Chapter 09
‘உஸ்ஸ்… அப்பாடா..”
மலைக் கோவிலின் படிகளில் ஏறிக் கொண்டிருந்த கல்யாணி.. பக்கவாட்டு கைப்பிடி சுவரில் அமர்ந்து.. ஆசுவாசப் பெரு மூச்சு விட்டாள்..
‘ஏய்ய்.. கிழவி.. எழுந்திருச்சு வாடி..”
நிற்காமல் படியேறிக் கொண்டிருந்த மீனாட்சி அதட்டினாள்.. அவள் கூட வந்த நிவேதா.. கல்யாணியைப் பார்த்துச் சிரித்தாள்..
‘போம்மா.. உனக்கென்ன தெரியும்.. படியேறியதில் கால் வலிக்குது..”
‘ஆமாண்டி.. எனக்குத் தெரியாது.. நீதான் படியேறுகிற.. நான் ஊஞ்சலில் உட்கார்ந்து உயரமாப் போறேன்.. நானும் உன் கூடத்தானே படியேறுகிறேன்..? இந்தா.. நிவேதாவும் நம்ம கூடத்தான் படியேறுகிறா.. இவளுக்கும்.. எனக்கும் வராத கால்வலியா.. உனக்கு வந்திருச்சு..?”
‘என் உடம்பு பூஞ்சை உடம்பும்மா..”
‘ஊஹும்.. யானை உடம்பு..”
சற்று பூசினாற் போல இருக்கும் கல்யாணிக்கு இதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது..
அவள் குதித்து இறங்கி.. அவர்களுடன் படியேறியவாறு பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்..
ஊரில்.. உலகத்தில் பெற்ற பெண்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.. அவளுக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லை..
“பேரு பெத்த பேரு.. தாகத்துக்கு நீலு லேது..’ என்கிறதைப் போல பெரிய பண்ணையார் வீட்டுப் பெண் என்றுதான் அவளுக்குப் பெயர் உள்ளே பார்த்தால் ஒன்றுமே இல்லை..
இதுவரை அவள் பொரிவதை சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டு வந்த நிவேதா..
‘இரு.. இரு.. ” என்று குறுக்கிட்டாள்..
‘என்ன.. ?” கல்யாணி சிடுசிடுத்தாள்..
‘அது என்ன.. பேரு பெத்த பேரு.. தாகத்துக்கு நீலு லேது..? இப்படியொரு பழமொழியை நான் தமிழில் கேட்டதே இல்லையே..”
‘இது தமிழ் பழமொழியா இருந்தால்தானே.. நீ தமிழில் கேட்டிருக்க முடியும்..?”
‘பின்னே..?”
‘இது தெலுங்குப் பழமொழி.. “பெத்த ‘ன்னு சொன்னா “பெரிய ‘ன்னு அர்த்தம்.. “நீலு’ ன்னு தண்ணி.. “லேது ‘ ன்னா.. இல்லைன்னு அர்த்தம்..”
‘அப்ப.. பெயர்தான் பெரிய பெயர்.. தாகத்துக்கு தண்ணியில்லைன்னு இதுக்கு அர்த்தமா..?”
‘ஆமாம்..”
‘பார்த்தீங்களா ஆண்ட்டி.. கல்யாணி என்னவெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கான்னு..”
‘நீதான் அதை மெச்சிக்கனும்..”
‘ஏன் ஆண்ட்டி..?”
‘தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொள்ளாம.. தேவையில்லாததை தெரிஞ்சுக்குவா.. இவ குண விசேசம் அப்படி..”
‘ஊëம்.. கல்யாணி அப்படிப்பட்ட பெண் இல்லை.. தங்கம்..”
‘நீயென்ன.. இவளை இந்தத் தாங்கு தாங்கற..?”
‘அதுவாம்மா.. நான் நிவேதாவுக்கு காதலி..”
கல்யாணி குறும்பாக கண்சிமிட்ட.. மீனாட்சிக்கு தூக்கி வாரிப் போட்டு விட்டது.. நிவேதாவிற்கு சிரிப்பதா.. இல்லை… அழுவதா என்று தெரியவில்லை..
‘என்னடி உளருகிற..?’
‘நானா உளருகிறேன்.. ? ரெண்டு நாளைக்கு முன்னாலே இவ என் முகத்தைப் பார்த்து.. உருகி உருகி ஒரு பாட்டைப் பாடினா..”
நிவேதா கல்யாணியின் கையை பிடித்து கிள்ளியும்.. கல்யாணி நிறுத்தாமல் அந்தப் பாட்டை பாடிக் காட்ட..
