Chapter 11
“அவன் யார்..?”
அவளுக்குப் பின்னாலிருந்து வந்த கம்பீரமான குரல்.. அவளுக்குப் பரிச்சயமான குரலைப் போல இருந்ததில் திரும்பிப் பார்த்தாள் சந்தியா…
விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரின்மீது சாய்ந்து நின்றிருந்தான் ரகுநந்தன்..
‘இவனா..?..!’
சந்தியாவின் மனதில் ஆச்சரியம் மூண்ட அதே நேரத்தில் வெறுப்பும் வெளிப்பட்டது…
‘இவன் எதுக்காக என்னைக் கேள்வி கேட்கிறான்..? அவன் யாராய் இருந்தால் இவனுக்கென்ன..?’
பதில் சொல்லாமல் உதாசீனமாகத் தலையைத் திருப்பிக் கொண்ட சந்தியா ரகுநந்தனின் மேலிருந்த கோபத்தை ஸ்கூட்டியை உதைத்துக் கிளப்புவதில் வெளிப்படுத்தினாள்..
அந்த ஸ்கூட்டி என்னவோ ரகுநந்தனுடன் உடன் படிக்கை செய்து கொண்டதைப் போல என்னதான உதைத்தாலும் கிளம்புவேனா என்று சண்டித்தனம் செய்தபடி அசைவேனா என்று மல்லுக்கு நின்றது…
“வெயிட்.. வெயிட்.. விட்டால் உன் வண்டியை சுக்கு நூறாக்கிட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்ப போல..” ரகுநந்தன் அருகே வந்தான்.
“என் வண்டி.. நான் உடைப்பேன்.. சுக்கு நூறாக்கி பேரிச்சம்பழத்துக்குப் போட்டு அதை வாங்கி நொட்டை விட்டுக்கிட்டு சாப்பிடுவேன்.. அதைக் கேட்க நீங்கள் யார்..?” சந்தியா மூக்கை விடைத்துக் கொண்டு சண்டைக்குப் போனாள்…
“பேரிச்சம்பழமா..? இதுக்கும் பேரிச்சம் பழத்துக்கும் என்ன கனெக்சன்..?” ரகுநந்தனுக்கு விளங்கவில்லை…
அவனே கோடிஸ்வரன்.. அவனிடம் போய் இரும்பு சாமான்களைப் போட்டு பேரிச்சம்பழம் வாங்கி உண்ணும் கதையை சந்தியா எப்படிச் சொல்லுவாள்…?
‘இது வேறா..?’ அவனை முறைத்தாள்..
“ஓகே.. லீவ் இட்.. உனக்கு பேரிச்சம் பழத்துக்கான கனெக்சனை சொல்ல விருப்பமில்லை போல… ஸோ.. அதை விட்டு விடலாம்.. பட் ஒன்திங்.. இந்த நொறுக்கு நொறுக்கினா.. உனக்கு பேரிச்சம்பழம் கூடக் கிடைக்காது..”
“அதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை…”
“ஓ…! அந்த அளவுக்கு என் மேல் கோபமா..?”
“உங்க மேல கோபப்பட நான் யார் சார்..?”
சந்தியா கருமமே கண்ணாக.. தன் கடமையில் கவனமாக வண்டியை உதை.. உதையென்று உதைத்த வண்ணம் அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்…
அவள் சொன்னதைக் கேட்டதும் அவன் முகத்தில் பிரதிபலித்த உணர்வின் கலவையை அவள் கவனிக்க வில்லை..
“நான் யாரா..?” அவன் ஒரு மாதிரியான குரலில் வினவினான்.. அவன் விழிகள் அவளை ஊடுறிவின…
“நான் யாரென்று உனக்குத் தெரியாதா..?” நிதானமாக கேட்டவன்..
“ஆமாம்.. அவன் யாரென்று கேட்டேனே.. அதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே..” என்று அதிகாரமாக வினவினான்…
அவனது அந்த அதிகாரத்தில் வண்டியை உதைப்பதை நிறுத்திவிட்டு ஆச்சரியத்துடன் அவனை நோக்கினாள் சந்தியா…
‘என்னை அதிகாரம் பண்ண இவன் யார்..? எனக்கு மாமன் மகனா..? இல்லை அத்தை மகனா…?’
கோபத்துடன் நினைத்தபோதே அவளுடன் அவ்வளவு நேரமாக பேசிக் கொண்டிருந்த அவளுடைய மாமன் மகனிடம் இல்லாத வசீகரமும்… கம்பீரமும் அவனிடம் குடி கொண்டிருந்ததை அவளால் சேர்த்து நினைக்காமல் இருக்க முடியவில்லை..
