Chapter 31

0Shares

அவனுக்கு அவளுடன் பேச நிறைய விவரங்கள் இருந்தன… 

அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அன்று வரை அவன் வாழ்வில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் அவளுடன் அவன் பகிர்ந்து கொண்டான்.. கரடி பொம்மை வாங்கியதிலிருந்து… முதன் முதலாக அவனுக்கே அவனுக்கு என்று கார் வாங்கியது வரை எதையும் ஒளிவு மறைவில்லாமல் அவளிடம் ஒப்பித்தான்..

“நான் பெண்களை அறியாதவனில்லை சந்தியா.. ஆனால்.. காதல்ன்னு எந்தப் பெண்ணிடமும் நான் விழுந்ததில்லை.. டாடி போன பின்னால.. அம்மாவை 

ஒரு குறைவுமில்லாம பார்த்துக்கனும்.. அவர் ஆரம்பித்து வைச்ச கம்பெனியை விரிவு படுத்தனுங்கிறது மட்டும்தான் என் மனசில இருந்துச்சு.. டாடி ஒரு கம்பெனியோட நின்னார்.. நான் அதை பல கம்பெனிகளா மாற்றினேன்.. அந்த ஓட்டத்திலே என்னையுமறியாம ஏதாச்சும் தப்புப் பண்ணியிருக்கலாமேயொழிய… பேஸிக்கா நான் நல்லவன்டி..”

அவன் சொல்லச் சொல்ல.. சந்தியா மௌனம் சாதித்ததும் நடந்து கொண்டிருந்தவன் நின்று விட்டான்.. சந்தியாவின் முகத்தைத் திருப்பி உற்றுப் பார்த்தான்.. அவள் கண்கள் கலங்கி.. உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன..

“சந்தியா..” திகைத்துப் போய் விட்டான்…

“ப்ளீஸ்.. இனியொருதரம் இதைப்போல தந்நிலை விளக்கம் சொல்லாதீங்க.. என்னால தாங்கிக்க முடியலை..”

“இல்லைடி.. நான் எதுக்குச் சொல்ல வந்தேன்னா..”

“போதும் அத்தான்.. நீங்க எனக்கு மட்டும்தான் சொந்தம்.. வேற எதையும் கேட்க நான் விரும்பலை..”

“என் சந்தியா…”

அவளை இறுக்கி அணைத்துக் கொண்ட போது.. எத்தனையோ தொழில் வெற்றிகளில் கிடைக்காத மன நிறைவு அந்த நொடியில் கிடைப்பதை அவன் உணர்ந்தான்..

‘இவ இந்த அளவுக்கு என்னை நேசிக்கிறாளா..!’

ஆண்மையின் கர்வத்தோடு அவன் மனம் தலை நிமிர்ந்து நின்றது…

அன்றைய இரவில்.. அவன் மார்பில் தலை வைத்துப் படுத்திருந்த சந்தியாவின் முடியைக் கோதியபடி..

“எப்படிடீ..?” என்று மெதுவான குரலில் வினவினான்

“எப்படின்னா..? புரியலை..” அவன் மார்பில் விரலால் கோலம் போட்டபடிச் சொன்னாள் சந்தியா…

“நான் தொட்டாலே.. என்னவோ வில்லன் தொட வர்றதைப் போல துள்ளிக்கிட்டுத் தள்ளிப் போவ.. இப்ப என்னாச்சு..?” அவன் கேட்டதும்..

“ச்சீய்..” என்று செல்லமாகச் சிணுங்கி அவன் மார்பில் குத்தினாள்.. சந்தியா..

“ஹா.. ஹா…” ரசித்துச் சிரித்தபடி.. குத்திய அவள் கையைப் பிடித்து அதில் முத்தம் பதித்தான் ரகுநந்தன்…

“வில்லனாத்தான் என் கண்ணுக்கு நீங்க தெரிஞ்சிங்க.. ஆனா.. உங்களை வில்லன் ரேன்ஜீக்கு என்னிடம் வர்ணிச்ச கல்பனாவும்.. அவளுடைய குடும்பமும் காட்டிய வில்லத்தனத்தை உணர்ந்துக்கிட்டப்ப நான் எப்பேற்பட்ட முட்டாளாய் இருந்திருக்கேன்னு எனக்கே புரிஞ்சது…”

“ச்சீ… அதுகளை வில்லத்தனமானவங்கன்னு சொல்லு.. கேட்டுக்கறேன்… அதுக்காக உன்னை முட்டாள்ன்னு சொல்லிக்கனுமா..?” கடிந்து கொண்டான் ரகுநந்தன்…

“ஆஹா..! இதே வாய் எத்தனை தடவை என்னை முட்டாள்ன்னு சொல்லியதாம்..” சந்தியா அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள்…

“நான் உன்னை எது வேணும்னாலும் சொல்லுவேன்.. முட்டாள்ன்னு சொல்லுவேன்.. இன்னும்…”

ரகுநந்தன் குரல் தணித்து அவள் காதோரமாக கிசுகிசுக்க.. அவள் கிளர்ந்து அவன் தோளில் ஒரு போடு போட்டாள்…

“ச்சீய்.. உங்க புத்தி இருக்கே..”

“அதுக்கென்னவாம்..?”

“ஆம்பளைப் புத்தி..”

“உன் ஆம்பளையின் புத்தி..”

“போதுமே..”

“எனக்குப் போதாது..”

“ஒன்னும் வேணாம்..”

“ஏய்ய்..”

