Chapter 06
அன்று முழுவதும் ரகுநந்தனின் திமிர் நிறைந்த பேச்சும்.. முகமுமே சந்தியாவின் மனதில் வலம் வந்தன..
‘கொஞ்சம் கூட மனம் உறுத்தாம பேசுகிறானே..’
அவளுக்குத்தான் மனம் தாங்கவில்லை.. அந்த மனப் போராட்டத்தில் கல்பனா வகுப்பிற்கு வராததைக் கூட அவள் கவனிக்கவில்லை.. மதிய உணவு நேரத்தின் போது.. டிபன் பாக்ஸ் மூடியைத் திறந்தபடி..
“கல்பனா எங்கேடி..” என்று நீரஜாவிடம் கேட்டாள்..
“அவ இன்னைக்கு காலேஜீக்கே வரலையே..” என்று நீரஜா சொன்ன போதுதான் கல்பனா வகுப்பில் இல்லாததே அவளுக்கு உறைத்தது..
“ஏன் வரலையாம்..?”
“யாருக்குத் தெரியும்..? நீதானே அவகூட அவ வீட்டுக்குப் போன.. உனக்குத் தெரியாதா..?”
“தெரியாது நீரஜா.. பாவம்டி அவ.. வீட்டுப் பிரச்னையில கலங்கிப் போயிருந்தா.. அவ வீடே ஆடிப் போய் கிடக்கு நீரு..”
“எனக்கும் பாவமாத்தான் இருக்கு.. ஆனா இதில நாம என்ன செய்ய முடியும் சொல்லு..?”
ஜானகி கேட்ட அதே கேள்வியைக் கேட்டபடி பிரச்சனையைப் பற்றிய விவாதத்திலிருந்து எளிதாக கழன்று கொண்டு விட்டாள் நீரஜா..
இதுதான் உலகம் என்று சந்தியாவிற்குத் தோன்றியது.. கல்பனா என்ன ஆனாளோ என்ற கவலையுடன் கல்லூரி முடிந்ததும் அவள் வீட்டிற்குச் செல்லக் கிளம்பினாள்.. ஸ்கூட்டியில் ஏறப் போன சமயம் பார்த்து அவள் செல்போனின் மணி ஒலித்தது.. நம்பரைப் பார்த்துவிட்டு..
“அம்மா..” என்றாள்..
“சீக்கிரமா வீட்டுக்கு வா.. நேத்துப் போல ஊரைச் சுற்றிட்டு வராதே..” மறுமுனையில் ஜானகி பேசினாள்..
“என்னாச்சும்மா..?”
“ஊரில் இருந்து தாத்தா பாட்டி வந்திருக்காங்க.. கூடவே அபிஷேக்கும் வந்திருக்கான்..”
“ஆர் யு ஷ்யூர்..?”
“நிஜமாத்தாண்டி சொல்றேன்.. நீ ஊரைச் சுற்றாம சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேர்கிற வழியைப் பாரு..”
ஊரிலிருந்து ஜானகியின் அப்பாவும்.. அம்மாவும் வந்திருக்கிற சந்தோசத்தில் கல்பனாவை மறந்து விட்டு.. வீட்டிற்குப் போகும் வழியைப் பார்த்து ஸ்கூட்டியை ஓட்ட ஆரம்பித்தாள் சந்தியா..
‘கூடவே அபிஷேக்கும் வந்திருக்கிறானா..?’
அவள் கன்னங்களில் செம்மை படர்ந்தது.. மனதில் உற்சாகம் பரவியது..
அபிஷேக் ஜானகியின் அண்ணன் மகன்.. அவளுக்கு மாமாமகன்.. முறை மாப்பிள்ளை என்ற உரிமையில் அவளைத் தின்று விடுவதைப் போல பார்த்து வைப்பான்..
அவன் பார்வைகள் உணர்த்தும் உணர்வில் சந்தியாவின் கன்னி மனம் சிக்கித் தவிப்பதில் அவன் கண்ணில் வெற்றிப் பெருமிதம் மின்னும்.. இருவரின் ரகசியப் பார்வைகளும்.. சங்கேத பேச்சுக்களும்.. அந்த தாவணிப் பருவத்தில் சந்தியாவிற்குத் தேனாக இனித்தன.. ஒரு மாய உலகிற்கு அவளை அழைத்துச் சென்றன..
அந்த அபிஷேக் வந்திருக்கிறானா..?