இந்த ஒப்பிடல் தவறு என்று துணுக்குற்றாள் சந்தியா.. அவள் மனதில் கலவரம் மூண்டது.. எதனால் அபிஷேக்கை ரகுநந்தனுடன் அவள் ஒப்பிட்டுப் பார்க்கிறாள்..? இது அவள் செய்யும் செய்கை அல்லவே..
‘எல்லாம் இவனால் வந்தது..’ அவள் கோபம் அவன்மீது திரும்பியது..
இவன்தானே வழியோடு போகிறவளை கூப்பிட்டு வைத்து வம்புக்கு இழுத்துக் கொண்டு இருக்கிறான்..?
‘இதை அப்பாவிடம் கேட்க வேண்டும்…’ அவள் வெகுண்டாள்..
கேட்டால் அவர் என்ன பதிலைச் சொல்லுவார்..? நிச்சயமாக அவளுக்குச் சாதகமான பதிலைச் சொல்ல மாட்டார்.. அப்படியா என்று வியப்பார்.. அவருக்கு உன்னை அடையாளம் தெரிந்ததா என்று பரவசப்பட்டுப் போவார்.. பார்.. அத்தனை பெரிய மனிதர் உன்னைக் கண்டதும் நின்று பேசியிருக்கிறார்.. நீயானால் அவரைப் போய் திட்டிப் பேசினாயே என்று கண்டிப்பார்…
‘அந்த அளவுக்கு இவன் அவரை மயக்கியிருக்கிறான்..’
வழக்கம் போல நினைத்தவளுக்கு.. அவன் முகம்.. மயக்கும் முகம் என்றே தோன்றித் தொலைத்தது…
ஒரு கை தேர்ந்த ரோமானியச் சிற்பி செதுக்கிய சிற்பத்தைப் போல இருந்தது அவன் தோற்றம்.. வடிவமைக்கப் பட்டதைப் போன்ற அந்த முகவடிவும்.. தீர்க்கமான மூக்கும்.. கண்டிப்பை பிரதிபலித்த வண்ணம் மனதை ஊடுறுவும் பார்வை பார்க்கும் அந்த விழிகளும்.. பிடிவாதத்தையும்.. தீர்க்கத்தையும் உணர்த்தும் அந்த இறுகின உதடுகளும்.. அடர்ந்த மீசையும்.. ஆண்மை ததும்பிய அகன்ற தோள்களும்.. விரிந்த மார்பும்.. ஆறடி உயரமும்.. அவளை ஈர்த்தன…
அவனைமட்டும் மந்திரமூர்த்தியின் வீட்டை அபகரித்த நயவஞ்சகனாக உணராமல் சாதாரணமாகப் பார்த்திருந்தால் நிச்சயமாக அவள் வாய்விட்டு ‘வாவ்’ என்று சொல்லியிருப்பாள் என்ற நினைவில் அதிர்ந்து போனாள் சந்தியா..
என்ன இது வம்பாக இருக்கிறதே என்று பயந்து போனாள் அவள்.. இப்போதுதான் அவள் திருமணம் செய்ய உத்தேசித்திருக்கும் அவளின் மாமன் மகன் வந்து போயிருக்கிறான்.. அவனுடன் எதிர்கால வாழ்வைப் பற்றியத் திட்டத்தை பேசியிருக்கிறாள்.. அப்படியிருக்-கையில் இன்னொருவனைப் பற்றி இப்படி நினைவு வந்தால் எனன அர்த்தம்..?
அவள் மனதில் ஓடிய அத்தனை எண்ணங்களுக்கும் அவனையே காரண கர்த்தாவாக்கி அவனை முறைத்தாள் சந்தியா..
“நீங்க கேட்டா.. நான் உடனே பதில் சொல்லியாகனுமா..?”
“ஷ்யூர்…”
“அப்படி ஏதும் சட்டமிருக்கா..?”
“இல்லைதான்..”
நல்லபிள்ளையாக அவன் ஒப்புக் கொண்டதும் ‘அப்பாடி..’ என்று நிம்மதியாக உணர்ந்தாள் சந்தியா.. அதனால் மிகவும் தெனாவெட்டாக…
“இல்லைன்னு தெரியுதில்ல… அப்புறம் எந்த தைரியத்தில் வந்து கேள்வி கேட்டிங்க..?” என்று புருவங்களைத் தோரணையாக உயர்த்தியபடி அரட்டலாக வினவினாள்..
