Chapter 29
‘எதற்காக இப்படிப் பார்க்கிறான்..?’
அதுவரை அப்படியொரு பார்வையை அவன் பார்த்த தில்லை.. பட்டுக் கொள்ளாத அது போன்ற பார்வையை அப்போதுதான் அவன் பார்க்கிறான்.. அப்படிப்பட்ட பார்வையைக்கூட அவனால் பார்க்க முடியும் என்பதை அன்றுதான் சந்தியா உணர்ந்தாள்..
“என்னாச்சு..?”
கலவரத்துடன் வினவிய அவள் விழிகளின் கலக்கத்தில் அவன் எதைக் கண்டானோ ஒரு பெருமூச்சுடன் கையிலிருந்த பத்திரிக்கையை மூடி வைத்துவிட்டு அவள் பக்கமாக திரும்பி அமர்ந்தான்..
“நான் உன் அத்தான்தான்.. இன்னும் சொல்லப் போனா.. நான் மட்டும்தான் உன் அத்தான்.. ஆனா.. அதை உனக்கு உன் அண்ணன்தான் உணர்த்தனுமா..? நீயாக உணர மாட்டியா..?”
“அத்தான்…”
இயல்பாக அத்தான் என்று மிரள மிரள விழித்தவளின் மீது அவனுக்குள் காதல் பெருகியது.. அவன் தோளில் தலை சாய்த்திருந்தவளின் உச்சந்தலையில் அவன் முத்தமிட்டான்.. அதில் அவள் முகத்தில் பரவிய நிம்மதியைப் பார்த்த போது.. அவள்.. அவனிடத்தில் எப்போதோ வந்து விட்டாள் என்ற செய்தி அவனுக்குப் புரிந்தது…
“ஐ லவ் யு சந்தியா.. இதை பலமுறை உனக்குச் சொல்லியிருக்கேன்.. ஒரு தடவை கூட நீயாய் எனக்கு இதைச் சொன்னதில்லை.. அதைப் பற்றிக் கூடக் கவலைப் பட்டுக்கலை.. ஆனா.. என்னை எப்படிக் கூப்பிடனும்னு உன் அண்ணன் சொல்லிக் கொடுத்து நீ கூப்பிடற பாரு.. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை…”
அவன் சொன்னதை சந்தியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. ஒரு வகையில் அவன் சொல்வதும் உண்மைதானே.. சுதர்சனத்தின் வழிகாட்டுதலினால்தான் அவள் கண்கள் திறந்தன…
“என்கூட மனம் விட்டுப் பேச மாட்டேன்ங்கிற.. அதுவே உன் அண்ணன்னா மனம் விட்டுப் பேசற.. எப்படி சந்தியா..? நமக்கு மேரேஜ் ஆகிருச்சு.. இனிக் காலம் முழுவதும் உனக்கு நான்.. எனக்கு நீதான்.. நமக்குள்ள வர்ற இன்ப துன்பத்தை நமக்குள்ள மட்டும்தான் நாம் பகிர்ந்துக்கனும்.. இதில நடுவில உன் அண்ணனை எதுக்காக வர வைக்கிற..?”
“இல்லை.. அப்படியில்லை.. அவனிடம் பெர்ஸனலா பேசனும்னு நான் நினைக்கலை.. அவனாத்தான் கண்டு பிடிச்சுக் கேட்டான்…”
சந்தியாவால் பேச முடியாமல் தொண்டை கமறியது.. அவள் கண்கலங்கினாள்.. ரகுநந்தன்..
“ஸ்ஸ்..” என்று அவள் தோள் மீது கை போட்டு அதட்டினான்..
“அவர் என்ன கேட்டார்..? நீயென்ன சொன்ன..?”
“அது வந்து.. அது வந்து…”
“ஊஹீம்.. நீங்க இரண்டு பேரும் என்ன பேசிக் கிட்டிங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகனும்.. திஸ் இஸ் வெரி இம்பார்ட்டண்ட் டு மி.. எனக்குத் தெரியாத எந்த ரகசியமும் உன் மனதில் இருக்கக் கூடாது…”
“ஒரு மண்ணும் இல்லை…” சந்தியாவுக்கு கோபம் வந்தது…
இவன் மனதுக்குள்ள என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்..? சந்தியாவின் மனதில் என்ன ரகசியம் இருக்கப் போகிறது..? அபிஷேக் என்ற மாமன் மகன் ஒருவன் இருந்தான்.. அவனைத்தான் அவள் திருமணம் செய்து கொள்வதாக இருந்தாள்.. என்ற விவரமெல்லாம் அவனுக்குத் தெரியும்தானே.. அதைத் தவிர்த்த வேறு எந்த ரகசியம் அவள் மனதில் இருக்கப் போகிறது..?