சந்தியா சிட்டாக வீட்டுக்குப் பறந்தாள்.. வீட்டுக்குள் அவள் நுழையும் போதே கலகலப்பான பேச்சுக் குரல்களின் கலவையொலி அவள் காதுகளில் விழுந்தது.. வாசலிலேயே அவளை வரவேற்ற அந்தப் பேச்சுக் குரல்களில் ஈர்க்கப் பட்டவளாக துள்ளலுடன் வீட்டுக்குள் ஓடினாள் சந்தியா..
“போன வருசம் கொடுத்த வத்தல் வடாமை இன்னும் தீர்க்கலையா..? என்ன பொண்ணும்மா நீ..” மகளிடம் சலித்துக் கொண்டிருந்த கோதாவரி..
“பாட்டி..” என்று கழுத்தைக் கட்டிக் கொண்ட பேத்தியின் வரவில் முகம் மலர்ந்து போனாள்..
“என் பேத்திக்குத்தான் என்மேல எம்புட்டுப் பாசம்..! ஏன் செல்லம் வீட்டுக்கு வர இம்புட்டு நேரமாச்சு..” சந்தியாவின் கன்னம் தடவிக் கொஞ்சலாகக் கேட்டாள்…
“எங்கே பாட்டி.. காலேஜில லெக்சர் பிராப்ளம்ன்னா.. வழியில டிராபிக் பிராப்ளம்.. ஹாய் தாத்தா..”
கோதாவரிக்குப் பதில் சொல்லியபடி ஞானசம்பந்தரை வரவேற்றாள் சந்தியா.. அவர் பக்கத்திலிருந்த அபிஷேக் அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டிருக்க அவள் அதைக் கண்டு கொள்ளாதவளைப் போலக் கள்ளச் சிரிப்புடன் கோதாவரியின் பக்கத்தில் உட்கார்ந்து அவள்மீது சலுகையாக சாய்ந்து கொண்டாள்..
“என்ன பாட்டி.. உங்க பேத்தி பெரிய ‘கொக்கு’ன்னு பீத்திக்கிட்டிங்க.. இவளென்னன்னா சரியான ‘மக்கா’ இருக்காளே..” அவளை வம்புக்கு இழுத்தான் அபிஷேக்..
“மக்கா..? யாரைப் பார்த்து மக்குன்னு சொல்கிறார்..? பாட்டி உங்க பேரன்கிட்டச் சொல்லி வையுங்க.. எதை வைச்சு எனக்கு அந்தப் பெயரை வைச்சாராம்..? எனக்கு இப்பவே காரணம் தெரிஞ்சாகனும்..” சண்டைக்கு போனாள் சந்தியா..
“இதுக்குப் போய் காரணம் சொல்லனுமா..? அதான் பார்த்தாலே தெரியுதே..” அவன் நமட்டுச் சிரிப்புடன் அவளை ‘சைட்’ அடித்தான்..
“அப்படியெல்லாம் இங்கே தப்பிக்க முடியாது பாட்டி.. எனக்கு இப்பவே அந்த உண்மை என்னன்னு தெரிஞ்சாகனும்..” சந்தியா போர் முரசு கொட்டினாள்..
“என்ன தெரியனுமாம்..” அவன் கள்ளச் சிரிப்புடன் கேட்டான்..
“பேசறதையும் பேசிட்டு கேட்கிற கேள்வியைப் பாருங்க பாட்டி.. எனக்குப் பதில் சொல்லாம யாரும் தப்பிக்க முடியாது தெரியுமா..”
அவளின் வெட்டும் பார்வை.. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா..? என்று கேட்டது..
“இங்கே யாரும் தப்பிக்க நினைக்கலை..”
அவனும் அவளை ஊடுருவதைப் போலப் பார்த்தபடி அவள் பாணியிலேயே பதில் கொடுத்தான்…
“அப்ப கேட்டதுக்குப் பதில் சொல்லச் சொல்லுங்க பாட்டி…”
“சொல்லிட்டாப் போச்ச.. அம்மணி புத்திசாலியா இருந்திருந்தா பாடம் சம்பந்தப்பட்ட லெக்சர் பிராப்ளமா இருந்திருக்காது.. இவங்க டிரைவிங்கில் எக்ஸ்பர்ட்டா இருந்திருந்தா எந்த ஹெவி டிராபிக்கும் பிராப்ளமா இருந்திருக்காது.. இது இரண்டுமே இல்லாதவங்கள.. ‘கொக்கு’ன்னா சொல்ல முடியும்.? ‘மக்கு’ன்னு தானே சொல்ல முடியும்..?”
