Chapter 20
‘இவனுக்கு எத்தனை வியாபாரங்கள் தான் இருக்கின்றன..?’ கணக்குத் தெரியாமல் தவித்துப் போனாள் சந்தியா…
“அதை மல்ட்டி இன்டர் நேசனல் கம்பெனினுல்ல அண்ணா சொன்னான்..?” தனக்குள் பேசிக் கொள்பவளைப் போல கேட்டுக் கொண்டாள் சந்தியா..
“எனக்கு எண்பது சதவிகிதமும்.. இன்டர் நேசனல் கம்பெனிக்கு இருபது சதவிகிதமும் இருக்கின்ற அந்தக் கம்பெனிக்கு முதலாளியாய் யார் இருக்க முடியும்..? நீ எம்.காம் படிக்கிறவளாச்சே.. நீயே யோசிச்சுச் சொல்லு..” என்றான் ரகுநந்தன்…
யோசிக்காமலே அது ரகுநந்தன்தான் என்று சந்தியாவுக்குத் தெரிந்தது.. ஆர்வமாக வேலை செய்து கொண்டிருந்த சுதர்சனத்தின் நினைவில் அவள் கண்கலங்கி விட்டாள்…
“அண்ணாவுக்கு திறமை இருக்கு..”
“இல்லேன்னு நான் சொன்னேனா..? ஆனாப் பாரு சந்தியா.. நம்ம நாட்டில் திறமைசாலிக கொட்டிக் கிடக்கிறாங்க.. இருந்தும் உன் அண்ணனைத் தேடிப் பிடித்து நான் வாய்ப்புக் கொடுத்தேன்.. எக்ஸாம் ரிசல்ட் கூட வராத நேரத்தில அப்படிப்பட்ட வாய்ப்பை யார் கொடுப்பாங்க..?”
“நீதான் கொடுப்பாய்.. நீதான் கொடை வள்ளலாச்சே.. கடையேழு வள்ளல்களின் பெயரோடு உன் பெயரையும் சேர்க்க வில்லையேன்னு வரலாறு விசனப் படுதாமே…”
“ஈஸிட்..? இப்ப என்ன கெட்டுப் போச்சு.. இனிமே என் பெயரையும் சேர்த்து எழுதச்சொல்லு…”
“எனக்கு வேறென்ன வேலை..? அதைச் சொல்லி விட்டு வருகிறதுதானே என் வேலை..? சொல்லிட்டாப் போச்சு..”
“அவசரப்படாமல் மெதுவாச் சொல்லு.. ஏன்னா.. நினைத்தது நடக்கலைன்னா.. இந்த வள்ளல் கொடுத்ததைப் பிடுங்கிக்குவான்…”
அவன் இரக்கமில்லாமல் சொன்னான்.. அதைக் கேட்க முடியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டாள் சந்தியா.. கொடுத்துப் பறிப்பதை விட கொடுமையான செயல் வேறு எதுவும் இருக்கிறதா..? அதற்கு கொடுக்காமலே இருந்திருக்கலாமே..
“அப்படி எப்படி இருக்க முடியும்..? நான் நினைத்தது எனக்கு நடக்க வேண்டாமா..?” அவன் நியாயம் கேட்டான்.
அப்போதுதான் சுதர்சனம் கார் வாங்கியிருந்தான்.. அதை அவனுக்கான பங்குப் பணத்திலிருந்து வாங்கிய தாகப் பெருமைப் பட்டுக் கொண்டு.. ஊரெல்லாம் சுற்றி வந்தான்..
“இந்த ஆப்பர்சூனிட்டி மட்டும் இல்லைன்னா அண்ணன் நொறுங்கிப் போயிருவான்..” வேதனையுடன் பேசினாள் சந்தியா…
“ம்ம்ம்.. பாயிண்டைப் பிடிச்சுட்ட பார்த்தியா… உன் அண்ணனுடன் போட்டிருக்கிற அக்ரிமெண்டில் முக்கியமான கண்டிசன் ஒன்னு இருக்கு அது என்னன்னா.. ‘மகாவீர்’ கம்பெனியோட வேலைகளில் திருப்தி வரலைன்னா.. கட்டிடம் எந்த அளவுக்கு வந்திருந்தாலும் அதை மைன்ட் பண்ணிக்காம அந்த செகண்டிலேயே என் கம்பெனி.. ‘மகாவீர்’ கம்பெனிக்கு கொடுத்திருக்கிற காண்ட்ராக்டை முறிச்சுத் கொள்ளலாம்.. அதோடு.. கூடுதலாக.. திருப்தி வராத வகையில் வேலை செய்து கால தாமதத்தை உண்டு பண்ணியதற்காக உன் அண்ணனிடம் கோடிக்கணக்கில் நஷ்ட ஈட்டைக் கேட்கலாம்…”
ரகுநந்தன் விவரித்தான்.. வேட்டைக்காரனின் கண்களைப் போல அவன் கண்களும் ஜொலித்தன…
‘இவனும் வேட்டைக் காரன்தான்..’ என்று நினைத்துக் கொண்டாள் சந்தியா..
