Chapter 13

0Shares

 ‘திஸ் இஸ் மை சேலன்ஜ்…’

சந்தியாவின் மனக் கண்ணில் கட்டை விரலை உயர்த்தியபடி கண்களில் சவாலுடன் நின்று கொண்டிருந்த ரகுநந்தன் உருவம் தெரிந்தது…

‘யாரிடம் சவால் விடுகிறான்..?’

சந்தியா நிமிர்ந்து அபிஷேக்கின் கண்களைச் சந்தித்தாள்.. அவள் விழிகள் சொல்லிய செய்தியில் அவன் எழுந்தான்.. மாடிப் படிகளில் ஏறினான்… சந்தியா திருப்தியுடன் தொலைக் காட்சித் தொடரைப் பற்றிக் கோதாவரியிடம் பேசியபடி சில நிமிடங்களை அங்கே கழித்தாள்…

“குளித்து டிரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்திடறேன் பாட்டி…”

எழுந்து கொண்டவள்.. மடமடவென்று மாடிப் படிகளில் ஏறினாள்.. அவள் மனதிலும்.. உடலிலும் பரபரப்பு குடி கொண்டிருந்தது..

இதோ.. இன்னும் சில வினாடிகளில் அவள் அபிஷேக்கைப் பார்த்து விடுவாள்.. அவனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்ற வார்த்தைகளைச் சொல்லி விடுவாள்…

‘அதற்குப் பின்னால் அந்த ரகுநந்தன் அவன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்குவான்னு பார்க்கலாம்.. என்னைச் சுற்றி இருக்கிறவங்களிடம் சாவி அவன் கையில் இருக்கிறதாமே.. அதையும் பார்த்து விடுகிறேன்.. யாருகிட்ட..? காதலாமில்ல.. யாரை.. யார் காதலிக்கிறது..?’

மாடி ஹாலில் காலை வைத்ததும் சந்தியாவின் விழிகள் அபிஷேக்கைத் தேடின..

‘இவன் எங்கே போய் தொலைஞ்சான்..?’

சும்மா நேரங்களில் எல்லாம் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து விட்டு.. முக்கியமான நேரத்தில் கண்களுக்குத் தென்படாமல் ஒளிந்து கொள்பவனை என்ன செய்தால் தேவலாம் என்ற எரிச்சலுடன் சுற்று முற்றும் பார்த்தாள்..

“யெஸ்.. யெஸ்…”

அபிஷேக்கின் குரல் மட்டும் கேட்டது.. இவன் எங்கேயிருந்து பேசுகிறான்.. யாரிடம் பேசுகிறான் என்ற கேள்விகளுடன் குரல் வந்த திக்கில் அவனைத் தேடிப் போனாள் சந்தியா…

அபிஷேக் பால்கனியில் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான்.. அவன் கையில் செல்போன் இருந்தது.. அதைக் காதுக்கு கொடுத்து துள்ளலான குரலுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான்…

“ரியலி..? என்னால் நம்பவே முடியலை.. திஸ் இஸ் எ பிளெஸென்ட் சர்ப்ரைஸ் டு மி.. நோ.. நோ.. இது கிரேட் ஆப்பர்சூனிட்டி சார்.. நான் மிஸ் பண்ண மாட்டேன்…”

அபிஷேக் பேசிக் கொண்டேயிருக்க.. சுதர்சனம் வந்து விடக்கூடாதே என்ற பதட்டத்துடன் அவனருகே சென்றாள் சந்தியா.. பேசியபடி அவளைத் திரும்பிப் பார்த்தான் அபிஷேக்…

‘இதோ.. பேச்சைக் கட் பண்ணப் போறான்.. என்ன சந்தியான்னு கேட்கப் போறான்..’ சந்தியாவின் மனம் எதிர்பார்ப்பில் பரபரத்தது..

‘அத்தான்.. நீங்க கேட்டதுக்கு நான் பரிபூரணமா சம்மதிக்கறேன்.. இப்ப உங்களுக்குச் சந்தோசம்தானே..’

மனதுக்குள் வார்த்தைகளைக் கோர்த்தாள்.. அதைக் கேட்டவுடன் அவன் முகத்தில் தெரியப் போகும் வெளிச்சத்தைப் பார்க்கும் ஆவலுடன் அவன் முகம் பார்த்த போது.. அவன் அவளைப் பாராததைப் போலக் கடந்து செல்போனில் பேசியபடியே மாடிப் படிகளில் இறங்கி விட்டான்…

‘அத்தானா இப்படிச் செய்தது..?’ சந்தியா அசைவற்று நின்று விட்டாள்…

அவளின் சிறு பார்வையிலே கிறங்கிப் போகிறவன்.. அவளுடன் பேச தனிமையான சில நிமிடங்கள் கிடைக்காதா என்று தவித்துப் போகிறவன்… இன்று அவனுடன் பேசுவதற்காக அவள் வந்து நின்றும் புறக்கணித்து விலகிப் போகிறான் என்றால் அதற்கு என்ன அர்த்தம்..?