அவன் கண்களின் சிரிப்பு.. ‘நீ தேவதை..’ என்றாலும்.. அவள் அதை உணராததைப் போல அவனுடன் சண்டைக்குப் போனாள்..
“வேண்டாம் பாட்டி…”
“எது வேண்டாமாம் பாட்டி..”
அவன் விழிகள் ‘நானா..?’ என்று கேட்க.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவன் வேண்டா மென்று அவள் சொல்லுவாளா..?
“உங்க பேரன் பெரிய இவரு..”
“அப்படியில்லையா பாட்டி..?”
“இவர் படிச்ச படிப்பு என்னன்னு இவர் படிச்ச காலேஜில் போய் விசாரிச்சாத்தானே தெரியும்..?”
“போய் விசாரிக்க வேண்டியதுதானே பாட்டி..”
“அதைச் செய்ய மாட்டேன்கிற தைரியமா..? சார்தான் இப்ப கவர்ண்ட்மென்ட் உத்தியோகம் பார்க்கிறாரில்ல.. அந்தத் தைரியத்தில பேசறாரு போல..”
“ஊஹீம்.. எந்தத் தைரியமும் இல்ல.. ஒழுங்காப் படிச்சு முடிச்ச தைரியம்தான்… போய் விசாரிக்கச் சொல்லுங்க பாட்டி..”
“ஸ்டேசன் மாஸ்டருக்கு என்ன தெரியும்..? ரயில் வந்தா கொடியைக் காட்டி.. மடக்கத்தான் தெரியும்..? இந்த லட்சணத்தில இவர் பெரிசா.. சோழாவரம் கார் ரேஸில கலந்துக்கிட்டவரைப் போல டிரைவிங் பத்தி அள்ளி விடறாரு…”
“ஸ்டேசன் மாஸ்டர் வேலையில எவ்வளவு ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ் இருக்குன்னு காலேஜ் படிக்கிற சின்னப் பொண்ணுக்கு என்ன தெரியும்..? பிழைச்சுப் போகட்டும்.. நம்ம அத்தையின் மகளாச்சேன்னு விட்டு வைக்கிறேன்.. யாரு கிட்ட பாட்டி..?”
“எல்லாம் இவரு கிட்டத்தான் கேள்வி கேட்கிறோம்.. ரயில் என்ஜினைப் பத்தி இவருக்குத் தெரிஞ்சுட்டா.. உலகத்தையே தெரிஞ்சுக்கிட்டதா அர்த்தமா..?”
“பின்னே இல்லையா..?”
“இல்லை…”
“நீ சொன்னா.. நான் ஒப்புக்கனுமா..?”
அவன் கேட்க.. அவனை அடிப்பார்வை பார்த்தபடி..
“ஆமாம்.. ஒப்புக்கனும்..” என்று சவடாலாகச் சொன்னாள் சந்தியா..
அவர்களின் உரிமை கலந்த ஊடல் சண்டையை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோதாவரியும்.. ஞான சம்பந்தமும்..
“என்னப்பா.. உங்க பேத்தி வந்தவுடனே என் அண்ணன் மகனிடம் வம்பு வளர்க்க ஆரம்பிச்சுட்டாளா..?” என்ற ஜானகியின் கேள்வியில் சிரித்தபடி திரும்பினார்கள்..
ஜானகியின் கையில் பலகாரத் தட்டுக்களைக் கொண்ட டிரே இருந்தது.. அதை அவள் அனைவரிடமும் நீட்ட..
“ஏம்மா.. சொல்லியிருந்தா நான் உதவிக்கு வந்திருக்க மாட்டேனா..? நீ ஒண்டி ஆளா எத்தனை வேலையைத்தான் செய்வ..?” என்று ஆதங்கப் பட்டாள் கோதாவரி..
“ஆமாமாம்.. உங்க பெண்ணை வேலை வாங்கி நாங்க சக்கையாய் பிழியறோம்.. நீங்க கூப்பிட்டுக்கிட்டுப் போய் தூளி கட்டி தாலாட்டுப் பாடி தூங்க வையுங்க..” என்றாள் சந்தியா..
“ஆமாண்டி.. எங்க அம்மா அப்படித்தான் செய்வாங்க.. நீ இப்ப இந்த வீட்டில துரும்பைக்கிள்ளி போடறயா..? எங்க அம்மாவும் அதைப் போலதான் என்னை வளர்த்தாங்க..” செல்லமாக மகளை முறைத்தாள் ஜானகி..