கண்ணி வைத்துப் பிடிப்பவன்.. நிதானமாக திட்டம் தீட்டி.. அவள் குடும்பத்தாருக்கு வலை விரித்துக் காத்திருந்து பிடித்திருக்கிறான்.. இவன் வலையில் அகப்பட்டு விட்டதை அறியாதவர்களாக அவர்கள் சந்தோசம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்..
“நீ ஸாடிஸ்ட்..” சந்தியா பொருமினாள்..
“இருக்கலாம்.. இந்த ஸாடிஸ்டுக்கும் மனதுன்னு ஒன்று இருக்கு.. அந்த மனதில் நீ மட்டும்தான் இருக்க..”
“வேண்டாம்.. சொல்லாதே.. இருந்திருந்து உன் மனதிலா நான் இருக்க வேண்டும்..? என் அப்பாவுக்கு என்ன கண்ணி வைத்திருக்கிறாய்..?”
“ஆமாமில்ல.. அதை இன்னும் சொல்லலைல்ல.. அண்ணி கதையைச் சொல்லியாச்சு… மைத்துனன் கதையையும் ஒப்பிச்சாச்சு… அடுத்தது மாமனாரின் கதைதானே… உன் அப்பாவுக்கான புரமோசன் கேன்சலாகும்.. அதோடு கதை முடியாது.. இப்ப இருக்கிற சென்னை பிரான்சை விட்டு.. உன் அப்பா தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றப்படுவார்..”
“நீயென்ன கடவுளா..?” சந்தியா கனல் கக்கினாள்..
“என்னவோ குறி சொல்கிறதைப் போல சொல்லிக் கிட்டு இருக்கிற.. என் வீட்டாரின் தலைவிதியை மாற்றி எழுத நீ யார்..?”
“அதுதான் ‘நவீன பிரம்மா’ ன்னு அப்போதே சொல்லிட்டேனே..”
“அண்ணன் கூட அக்ரிமென்ட் போட்டிருக்கிறது வேண்டும்னா உன்னோட கம்பெனியா இருக்கலாம்.. ஆனா.. அக்காவோட ஜாபிலயும்.. அப்பாவோட புரமோசனிலயும் விளையாட உன்னால எப்படி முடியும்..?”
“சிம்பிள்.. ஆக்சுவலா.. உன் அக்காவை விட அதிகமார்க் எடுத்த ஒரு கேண்டிடேட் வேலை வேண்டாம்ன்னு விலகிக்கிறதா கடிதம் கொடுத்ததினால தான் உன் அக்காவுக்கு சான்ஸ் கிடைக்கிறதா இருக்கு.. இன்னும் புராப்பராய் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்
வரலை.. நான்தான் அந்தக் கேண்டிடேட்டுக்கு அவங்க வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தால் எவ்வளவு தொகை கிடைக்குமோ.. அதைவிட ஆறுமடங்கு அதிகமான பணத்தைக் கையில் கொடுத்து.. அருமையான பிரைவேட் ஸ்கூல் ஒன்றில் வேலையும் வாங்கிக் கொடுத்தேன்.. அந்த ஸ்கூல் சென்னையிலேயே இருக்கிறது.. அங்கே வேலை பார்க்கிற டீச்சர்கள் கவர்ண்மென்ட் ஜாப் கிடைத்தாலும் வேலையை விட்டுப் போக மாட்டாங்க.. அந்த அளவுக்கு அதிகச் சம்பளம்.. மரியாதை.. அது.. இதுன்னு ஏகப்பட்டது அங்கே இருக்கு.. நான் கொடுத்த பணத்திலே சென்னையிலே வீடு வாங்கி.. அவங்க செட்டிலும் ஆயிட்டாங்க.. இப்பப் புரியுதா.. உன் அக்காவுக்கு எப்படி வேலை கிடைக்குதுன்னு..?”
“அதான் அவங்க கடிதம் கொடுத்தாச்சே.. அப்புறமும் எப்படி அக்காவுக்கு அந்த வேலை கிடைக்காம போகும்..?”
