Chapter 10

0Shares

மணலில் கால் புதைய நடந்தாள் சந்தியா.. பக்கத்தில் ஸ்டைலாக நடக்க முயன்ற அபிஷேக்கிற்கு அது முடியாமல் போனது.. கடற்கரை மணலில் அவனால் ஸ்டைல் காட்ட முடியவில்லை…

“ஷீ தடுக்கும் அத்தான்…”

அவன் முயற்சியைப் பார்த்து விட்டு இயல்பாக சந்தியாசொன்னதும் அவனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது…

இதுதானா.. அவன் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் பெண்ணின் முன்னால் ஸ்டைல் காட்டும் லட்சணம்..?

தன் முயற்சியைக் கைவிட்டவனாக.. சமத்துப் பிள்ளையாகி சந்தியாவைப் போல மணலுடன் சமரசம் செய்து கொண்டு நடக்க ஆரம்பித்தான் அவன்…

“பீச்சுக்கு வரனும்னு நீங்கதான் சொன்னீங்க…”

“நீதான் சொல்ல மாட்டேன்ங்கறியே.. நானாவது ஸ்டெப் எடுக்கலாம்ன்னுதான் இந்த பிளானை பண்ணினேன்.. இல்லேன்னா வீட்டில் அத்தனை பேர் முன்னாடியும் நான் பேச நினைக்கிறதை உன்னிடம் பேசி விடமுடியுமா..?”

“அதுக்குச் சொல்லலை அத்தான்…”

“வேற எதுக்குச் சொல்ற..?”

“பீச்சுக்கு வரப் போகிறோம்ன்னுதான் தெரியுதே.. ஷீவை அவாய்ட் பண்ணிட்டு செருப்பைப் போட்டுக் கிட்டு வந்திருக்கலாமே..”

‘இவ இதற்குச் சொல்கிறாளா..?’ மனதுக்குள் ஏமாற்றமாய் உணர்ந்தான் அபிஷேக்…

இதைப் பேசவா அவர்கள் கடற்கரைக்கு வந்திருக்கிறார்கள்..!

அபிஷேக் மௌனமானான்.. அலை கொஞ்சும் கடலோரம் அவர்கள் சென்று நின்றார்கள்.. சந்தியா.. கடல்நீரைக் கண்டதும் உற்சாகமானாள்..

“கடலோரமா போய் நிற்கலாமா அத்தான்..?” ஆர்வத்துடன் வினவினாள்…

“கடலோரமாவா..?” அபிஷேக் முகம் சுளித்தான்..

“ஏன் அத்தான்..?”

“ஷீ நனைஞ்சிரும்…”

“அப்ப நீங்க இங்கேயே நில்லுங்க.. நான் போய் நின்னுட்டு வர்றேன்..”

அவன் பதிலை எதிர்பார்க்காமல் செருப்பை அவிழ்த்து விட்டுவிட்டு கடலோரமாக ஓடி நின்றாள் சந்தியா.. பாய்ந்து வரும் சிற்றலைகள்.. அவள் பாதம் மீது விழுந்து மீண்ட போது.. காலடியில் நீர் அரிக்கும் குறுகுறுப்பை உணர்ந்து ரசித்தபடி அசையாமல் நின்றவள்.. பேரலை வரும் போது விலகித் தள்ளி வந்து… கன்னங்களில் கை வைத்து ‘ஒ’வென்று கூச்சல் போட்டபடி அதையும் ரசித்தாள்…

நீர் விளையாடிக் கொண்டிருந்த சிறுபறவையின் அழகோடு மினிர்ந்தவளை ரசிக்காமல்.. முறைத்தான் அபிசேக்…

‘இவ உண்மையிலேயே தத்திதான்.. இவளுக்கு கடலைக் காட்டவா கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கேன்..? வீட்டில இவ அண்ணன் அடைகாக்கிறானேன்னு மத்தவங்களுக்குத் தெரியாம பேசனுமுன்னு கடற்கரைக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தா.. இவ என்கூட விளையாடாம.. கடல் கூட விளையாடிக்கிட்டு இருக்கா…’

கடல்நீரில் அவள் விளையாடியதைக் கூட அவனால்  பொறுத்துக் கொள்ள முடிந்தது.. அப்படி அவள் விளையாடிக் கொண்டிருப்பதைச் சற்றுத் தொலைவில் நின்று ரசித்துக் கொண்டிருந்த அந்த வாலிபனின் பார்வையை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..