சற்று நேரம் அவர்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.. சுதர்சனமும்.. கல்யாணராமனும் வந்துவிட.. அங்கே கலகலப்பு அதிகமானது.. சந்தியா உடை மாற்றி குளித்து விட்டு வர நினைத்து எழுந்தாள்.. அவள் மாடியேறி ஹாலில் கால் வைத்தபோது.. மாடிப்படி வளைவிலிருந்து அபிஷேக் வெளிப்பட்டான்…
“நீ சொன்னா நான் ஒப்புக்க மாட்டேனா..?” என்று கேட்டான்..
சந்தியாவின் உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போல ஜிவ்வென்ற ஓர் உணர்வு ஆக்ரமித்தது.. கன்னங்களில் வெட்கச் சிகப்பு படற.. உதட்டைக் கடித்துக் கொண்டு தலை குனிந்தாள்…
அவளின் அந்த அதீத வெட்கத்தில் ஈர்க்கப்பட்டான் அபிஷேக்.. அவளையே பார்த்தபடி அருகில் வந்தவன்..
“சொல்லு சந்தியா..” என்று கிசுகிசுப்பான ரகசியக் குரலில் வினவினான்..
அந்தக் குரலில் தெரிந்த ஏதோ ஒன்று.. சந்தியாவை என்னவோ செய்தது.. உணர்வின் பேரலையில் ஆக்ரமிக்கப் பட்டவளாக நின்றவளை ஆசையுடன் பார்த்தபடி அவள் அருகில் செல்ல அவன் முனைந்த போது..
“என்ன மச்சான்.. இங்கேயே நின்னுட்டிங்க..?” என்ற சுதர்சனத்தின் குரல் கேட்டது..
சந்தியா சிட்டாக அவள் அறைக்குப் பறந்து விட்டாள்.. ஏமாற்றத்துடன் அவள் போன திக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அபிஷேக்கின் தோளைத் தட்டிய சுதர்சனம்..
“கூப்பிட்டவன் இங்கே இருக்கிறேன்..” என்றான்..
“ம்ம்ம்.. எதுக்குக் கூப்பிட்டிங்க..” அபிஷேக் கேட்டான்..
“அதுசரி.. அத்தை மக பக்கத்தில் இருக்கிறப்ப.. அத்தை மகன் கூப்பிடறது காதில விழுகுமா..?”
“உங்களுக்கு ஏங்க இந்தப் பொறாமை..?”
“இருக்காதா..? உங்க கூடப் பொறந்த பொண்ணு எனக்கு ஒரு வயசு மூத்ததாப் பொறந்து தொலைஞ்சிருச்சு.. அப்பவும் நான் சொன்னேன்..”
“யார் கிட்ட..?”
“உங்க தங்கை கிட்டத்தான்..”
“என்ன சொன்னீங்க.. பாஸ்..?”
“ஒரு வயசுக் கணக்கெல்லாம் கணக்கில்ல.. காந்தியை விட கஸ்தூரிபாய் வயசில் மூத்தவங்கதான்.. அப்படி.. இப்படின்னு ஆயிரம் சொன்னேன்..”
“அப்படியா..? அந்த ஆயிரத்தில ஒன்னைக் கூட என் தங்கை என்னிடம் சொல்லலையே..” யோசனையுடன் அபிசேக் சொல்ல..
‘இப்படித்தானே எனக்கும் இருக்கும்..’ என்று தலையை ஆட்டிக் கொண்டான் சுதர்சனம்..
‘இவன் மட்டும் மாமா மகன்ங்கிற உரிமையில என் தங்கையிடம் கடலை வறுப்பானாம்.. அதையே அத்தை மகன்ங்கிற உரிமையில இவன் தங்கையிடம் நான் செய்தா யோசிப்பானாம்.. என்னங்கடா இது..?’
“என் தங்கைக்குத்தான் கல்யாணம் ஆகிருச்சே…”
“நீங்க பண்ணி வைச்சிட்டிங்கன்னு சொல்லுங்க.. இன்னும் ஒரு வருசம் தள்ளிக் கொடுன்னு என் மாமன் மகளிடம் நான் சொன்னேன்.. அது காதில் வாங்கலையே..”
“உங்க மாமன் மகளா..? யாருங்க அது..?”
அபிஷேக் இப்படிக் கேட்டதில் கடுப்பாகிப் போனான் சுதர்சனம்..