‘இந்தப் பாட்டுக் கென்னடி..? நல்லாத்தானே இருக்கு..?” என்று கேட்டாள் மீனாட்சி..
‘அதானே பார்த்தேன்.. நீ இவளுக்குத்தானே ஜால்ரா அடிப்ப..?”
‘பினாத்தாமல் வாயை மூடிக்கிட்டு வா.. இல்லைன்னா.. கோவிலில் சாமி கும்பிட வந்திருக்கிற ஊர் ஜனங்க.. மீனாட்சி பெண்ணை வளர்த்து வச்சிருக்கிற லட்சணத்தைப் பாருன்னு பேசிப்புடுவாங்க..”
கல்யாணி முணுமுணுத்தபடி.. தாயை பின்பற்றி சன்னதிக்குள் சென்றாள்.. தீபாதரணை காட்டப் பட்டுக் கொண்டிருக்க.. கண் மூடி லட்சுமி சமேதராய் நின்ற பெருமாளை வணங்கிய மீனாட்சியின் மூடிய இமைகளிலிருந்து கண்ணீர் வந்தது..
தீபாரதனையின் கற்பூர ஜோதியின் ஒளியில் பெருமாளையும்..மகாலட்சுமியையும்.. அள்ளிப் பருகுவதைப் போல பார்த்த நிவேதா.. இயல்பாக திருப்பி மீனாட்சியைப் பார்த்தாள்.. அவளது நிலையைக் கண்டு நிவேதாவின் கண்கள் கசிந்தன..
எவ்வளவு துயரம் மனதில் குடி கொண்டிருந்தால்.. இப்படி இவள் கண்ணீர் விடுவாள்..?
பிரகாரத்தை வலம் வந்தவர்கள்.. கோவிலின் முன்புற மண்டபத்தில் அமர்ந்தார்கள்.. அங்கேயிருந்து பார்க்கும் போது.. ஊர் முழுவதும் தெரிய.. அதன் ஓரமாக வெள்ளைத் தாவணியைப் போல.. ஆறு ஓடியது..
நிவேதா.. தன் செல்போனில் அந்த காட்சிகளை பதிவு செய்தாள்.. கோவில் தூணில் சாய்ந்திருந்த மீனாட்சியின் பார்வை.. இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருக்க.. கல்யாணி அவளுடைய தோழி ஒருத்தி வரவும்.. அவளிடம் ஓடி விட்டாள்..
நிவேதா.. மீனாட்சியின் அருகே சென்று அமர்ந்தாள்..
‘ஆண்ட்டி..”
‘ம்ம்ம்..”
‘வருத்தப்படாதீங்க..”
இதமாக தெறித்து விழுந்த நிவேதாவின் வார்த்தைகளைக் கேட்டவள் தன்னை சுதாரித்துக் கொண்டு.. மெல்ல சிரித்தாள்…
‘நான் வருத்தப்படறேன்னு உனக்கு யார் சொன்னது..?”
‘யாரும் சொல்லனுமா..? நான் வந்து எட்டு நாள்களாகப் போகுது.. தினமும் அங்கிள் உங்களை புண்படுத்துகிறார்.. நீங்களும் பொறுத்து போகிறீங்க..”
‘பெண்ணாய் பிறந்துட்டா.. பொறுத்துதான் போகனும்மா..”
‘எது வரை ஆண்ட்டி..?”
‘கடைசி வரை..”
‘அங்கிள் எப்பவும் இப்படித்தான் உங்ககிட்ட சிடுசிடுன்னு இருப்பாரா..? எனக்கென்னவோ.. அங்கிள் உங்ககிட்ட மட்டும்தான் இப்படி பிஹேவ் பண்ணுகிறார்ன்னு தோணுது.. மத்தவங்ககிட்ட அன்பாத்தானே பழகறார்..
நிவேதாவின் வார்த்தைகளைக் கேட்ட மீனாட்சி.. சட்டென்று நிமிர்ந்து நிவேதாவின் முகத்தையே இமைக்காமல் பார்த்தாள்..
“இவள் சின்ன பெண்..’ அவளுக்குள் வியப்பு பொங்கியது..
“ஆனால்.. அவருக்கு என் மீது மட்டும்தான் கோபம் என்பதை இவள் கண்டுபிடித்து விட்டாளே..’
‘என்ன ஆண்ட்டி பேசாமல் இருக்கீங்க..?”