அவள் அரட்டிய விதத்தில் அவனுக்குச் சிரிப்புத் தான் வந்தது.. அவளின் அந்த மிரட்டலை ரசித்தபடி..
“எந்த தைரியத்தில் நீ என் ஆபிசுக்கே வந்து என்னையே பார்த்துக் கேள்வி கேட்டியோ.. அதே தைரியத்தில்தான் நான் உன்னைப் பார்க்க வந்து உன்னிடம் கேள்வி கேட்கிறேன்..” என்று சொன்னான்..
“என்னது..?!” அவள் மிரண்டு விட்டாள்..
“எதுக்கு இத்தனை ஷாக்..? நீ என்னைக் கேள்வி கேட்கலாம்.. நான் உன்னைக் கேள்வி கேட்கக்கூடாதா..?”
“ஹலோ.. நீங்க அநியாயக்காரர்.. அராஜகக்காரர்.. நான் உங்களிடம் நியாயம் கேட்க வந்தேன்.. அந்தக் கேள்வியும்.. இந்தக் கேள்வியும் ஒன்றா..?”
“நிச்சயமாக ஒன்றில்லைதான்…”
அவன் உடனடியாக ஒப்புக் கொண்டதும் அவனை நல்லபிள்ளையென்று நம்பி விட அவள் தயாராக இல்லை.. அதற்குப் பின்னால் அவன் என்ன பேசி வைப்பானோ.. அதை வைத்துத்தானே அவள் ஒரு முடிவுக்கு வர வேண்டும்..?
அவளுடைய முன்ஜாக்கிரதையின் தேவையை மறு நொடியிலேயே அவன் நிருபித்தான்..
“அடுத்தவங்க சொல்கிறதைக் கேட்டுவிட்டு.. அதற்காக நீ என்னைக் கேள்வி கேட்டாய்.. நானோ.. என் மனது சொல்கிறதைக் கேட்டு விட்டு அதற்காக உன்னிடம் கேள்வி கேட்கிறேன்..” என்று சொன்னான்…
“மனது சொன்னதா..? என்னத்தைச் சொன்னது..?”
அவளுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை.. அவனுடன் நின்று பேசிக் கொண்டிருக்கவும் அவள் விரும்பவில்லை.. அவர்களைக் கடந்து போன இளம் பெண்கள் அவனையும். அவளையும் பார்த்துவிட்டு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டதை அவள் கவனித்தாள்.. அவர்களின் கண்களில் தெரிந்த பொறாமையை அவளால் உணர முடிந்தது…
அவர்களைக் கூப்பிட்டு இவன் யாரோ.. நான் யாரோ என்று சொல்லி விட்டால்தான் என்ன என்று அவளுக்குத் தோன்றியது..
அவளே உடைமைக்காரியில்லை.. தேவையில்லாமல் மற்றவர்களின் பொறாமைப் பார்வையுக்கு அவள் ஏன் ஆளாக வேண்டும்..?
இந்த நினைவுடன் அவனைப் பார்த்தால்.. அவனோ உடைமைக்காரனைப் போல அவளை உரிமையுடன் பார்த்தபடி நின்றிருந்தான்…
‘இவன் எதுக்கு இப்படிப் பார்த்து வைக்கிறான்.. இப்படி இவன் பார்த்து வைத்தா அவங்க பொறாமைப்பட மாட்டாங்களா..?’
“என் மனது சொன்னதை நான் உனக்குச் சொல்லவா..?”
“ஒரு மண்ணும் வேண்டாம்.. வழியை விடுங்க..”
“அதெப்படி.. நா இன்னும் பேச வேண்டியதைப் பேசி முடிக்கலையே.. அதுக்குள்ளே நீ கிளம்பிப் போனா என்ன அர்த்தம்..?”
அப்படியே அபிஷேக் கேட்ட கேள்வியை அவன் கேட்டுக் கொண்டிருக்க.. ‘என்னடா இது’ என்று அரண்டு போனாள் சந்தியா…
இவன் வேண்டுமென்றே அவளை வம்புக்கு இழுக்கிறானா..? சம்சயத்துடன் அவன் முகத்தை உற்றுப் பார்த்தவளுக்கு அதிலிருந்த தெளிவில் யோசனை வந்தது..
