Chapter 23
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள் சந்தியா.. பச்சை வண்ணப் பட்டுப் புடவையும்.. நகைகளுமாக அழகாகத் தெரிந்தாள்…
“என் கண்ணே பட்டுரும் போல இருக்கு..”
மகளைக் கொஞ்சி விட்டு.. சமையலரைக்கு ஓடினாள் ஜானகி.. இன்னும் கொஞ்ச நேரத்தில் சந்தியாவைப் பெண் பார்க்க வரும் ரகுநந்தனின் குடும்பத்தினருக்கு டிபன் செய்து வைக்க வேண்டுமே..
“சூர்யாவை கூப்பிட்டுக்கலாமில்ல.. தங்கையைப் பெண் பார்க்க வர்றாங்க இன்னைக்கு ஒரு நாளைக்கு அவ லீவ் போட்டா ஆகாதா..?”
மனைவி மட்டும் தனியாக அல்லாடுவதைப் பார்த்து விட்டு கல்யாணராமன் சப்தம் போட்டார்.. ஜானகி அவரை அடக்கி விட்டாள்…
“சாயங்காலமா.. மாப்பிள்ளை ஆபிசில இருந்து வந்ததும்.. சேர்ந்து வர்றேன்னு சொல்லிட்டா.. அதுக்கு மேலே அவளை வற்புறுத்தினா நல்லாயிருக்காதுங்க.. அவளுக்கு என்ன பிரச்னையோ…”
இது தான் தாய் மனது.. எந்தவொரு தருணத்திலும் மகளிடம் உதவி கேட்காது.. மகளுக்குத்தான் உதவி செய்யும்..
சுதர்சனம்தான் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து.. வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தான்.. வேலைக்காரப் பெண் துடைத்து சுத்தம் பண்ணியிருந்த வீட்டை அழகு படுத்தினான்.. ஜன்னல்களுக்கு புதிதாக திரைச் சீலைகளை வாங்கி மாட்டி விட்டான்.. பழைய சோபாக்களை அப்புறப் படுத்தி விட்டு புதிதான சோபாக்களை இறக்குமதி செய்தான்..
“எதுக்குடா வீண் செலவு..” என்ற கல்யாண ராமனிடம்..
“இது தேவையான செலவுப்பா.. வருகிறவங்க கோடிஸ்வரங்க.. அவங்க அளவுக்கு இல்லைன்னாலும்.. நாமும் நன்றாகத்தான் இருக்கிறோம்ன்னு அவங்களுக்கு காட்ட வேண்டாமா..?” என்று சொல்லி விட்டான்…
“பணத்துக்கு என்ன செய்த..?”
“இப்ப நானும் சம்பாதிக்கிறேன்ப்பா.. தங்கச்சி கல்யாணத்தில இந்த அண்ணனின் பங்கும் இருக்க வேண்டாமா..?”
‘இவன் அருமையான அண்ணன்தான்..’ எல்லா வற்றையும் கவனித்துக் கொண்டிருந்த சந்தியாவின் கண்களில் நீர் தளும்பியது…
அதனால்தான்.. மற்றவர்களால் கவனிக்க முடியாததை அவன் கவனித்திருக்கிறான்..
“சொல்லு சந்தியா.. நீயும் அவரும் காதலர்கள்ன்னு ரகுநந்தன்தான் சொன்னார்.. நீ வாயே திறக்கலை.. உன் முகத்தில சந்தோசமும் இல்லை..”
“அப்படியெல்லாம் இல்லைண்ணா.. நீயா கற்பனை செய்துக்காதே…”
“பொய் சொல்லாதே… காதலிக்கிறவ.. உன் காதலன் கிளம்பும் போது அவரை வழியனுப்ப வாசல் வரைக்கும் ஏன் வரலை..?”
அன்றைய இரவில் பால்கனியின் இருட்டில்.. தனிமையில் அவள் துயரப் பட்டுக் கொண்டிருந்த போது.. சந்தடி செய்யாமல் வந்து நின்று அவள் முகத்தை உற்றுப் பார்த்து இந்தக் கேள்வியினை அவன் கேட்டான்…
‘இவன் உண்மையிலேயே புத்திசாலிதான்…’
சந்தியாவின் முகம் கனிந்தது.. அவளுடைய அண்ணனை ஆதுரத்துடன் அவள் பார்த்தாள்…
‘இப்படிப்பட்டவன் தோற்றுவிடக் கூடாது.. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்..’