பதுமை போல அங்கேயே நின்றிருந்தாள் சந்தியா.. ஒருவேளை.. அவசர வேலை நிமித்தமாக அபிஷேக் கீழே சென்றிருக்கலாம்.. அவள் காத்திருக்கும் நினைவில் திரும்பி வந்தாலும் வரலாம் என்ற சிறிதளவு நம்பிக்கை அவள் உள்ளத்தில் ஊசலாட.. சந்தியா அவள் அறைக்குப் போகாமல் அங்கேயே காத்திருந்தாள்…

“இங்கே என்ன செய்கிற சந்தியா..?”

சுதர்சனத்தின் குரலில் உடல் தூக்கிப் போட திரும்பினாள் சந்தியா..

“சும்மாதான் நின்னுக்கிட்டு இருக்கேண்ணா..”

தவறு செய்து விட்டவளைப் போல பதட்டப் பட்டவளின் அருகில் வந்து கூர்ந்து பார்த்தான் சுதர்சனம்..

‘சந்தியாவா.. இது..? இவளுக்கு என்ன ஆச்சு..?’

பொதுவாக இப்படிப்பட்ட சுதர்சனத்தின் கேள்விக்கு சந்தியா இடக்காகத்தான் பதில் சொல்வாள்…

‘ம்ம்ம்.. நிலாவைப் பிடிக்கலாமான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்..’ இப்படிப் பதில் சொல்லியிருந்தால் அது அவன் தங்கை சொன்ன பதிலாக இருந்திருக்கும்..

இந்த பதில் சந்தியாவின் பதிலாக இல்லையே.. அவள் இத்தனை பவ்யமாக பதில் சொல்ல மாட்டாளே..

“என்னாச்சு சந்தியா.. உடம்பு சரியில்லையா..?”

சுதர்சனம் கரிசனத்தோடு சந்தியாவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.. ஏனோ சந்தியாவிற்கு அழ வேண்டும் போல இருந்தது.. அபிஷேக் வரவில்லை.. அப்பட்டமான அவனது புறக்கணிப்பை உணர்ந்த சந்தியா மனம் தவித்தாள்…

‘ஏன்…?’

சுதர்சனத்தின் கையை விலக்கி விட்டு.. அறைக்குச் சென்றவள் விரைவாக குளியலை முடித்து.. உடை மாற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.. படிகளில் இறங்கிய போது அபிஷேக் எங்கேயிருக்கிறான் என்று அவளது கண்கள் தேடின..

“சாப்பிட வாம்மா..”

கோதாவரி அழைக்கவும்.. சந்தியா டைனிங் டேபிளை நோக்கி நடந்தாள்.. அங்கும் அபிஷேக் இல்லை.. அவன் எங்கேயென்று வெளிப்படையாகக் கேட்க அவளுக்குத் தயக்கமாக இருந்தது.. அவள் கேட்கத் தயங்கியதை சுதர்சனம் எளிதாக கேட்டு விட்டான்..

“நம்ம அல்டாப்பு ஆறுமுகம் எங்கே பாட்டி..?”

“யாருடா அது..?”

“வேற யாரு..? என்னவோ ஸ்டேசன் மாஸ்டர் உத்தியோகத்தை பில் கேட்ஸீக்கு பேரனாகி விட்டதைப் போல பீற்றிக்கிற நம்ம மச்சானைத்தான் அப்படிக் கேட்டேன்…”

“அடிதாண்டா வாங்கப் போற…”

“வாங்கிட்டாப் போச்சு.. அடிவாங்கினாலும் பாட்டி கையாலே அடி வாங்கனும்கிற பழமொழியே இருக்கே..”

“பிழைச்சுக்குவேடா.. அபிஷேக் என்னவோ அவசரவேலையிருக்குன்னு சொல்லிக் கிளம்பிப் போயிட்டான்…”

“எங்கே பாட்டி..? தெருமுக்கு கடைக்கா போயிருக்காரு..?”

“அங்கே அவனுக்கென்னடா அவசரவேலை இருக்கப் போகுது..?”

“சிகரெட் பாக்கெட் இருக்குமே.. அதுக்காக கேட்டேன்…”

“அதையா அவசர வேலைன்னு அவன் சொல்லுவான்..?”

“உங்களுக்கு எங்க கோட் வெர்டே புரியறதில்லை பாட்டி..”

“எல்லாம் எனக்கும் புரியும்.. ஆனா சுதர்சனம் அவசர வேலை இருக்குன்னு தெரு முனைக் கடைக்குப் போகலை நாமக்கல்லுக்கு கிளம்பிப் போயிட்டான்..”

