Chapter 18
மெழுகுவர்த்தியின் மங்கிய வெளிச்சம் அந்த ஆடம்பரமான ஹாலின் செல்வச் செழுமையை மேலும் அதிகப் படுத்திக் காட்டிக் கொண்டிருந்தது.. மெலிதான மெல்லிசை ஹாலை நிறைத்திருக்க.. ‘ரிசர்வ்டு’ என்ற அட்டை வைக்கப் பட்டிருந்த டேபிளின் அருகேயிருந்த வேலைப்பாடுகள் மிகுந்த நாற்காலிகளில் ஒன்றை அவளுக்காக இழுத்துப் போட்டான் ரகுநந்தன்…
‘எனக்கு உட்காரத் தெரியாதா..?’ எரிச்சலுடன் உட்கார்ந்தாள் சந்தியா..
அவளுக்கு எதிர் நாற்காலியில் உட்கார்ந்தவன்.. டேபிளின் மீது கைகளை ஊன்றி அவளையே உற்றுப் பார்த்தான்.. அவனின் அந்த துளைக்கும் பார்வையை சந்திக்க இயலாமல் வேறு திசையில் பார்த்தாள் சந்தியா..
இது போன்ற ஹோட்டல்களுக்கு அவளும் சிலமுறை சென்றிருக்கிறாள்.. கல்லூரி சுற்றுலாவின் போது ஒருமுறை.. கல்யாணராமனுக்கு சம்பள உயர்வு வந்தால்.. குடும்பத்துக்கு ட்ரீட் கொடுக்கவென்று அழைத்துப் போகும் போது சில முறையென்று அவள் சென்றது உண்டுதான்..
அப்படிச் செல்லும் போதெல்லாம்.. அந்த அதீத ஆடம்பரத்துடன் ஒட்ட முடியாமல் அவள் மனம் விலகித்தான் நின்றிருக்கிறது..
“ஆயிரம் தான் சொல்லுங்கம்மா.. நீங்க செஞ்சு கொடுக்கிற இட்லிக்கும்.. கோழிவறுவலுக்கும் ஈடாகுமா அந்த ஸ்டார் ஹோட்டலோட சாப்பாடு..” என்றுதான் அவள் ஜானகியிடம் சொல்லுவாள்..
இன்று அப்படிப்பட்ட ஹோட்டல் ஒன்றில் ரகுநந்தனுக்கு எதிரில் அமர்ந்திருந்த போது.. இப்படியெல்லாம் தன் வாழ்நாளில் நிகழக்கூடும் என்று நினைத்துப் பார்த்திருப்போமா என்று அவளுக்குத் தோன்றியது…
பேரர் அருகே வந்தான்.. ரகுநந்தன் மெனுகார்டை கையில் எடுத்தான்..
“எனக்கு எதுவும் வேண்டாம்..” மறுப்பாகச் சொன்னாள் சந்தியா..
அவன் விழிகள் மெனுகார்டிலிருந்து உயர்ந்து அவளைக் கூர்மையாகப் பார்த்தன.. அந்தப் பார்வையின் தீட்சண்யத்தில் வாயடைத்துப் போனாள் அவள்..
நிதானமாக உணவு வகைகளை ஆர்டர் செய்து பேரரை அனுப்பி விட்டு அவள் பக்கமாக திரும்பியவன்..
“வாயைத் திறக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா..?” என்று அதிகாரமாக வினவினான்…
‘நானென்ன இவனுக்கு அடிமையா..?’ அவளது உள்ளம் கொந்தளித்தது..
பதில் பேசாமல் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. ரகுநந்தன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு முள் மேல் அமர்ந்திருப்பதைப் போல இருந்தது..
“நான் வீட்டுக்குப் போகனும்.. தேடுவாங்க..” என்றாள்..
அவன் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க.. அவள் கேள்வி அபத்தமாக இருப்பதை அவளால் உணர முடிந்தது.
மழைநேர மாலையில்.. இருட்டத் தொடங்கிய வேளையில்.. கொண்டு வந்த ஸ்கூட்டியை முன்பின் தெரியாத ஒருவனிடம் கொடுத்து அனுப்பி விட்டு ரகுநந்தனுடன் பேச வந்து உட்கார்ந்திருக்கிறாள்.. பேச வந்ததைப் பேசாமல் ‘வீட்டுக்குப் போகனும்.. தேடுவாங்க’ என்று எப்படி அவள் சொல்கிறாள்..? அவர்கள் தேடுவார்கள் என்று அவளுக்குத் தெரியாதா..?
“ஏதோ சொன்னீங்கள்ல.. என்ன அது..?” மனம் நடுங்கக் கேட்டாள்…
வேறு வழியில்லை.. என்ன விவரம் என்பதை அவள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.. அவளுடைய குடும்பத்தை ஓட விட்டிருக்கிறேன் என்று சொல்கிறான்.. ஓட விட்டு போட்டுத் தாக்குவதுதான் அவனுடைய வழக்கம் என்று வேறு வியாக்கினத்தை முன்னே வைக்கிறான்.. அது என்னெவென்று தெரிந்து கொள்ளாமல் அவளால் வீட்டுக்குப் போக முடியாது..