“சந்தியா..” அதட்டலாக கூப்பிட்டான்…

அவள் உடனடியாக ஓடிவந்து என்னவென்று கேட்காமல்.. அலையுடன் விளையாடிய படியே திரும்பிப் பார்த்து என்னவென்று கேட்டு வைத்தாள்…

‘திமிர்..’ அவனுக்கு கோபம் வந்தது…

‘அப்படியே இவ அண்ணன்காரனின் திமிர் இவ உடம்பு பூராவும் ஓடுது.. அக்காகாரியை விட அழகா இருக்கிற திமிர்…’ பல்லைக் கடித்தபடி..

“சந்தியா…” என்று மீண்டும் உரக்க அழைத்தான்…

அந்த சப்தத்திற்குப் பலன் இருந்தது.. ஒரு வழியாக கடலலைகளிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு கரையேறி அவனருகில் வந்து நின்றாள் சந்தியா…

“என்ன அத்தான் இது..?”

“எது..?”

“நீங்களும் கடலில் விளையாட மாட்டிங்க.. நான் விளையாடவும் விட மாட்டிங்கன்னா என்ன அர்த்தம்..? டூ பேட்..! அப்பாவும் அம்மாவும் இப்படியில்லை.. நான் எவ்வளவு நேரம் விளையாடினாலும் ஒன்றுமே சொல்ல மாட்டாங்க.. தெரியுமா..”

குறைபட்டுக் கொண்டவளின் பேச்சிலிருந்து அவளது மனத்தாங்கலைப் புரிந்து கொண்டவனாக நிதானித்தான் அபிஷேக்.. இன்னமும் அவளுக்கு அவனுடன் மணமாகவில்லை என்ற உண்மையில் தன் கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்முறுவல் செய்தான்…

“உன் அப்பாம்மாவோடதான் நீ இருக்கிற சந்தியா.. பட்… இங்கே அப்படியில்லையே… இங்கேயிருந்து வீட்டுக்குள் போனதும்.. நீ ஒரு மூலையில்.. நான் ஒரு மூலையில்ன்னு பிரிஞ்சு நின்னுரனும்… மத்தவங்க முன்னாலே பொதுவாப் பேசிக்கனும்… நாம பேச வேண்டியதை பேச அங்கே தனிமை கிடைக்காது.. நினைவிருக்கிறதா சந்தியா..? இன்னும் இரண்டு நாளில் நான் நாமக்கல்லுக்கு கிளம்பி விடுவேன்..”

ஏற்ற இறக்கத்துடன்.. அவள் கண்களை ஊடுறிவிப் பார்த்தபடி அவன் ஆழ்ந்த குரலில் பேசியதில் ஈர்க்கப் பட்டாள் சந்தியா…

“ஆமாமில்ல…”

கடலோரமாக இருந்த மணல் திட்டில் கால் மடக்கி உட்கார்ந்தாள்…

“இங்கேயே உட்கார்ந்துட்டியா..?” ஏமாற்றத்துடன் வினவினான் அபிஷேக்…

சற்றுத் தள்ளியிருந்த படகு மறைவைத்தான் அவர்கள் உட்கார்ந்து பேசுவதற்கு உரிய இடமாக அவன் தேர்வு செய்திருந்தான்.. அதைவிட்டு சந்தியா அங்கே உட்கார்ந்து விடுவாள் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை…

“இங்கேதான் கடலைப் பார்க்க தோதாயிருக்கு அத்தான்..” சந்தியா அசைய மறுத்துவிட்டாள்…

‘இவள் என்னைப் பார்க்க வந்தாளா.. இல்லைக் கடலைப் பார்க்க வந்தாளா..?’

கடலைப் பொறாமையுடன் பார்த்தபடி அவளருகில் அமர்ந்தான் அபிஷேக்.. சந்தியா அவனைக் கவனிக்காமல் அப்போதுதான் கரையில் வந்து விழுந்து மீண்ட பேரலையை ரசித்துக் கொண்டிருந்தாள்…

“ஹைய்யோ.. கொஞ்சம் விட்டிருந்தா இங்க வந்து விழுந்திருக்கும் அத்தான்…”

“இதுக்குத்தான் சொன்னேன்.. தள்ளி உட்காரலாம்ன்னு..”

“ம்ப்ச்.. எனக்கு இங்கே உட்காரத்தான் பிடிச்சிருக்கு..”

‘உனக்குப் பிடிச்சிருந்தா அது எனக்கும் பிடிக்கனுமா..?’ மனதுக்குள் அவன் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த போது…

“அண்ணே.. சுண்டல்..” என்றபடி வந்து நின்றான் அந்தச்சிறுவன்..