“ஒரு மண்ணும் இல்லாமலா உன் அண்ணனிடம் ரகசியம் பேசின..?”
“அது ரகசியமே இல்லை.. அவன் உங்களை அத்தான்னு கூப்பிட்டான்.. எனக்கு என்னவோ போல இருந்தது…”
“ஏன்..?” ரகுநந்தனின் கண்கள் இடுங்கின…
சந்தியா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. சொல்லி விட வேண்டும்.. இதனால் என்ன வந்தாலும் அவள் அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்..? அவள் மனதைப் பாடாய் படுத்திய அந்தத் துயரம் எதனால் வந்தது என்பதை அவள் அவனிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்…
“ம்ப்ச்.. அத்தான்னு சொன்னவுடன் எனக்கு.. அந்த அபிஷேக்கின் ஞாபகம்தான் வந்து தொலைக்குது…”
சந்தியா ரகுநந்தனின் தோளை விட்டு விலகி அமர்ந்தாள்.. ஜன்னல் வழியே வெளியே தெரியும் வெண் பஞ்சுக் கூட்டமான மேகங்களை வெறுமையாக பார்க்க ஆரம்பித்தாள்…
ரகுநந்தனின் புருவங்கள் முடிச்சிடுவதை அவளால் உணர முடிந்தது.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவள் கண்களில் நீர் திரண்டது.. இதனால தான்.. இதற்காகத்தான்… அவள் எதையும் சொல்லவில்லை.. அவன் சொல்ல வைத்துவிட்டான்..
போயும்.. போயும்.. ஒரு முதுகில் குத்துகிற பச்சோந்தி துரோகிக்காவா அவளும் ரகுநந்தனும் வழக்கடித்துக் கொள்ள வேண்டும்..?
“சந்தியா..” ரகுநந்தன் கண்டிப்புடன் அழைத்தான்..
“ம்ம்ம்..” அவள் அவன் முகத்தைப் பார்த்தாள்..
“உனக்கு இப்படியொரு பிரச்னை இருக்குன்னு ஏன் என்னிடம் சொல்லலை..?”
“எப்படிச் சொல்றது..?”
அவள் மீண்டும் கண் கலங்கினாள்.. அவனால் அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.. அவள் தோளில் கை போட்டு அவள் தலையைத்தான் தோளில் சாய்த்துக் கொண்டான்…
“முட்டாள்.. சொல்லியிருக்கனும்.. சொல்லியிருந்தா நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணியிருக்க மாட்டேன்.. பட்.. இப்ப மட்டும் எப்படி ‘அத்தான்னு’ சொன்ன..?”
“அண்ணன்தான் சொன்னான்…”
“என்னன்னு..?”
“நீங்க குடுத்த பட்டத்தைத்தான் அவனும் கொடுத்தான்.. நான் முட்டாளாம்.. அத்தான்னு சொன்னா உங்க ஞாபகம் வராம கண்டவன் ஞாபகமெல்லாம் எதற்காக வருதுன்னு திட்டினான்…”
“அருமையான மைத்துனன்..” ரகுநந்தன் சிலாகித்துக் கொண்டான்…
“ஏன் சொல்ல மாட்டிங்க..? பிறந்ததில இருந்து அந்த அபிஷேக்கை அத்தான்னு கூப்பிட வைச்சுட்டாங்க.. அத்தான்னு சொன்ன உடனே சட்டுன்னு அவன் ஞாபகம் வராம எப்படி இருக்கும்..? திடிர்ன்னு பழக்கத்தை மாத்திக்க முடியுமா..? மத்தபடி அவனையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கலை.. அது புரியாம நீங்க என்மேல கோபப்பட்டுட்டீங்க..”
