Chapter 12
‘என்னது…?’
மனதுக்குள்ளேயே கேட்டபடி உறைந்து போய் நின்றாள் சந்தியா…
‘இவன் என்ன சொல்கிறான்..?’
தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை அவளால் நம்ப முடியவில்லை.. இது கனவா.. இல்லை நிஜமா.. என்ற திக்பிரமையுடன் உறைந்து போய் நின்றாள்…
“இந்த ரகுநந்தன் நினைத்தால் மந்திரமூர்த்தியின் வீடு எளிதாக கிடைத்து விடும் என்பதை நான் அவருக்கு உணர்த்தி விட்டேன்.. அவர் கதறிக் கொண்டு மன்னிப்புக் கேட்டார்.. என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் அவரை மன்னிக்க முடியவில்லை.. இன்னும் கொஞ்சநாள் கதறட்டும் என்று நினைத்தேன்.. நீ வந்து விட்டாய்.. உன்னைப் பார்த்ததும் என் முடிவும் மாறிவிட்டது…”
‘இதென்னடா.. கதை வேற டிராக்கில போகுது..’ சந்தியா பதறிவிட்டாள்…
“ஹலோ.. நான் சாதாரணமாகத்தான் வந்தேன்..”
“எனக்கு அது சாதாரணமில்லை…”
“என் பிரண்டோட குடும்பத்துக்கு இருந்த ஒரேயொரு புராப்பர்ட்டி அது மட்டும்தான்.. அது இல்லைன்னா அவங்க குடும்பம் ரொம்பவும் கஷ்டப்படும்.. அதனால்தான் மனது கேட்காம உங்களைப் பார்க்க வந்தேன்…”
“பார்க்க வரலை.. சண்டை போட வந்தாய்..”
“ஏதோ ஒன்று.. நான் வந்ததிற்கான ஒரே ரீசன் அது மட்டும் தான்…”
“எத்தனை பேர் அப்படி வருவாங்கன்னு சொல்லு..”
“வாட்..?” சந்தியாவிற்கு புரியவில்லை…
‘இவன் என்னதான் சொல்ல வருகிறான்..?’
“கூடப் பழகினவங்களுக்கு ஒரு கஷ்டம்ன்னா எத்தனை பேர் அதை காது கொடுத்துக் கேட்பாங்கன்னு சொல்லு…”
உண்மைதானே என்றிருந்து சந்தியாவிற்கு.. கல்பனா கண்ணீர் விட்ட போது ஆரம்பத்தில் அவளுக்காக அனுதாபப் பட்ட தோழிகள்.. போகப் போக என்ன செய்வது.. அது அவளின் சொந்தப் பிரச்னை.. குடும்பப் பிரச்னை என்று ஒதுங்கி விட்டதை நினைத்துப் பார்த்தாள்.. ஏன்… கல்யாணராமனும் அதற்குத்தானே கோபம் கொண்டார்..? ஜானகியும் அதைத்தானே சொன்னாள்..?
“ஸோ வாட்..? என் கூடப் படிக்கிறவ.. என்னோட பிரண்ட்.. என் கண்ணுக்கு முன்னாலே கதறிக்கிட்டு இருக்கா.. அவ குடும்பத்துக்கு அநியாயம் நடந்திருக்கு.. அதை ஏன்னு கேட்க வந்தா அது ஒரு குற்றமா..? என்ன கொடுமை சார் இது..?”
சந்தியா தலையில் கை வைக்க… ரகுநந்தன் அதை ரசித்து சிரித்தான்.. அந்தச் சிரிப்பை சந்தியா ரசிக்கவில்லை.. அவள் கிணறு வெட்டத்தானே போனாள்..? கிணற்றை வெட்டினால் இப்படியொரு பூதம் கிளம்புமென்று கனவா கண்டாள்..?