“இதோ பாருங்க சார்…” கறாராய் அவள் பேச ஆரம்பிக்க…
“பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்..” என்று உல்லாசமாகச் சொல்லி வைத்தான் அவன்…
அப்படியே காதலன் பேசுவதைப் போல அவன் பேச்சு இருந்ததில் கலவரப் பட்டுப் போனாள் சந்தியா…
‘கல்பனாவுக்கு பரிந்து பேசி நாக்கைப் பிடுங்கிக் கிறதைப் போல நாலு கேள்வி கேட்டு விட்டு வந்ததிற்கு பழிவங்க வந்திருக்கிறானோ…’
“சும்மா எகனைக்கு மொகனையா பேசிக்கிட்டு இருக்காதீங்க சார்.. நீங்க என் பிரண்டோட அப்பாவுக்கு அநியாயம் பண்ணினீங்க.. நான் உங்களிடம் நியாயம் கேட்டு வந்தேன்…”
“அதுக்காகத்தான் அவங்களுக்கு உடனடியாக நான் நியாயம் செய்தேன்.. இல்லைன்னா அவங்க என் நேரத்தை வீணடித்ததுக்கு சுற்ற விட்டு.. மெதுவாக நியாயத்தைச் செய்திருப்பேன்…”
“என்னது…?!”
“யெஸ்.. நீ வந்த சந்தியா.. கேள்வி கேட்ட.. முன்பின் தெரியாத என்னைத் தேடி.. என் ஆபிசுக்கே வந்து அத்தனை படபடப்பா நீ கேள்வி கேட்டதிலிருந்து… உன் மனது அவர்களின் துன்பத்தை நினைத்து வேதனைப் படுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவங்க படற துன்பத்தில் நீ பாதிக்கப் படறாய்ன்னு தெரிஞ்ச பின்னாலே உடனடியா அவங்களை அந்தத் துன்பத்திலிருந்து வெளியே கொண்டு வரனும்னு நான் நினைத்தேன்.. அதான் உடனடியாக அவங்களுக்கு ‘ரிலீஃப்’ கொடுத்தேன்..”
வெகு நியாயஸ்தன் போல அவன் பேசிய விதத்தில் அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது…
“அந்தத் துன்பமே உங்களால் வந்ததுதானே…” என்று பட்டென்று கேட்டு விட்டாள்…
“ஊஹீம்..” அவன் மறுத்தான்…
“மந்திரமூர்த்தியின் அறியாமையினால் வந்தது..” விளக்கமும் சொன்னாள்…
“இப்பப் போய் அவங்களிடம் கேட்டுப் பார்.. என்னை அநியாயக்காரன்… அராஜகக்காரன்னு அவங்க சொல்ல மாட்டாங்க… வெரி ஹானஸ்ட் மேன் அப்படின்னு சொல்லுவாங்க.. யு ஸீ சந்தியா.. எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு…”
“ஸோ.. நீங்க அவங்களை விலை கொடுத்து வாங்கிட்டிங்க..?”
“நோ.. நோ… அவங்களோட இடியாடிக் சென்டி மென்ட்ஸை விலை கொடுத்து வாங்கியிருக்கேன்..”
“உங்களுக்கு அது இடியாடிக்.. ஆனா அவங்களுக்கு..?”
“இது தேவையில்லாத ஆர்குயுமென்ட் சந்தியா.. எது எது எங்கே இருக்கனுமோ.. அங்கேதான் அது இருக்கனும்.. அதை அவங்க இப்பப் புரிஞ்சுக்கிட்டாங்க.. யு நோ.. மந்திரமூர்த்தி என்னை அப்ரிசியேட் பண்ணுகிறார்.. அவர் வாழ்க்கையில் உயர நான் உதவி செய்துட்டேன்னு மனமாற நன்றி சொல்கிறார்.. இல்லைன்னா.. அவர் வாழ்நாளில் ஒரு முதலாளியாக ஆகியிருக்க மாட்டாராம்.. அது தான் உண்மையும் கூட..”
கல்பணாவின் முகத்தில் தெரிந்த தெளிவும்.. அபிராமியின் முகத்தில் நிலவிய திருப்தியும்.. மந்திர மூர்த்தியின் முகத்தில் குடி கொண்டிருந்த மகிழ்வும்.. அந்த நேரத்தில் அவள் மனதில் வந்தன…
‘அந்தத் தெனாவெட்டில்தான் இவன் பேசறான்..’ அவள் மனம் எரிச்சல் கொண்டது…
“நீங்க பிள்ளையையும் கிள்ளி விடுவீங்க.. தொட்டிலையும் ஆட்டி விடுவீங்க.. அது உங்களோட சாமர்த்தியம்.. இதையெல்லாம் புரிஞ்சுக்காம அந்தக் குழந்தை கண்மூடித் தூங்கலாம்… நான் நம்ப முடியாது..”
“எதை..?”