“என்னது..?!” சந்தியா அதிர்ந்தாள்…

சந்தியாவின் அதிர்ந்த கேள்வியில் சுதர்சனத்தின் புருவங்கள் சுருங்கின.. எதற்காக அவள் பதட்டப் படுகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை…

சந்தியா அவசர.. அவசரமாக சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிவிட்டு.. மாடியறைக்கு ஓடினாள்.. அறைக்கதவை தாழிட்டு விட்டு செல்போனை எடுத்தவள் அபிஷேக்கின் நம்பருக்கு அழைத்தாள்.. ‘ஸ்விட்ச் ஆஃப்..’ என்ற பதில் வந்தது.. மீண்டும்.. மீண்டும் முயற்சித்து விட்டு.. தோல்வியுடன் போனை நழுவ விட்ட அந்த நொடியில் போனடித்தது.. 

‘அத்தானா..?’

அவசரமாக போனை எடுத்துப் பார்த்தாள்.. அறிமுகமில்லாத எண்கள் ஒளிர்ந்தன…

‘யாராய் இருக்கும்..?’ சந்தேகத்துடன் போனை உயிர்ப்பித்து காதுக்கு கொடுத்தாள்…

“சொல்லிட்டியா..?” மறுமுனையில் ரகுநந்தனின் குரல் கேட்டது..

‘இவனா..?’ சந்தியாவின் உடலில் விறைப்பு வந்தது.

“என் நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது..?” அவள் குரல் நடுங்கியது..

மறுமுனையில் ரகுநந்தன் பலமாக சிரித்தான்..

“எப்படியும் கிடைக்கும்.. இப்பவும் சொல்கிறேன்.. உன்னைச் சுற்றியிருக்கிற அத்தனை பேரின் சாவியும் என்னிடம் இருக்கிறது…”

“அதை வைத்து என்ன செய்யப் போறிங்க..?”

“சாவி கொடுப்பேன்…”

“கொடுத்துக்கங்க…”

அவள் பட்டென்று சொல்லி விட்டு போனை அணைத்து தூர எறிந்தாள்.. மனதுக்குள் அபிஷேக்கிடம் பேச முடியாததால்.. ஏற்பட்டிருந்த பதட்டத்தில் அவளுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை…

‘திஸ் இஸ் மை சேலன்ஜ்…’

சவால் விட்டானே.. சவாலில் ஜெயித்து என்னத்தைக் கிழிக்கப் போகிறான்..? இப்போது அபிஷேக்கிடம் அவள் மனதை சொல்ல முடியாததினால் என்ன நஷ்டக் கழுதை வந்து விடப் போகிறது..? என்றைக்கிருந்தாலும்.. அவளுக்கு அவன்.. அவனுக்கு அவள் என்பது இரு வீட்டாரும் பேசி வைத்திருக்கும் முடிவுதானே…

இந்த நினைவு தந்த நிம்மதியுடன் அவள் தூங்கிப் போனாள்.. விடிந்தவுடன் முதல் நாளின் நினைவுகள் அவள் மனதில் பாரமாக அழுந்தின.. தலை விண்.. விண்ணென்று தெறித்தது…

எதனால்  இந்த மன உளைச்சல்..? அபிஷேக்கை அந்த அளவுக்கு அவள் விரும்புகிறாளா..?

அவள் மனம் இல்லையென்ற பதிலைச் சொன்னது.. அது நாள்வரை அப்படிப்பட்ட பரபரப்புடன் அவனை அவள் மனம் தேடியதில்லை.. அவன் வந்தால் இளம் வயதுக்கேயுரிய குறுகுறுப்புடன் அவன் பார்வைகளுக்கு பதில் பார்வைகளைத் தருவாள்… அதுவும் திருமணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன் என்ற நிச்சயத்தில் எழுந்த மனதின் குறுகுறுப்புதான்..

மற்றபடி அவன் கிளம்பிப் போய்விட்டால் வெறிச்சென்று அவள் மனம் உணர்ந்ததில்லை.. எதையோ இழந்து விட்டதைப் போன்ற சோகம் அவளைப் பீடித்த தில்லை.. அவன் நினைவில் அவள் தவித்ததில்லை…

இப்போது மட்டும் எதற்காக அவள் மனம் கலங்குகிறாள் என்று யோசித்த போதுதான்.. அந்த மனக் கலக்கம் அபிஷேக்கின் திடிர் புறப்பாட்டால் ஏற்படவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது.. அவள் கலங்குவது வேறு ஒன்றுக்காக…

‘போ.. உன் வீட்டில்தான அவன் இருக்கான்..? போய் முடிந்தால் உன் முடிவை அவனிடம் சொல்…’