“முட்டாளா நீ..? இவ்வளவு வேலை செய்தவனுக்கு அவங்களை திரும்பவும் உள்ளே நுழைக்கத் தெரியாதா..? அந்தக் கடிதத்தை இல்லாமல் போக வைக்க எனக்கு ஒரு செகண்ட் கூட ஆகாது.. அவங்க திரும்பவும் போட்டிக்கு வந்துட்டா.. உன் அக்காவுக்கு கன்பர்மா வேலை கிடைக்காது..”
“கடவுளே..” கண்களை மூடிக் கொண்டாள் சந்தியா..
“உன் அக்கா இப்ப வேலை பார்க்கிற ஸ்கூலுக்கு நோட்டிஸ் கொடுக்கிறப்ப.. அட்வான்ஸா ஒரு வரியை சேர்த்து எழுதச் சொல்லி வாங்கியிருக்காங்க.. அது என்னன்னா.. மூன்று மாத கால கெடு முடிந்ததும்.. நிச்சயமாய் அவங்க வேலையை விட்டு விலகிவிடுவாங்க.. தொடர்ந்து வேலை செய்ய நினைக்க மாட்டாங்க.. அதையே அவங்க கொடுக்கிற ராஜினாமாக் கடிதமாக எடுத்துக் கொள்ளலாம்…”
“அக்கா எப்படி இப்படி முட்டாள் தனமா எழுதிக் கொடுத்தா..? வெறும் நோட்டிஸை மட்டும் கொடுன்னு அப்பா படித்துப் படித்துச் சொன்னாரே.. இதை எங்களிடம் கூடச் சொல்லலையே..”
“அவங்களுக்கே அது தெரியாது.. அவசரத்தில சகுந்தலாதேவி சொன்ன கண்டிசனை சேர்த்து எழுதியிருக்காங்க.. அதன்படி இன்னும் ஏழே நாளில் அவங்க இப்பப் பார்த்துக்கிட்டு இருக்கிற வேலையை விட்டு நின்றாகனும்…”
“இன்னும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வரலையே..”
“அது வருகிறதும்.. வராததும் உன் கையில்தான் இருக்கு.. ம்ம்ம்.. அப்புறம் உன் அப்பாவின் கதையும் இதைப் போலத்தான்.. ரீஜினில் மேனேஜர் புரமோசன் லிஸ்டில உன் அப்பாக்கு முதலில் இருந்த ஆறு பேர் புரமோசனே வேண்டாம்ன்னு எழுதிக் கொடுத்திருக்காங்க.. ஏழாவதாகத்தான் உன் அப்பாவின் பெயர் இருக்கு.. அந்த ஆறுபேருக்கு சான்ஸ் கிடைத்து.. உன் அப்பாவின் முறை வருவதற்குள் அவர் ரிட்டயராகி.. யாரோ.. எவரோ.. என்று ஆகியிருப்பார்.. என் புண்ணியத்தில் இது நடந்திருக்கிறது..”
ரகுநந்தன் பெருமையடித்துக் கொண்டான்…
‘இந்தப் புண்ணியத்தை யார் கேட்டது…?’
சந்தியாவின் மனம் எரிந்தது.. கல்யாணராமன் பாவம்.. தான் உண்டு.. தன் வேலையுண்டு என்று இருந்தவர்.. புரமோசனைப் பற்றிய கனவு அவரிடம் துளிக்கூட இருந்ததில்லை.. இருப்பதே போதும் என்று நினைத்தவர்.. அவருக்குப் போய் ரீஜினல் மேனேஜர் பதவி கிடைக்கும் என்ற ஆசையைக் காட்டி.. அதை வளர்த்து மரமாக்கி விட்டு.. வேரோடு பறிக்க இவன் நினைக்கிறானே.. இது அடுக்குமா..?
“எனக்கு அடுக்கும்..” என்றான் அவன்..
“சும்மா இல்லைம்மா.. ஒன்றுக்கு ஆறு பேர்.. ரீஜினல் மேனேஜர் புரமோசன் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்க வேண்டும்.. சும்மாவா எழுதிக் கொடுப்பார்கள்..? உன் அக்கா கதைதான் இங்கேயும்.. அவங்கவங்க இருக்கிற ஊரில ஆளுக்கொரு அபார்ட்மென்டை வாங்கிக் கொடுத்திருக்கேன்.. கொஞ்ச நஞ்ச பணமில்லை…
கோடிக் கணக்கான பணத்தை வாரி கிடைத்திருக்கிறேன்.. யாருக்காக..? எல்லாம் உனக்கா..”