“நீங்க நியாஸவாதி என்கிறதை…”
“ஏய்ய்.. உனக்காகத்தான் அவங்களுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் நியாயம் செய்தேன்னு சொல்றேன்.. அதைப் புரிஞ்சுக்காம பேசறியே.. ஆர் யு எ சைல்டு..?”
அவன் அதட்டிய விதத்தில் அவளுக்கு கோபம் வந்து விட்டது.. யாரைப் பார்த்து அதட்டுகிறான்..? என்ன உரிமையில் அதட்டுகிறான்..?
“ஹலோ.. இந்த ‘ஏய்..’ன்னு கூப்பிடுகிற வேலை யெல்லாம் என்னிடம் வேண்டாம்.. உங்க மனசில் என்ன நினைத்துக்கிட்டு இருக்கீங்க..? ஏயாமில்ல.. யாரைப் பார்த்து ‘ஏய்’ன்னு சொல்றிங்க…”
“ஏன்..? உன்னைப் பார்த்துத்தான் ‘ஏய்’ன்னு சொல்றேன்… நான் அப்படிச் சொல்லக்கூடாதா…?”
“கூடாது..”
“ஏன்..?”
“யார் சார் நீங்க…”
“முதலில் உன்னிடம் பேசிக்கிட்டு இருந்தவன் யார்ன்னு சொல்லு…”
“அதைக் கேட்க நீங்க யார்..?”
“உனக்காக உன் பிரண்டின் குடும்பத்துக்கு நியாயம் செய்தவன்…”
“அவங்களுக்கு நீங்க அநியாயம் செய்தீங்க.. அதை நிவர்த்தி செய்திருக்கிங்க.. அதனாலெல்லாம் நீங்க நியாய வாதியா மாறிட முடியாது…”
“உனக்கென்ன தெரியும்ன்னு பேசற…? நான் மந்திர மூர்த்திக்கு அநியாயம் செய்தேனா..? அவர் வீட்டை நான் விலைக்கு கேட்டது உண்மைதான்.. அதற்கு இருமடங்காய் பணம் கொடுக்கிறேன்னு சொன்னேன்தான்.. ஆனா அவர் சொன்ன சென்டிமென்ட்ஸிக்கு மதிப்புக் கொடுத்து விலகிட்டேன்…”
“யார் காதில பூசுத்தறிங்க.. இப்பத்தான் அந்த சென்டிமென்ட்ஸை நீங்க இடியாடிக் சென்டிமென்ட்ஸீன்னு சொன்னீங்க..”
“எனக்கு அது இடியாடிக் சென்டிமென்ட்ஸ்தான்.. ஆனா அவங்களுக்கு..? அதனால்தான் விலகிட்டேன்…பட்.. அந்த மந்திரமூர்த்தி வாயை வைத்துக் கொண்டு சும்மா யிருக்கனுமா.. இல்லையா..? பார்க்கிறவங்களிட மெல்லாம் அந்த ரகுநந்தன் பெரிய இவனா..? அவன் கேட்டதும் நான் வீட்டை விற்று விடுவேனா..? தரமுடியாது.. போடான்ன சொல்லிட்டேன்.. என்வீட்டை வாங்க அவனால் என்ன அவன் அப்பனால் கூட முடியாதுன்னு பேசலாமா..?”
“என்னது..?!”
அடுத்த ‘என்னது’வை இமைகளைக் கொட்டியபடி உதிர்த்தாள் சந்தியா.. மந்திரமூர்த்தி இதைச் செய்தாரா..? இது அவளுக்குத் தெரியாதே…
“என்னைச் சொன்னதைக் கூட நான் பொறுத்துப் போயிருப்பேன்.. என் அப்பாவை எப்படி அவர் சொல்லலாம்..? என் அப்பா இப்போது உயிருடன் இல்லை.. பட்.. அவர் பிள்ளையான நான் இருக்கிறேனே.. அவரைப் பேசின பேச்சுக்கு நான் நியாயம் செய்யாமல் விட்டுவிட முடியுமா..? அதனாலதான்.. நான் யார்.. என் அப்பா யார்ன்னு அந்த மந்திரமூர்த்திக்கு காட்டினேன்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு அலற விட்டிருப்பேன்.. கதிகலங்க வைத்திருப்பேன்.. பட்.. நீ குறுக்கே வந்திட்ட.. உனக்காக.. உனக்காகத்தான்.. அவங்களை நான் மன்னித்தேன் சந்தியா.. இந்த ரகுநந்தன் பழியெடுக்க நினைத்ததை பாதியிலேயே விட்டது உனக்காக மட்டும் தான்..”
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.