“நீ என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்ட சந்தியா.. உன் தோழிக்காக நீ காட்டிய கோபம் என்னை ஆச்சரியப் படுத்தி விட்டது.. என் உயரம் நிச்சயமாய் உனக்குத் தெரிந்திருக்கும்.. எனக்குக் கோபம் வந்தா என்ன ஆகும்ன்னு உன் பிரண்டின் குடும்பத்தைப் பார்த்து நீ தெரிஞ்சிருப்ப.. இருந்தும் எதற்கும் அஞ்சாமல்.. எதைப் பற்றியும் யோசிக்காமல்.. என் இடத்துக்கே வந்து என்னைக் கேள்வி கேட்ட பாரு.. அங்கேதான் நீ நிற்கிற…”
உணர்வு பூர்வமாக சொல்லியவனை விசித்திரமாக பார்த்து விட்டு சுற்றுமுற்றும் நோக்கினாள் சந்தியா.. கடற்கரை கண்ணுக்கு முன்னால் விரிந்திருந்தது…
“இல்லையே சார்.. நான் இங்கேயில்ல நிக்கறேன்..?”
இப்படிச் சொன்னவளின் பேச்சை ரசித்து அவன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.. இதைவிடவே மாட்டானா என்றிருந்தது சந்தியாவிற்கு…
“ஹா… ஹா…”
“இப்ப நான் என்ன ஜோக் சொன்னேன்னு இப்படி வாய்வலிக்க சிரிச்சு வைக்கறிங்க..?”
“யு ஆர் ஆல்வேஸ் ஆக்டிவ்.. ஐ லைக் யு…” அப்பாடி என்றிருந்தது சந்தியாவிற்கு…
‘நல்லவேளை.. ‘ஐ லைக் யு’ன்னு தான் சொல்றான்.. ‘ஐ லவ் யு’ன்னு சொல்லலை.. தப்பிச்சேன்…’
அவ்வளவு எளிதாக அவளால் தப்பித்து விட முடியவில்லை.. இந்த நினைப்பை அவள் நினைத்து முடிப்பதற்குள் ரகுநந்தன் வெகு நிதானத்துடன் அவளை விழிகளுக்குள் நேருக்கு நேராக உற்றுப் பார்த்து..
“அன்ட்.. ஐ லவ் யு…” என்று சொல்லி விட்டான்..
சந்தியாவினால் தன் செவிகளை நம்பவே முடிய வில்லை… அவள் விழி விரிய எதிரே நின்றிருந்தவனை நோக்கினாள்.. தன் காதுகளில் விழுந்த செய்தி காற்றில் கலந்து வந்த பிரமையோ என்ற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது…
அப்படியில்லை என்று சொல்வதைப் போல அவள் முன்னால் அவன் அசையாமல் நின்றான்.. கால்களை லேசாக அகற்றி நின்று.. இரு கைகளையும் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்த வண்ணம் அவளையே உற்றுப் பார்த்த வண்ணம் அவன் நின்ற தோற்றம் அவள் மனதில் பதிந்தது…
இமை கொட்டி விழித்தவள் எதற்கும் இருக்கட்டும் என்று தன்கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் சந்தியா.. வலித்தது..
“ஆர் யு ப்ளே வித் மி..?” சீறி விட்டாள்..
“விளையாடுகிறதா..? உன்னுடனா..? நானா..? இந்த விசயத்திலா..? நெவர்…” தலையை அசைத்து மறுத்தான் ரகுநந்தன்..
“உன்னுடன் விளையாட ஆசைதான் சந்தியா.. பட்.. இது விளையாடுகிற விசயமில்லை.. உண்மையாகவே நான் உன்னைக் காதலிக்கிறேன்.. நீ கோடியில் ஒருத்தி..”