அவர்கள் பசையில்லாமல் ஒட்டிக் கொண்டார்கள்.. இரு மனமாக விமானம் ஏறியவர்கள்.. ஒரு மனமாக தாயகம் திரும்பினார்கள்.. ரகுநந்தன் மேல் உயிராகிப் போனாள் சந்தியா.. அவனே நினைவாய்.. அவனே சுவாசமாய் அவனே அனைத்துமாக அவள் ஆகிப் போனபோது தான் ஒரு நாளின் அதிகாலையில் அவள் மயங்கி விழுந்தாள்…

“கன்கிராஜீலேசன்ஸ்.. நீங்க அப்பாவாகப் போகிறிங்க..”

பரிசோதித்த லேடி டாக்டர் சொன்னபோது இறக்கையில்லாமல் வானத்தில் பறப்பதைப் போன்ற உணர்வை அடைந்தான் ரகுநந்தன்…

“சந்தியா..”

அவள் முகத்தை கைகளில் ஏந்தி.. பேச்சு வராமல் அவன் தவித்தபோதுதான் அவள் அந்த வார்த்தைகளைச் சொன்னாள்…

“நீங்க போட்ட மூன்றாவது கண்டிசனையும் நான் நிறைவேற்றிட்டேன்..”

ரகுநந்தனின் புருவங்கள் சுருங்கின.. அவளது வார்த்தைகளில் பொதிந்திருக்கும் பொருள் என்னவாக இருக்கும் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அவள் அதற்கான விளக்கத்தையும் சொன்னாள்..

“என்ன..? திருதிருன்னு முழிக்கறிங்க.. கண்டிசன் போட்டவருக்கு.. கண்டிசனை மறந்து போச்சா..? நீங்க சொல்லலை..? உங்களிடம் மனசார ஐ லவ் யு ன்னு சொல்லனும்னு முதல் கண்டிசனைப் போட்டிங்க.. சொல்லியாச்சு.. உங்ககூட விருப்பத்துடன் குடும்பம் நடத்தனும்னு இரண்டாவது கண்டிசனைப் போட்டிங்க.. அதையும் செய்தாச்சு.. உங்க குழந்தைக்கு அம்மாவாகனும்னு மூன்றாவது கண்டிசனைப் போட்டிங்க.. இப்ப அதையும் நிறைவேற்றியாச்சு.. எப்படி..? நம்ம அக்ரிமென்ட்படி நான் நடந்துக்கிட்டு இருக்கேனா.. இல்லையா..?”

அவள் கேட்ட கேள்வியில் அவன் முகம் மாறிப் போனதை அவள் கவனிக்கவில்லை…

பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானன்.. பேசிய வார்த்தைகளோ நமக்கே எஜமானன்களாக மாறிவிடும் ஆபத்தான தன்மை கொண்டவை.. அதை அறியாத சந்தியா கொட்டிக் கவிழ்த்து விட்டாள்…

பொன்னையும்.. வைரங்களையும் கொட்டிக் கவிழ்த்திருந்தால் அவற்றைத் திரும்பவும் அள்ளி விடலாம்.. வார்த்தைகளைக் கொட்டிக் கவிழ்த்தவர்களால் அதை அள்ள முடியுமா..?

சந்தியா அதை அறியவில்லை.. அறியாமல் அவள் கொட்டிய வார்த்தைகளில் ரகுநந்தனின் மனதில் சிறு சுணக்கம் ஏற்பட்டு விட்டதை அவள் அறியாள்.. தன் போக்கில் அவனது முன்னுச்சி முடியைக் கலைத்து அவள் சிரித்த போது கூடச் சேர்ந்து அவன் சிரிக்கவில்லை…

மாதங்கள் ஓடின.. சந்தியாவிற்கு வளைகாப்பு நடந்தது.. பிறந்த வீட்டிற்கு பிரசவத்திற்காக அவள் போனாள்.. ரகுநந்தன் தினமும் அவளைப் பார்த்த பின்பு தான் வீட்டுக்கு வருவான்.. அவன் சொன்ன மருத்துவ மனையில் தான் அவளை பிரசவத்திற்காக அவளுடைய பிறந்த வீட்டினர் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது…

“தலைப்பிரசவம் தாய் வீட்டில்தான் நடக்கனுங்கிற ஃபார்மாலிட்டிஸ்க்காகத்தான் அவளை இங்கே அனுப்பி வைத்திருக்கிறேன்.. மற்றபடி.. எங்க பேமிலியில.. இந்த ஹாஸ்பிடலில்தான் ட்ரீட்மென்ட் எடுத்துக்குவோம்.. என் குழந்தையும் இங்கேதான் பிறக்கனும்..”

கல்யாணராமனுக்கும்.. ஜானகிக்கும் அதில் வருத்தம் தான்.. சந்தியாதான் அவர்களுக்குச் சமாதானம் சொன்னாள்..

“அவர் பிடிச்சா உடும்புப் பிடிதான்.. விட்டுப் பிடிக்கலாம்மா.. இப்ப என்ன..? டெலிவரிக்கு நம்ம வீட்டுக்குத்தான என்னை அனுப்பி வைச்சிருக்கார்..?”

“என்னத்தை அனுப்பி வைச்சார்..? மூணு நேரமும் அங்கேயிருந்து உனக்கு சாப்பாடு வந்து சேருது.. இதுதான் பிறந்த வீட்டில நீ குழந்தை பெத்துக்கிற லட்சணமா..?” ஜானகி சிடுசிடுத்தாள்…

அவளைச் சொல்லியும் குற்றமில்லை.. சந்தியாவுக் கான உணவு வகைகளை பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருந்ததால்.. அதை ரகுநந்தனின் வீட்டிலிருந்தே செய்து அனுப்பட்டும் என்று ரகுநந்தன் சொல்லி விட்டால் அவள் சிடுசிடுக்காமல் என்ன செய்வாள்..?

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link