அவள் எடுத்த முடிவில் சஞ்சலப் பட்டுக் கொண்டிருந்த அவள் மனம் அமைதியடைந்தது.. இந்த அண்ணனுக்காக எதையும் தாங்கிக் கொள்ளலாம் என்று அவள் நினைத்தாள்.. அந்த நினைவு தந்த மன இதத்தோடு பேசினாள்…
“நீயா மனசைப் போட்டு குழப்பிக்காதே.. அம்மா பக்கத்திலே நின்னுக்கிட்டு இருக்காங்க.. அப்பாவும் நீயும் அவர்கூட வாசல் வரைக்கும் போயிருக்கீங்க.. இதில நான் எப்படி வந்து நின்னு டாட்டா காட்டறது..?”
“நீ நினைச்சிருந்தா அதைச் செய்திருக்கலாமே..”
உண்மைதான்.. காதலில் அது சாத்தியம்தான்.. மாடிக்கு ஓடிப் போய் நின்று பால்கனியில் எட்டிப் பார்த்து கையசைத்திருக்கலாம்.. இல்லையென்றால்.. ஜானகியின் முதுகுக்குப் பின்னால் நின்று கையசைத்திருக்கலாம்.. இது எதையும் அவள் செய்யவில்லை…
எப்படிச் செய்வாள்..? அவள் மனதிலதான் ரகுநந்தனின் மீது காதல் இல்லையே.. இல்லாத காதலை.. இருப்பதைப் போலக் காட்ட அவளுக்குத் தெரிய வில்லையே.. அவள் பாவம்.. என்ன செய்வாள்..? காதலை மனதுக்குள் வைத்துக் கொண்டா அவள் வஞ்சம் செய்கிறாள்..?
“அண்ணா ப்ளீஸ்.. உனக்கே தெரியும்… அவர் வெரி ஹேண்ட்சம் மேன்னு.. அவரைக் காதலிக்கிறதா நான் பாவ்லா செய்யறேனா..? எதுக்காக அப்படி பாவ்லா செய்யனும்..?”
“எனக்காக செய்கிறாயோ.. என்னவோ…”
“அண்ணா..” சந்தியா திகைத்து விட்டாள்…
“யெஸ்.. என்கூட அக்ரிமெண்ட் போட்டிருக்கிற கம்பெனி ரகுநந்தனுடையது.. அந்த இன்டர்நேசனல் கம்பெனிக்கு கால்வாசிதான் ஷேர் இருக்கு.. முக்கால் வாசி ஷேர் ஹோல்டர் ரகுநந்தன்தான்.. இந்த விவரம் போன வாரம் தான் எனக்குத் தெரியவந்தது.. அப்ப அதைப்பத்தி ஒன்னும் பெரிசா நினைக்கலை.. இப்ப நடக்கிறதை யெல்லாம் பார்க்கிறப்ப எனக்காகத்தான் நீ இதை செய்கிறாய்ன்னு நினைக்கத் தோணுது…”
‘நல்லவேளையாக இவன் கல்யாணராமனின் பிரமோசனையும்.. சூர்யாக்காவின் கவர்ண்மென்ட் ஜாபையும் நினைச்சுப் பார்க்கலை…’ ஆறுதலடைந்தாள் சந்தியா…
“எனக்காக அவர் இதைச் செய்திருக்கலாமோ என்னவோ.. அது எனக்குத் தெரியாது.. ஆனா.. அவர் திறமையில்லாதவங்களிடம் எந்த வேலையையும் ஒப்படைக்க மாட்டார்.. அது எனக்குத் தெரியும்.. அதோட.. அவரோட காதலை இப்பத்தான் நான் ஏத்துக்கிட்டு இருக்கேன்.. எனக்கும் அது அவரோட கம்பெனின்னு இன்னைக்குத்தான் தெரியும்…”
உண்மையைத்தான் சொன்னாள் சந்தியா.. அப்படியும் சுதர்சனம் அமைதியடைந்து விடவில்லை.. தூண்டித் துருவினான்..
“உன் முகத்தில் சந்தோசம் இல்லாதது கூட எனக்குப் பெரிசாத் தோணலை.. ஏதோ ஒரு நிர்பந்தத்தில மாட்டிக் கிட்டதைப் போல ஒரு பதட்டம் தெரியுதே.. அது ஏன்..? உன்னைப் பார்த்தா காதல் வயப்பட்ட பெண் போலத் தெரியலை சந்தியா..”
‘ஊஹீம்.. மிகச் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் இவனை அடக்குவது என்பது மிக.. மிக கடினமான ஒன்று..’
எப்படிப்பட்ட பதிலைச் சொன்னால் அவன் அடங்குவானோ.. அப்படிப்பட்ட பதிலை உடனடியாகச் சொன்னாள் சந்தியா…
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.