“நான் இதைக் கேட்டேனா..?”
“கேட்டுத்தான் நான் கொடுக்கனுமா..?”
“கொடுத்ததை திருப்பிப் பறிக்கறதுக்கு கொடுக்காமலே இருந்திருக்கலாமே.. அது பெட்டராச்சே..”
“பறிக்கனும்னு எனக்கு மட்டும் ஆசையா..? நீ மனது வைத்தா.. அது காலமெல்லாம் நிலைத்திருக்குமே..”
“என் அப்பாவுக்கு மட்டும் இதெல்லாம் உன் உபயத்தில் வந்ததுன்னு தெரிஞ்சதுன்னு வைய்யி.. எதுவும் வேண்டாம்ன்னு தள்ளி வைத்து விடுவார்…”
“அதுக்குப் பின்னாலே என்ன ஆகும்..? அதை யோசிக்க மாட்டேங்கறியே..”
“அப்பாவுக்கு புரமோசன் போனா என்ன..? அவர் எப்பவும் போல மேனேஜராவே இருந்துட்டுப் போவார்.. அதுக்கு எதுக்காக தண்ணியில்லாத காட்டுக்கு அவர் மாறனும்..?”
“என் அக்கவுண்ட்ஸை நான் குளோஸ் பண்ணுவேன்.. அதுக்கு உன் அப்பாவின் அஜாக்கிரதைதான் காரணம்ன்னு சொல்லுவேன்.. யு நோ.. உன் அப்பா இத்தனை காலமா அதே போங்கில கண்டினியு ஆகிறதுக்கு காரணமே என் அக்கவுண்ட் அங்கே இருக்கிறதுதான்.. உன் அப்பாவை தண்ணியில்லாத காட்டுக்கு தூக்கியடிக்க என்னால முடியும்.”
“அவருக்கு இது தேவைதான்..” வெறுப்புடன் சொன்னாள் சந்தியா…
“உன்னைப் போய் பெரிய மனிதன்னு கொண்டாடினாரே.. அந்த மனுசருக்கு அதுக்கான பரிசை நீ கொடுக்க வேணாமா..? அதான்.. அவருக்கும் அவர் பெத்த பிள்ளைகளுக்கும் சேர்த்து நீ குழி பறித்திருக்க..”
ரகுநந்தன் உதட்டைக் கடித்துக் கொண்டு ஓர் நொடி மௌனமாக இருந்தான்.. மறுநொடியில் தோளைக் குலுக்கிக் கொண்டு எழுந்தான்.. கூடவே சந்தியாவும் எழுந்தாள்…
வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்த காரில் அமர்ந்திருந்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. மனதுக்குள் சூர்யாவின் முகமும்.. சுதர்சனத்தின் முகமும் வந்து போயின…
கல்யாணராமன் எதையும் தாங்கும் திட மனம் படைத்தவர்.. அவருக்கான ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்வார்.. வருவதை எதிர்கொள்வார்.. ஆனால்.. பிள்ளைகளுக்கென்று வந்து விட்டால்.. சின்னத் துன்பத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள மாட்டார்.. உடைந்து விடுவார்…
“இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வரலையேப்பா…”
முதல்நாள் தான் கவலை அப்பிய முகத்துடன் சூர்யா சொல்லிக் கொண்டிருந்தாள்.. அவள் விழிகளில் தெரிந்த பயத்தில் ஜானகியும் கல்யாணராமனும் கவலைப் பட்டுப் போனார்கள்.. அவர்கள் சொல்லிய ஆறுதல் வார்த்தைகளில் ஒன்றைக்கூட சூர்யாவின் கணவன் சொல்லவில்லை.. இறுகிப் போன முகத்துடன் உட்கார்ந்திருந்தான்…
“ம்ஹீம்.. கிளி போல பொண்ணை வளர்த்து.. கடுவன் பூனைக்கு கட்டிக் கொடுத்திருக்கேன்..” பொறுக்க மாட்டாமல் சொல்லிவிட்டாள் ஜானகி..
சுதர்சனமோ.. சாப்பிடும் போது கூட.. காற்றில் கட்டிடத்துக்கான வரைபடத்தை வரைந்து கொண்டிருந்தான்..
“என்னங்க.. இவன் இப்படியிருக்கான்..” ஜானகி பயந்து போனாள்..