அவன் அதற்கும் பேசவில்லை.. ஆர்டர் செய்த உணவு வகைகளை பேரர் கொண்டு வந்து அவர்களின் டேபிளின் மீது பரத்தி வைத்து விட்டுப் போகும்வரை அவன் பேசாமல் இருந்தான்.. பேரர் போனதும் உணவு வகைகளை அவள் முன்னால் நகர்த்திவைத்தான்.. அவள் அதைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை…
“சாப்பிடு..” அழுத்தமான குரலில் அவன் ஆணையிட்டான்..
“இங்கே யாரோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே வாயைத் திறக்கக் கூடாதுன்னு சொன்னதா ஞாபகம்..” அவள் அசையாமல் சொன்னாள்…
கண்சிமிட்டும் நேரத்துக்கு அவன் விழிகளில் மின்னல் வந்து போனது.. உதடுகளை மடித்து வளைத்தவன்.. ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தபடி..
“பேச வாய் திறக்கும் போது.. சாப்பிடவும் வாய் திறக்கலாம்…” என்றான்..
“எனக்கு எதுவும் வேண்டாம்ன்னு அப்பவே சொல்லிட்டேன்.. நீங்க சொல்ல வந்ததைச் சொல்லிட்டா.. நான் பாட்டுக்கு என் வழியைப் பார்த்துக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்..” கறாராக அவள் சொன்னாள்..
“உனக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் மிஸ் சந்தியா.. உன் வாழ்க்கையின் மீதான முடிவுகளை நீ எடுக்கும் அதிகாரம் எப்போதோ உன் கையை விட்டுப் போய் விட்டது.. இப்ப டிஸிஸன் அத்தாரிட்டி நான் மட்டும்தான்.. ஸோ.. நான் சொன்னதை மட்டும்தான் உன்னால் கேட்க முடியும்..”
“பிதற்றல்..”
“உண்மை..”
“இப்ப.. இந்த செகண்டே.. உங்களோட அந்த அத்தாரிட்டியை நான் உடைச்சுக் காட்டறேன்.. என்னால இதுக்கு மேலேயும் இங்கே உட்கார்ந்திருக்க முடியாது.. ஸோ.. குட்பை.. நான் போகிறேன்..”
“எங்கே..?”
“என் வீட்டுக்கு..”
“போ.. அங்கே உன் குடும்பத்துக்கு பிரச்னைகள் காத்திருக்கு.. போய் எல்லோருக்கும் ஆறுதல் சொல்லு.. முடிந்தால் அவங்க மனம் உடைந்து பித்துப்பிடித்துப் போகாமலிருக்க என்ன செய்யனுமோ.. அதைச்செய்..”
தன் முன்னால் இருந்த உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட்ட வண்ணம் பேசிய ரகுநந்தன் அவளை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.. சந்தியா அப்படியே உட்கார்ந்து விட்டாள்.. அவள் கைவிரல்கள் நடுங்க ஆரம்பித்தன…
‘இவன் என்ன சொல்கிறான்..?’
துடிக்கும் உதடுகளுடன் அவனைப் பார்த்தாள்… அவனோ கருமமே கண்ணாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.. வேறு வழியில்லாமல் அவள் பக்கமாக அவன் நகர்த்தி வைத்திருந்த உணவு வகைகளை சாப்பிட ஆரம்பித்தவளுக்கு தொண்டை அடைத்தது.. கண்களில் நீர் தளும்பியது..
சாப்பிடுவது கூட கொடுமையான ஒரு செயலாக இருக்கக் கூடும் என்பதை அன்றுதான் அவள் கண்டாள்..
நிதானமாக சாப்பிட்டபடி அவளை நிமிர்ந்து பார்த்தவன்…
“வேற என்ன வேண்டும்…?” என்று வெகு அக்கறையாக அவளை விசாரித்தான்..
“கொஞ்சம் விசம்..” வெடுக்கென்று அவள் பதில் சொன்னாள்..
“அதை இன்னும் கொஞ்ச நாளில் உன் குடும்பத்தார் தேடுவார்கள்.. இப்ப வேறு ஏதாவது தேவைன்னா சொல்லு.. ஆர்டர் பண்றேன்..” அலட்டிக் கொள்ளாமல் அவன் பதில் சொன்னான்..
அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டைத் தூக்கி அவன் முகத்தில் கடாசினால் என்ன என்ற வெறி அவளுக்குள் கிளர்ந்தது.. அவளுடைய முகத்தில் பிரதி பலித்த உணர்வுகள் அதை அவனுக்கு உணர்த்தினாலும் அவன் அதைப்பற்றிக் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தினான்..
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.