“ஆமாங்க.. என் மாமன் மகனான உங்க கூடப் பொறந்த உங்க தங்கை எனக்கு சித்தப்பா மக முறையாகனும்.. நீங்க மட்டும் என் தங்கைகிட்ட மாமன் மகன் முறை கொண்டாடனும்…”
“ஓ.. நீங்க என் தங்கையைச் சொல்கிறீங்களா..?”
“அஃதே…”
“அது பாவம்.. புருசன் வீட்டில.. குழந்தை.. குடும்பன்னு குடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கு.. அது பேச்சு இப்ப எதுக்கு..? ஆமா ஒரு வருசம் அது காத்திருந்தா என்ன செய்கிறதா உத்தேசம்.?”
“ஒரு வருசம் அது காத்திருந்தா என் படிப்பும் முடிஞ்சிருக்கும்.. நானும் சம்பாதிக்க ஆரம்பிச்சிருப்பேன்.. அதுக்கப்புறமா.. வயசு.. அது இதுன்னு இரண்டு வீட்டில பேசினாலும்.. அதைக் காதில் போட்டுக்காம உங்க தங்கச்சி கழுத்தில தாலியைக் கட்டியிருப்பேன்ல்ல…”
சுதர்சனம் நியாயம் கேட்க..
‘அதுக்காகத்தானடா மச்சான்.. நாங்க அவசரமாக என் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தோம்..’ என்று நினைத்துக் கொண்டான் அபிஷேக்…
“என்ன மச்சான் எதுவும் பேச மாட்டேங்கறிங்க..”
“என்னத்தைப் பேச..? உங்க மனது புரியாம என் தங்கை கல்யாணிக்கு அவசரமாக மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டோமேன்னு வருத்தப் பட்டுக்கிட்டு இருந்தேன்…”
அபிஷேக்கின் மலர்ந்த முகமே அவன் வருத்தப்பட்ட லட்சணத்தை எடுத்துச் சொல்ல..
‘நீ தானே..? வருத்தப் பட்டுட்டுத்தான நீ வேற வேலைபார்ப்ப.. வயதிலே இளையவனுக்கு எப்படிப் பெண் கொடுக்கிறதுங்கிற பேச்சை ஆரம்பிச்சு வைச்ச புண்ணிய வானே நீதானே..’ என்று பல்லைக் கடித்துக் கொண்டான் சுதர்சனம்..
“ம்ஹாவ்..” அபிஷேக் கொட்டாவி விட்டான்..
“மச்சானுக்கு தூக்கம் வருது போல..” என்றான் சுதர்சனம்…
“ஆமாமாம்.. ஜர்னி பண்ணிவந்த அசதி..”
“இருக்கும்.. இருக்கும்.. அப்ப.. இப்பத் தூங்கப் போனா நைட் டின்னருக்குத்தான் எழுந்து வருவீங்கன்னு சொல்லுங்க…”
“இல்லையா பின்னே…”
“உங்க கண்ணுல சொக்கற தூக்கத்தைப் பார்த்தா எனக்கும் அப்படித்தான் தோணுது..”
“கரெக்டா சொல்லிட்டிங்க பாஸ்…”
“பின்னே..? நான் தப்பாவா சொல்லுவேன்..? எதுக்கும் தூங்கப் போகிறதுக்கு முன்னாலே உங்க முதுகுப் பக்கமாக திரும்பிப் பார்த்துட்டு நீங்க தூங்கப் போகிறது பெட்டர்ன்னு நான் நினைக்கிறேன் மச்சான்..” வினயத்துடன் சுதர்சனம் சொல்ல…
“என் முதுகுக்குப் பின்னாலே என்ன மோகினிப் பேயா நிக்குது..?” என்ற கேட்டபடி திரும்பிப் பார்த்த அபிஷேக் அயர்ந்து போய் நின்று விட்டான்..
அங்கு மோகினிதான் நின்றிருந்தாள்.. வெந்நிற நைட்டியில் கூந்தலை விரிய விட்டு.. அதன் நடுவில் நிலவைப் போல பொழிவாக இருந்த முகத்தில் அரக்கு வண்ண ஸ்டிக்கர் பொட்டுடன்.. அயர வைக்கும்.. ஆளை அடித்துப் போடும் ஆற்றல்மிக்க அழகுடன் நின்றிருந்தாள்..
“சந்தியா…” அபிஷேக்கின் கண் விரிந்தது..
“இப்ப தூக்கம் ஓடிப் போயிருக்குமே..” கடுப்புடன் கேட்டான் சுதர்சனம்…
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.