“இந்தக் கம்பெனி மட்டும் வேலையை நிறுத்துன்னா சொன்னா இவனுக்கு பைத்தியமே பிடிச்சுருமோ..”
சமையலை மறந்து அவள் கவலையாய் உட்கார்ந்து விட்டதை நினைத்துப் பார்த்தாள் சந்தியா..
இதோ.. அவை அத்தனையின் ஆணிவேராய் இருப்பவன் அவளருகே அமர்ந்து.. அனைத்துக்கும்.. அவனுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாததைப் போலக் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.. இவன் நினைத்தால் மட்டுமே அத்தனையும் நிலைக்கும்.. இவன் மனது வைக்காவிட்டால்.. அவை அத்தனையும் ஒரு நொடியில் உரு மாறி.. உருக் குலைந்து விடும்…
சந்தியாவின் வீடு இருக்கும் தெரு முனைவந்தது.. காரின் வேகத்தை குறைத்தான் ரகுநந்தன்.. சந்தியா கேள்வியாக பார்த்தாள்..
“இங்கேயே இறங்கிக்கிறயா..? இல்லை.. உன் வீட்டு வாசலில் இறக்கி விடவா..?” அவன் கேட்டான்..
“தெருமுனையில் இறங்கிப் போனா நல்லாத்தான் இருக்கும்..” சந்தியா எரிந்து விழுந்தாள்…
ரகுநந்தன் வேகம் கூட்டினான்.. கல்யாணராமனின் வீட்டு வாசலில் கார் நின்றது.. சந்தியா இறங்குவதற்காக அவன் காத்திருந்தான்.. சந்தியா வீட்டைப் பார்த்தாள்..
கார் சப்தத்தில் கல்யாணராமன் வந்து எட்டிப் பார்ப்பது தெரிந்தது.. இனி அவள் இறங்க வேண்டும்.. வீட்டுக்குள் போக வேண்டும்..
அதற்குப் பின்னால..?
சந்தியா முடிவெடுத்து விட்டாள்.. அனைத்தையும் தடுப்பது அவள் கையில்தான் இருக்கிறது என்றால் எதற்காக அவள் யோசிக்க வேண்டும்.? அவள் சொல்லும் மூன்று வார்த்தைகளில்… அவளுடைய அப்பா.. அண்ணன்.. அக்கா.. ஆகிய மூவரின் எதிர்காலமும் அடங்கியிருக்கின்றன என்றால் அந்த வார்த்தைகளைச் சொல்ல ஏன் அவள் தயங்க வேண்டும்..? சாய் நாதனைப் போன்ற ஒருவனுடனேயே அவளுடைய அக்கா வெற்றிகரமாக குடும்பம் நடத்தி.. ஒரு குழந்தையையும் பெற்றிருக்கும் போது.. அவள் ரகுநந்தனுடன் குடும்பம் நடத்த மாட்டாளா..? தோற்றுப் போய் விடுவாளா..?
“ஐ லவ் யு..” என்றாள் சந்தியா..
“ஏய்ய்..” ரகுநந்தனின் முகம் பிரகாசமானது…
“அப்பா வருகிறார்.. இனி என்ன செய்யனுமோ.. அதைச் செய்து விடுங்க…”
“மரியாதை திரும்பிருச்சு போல…”
“என்ன செய்கிறது..? காதலித்துத் தொலைக்க வேண்டும்ன்னு ஆகிப் போச்சு.. கட்டிக் கொண்டு குடும்பம் நடத்தப் போகிறவராகவும் ஆகித் தொலைச்சுட்டிங்க.. மரியாதை கொடுத்துத்தானே ஆகனும்..?”
“சந்தியா..”
“ம்ம்ம்..”
“ஐ லவ் யு..”
அவள் சட்டென்று அவன் முகம் பார்த்தாள்.. அந்த முகத்தில் இப்போது வேட்டைக்காரனின் தீவிரம் இல்லை.. பாறை போன்ற கடினம் இல்லை.. மென்மையாய்.. அவள் காதலுக்கு உரியவனாய்.. அவள் முகத்தை தாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..
அந்த முகத்தில் தெரிந்த காதலில் அவள் தடுமாறிப் போனாள்.. கத்தி முனையில் நிற்க வைத்து காதல் வாங்கிக் கொண்டவன் இத்தனை கம்பீரமான ஆண்மை நிறைந்த அழகுடன் இருந்து தொலைக்க வேண்டுமா என்று அவள் மனம் கேட்டது..
சந்தியாவின் கை மீது படிந்த ரகுநந்தனின் கை அதை இறுகப் பற்றியது..
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.