‘என்னடா இது.. இதிலயும் இவன் புதுசா எதையோ சொல்றான்.. எல்லாரும் ஆயிரத்திலே ஒருத்தின்னுதான சொல்வாங்க..? இவன் கோடியில ஒருத்திங்கிறானே..’ சந்தியாவுக்கு கண்ணைக் கட்டுவதைப் போல இருந்தது.. தலையை ஆட்டி தன்னை சரி செய்து கொண்டவள்…
“இந்த ஆயிரத்தில் ஒருத்தி டயலாக்கையெல்லாம் வேற யாரிடமாவது சொல்லுங்க சார்.. நான் அதுக்கு ஆளில்லை…” என்று சொன்னாள்…
“எனக்கு நீ கோடியில் ஒருத்திதான்.. அப்புறம்.. நான் பேசறது டயலாக்கில்லை… என் மனதிலிருந்து வருவது.. எனக்கான ஆளும் நீதான்.. வேற ஒருத்தியை இனி நான் தேடப் போவதில்லை…”
‘போச்சுடா.. இவன் குடித்துக் கிடித்து விட்டு வந்திருக்கிறானா..?’ சந்தியா சந்தேகமாக அவனைப் பார்க்க..
“எனக்கு குடிக்கிற பழக்கம் அவ்வளவா கிடையாது..” என்றான் அவன்..
“அவ்வளவான்னா..?”
“பார்ட்டிகளில் ஷிப் பண்ணுவது உண்டு.. மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் இல்லை..”
“நீங்க எப்படியோ போங்க.. என்கிட்ட மட்டும் இப்படி பினாத்தற வேலையை வைத்துக்காதீங்க…”
சந்தியா அலட்சியமாகச் சொல்லிவிட்டு மீண்டும் ஸ்கூட்டியை உதைக்க ஆரம்பித்தாள்.. அவன் முகத்தில் கோபம் வந்தது..
“மைன்ட் யுவர் வெர்டுஸ்.. என் காதல் உனக்குப் பினாத்தலாத் தெரியுதா..?” சீற்றத்துடன் கேட்டான்…
“ஹலோ.. இங்கே நான்தான் உங்களிடம் கோபப் படனும்.. நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டு இருக்கேன்.. வழியோடு போகிறவளை இழுத்துப் பிடித்துக் காதல் சொல்லிவிட்டு என் மேல கோபப் படறிங்களா..?” அவளும் கோபப் பட்டாள்…
“இதோ பார்.. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது..”
“எனக்கு உங்களைப் பிடிக்கலை…”
“ஐ லவ் யு..”
“ஐ ஹேட் யு…”
“ஏன்..?”
“ஏன்னா..? என்ன கேள்வி இது..? உங்களை மாதிரியான ஆள்மீதெல்லாம் எனக்குக் காதல் வராது..”
“சந்தியா…”
“சத்தம் போடாதீங்க.. இது பீச்.. உங்க ஆபிசில்லை.. நான் சத்தம் போட்டுக் கூட்டத்தைக் கூட்டினா உங்க பிரஜ்டிஜ் என்ன ஆகும்ன்னு யோசிச்சுப் பார்த்துட்டு சவுண்டு விடுங்க…”
“நீதான் என் மனைவின்னு நான் முடிவு பண்ணிட்டேன்..”
“காதலியே இல்லைங்கிறேன்.. நீங்க மனைவிங்கிற லெவலுக்கு போயிட்டிங்க.. உங்க லைஃபை நீங்க முடிவு பண்ணலாம்.. ஆனா.. என் வாழ்க்கையை தீர்மானிக்க உங்களால் முடியாது.. அதை நான் ஏற்கனெவே தீர்மானிச் சுட்டேன்..”
அவள் பேசப்பேச.. ரகுநந்தனின் முகத்திலிருந்த இனக்கம் மறைந்து.. அங்கே கடுமை பரவியிருந்தது.. அவன் கண்களில் தெரிந்த சிரிப்பு மறைந்து அங்கே தீவிரம் பரவியிருந்தது…
அவன் பார்வையை அலட்சியமாக எதிர் கொண்ட சந்தியா தோளைக் குலுக்கினாள்..