“பார்த்தியா.. நான்கு பேர் பார்வையில் படறதைப் போல உட்கார்ந்தா இந்த நியுஸென்ஸ்தான்.. மறைவா உட்கார்ந்திருக்கலாம்…”

தன்னையுமறியாமல் அவன் மனக்கிடக்கையை வெளிப்படுத்திவிட சந்தியாவின் முகம் மாறியது…

“எங்கே உட்கார்ந்தாலும்.. அங்கே இந்த சுண்டல் விற்கும் பையன் வருவான் அத்தான்.. நான்கு பேர் பார்வையில் படறதைப் போல இருக்கனும்னுதான் நான் இங்கே உட்கார்ந்தேன்.. மறைவா உட்கார்ந்து பேசறதுக் கெல்லாம் நான் ஆளில்லை…”

அவளின் காட்டமான பேச்சை சுண்டல் விற்கும் சிறுவன் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற நினைவில் அவசரமாக இரண்டு பொட்டலம் சுண்டலை வாங்கிக் கொண்டு அவனை அனுப்பி வைத்தான் அபிஷேக்.

“அவன் முன்னாடி எதுக்கு இப்படிப் பேசற..?”

“நீங்கதான் அவன் முன்னாடி பேச்சை ஆரம்பிச்சீங்க.”

“சந்தியா.. நான் உன்னைக் கட்டிக்கப் போகிறவன்..”

“இன்னும் கட்டிக்கலை…”

“என்னதான் சொல்ல வர்ற..?”

“உங்களுக்கு என்ன வேணும்..? என் கூடப் பேசியாகனும்.. அவ்வளவுதானே.. இங்கே நடமாடுகிற மக்கள்ல.. நம்ம வீட்டு மக்கள் எங்கே இருக்காங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்.. அங்கே.. வீட்டு ஆளுக முன்னாடி பேச சங்கடப்பட்டுக்கிட்டு இங்கே வந்திருக்கிறோம்.. தனியா சந்திக்கன்னு இல்லை.. நமக்கு அது தேவையும் இல்லை.. பேச வந்ததைப் பேசுங்க…”

சந்தியா கறாராகச் சொல்லிவிட.. அபிஷேக் செய்வதறியாமல் கடலை வெறித்தான்…

‘இருந்தாலும் இவ இத்தனை உஷாராய் இருக்கக் கூடாது..’ அவன் மனம் புழுங்கியது…

அதை உணராத சந்தியா.. அவனைப் பார்த்து தலையைச் சாய்த்து வெகு அழகாக சிரித்தாள்…

“பார்த்தீங்களா.. இப்ப நீங்களும் கடலை ரசிக்க ஆரம்பிச்சுட்டிங்க…”

“ஆமாமாம்…” அவன் அசடு வழியாமல் சமாளிக்க முயன்றான்…

“எனக்கு இந்தக் கடலோரமா நடக்க ரொம்பப் பிடிக்கும் அத்தான்..”

“அப்படியா..?”

“உங்களுக்குப் பிடிக்காதா…?”

“பிடிச்சு என்ன செய்ய..? நாமக்கல்லில என்ன கடலா இருக்கு..?”

அசுவராஸ்யமாகச் சொன்னவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு.. மீண்டும் கடலோரத்தை ரசிக்க ஆரம்பித்தாள் சந்தியா…

“சந்தியா…”

“ம்ம்ம்…”

“தாத்தா.. பாட்டி எதுக்காக வந்திருக்காங்கன்னு தெரியுமா..?”

“இதென்ன கேள்வி அத்தான்..? எங்களைப் பார்த்துட்டுப் போக வந்திருப்பாங்க…”

“ஊஹீம்.. நம்ம கல்யாண விசயமா பேச வந்திருக்காங்க…”

சந்தியாவின் முகத்தில் செம்மை படர்ந்தது.. அதில் அபிஷேக் திருப்தியானான்.. கடலோரத்தை விட்டு.. அவனிடம் அவள் மனம் வந்து விட்டதில் அவனுக்குள் சந்தோசம் உண்டானது…

“அத்தான்..”

“சொல்லு சந்தியா…”

“நான் மேலே படிக்கனும் அத்தான்.. சி.ஏ பண்ணனும்..”

“படி.. கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு படி..”

“அது முடியாதுன்னு தோணுது அத்தான்…”

“ஏன்..?”