நிச்சயமாக ரகுநந்தன் சொன்னானே.. அவன் சொன்னதைப் போல.. அவள் வீட்டுக்குள் இருந்த அபிஷேக்கிடம் திருமணத்திற்கான அவளது சம்மதத்தை அவளால் தெரிவிக்க முடியாமலே போய் விட்டதே…

‘திஸ் இஸ் மை சேலன்ஜ்…’

சவாலில் அவன் ஜெயித்து விடுவானோ.. சந்தியா அவனிடம் தோற்று விடுவாளோ…

இதுதான் சந்தியாவின் உள்ளிருந்து அவளை உருக்கிக் கொண்டிருந்தது.. அவள் மீண்டும்.. மீண்டும்.. அபிஷேக்கின் நம்பருக்கு போன் பண்ண முயன்று கொண்டேயிருந்தாள்.. ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்ற பதில் தான் வந்தது..

‘என்னவாக இருக்கும்..’ தலையை உடைத்துக் கொள்ளாத குறையாக தலை முடியை பிய்த்துக் கொண்டாள்.. அந்த வார இறுதியில் அந்த மர்மம் வெளிப்பட்டது…

மகள் வீட்டிலேயே தங்கியிருந்த ஞானசம்பந்தருக்கும்.. கோதாவரிக்கும்தான் முதலில் தகவல் வந்தது…

“என்னடா இப்படிச் சொல்கிற..?”

போனில் பேசிய மகன் ஜனார்த்தனனை அதட்டினார் ஞான சம்பந்தர்…

மறுமுனையில் என்ன பதில் வந்ததோ.. அவர் குரல் உரத்து வெளிப்பட்டது…

“அது எப்படிடா..? இத்தனை நாளாய் உன் மகனின் நினைப்பு வேற மாதிரியில்ல இருந்தது.. இப்ப மட்டும் எப்படிடா புதுசா ஒரு நினைப்பு வந்தது..?”

“…..”

“வரும்டா.. வரும்.. நரம்பில்லாத நாக்கு.. புறண்டு தான் பேசும்.. இது நல்லதுக்கில்லை ஜனார்த்தனா..”

“……”

“வாழ்க்கை அவனோடதுதான்… வார்த்தையும் அவனோடது தானே.. இங்கே கிளம்பி வர்றப்ப என்ன வார்த்தை அவன் வாயில இருந்து வந்தது..? அந்த வார்த்தை இப்ப எங்கே போனது..?”

“…..”

“எனக்கு நீ வேற… ஜானகி வேற இல்லடா… ரெண்டு பேரையும் ஒன்னா இணைக்கிறதுக்கு இந்த சம்பந்தத்தைத்தான மலைபோல நம்பியிருந்தேன்… 

என் காலத்துக்குப் பின்னாலே.. நான் பெத்த ரெண்டு புள்ளைகளும் ஆளுக்கொரு திக்கில பிரிஞ்சு போறதா..? இதைக் கேக்கவா நானிருக்கேன்..?”

“…..”

“இதுக்கு மேல இங்கே எனக்கென்ன வேலை..? அதான் ஒட்ட இருந்ததையும் நீ வெட்டி விட்டுட்டயே.. நானும் உன் அம்மாவும் ராத்திரி ரயிலுக்கே கிளம்பி வர்றோம்…”

“…..”

“அந்த வேலையையெல்லாம் நீயே பண்ணிக்க.. அதுக்கு சாட்சியா நிற்க என்னால முடியாது…”

ஞான சம்பந்தரின் கோபத்தில் வீட்டிலிருந்த அனைவரும் நிமிர்ந்து அவரையே பார்த்தார்கள்.. போனை அணைத்து விட்டு மகளைப் பார்த்தவரின் விழிகளில் குற்ற உணர்வு இருந்தது..

“என்னப்பா..?” என்றாள் ஜானகி..

“உன் அண்ணன்தான் போன் பண்ணினான்…”

“என்னவாம்..?”

“அபிஷேக்குக்கு கல்யாணம் பேசி முடிவு பண்ணிட்டானாம்…”

குண்டுசி விழுந்தால் கூடச் சப்தம் கேட்டும் அளவிற்கு அடுத்த சில நொடிகளுக்கு அங்கே மௌனம் நிலவியது.. சந்தியாவால் தன் காதுகளை நம்ப முடிய வில்லை.. அவளிடம் கடற்கரையில் திருமணத்தைப் பற்றிப் பேசிய அபிஷேக்கா இதற்கு சம்மதம் சொல்லி-யிருக்கிறான்..?

‘திஸ் இஸ் மை சேலன்ஜ்…’

கட்டை விரலை உயர்த்திய ரகுநந்தனின் உருவம் அவள் மனதில் தோன்றியதில் அவள் உடல் அதிர்ந்து நடுங்கியது…

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link