“என்ன பார்க்கறிங்க..? அவன் யாரு.. அவன் யாருன்னு கேட்டிங்கள்ல.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே.. என்கூடப் பேசிக்கிட்டு இருந்தது அபிஷேக்..! என் அத்தான்..! நாமக்கல்லில் ஸ்டேசன் மாஸ்டரா இருக்கார்.. அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்.. அவருக்குத்தான் மனைவியாகப் போகப் போகிறேன்.. இந்த முடிவைக்கூட இப்பத்தான் நான் எடுத்தேன்.. ஆக்சுவலா.. அத்தான் என்னிடம் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ஃபோர்ஸ் பண்ணினப்ப.. நான் மேலே படிக்கனும்னுதான் சொன்னேன்.. டிகிரியெல்லாம் எனக்குப் போதாது.. சி.ஏ பண்ணனும்ங்கிறதுதான் என் அம்பிசன்.. வேலைக்குப் போகனும்.. அதுக்குப் பின்னாலேதான் கல்யாணத்தைப் பத்திப் யோசிக்கனும்னு சொன்னேன்.. என் முடிவைச் சொல்ல ரெண்டு நாள் டைம் கேட்டேன்.. இப்ப நீங்க இந்த அளவுக்கு பேசினதுக்குப் பின்னால உடனடியா டிசைட் பண்ணிட்டேன்.. எக்ஸாம் முடிந்த உடனே கல்யாணம்தான்..”
அவள் பேசப் பேச அவன் கண்கள் இடுங்கின.. பாறை போல உறைந்த முகத்துடன் அசையாமல் கற்சிலை போல அவன் நின்று கொண்டிருந்தான்…
“நல்ல முடிவைச் சொல்லு… நல்ல முடிவைச் சொல்லுன்னு என் அத்தான் கேட்டுக்கிட்டே இருந்தார்.. அவர்கிட்ட இந்த நல்ல முடிவைச் சொன்னா எவ்வளவு சந்தோசப் படுவார்ன்னு தெரியுமா… ஸோ.. நான் உடனடியா என் வீட்டுக்குப் போகனும்…”
அதற்கும் ரகுநந்தன் பதில் சொல்லவில்லை.. கற்பாறை போல உறைந்த முகத்துடன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..
அவனைக் கடுப்பேற்றி விடுவதில் உற்சாகம் கொண்டிருந்த சந்தியா.. ஒற்றை விரலால் நெற்றியைத் தட்டி…
“பார்த்தீங்களா.. கல்யாண சந்தோசத்தில உங்க கிட்ட சொல்ல வேண்டிய முக்கியமான செய்தியைச் சொல்லாமலே கிளம்பிப் போக பார்க்கிறேன்..” என்றாள்..
ரகுநந்தன் என்ன செய்தியென்று கேட்க வில்லை.. அதற்காக சந்தியா கவலைப் படவுமில்லை.. காத்திருக்- கவுமில்லை..
“கல்யாணத்துக்கு இன்விடேசன் அனுப்புவேன்.. கட்டாயம் கல்யாணத்துக்கு வந்து அட்சதை போட்டு வாழ்த்தினா எங்க அப்பா சந்தோசப்படுவார்பாருங்க..
யு நோ.. அவர் உங்களுடைய தீவிரமான ஃபேன்.. அதாங்க விசிறி…”
கடுப்படிக்க முடிந்த அளவுக்கு சந்தியா கடுப்படிக்க.. ரகுநந்தன் வாய் திறந்தான்…
“உன்னால அந்த அபிஷேக்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம்கிற முடிவைச் சொல்ல முடியாது..”
“வாட்..?!” சந்தியா அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்…
“ஏன் முடியாது..? எனக்கென்ன வாயில்லையா..? இல்லை.. நான்தான் பேச முடியாத ஊமையா..?”
“உனக்கு வாயிருக்கிறது… நீ பேச முடியாத ஊமையில்லை பட்.. உன்னால இந்த வார்த்தைகளை அவனிடம் பேச முடியாது..”
“நான் பேசுவேன்..”
“முடிந்தால் பேசிப் பார்..”
“என்னால் முடியும்…”
“உன்னால் அது முடியாது.. திஸ் இஸ் மை சேலன்ஜ்… போ.. உன் வீட்டில்தான அவன் இருக்கான்…? உன் வீட்டுக்கு வெளியிலதானே நான் இருக்கிறேன்..? போ.. போய் முடிந்தா அவனிடம் உன் முடிவைச் சொல்லிப் பார்..”