‘நீ சொல்வது ஒரு வகையில் உண்மைதான் நிவேதா..”
‘ஏன் ஆண்ட்டி..? உங்க ரெண்டு பேருக்கும் என்னதான் பிரச்சனை..?”
‘எனக்கு அவர் கூட எந்தப் பிரச்சனையும் இல்லைம்மா..”
‘அதுதான் தெரியுதே.. அவர் எவ்வளவுதான் பேசினாலும்..முகம் மாறாம இருக்கீங்களே..”
‘அவருக்கு என் மீது தனிப்பட்ட கோபமில்லை..”
‘பின்னே..? என்னதான் அவர் மனதில் இருக்கு..?”
திரும்பவும் மீனாட்சியை அதிர வைத்தாள் நிவேதா..
“இவள் சாதாரணப் பெண்ணில்லை..’ மீனாட்சிக்குள் பொங்கியது..
அத்தனை நாளாக பொத்தி வைத்திருந்த துக்கம் பீறிட்டு எழுந்து வெளியில் வந்தது..
‘அவருக்கும் அவர் தம்பிக்கும் பிரச்சனை..”
‘கேள்விப்பட்டேன்..”
‘இவர்.. தம்பி பெண்டாட்டிகிட்ட கோபமா பேசிட்டார்.. அதைத் தாங்கிக்க முடியாமல் அவள் அழுது வைக்க.. என் கொழுந்தன் என் புருசனிடம் கோவித்துக்கிட்டு.. தனியாய் போயிட்டார்..”
‘இதுக்கும் .. உங்களுக்கும் என்னதான் சம்மந்தம்..?”
‘நான் இவருக்கு பெண்டாட்டி என்கிற உறவில் இருக்கேனே அதுதான் சம்மந்தம்..”
‘சுத்தமாய் புரியலை ஆண்ட்டி..”
‘நிவேதா.. பெண்டாட்டி சொல்லைக் கேட்டு தம்பி பிரிஞ்சு போயிட்டாரேன்னு இவர் நினைக்கிறார்.. அதனால.. பெண்டாட்டிகளாக வருகிறவங்க எல்லோருமே வில்லிகள்ன்னு இவர் மனசில ஒரு நினைப்பிருக்கு.. தம்பி.. பெண்டாட்டி பேச்சைக் கேட்டு கெட்டுப் போயிட்டாராம்.. இவர் அப்படியிலலையாம்.. பெண்டாட்டியை கால் செருப்பாய் போட்டு மிதிக்கிற ஆம்பளையாம்..”
‘இது என்ன ஆண்ட்டி.. பெரிய கதையாய் இருக்கு..”
‘கதைதான் என்னை என்ன செய்யச் சொல்கிற..? என்னைப் பார்க்கும் போதெல்லாம்.. அவருக்கு.. பெண்டாட்டி பேச்சைக் கேட்டு பகையாளியாகி விட்ட தம்பியின் நினைப்பு வந்து தொலைக்குதே..”
‘கடவுளே..”
‘கடவுள்தான் கண் திறக்கனும்.. பிள்ளைக ரெண்டும் வளர்ந்து நிற்குதுக.. நாளைக்கே அதுகளுக்கு கல்யாணமாகி.. வீட்டுக்கு மருமகளும்.. மருமகனும் வந்துவிடுவாங்க.. அவங்க முன்னாலேயும் இவர் இப்படியே ஆடி வைச்சா என்ன செய்யறது..?”
‘கஷ்டம்தான்..”
‘ஏற்கனவே.. என் பிள்ளைக ரெண்டும்.. நான் படுகிற பாட்டைப் பார்த்துவிட்டு மனசு உடைஞ்சு போய் நிற்குதுக..”
மீனாட்சிக்கும் அது தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள் நிவேதா..
‘கல்யாணியாவது பரவாயில்லை.. வேற வீட்டுக்கு வாழப் போயிருவா.. ஆனா.. கார்த்திக்கு கல்யாணமானா.. வேற ஒரு பொண்ணு என் வீட்டுக்கு வாழ வருவா..”
ஏனோ.. இதைக் கேட்டதும் நிவேதாவின் மனம் படபடத்தது.. இந்த உணர்விற்கு எதிர்காலம் உண்டா..? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் அவள்..
சிதிலமடைந்திருக்கும் சிதம்பரநாதனின் வீட்டை சீர் செய்ய அவள் முனையலாம்.. அதற்கும் மேலே.. அங்கேயே குடும்பம் நடத்த முனையலாமா..?
