கொடுத்திருக்கலாமில்லையான்னு கேட்கிறான்.. எனக்கு ரத்தம் கொதிச்சதும்மா.. என்னால அவனை என்ன செய்ய முடியும்..? அதனால பேசாம வந்துட்டேன்..”

இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்றிருந்தது சந்தியாவிற்கு..

‘அவன் என்ன பெரிய இவனா..? அவன் கை நீட்டின அத்தனையும் அவனுக்குக் கிடைத்து விடனுமா…? என்ன ஒரு ஆணவம்..!’

சந்தியா அந்த ரகுநந்தனை மனமார வெறுத்தாள்..

“இனி என்ன செய்கிறதாய் இருக்கறிங்க அங்கிள்..?”

“என்ன செய்கிறதும்மா..? வாடகை வீட்டைப் பார்த்துக் குடி போக வேண்டியதுதான்… பிழைப்புக்கு வேலை இருக்கிறது… கிராமத்தில் பூர்விக வீடும்… தோட்டமும் இருக்கிறது.. கல்பனா கல்யாணத்துக்குன்னு பணமும்.. நகையும் சேர்த்து வைச்சிருக்கேன்.. நிலைமை அப்படியொன்னும் மோசமாய் போய்விடாது..”

ஆனால் அந்த வீடு அவர்களின் கைவிட்டுப் போய் விடும்.. அதைச் சொல்லாமல் வேதனையுடன் அவர் மென்று விழுங்கினார்.. அதைக் காணச் சகிக்காமல் சந்தியா கிளம்பி விட்டாள்.. கல்பனாவின் வீட்டை விட்டு வெளியேறிய போது தன்னையுமறியாமல் அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தாள்..

அன்றைய மதிப்புக்கு ஒரு கோடிக்கு மேலே பெறுமானமுள்ள வீடு.. ஒற்றைப் பைசாகூட வாங்காமல் அதை விட்டுக் கொடுத்துவிட்டு.. அவளின் தோழியின் குடும்பம் வெளியேற வேண்டுமா..? இது அநியாயம் அல்லவா..?

அன்று இரவு டைனிங் ஹாலில் இரவுச் சாப்பாட்டுக்கு என்று குடும்பம் கூடியபோது.. சந்தியா மௌனமாக யோசித்தபடி.. இடியாப்பத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.. அதைக் கவனித்த ஜானகி..

“தட்டைப் பார்த்துச் சாப்பிடுடி.. என்னத்தை யோசிச்சுக் கிழிக்கிற..?” என்று அதட்டினாள்..

“வெல்செட் மாம்..” கைதட்டி அதை ஆமோதித்தான் சுதர்சனம்…

இடியாப்பத்தில் கோலம் போடுவதை நிறுத்தி விட்டு அவனைப் பார்த்து முறைத்தாள் சந்தியா.. அவனோ புருவங்களை கெத்தாக உயர்த்தி பழிப்புக்காட்டினான்..

“என்னத்தடா ‘வெல் செட்’டைக் கண்டுட்ட..? இந்த லட்சணத்தில அம்மாவ.. ‘மாம்’ன்னு வேற சொல்லி வைக்கிற..?”

“ஹலோ.. அது மம்மியோட ஷார்ட் டயலாக்.. இதெல்லாம் உனக்கெங்கே தெரியப் போகுது.. நீயே தத்தி..”

“இந்தா பாரு.. உனக்குத் தங்கையாப் பிறந்துட்டேன் கிறதுக்காக என்னையும்.. உன்னைப் போல நினைத்துக் கிட்டு… தத்திகித்தின்னே.. எனக்கு கெட்ட கோபம் வந்துரும்.. சொல்லிட்டேன்..”

“சொல்லிக்க.. எனக்கு என்ன வந்துச்சு..? உனக்கு நல்ல கோபம் வந்தா எனக்கென்ன.. கெட்ட கோபம் வந்தா எனக்கென்ன.. ஐ ஆம் எ பிக் மேன்.. என்ன யாரும் அசைச்சுக்க முடியாது.. தெரியுதா..?”

“தெரியலை.. நீ பெரிய இவன்.. உன்ன யாரும் அசைக்க முடியாது.. இன்னும் இன்ஜினியரிங்கில ஃபைனல் இயரையே முடிக்கல.. இந்த லட்சணத்தில இது லண்டன்ல பிரிட்ஜைக் கட்டி விட்டதைப் போல சீன் காட்டுது..”

“ஒருநாள் அதையும் கட்டுவேன்..”

“அப்ப நீ பிக் மேன்னு சொல்லு.. இப்ப நீ வெறும் மேன் கூட இல்லை.. காலேஜ் கோயிங் பாய்.. புரிஞ்சதா..”

“நீயெல்லாம் சொல்லி.. நானெல்லாம் புரிஞ்சுக்- கனும்னு எனக்கு என்ன தலையெழுத்து..? ஐ ஆம் ஸோ கிரேட் யு நோ..”

இருவரும் வாய்ச்சண்டையிட்டுக் கொண்டிருந்த போது.. அவர்களைச் சமாதானப் படுத்த ஊடே புகுந்தார் கல்யாண ராமன்..

“விடும்மா.. இன்னைக்கு உன் அண்ணன் காலேஜ் கோயிங் பாயா இருந்தாலும் நாளைக்கே ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியை ஆரம்பிக்கக் கூடாதுன்னு இருக்கா என்ன..? யார் கண்டது..? இவன் கூட ரகுநந்தன் போல பிக் மேனா ஆனாலும் ஆகலாம்..”

சந்தியா சண்டையை மறந்து தந்தையின் பக்கமாக திரும்பினாள்..

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link