“அக்கால்லாம் படிச்சு.. முடிச்சு.. வேலையில சேர்ந்த பின்னால கல்யாணம் பண்ணிக்குச்சு.. நான் மட்டும் அரைகுறை படிப்போட கல்யாணம் பண்ணிக்கிறதா..? நெவர்…”

‘என்னடா இது..’ திகிலாகி விட்டான் அபிஷேக்…

‘இவளே கல்யாணத்துக்கு முட்டுக் கட்டை போட்டு விடுவா போல இருக்கே..’ கோபமானவன்…

“கொஞ்சம் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்கியா..?” என்று எரிந்து விழுந்து விட்டான்…

“அத்தான்..” திகைப்புடன் அவனை நோக்கினாள் சந்தியா…

இவன் இப்படி எரிந்து விழுகிறவனா என்ற கேள்வி அவள் முகத்தில் தவழ்வதை உணர்ந்தவன்.. சட்டென்று இன்முகமாகி.. அவளை நோக்கி சிரித்து வைத்தான்.. 

“ச்சும்மா…” கண்சிமிட்டியவன்…

“பின்னே என்ன சந்தியா.. உன் நினைப்பில அங்கே எனக்கு ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது.. நீ என்னடான்னா.. என் தவிப்பை புரிஞ்சுக்காம பேசி வைக்கிற.. சூர்யா வேலைக்குப் போகனும்ன்னு அவ ஹஸ்பெண்ட் சொல்றாரு.. நீ வேலைக்குப் போகனும்ன்னு நான் சொல்கிறேனா..?”

தன்னை ஒரு கண்ணியவானாக.. உத்தம புருசனாக காட்டிக் கொள்ள அவன் முனைய.. அவளோ அதை கண்டு கொள்வேனா என்று பிடிவாதம் பிடித்தவளாக…

“நான் சி.ஏ படிக்கனும்னு நினைக்கிறதும்.. வேலைக்குப் போகனும்ன்னு நினைக்கிறதும் எனக்காக அத்தான்.. உங்களுக்காக இல்லை..” என்று சொல்லி வைத்தாள்…

‘திமிரைப் பார்..’ அவன் பல்லைக்கடித்தான்…

அவள் அவன் முகத்தை ஏறெடுத்தப் பார்த்ததும் அதை மறைத்துக் கொண்டு சிரிக்க முயன்றான்..

‘இவகிட்ட நடிச்சு.. நடிச்சு.. நடிகர் திலகமாவே மாறிட்டேன்…’

“எனக்குத் தெரியாதா சந்தியா..? நீ லட்சியப் பெண்..”

ஐஸ் மலையைத் தூக்கி அவள் தலையில் வைக்க அவன் முயன்றபோது..

“அப்படியெல்லாம் பெரிசா நினைக்காதீங்க அத்தான்.. நான் சராசரிப் பெண்தான்..” என்று அவன் மூக்கை உடைத்தாள் அவள்…

‘அப்புறம் ஏண்டி.. கல்யாணத்துக்கு முன்னாலே படிச்சு முடிச்சு வேலையில உட்காரனும்னு பேசிவைக்கிற..’ அவனுக்கு வெறி மூண்டது…

இப்படி முன்னால் போனால் கடிப்பதும்.. பின்னால் போனால் உதைப்பதுமாக அவள் இருந்தால் அவன்தான் என்ன செய்வான்..?

“ஏதாவது ஒன்றிலே நில்லு சந்தியா.. ஆவரேஜ் பெண்ணுண்ண நீ கல்யாணத்தைப் பண்ணிக்கலாமே.. கனவு.. அது இதுன்னு ஏன் சொல்கிற..?” எரிச்சலுடன் கேட்டான்…

“படிப்பும்.. வேலையும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் அத்தான்..”

“புருசன் அதைக் கொடுக்க மாட்டானா..?”

“கொடுப்பாங்க.. அந்த அளவுக்கு கொடுக்க மாட்டாங்க…”

இவள் கொஞ்சம் பெண்ணுரிமை வாதியாக இருப்பாளோ என்ற சம்சயம் அவனுக்குள் ஏற்பட்டது.. எதுவாக இருந்தாலும்.. தாலிகட்டி விட்டால் அடக்கி வைத்துக் கொள்ளலாம் என்ற நினைவில் அவன் விட்டுப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்…

‘மூக்கணாங் கயிறுக்கு அடங்காத மாடிருக்கா..’

அவன் மனதுக்குள் அவளை மாடாக நினைத்துக் கொண்டிருப்பதை அறியாதவளாக.. சந்தியா.. திருமணப் பேச்சின் விளைவாக ஏற்பட்ட கிளர்ச்சியான மனநிலையுடன் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.. 