எப்படிப்பட்ட சவால் அது..! அவளுடைய வீட்டுக்குள் இருக்கும் அவளுடைய மாமன் மகனிடம் அவன் கேட்ட திருமணத்திற்கான சம்மதத்தை அவளால் சொல்ல முடியாதா..?
கோபத்துடன் சந்தியா ஸ்கூட்டியை உதைத்தாள்.. அது அப்போதும் கிளம்ப மறுத்தது.. ரகுநந்தன் அவளைக் கேலியாகப் பார்த்தான்.. அந்தப் பார்வையில் அவள் ரோசப் பட்டு முணுமுணுத்தாள்..
“எப்பவும் இந்த வண்டி மக்கர் பண்ணாது.. இன்னைக்குன்னு சோதிக்குதே…”
“ஏன் சோதிக்காது…? சாவியில்லாம வண்டியை உதைத்தா அது எப்படி ஸ்டார்ட் ஆகும்..?”
ரகுநந்தன் ஒற்றை விரலில் சந்தியாவின் ஸ்கூட்டியின் சாவியை சுழற்றிக் காட்டினான்.. அவள் விழி விரித்து விட்டு ஸ்கூட்டியைப் பார்த்தாள்.. அதில் சாவி இல்லை…
“என் சாவி உங்களிடம் எப்படி வந்தது..?”
அவளுடைய படபடப்பான கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவன் மர்மப் புன்னகையுன் ஸ்கூட்டிக்கு அருகில் வந்தான்.. சாவியைப் பொருத்தினான்.. மிக லேசாக ஒரு மிதி மிதித்தான்.. வண்டி அலறிக் கொண்டு கிளம்பியது…
“இதைப் போலத்தான்… உன்னைச் சுற்றியிருக்கிற அத்தனை பேரின் சாவியும் என்னிடம் இருக்கிறது…”
அவள் பதிலுக்கு காத்திருக்காமல் அவன் காரை நோக்கிப் போய் விட.. சந்தியா குழப்பத்துடன் வண்டியைக் கிளப்பினாள்.. சாலையின் போக்குவரத்தில் கலந்தாள்.. அவள் மனதில் அவன் விட்ட சவாலும்.. பேசிய வார்த்தைகளும் சுழன்று கொண்டிருந்தன..
வீட்டு போர்டிகோவில் கல்யாணராமனின் கார் நின்று கொண்டிருந்தது.. ஸ்கூட்டியை அதன் பக்கத்தில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் போனாள்.. அவள் விழிகள் அபிஷேக்கைத் தேடின.. டிவி பார்த்துக் கொண்டிருந்த அபிஷேக்கின் விழிகள் அவளது தேடலைக் கண்டு கொண்டு மின்னின.. சந்தியா அவனை மாடிக்கு வரும்படி ஜாடையாக அழைத்து விட்டு மாடிப்படியில் கால் வைத்தாள்..
“சந்தியா.. காபியைக் குடிச்சுட்டு மாடிக்கு போ…”
ஜானகியின் குரல் சமையலறையிலிருந்து வெளி வந்தது.. எப்படித்தான் சமையலறைக்குள் இருந்த படியே வீடு முழுவதையும் அவள் கண்காணிக்கிறாளோ என்ற நினைவுடன் அபிஷேக்கை ஏக்கத்துடன் பார்த்தபடி சோபாவுக்கு நடந்தாள் சந்தியா…
“அட.. நம்ம சந்தியா வந்துட்டா..” கோதாவரி பேத்தியின் பக்கம் திரும்பி அமர்ந்தாள்..
“என்னம்மா.. இன்னைக்கு காலேஜ் எப்படிப் போச்சு..?” ஞான சம்பந்தர் விசாரித்தார்…
கண்ணுக்கு முன்னால் இருந்தாலும்.. எட்டாத தொலைவில் இருப்பதைப் போல அபிஷேக் சந்தியாவின் கண்ணுக்குத் தெரிந்தான்…
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.