ஆசை ஆயிரம் மனதிலிருக்கலாம்.. ஆனால்.. அது நிறைவேற வழி வேண்டாமா..?
நிவேதாவின் மனப் போராட்டத்தை அறியாமல்.. மீனாட்சி தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள்..
‘எனக்கு வேற ஒரு பயம் நெஞ்சில இருக்கு..”
‘என்ன ஆண்ட்டி..”
‘கார்த்திக்கு ரோசம் அதிகம்.. அவனும் ஆம்பளை.. அவன் பெண்டாட்டியையும் இவர் பேசி வைச்சா.. நிச்சயம் பொறுத்துக்க மாட்டான்.. அப்புறம் என்ன ஆகும்..? பழைய கதை தொடரும்.. அவனோட சித்தப்பாவைப் போல இவனும் தனிக்குடித்தனம் போயிருவான்.. நான் ஆதரிக்க பிள்ளைகள் பக்கத்தில் இல்லாம தனிமரமாய் நிற்பேன்..”
அவளின் பயத்தில் அர்த்தம் உண்டு என்பதை நிவேதாவினால் புரிந்து கொள்ள முடிந்தது..
பெற்ற தாய்.. தன் தகப்பனுக்கு மனைவி என்பதாலேயே.. தலையிட முடியாமல் பொறுத்துப் போகிறான் கார்த்திகேயன்.. சில நேரங்களில் அந்தப் பொறுமை உடையவும் செய்கிறது..
அப்படிப்பட்டவனின் மனைவியை சிதம்பரநாதன் பேசினால் சும்மாவா விடுவான்..?
நிச்சயம் தனியாகப் பிரிந்துதான் போய் விடுவான்..
‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது ஆண்ட்டி.. நீங்க வீணாய் மனதைப் போட்டு உழப்பாதீங்க..”
இது மீனாட்சிக்காக சொல்லபடும் வார்த்தைகள் என்பதை நிவேதாவும் அறிவாள்… மீனாட்சியும் அறிவாள்..
இருந்தும்.. மூத்தவள்.. இளையவளுக்காக தன் மனக் கலக்கத்தை மறைத்துப் புன்னகை செய்தாள்..
தோழிக்கு “டாடா’ காட்டி விட்டு வந்த கல்யாணி..
‘என்ன.. ரெண்டு பேரும் பேச்ச வார்த்தையை முடிச்சுட்டிங்களா..”
‘போடி.. இவளே..” மீனாட்சி எழுந்து கொண்டாள்..
‘என்னவோ.. இந்திய.. பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதைப் போல என்ன ஒரு தோரணை..? என்ன ஆச்சு..? உடன்படிக்கை ஒப்பந்தமெல்லாம் போட்டுட்டீங்களா..”
கல்யாணியின் காதை பிடித்து திருக ஆரம்பித்தாள் நிவேதா..
‘ஆ.. வலிக்குது.. வலிக்குது..” என்று கத்தினாள் அவள்..
அவர்கள் இருவரும்.. சிரிப்பும்.. கேலியுமாக பேசியபடி படிகளில் இறங்கிய போது.. எதிரே.. ஒரு பெண்மணி படியேறி வந்தாள்.. அவள் கூடவே.. ஒரு இளம் பெண்ணும் இருந்தாள்..
மீனாட்சியைப் பார்த்ததும்.. அவர்கள் தயங்கி நின்றனர்..
‘வா.. அமரா.. நம்ம சுகந்தி லீவுக்கு வந்திருக்கிறாளா..?” என்று கேட்டாள் மீனாட்சி..
‘ஆமாம்க்கா..” அவள் மீனாட்சியின் கையை பிடித்துக் கொண்டாள்..
‘கல்யாணி..” சுகந்தி.. கல்யாணியின் கைகளைப் பிடித்துக் கொள்ள.. தனித்து நின்ற நிவேதா.. யாரும் பிடிக்காத தன் கைகளை முன்னால் மடித்துக் கட்டிக் கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்தாள்..
ஒருவழியாக.. அந்த பாசப் பறவைகளின் பிடிகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு.. மீனாட்சியும்.. கல்யாணியும் நிவேதாவைப் பார்;த்தார்கள்..
அவாகள் படியேற.. இவர்கள் படியிறங்கினார்கள்..
‘அவங்க யாருன்னு தெரியுமா..?”
கல்யாணி மர்மக் குரலில் கேட்டாள்.. அவர்கள் யாராக இருக்கக் கூடும்.. என்று புரியாமல் கல்யாணியைப் பார்த்தாள் நிவேதா..
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.