அவளது மனநிலையைக் கணித்துவிட்ட அபிஷேக்கின் மனதிலும் அந்தக் கிளர்ச்சி தொற்றிக் கொண்டது…

‘ஒரு வழியா படிய ஆரம்பிச்சிருக்கா…’

அதை அப்படியே விட்டு விடக் கூடாது என்று அவன் அறிவு வலியுத்த அவன் மெதுவாக ரகசியக் குரலில் பேச ஆரம்பித்தான்…

“சந்தியா..” வார்த்தைக்கு வலிக்குமோ என்ற மயக்கத்துடன் அவன் அவள் பெயரை உச்சரித்த விதத்தில் வசீகரிக்கப்பட்டவளாக.. அவள்..

“ம்ம்ம்..” என்று முணுமுணுத்தாள்…

“என்னைப் பிடிச்சிருக்கா..?”

“ம்ம்ம்..”

“இதற்கும்.. ‘ம்ம்ம்’தானா..? என்னை பிடிச்சிருக்-குன்னு தான் சொல்லேன்..”

“பிடிச்சிருக்கு…”

“அப்புறமும் எதுக்காக கல்யாணத்தைத் தள்ளிப் போடனும் சந்தியா..? எங்க வீட்டில் கல்யாணப் பேச்சை எடுத்திட்டாங்க.. இனியும் தள்ளிப்போட அவங்க சம்மதிக்கனுமில்ல…?”

“எனக்குப் படிக்கனுமே அத்தான்…”

“அதுக்கு நான் கேரண்டி.. பார் சந்தியா.. எனக்கும் சூர்யாவுக்கும் ஒரே வயது.. அவ கல்யாணமாகி நான்கு வயசுப் பெண்ணுக்கு அம்மாவா இருக்கா…”

“அதைத்தான் நானும் சொல்றேன் அத்தான்.. அக்காவைப் போல ஒரு வேலையில் உட்கார்ந்த பின்னாலே கல்யாணம் பண்ணிக்கலாமே…”

“பிடிவாதம் பிடிக்காதே சந்தியா.. மாமாவும் இதைத் தான் சொல்கிறாராம்.. அத்தைதான் எனக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. உன் அண்ணனைப் பத்திக் கேட்கவே வேணாம்.. என் தங்கையை அவனுக்கு கட்டிக் கொடுக்காத ஒரே காரணத்துக்காவே நம்ம கல்யாணத்தை நடக்க விடாம நிறுத்திட்டுத்தான் மறு வேலை பார்ப்பான்.. உன் அம்மாதான் என் அப்பா கூடப் பிறந்தவங்க.. உன் அப்பா அப்படியில்லை.. என் அத்தையை கல்யாணம் பண்ணியிருக்கிற மாமா.. அவ்வளவுதான்.. இதில உன் அம்மாவின் சப்போர்ட்டை மட்டும் வைத்துக்கிட்டு நான் எதுவும் பண்ணி விட முடியாது.. நீ மனசு வைக்கனும்…”

அபிஷேக் இரு பொருள்பட அழுத்தமாகச் சொன்னதில் கன்னம் சிவந்தாள் சந்தியா..

“நான் மனசு வைக்கலியா..?”

‘இதிலொன்னும் குறைச்சலில்ல..’ மனதுக்குள் சலித்துக் கொண்டான் அபிஷேக்..

‘மனசை வைக்கிற மகராசி.. கல்யாணத்துக்கு மட்டும் ஏன் மாட்டேன்னு சொல்கிறாளாம்.. படகு மறைவில் பேச ஏன் வரமாட்டேன்னு சொல்கிறாளாம்..’

“எனக்கு யோசிக்க டைம் வேணும் அத்தான்..”

“எடுத்துக்க.. ஆனா நான் போகிறதுக்குள்ளே உன் முடிவைச் சொல்லிரு.. அந்த முடிவும் நல்ல முடிவா இருக்கட்டும்…”

இதுக்கு அவள் எதற்காக யோசிக்க வேண்டும்..? அவன் விரும்பும் முடிவைத்தான் அவள் சொல்ல வேண்டு மென்றால்.. அவள் யோசிக்கவே வேண்டாமே…

சந்தியா பதில் சொல்லாமல் எழுந்து கொண்டாள்.. இருவரும் கடற்கரைச் சாலையை அடைந்தார்கள்.. அபிஷேக் ஆட்டோவை கை தட்டி அழைத்தான்…

“நீங்க முன்னாலே போங்க.. நான் பின்னாடி வருகிறேன்…” என்று சொல்லி விட்டாள் சந்தியா…

சேர்ந்து போக முடியாத கோபத்துடன் கிளம்பிப் போய் விட்டான் அபிஷேக்…

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link