“ஸாரி.. ஸாரி…”
அவன் மீண்டும் அவள் உச்சந்தலையில் இதழ் பதிக்க.. ஏனோ அவளுக்கு அந்த நொடியில் அந்த முத்தத்தைப் பிடித்திருந்தது…
அப்போது தான் அவள் அதை உணர்ந்தாள்.. எப்போதெல்லாம் அவள் மனதில் சஞ்சலமும்.. பாதுகாப்பில்லாத உணர்வும் தோன்றுகிறதோ.. அப்போ தெல்லாம்.. அவனுடைய அருகாமை அவளுக்கு அவற்றைப் போக்கும் மருந்தாக இருக்கிறது…
‘எப்படி..?’ சந்தியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது…
நோயே.. நோய் தீர்க்கும் மருந்தாக இருக்க முடியுமா..? முள்ளே.. முள்ளை வெளியில் எடுக்குமா..?
அந்த வித்தையைக் கற்றுக் கையில் வைத்திருந்தவன் செல்லமாக அவள் தலையோடு அவன் தலையை மோதினான்..
“ஒன்னும் வேணாம்..” சிணுங்கினாள் சந்தியா…
அவனுக்கு அவர்கள் இருப்பது விமானத்தில் என்ற விவரமே மறந்துவிட்டது…
“ஏய்ய்..” கண்கள் மின்ன அவளை அணைத்துக் கொள்ளப் போனான்..
“எக்ஸ்கியூஸ் மி..” கண்களில் சிரிப்போடு வந்து நின்றாள் அந்த விமான பணிப்பெண்..
“உங்களுக்கு என்ன ட்ரிங்க் வேணும்..?”
“ஜஸ்ட் டூ கப்ஸ் ஆஃப் ஜீஸ்..”
அவனை விசித்திரமாகப் பார்த்து விட்டு அவள் நகர..
“ஏன் அப்படிப் பார்த்துட்டுப் போறா..?” என்று விசாரித்தாள் சந்தியா…
“தண்ணியடிக்காம ஜீஸை அடிக்கப் போறேன்னு சொன்னேனில்ல.. அதான் இப்படியாகப்பட்ட மாங்காய் மடையனும் இந்த உலகத்தில் இருக்கானான்னு பார்த்துட்டுப் போறா..” அவன் விளக்கம் சொன்னான்…
“அப்ப தண்ணியடிக்காதவங்கள்ளாம் மாங்காய் மடையன்களா..? எங்க அப்பா கூடத்தான் தண்ணியடிக்க மாட்டார்.. அவரென்ன மாங்காய் மடையனா..?” சந்தியா சண்டைக்குப் போனாள்…
“உன் அப்பாவுக்கு தண்ணியடிக்க சான்ஸ் கிடைத்திருக்காது…”
“ஹலோ.. சான்ஸ் கிடைத்தாலும் எங்கப்பா தண்ணியடிக்க மாட்டார்…”
“அதை சான்ஸ் கிடைச்சும் அவர் நழுவுகிறப்பச் சொல்லனும்.. இந்த உலகத்தில நல்லவங்களில இரண்டே வகையான மனுசங்கதான் இருக்காங்க.. ஒன்று… நல்லவங்க.. இன்னொன்று சான்ஸ் கிடைக்காததினால் நல்லவங்களா இருப்பவங்க…”
ரகுநந்தன் என்னவோ விளையாட்டாகத்தான் அந்த விளக்கத்தைச் சொன்னான்.. பின்னாளில் அந்த வார்த்தைகளினாலேயே.. அவன் புயலுடன் கூடிய பூகம்பத்தை அவன் வாழ்க்கையில் சந்திக்கப் போகிறான் என்பதை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை..
சொல்லுதல் யார்க்கும் எளிதுதான்.. அந்தச் சொல்லிய வார்த்தைகளின் சிந்தா நதிச் சுழலில் சிக்கித் தவிக்கும் போதுதான் அந்த வார்த்தைகளின் வீரியம் எத்தனை சக்தியான வீச்சைக் கொண்டது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும்..
ரகுநந்தன் சிங்கம் போன்றவன்.. அந்த சிங்கமும்.. சிறுநரிகளின் சூழ்ச்சிவலையில் சிக்க நேர்ந்ததை.. விதி செய்த சதி என்றுதானே சொல்ல முடியும்..?
Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.