Chapter 10

0Shares

‘என் சித்தியும்.. சித்தப்பா பெண்ணும்தான்.. அவங்க..”

‘என்னது..?”

‘ஆமாம்.. ஆடு பகை.. குட்டி உறவுன்னு சொல்வாங்களே.. அது.. இதுதான்.. அப்பாவும் சித்தப்பாவும் அடிச்சுக்குவாங்க.. ஒருத்தருக்கொருத்தர் பேசிக்க மாட்டாங்க.. ஆனா அம்மாவும் சித்தியும் கூடிக் குழாவிக்குவுவாங்க..”

‘நிஜமாகவா..?”

‘உன் கண்ணுக்கு முன்னாலேதானே அவங்க பேசிட்டுப் போனாங்க..?”

‘நீங்க இந்தக் கோவிலுக்கு வருவீங்கன்னு அவங்களுக்கு தெரியுமா..?”

‘ஏன் தெரியாம..? இந்த மலைக் கோவிலில் இருக்கிற பெருமாளும்.. மகாலட்சுமியும்தான் எங்க குடும்பத்தின் குலதெய்வம்.. வெள்ளிக்கிழமையானால் கட்டாயம் நாங்க எல்லோரும் இந்தக கோவிலுக்கு வந்துட்டுத்தான் போவோம்..”

‘ஆக.. இந்த கோவில்தான் மீட்டிங் ஸ்பாட்..”

‘ம்ம்ம்.. இன்னைக்கு நீயும் கூட வந்ததினால கொஞ்சம் முன்னால வந்து சாமியக் கும்பிட்டுட்டு கிளம்பிட்டோம்.. இல்லேன்னா லேட்டாத்தான் வருவோம்..”

‘நானிருந்தால் என்ன..?”

‘அது எனக்குத் தெரியுது.. அம்மாவுக்குத் தெரியனுமே..”

‘நான் உங்கப்பாகிட்ட சொல்லிருவேன்னு அவங்க பயப்படுகிறாங்களா..”

‘நீ வேற.. இவங்க கோவிலில் பார்த்து கூடிக் குழாவிக்கிறது வீட்டு ஆம்பிளைகளுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறயா..?”

‘தெரியும்ன்னு சொல்றியா..?”

‘அதெல்லாம் தெரியும்.. அந்த வீட்டு வேலையாள் கூட.. இந்த வீட்டு வேலையாள் பேசினாலே கண்டுபிடித்து.. பேசிப் பேசியே ஒரு வழி பண்ணுகிற ஆளுகளுக்கு இது தெரியாம போகுமா..?”

‘தெரிந்தும் பேசாம இருக்கிறாங்களா..? எப்படி..?”

‘அது அப்படித்தான்.. சித்தப்பா.. சித்தியை எப்பவுமே திட்ட மாட்டார்.. அப்பாவுக்கோ.. சித்தப்பாவின் மேல் மாறாத பாசம்.. அதனால் வீட்டுப் பொம்பளைக கூடிப் பேசிக்கிறதை.. கண்டும்.. காணாம போகிறாங்க..”

‘பெண்டாஸ்டிக்..”

‘இன்னும் ஒரு ஆள் வரலை..”

‘யாரு அது..?”

‘ஆள் வந்தாச்சு..”

‘யாருன்னுதான் சொல்லேன்..”

‘என் அத்தை..”

‘உன் அத்தையா..?”

நிவேதா ஆவலுடன் எதிரே பார்த்தாள்.. சிதம்பரநாதனின் முக ஜாடையுடன் .. எதிரே வந்து கொண்டிருந்தாள் மரகதம்.. கூடவே வயதான பெண்மணி ஒருத்தியும் இருந்தாள்..

‘அண்ணி..”

‘மீனாட்சி..”

அவர்கள் இருவரும் படிகளின் ஓரமாக நின்று பாசத்தை பிழிய ஆரம்பிக்க.. கூட நின்று கொண்டிருந்தவளின் கண்களில் நிவேதாவைக் கண்டதும் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது..

‘ஏண்டி கல்யாணி..”

‘வாடி.. போடின்னு கூப்பிடாதேன்னு உன்கிட்ட எத்தனை தரம் சொல்றது பாட்டி..? எவ்வளவு சொன்னாலும் உன் மண்டையில் ஏறவே ஏறாதா..?”

‘அடேங்கப்பா.. இத்தனூண்டு புள்ள நீ.. உன்னை இந்தப் பாட்டி வாடி.. போடின்னு கூப்பிடக் கூடாதாக்கும்..?”

‘ஆமாம் கூப்பிடக்கூடாது..”

‘நான் அப்படித்தாண்டி கூப்பிடுவேன்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?”

‘என்னா தெனாவெட்டு..?”

‘இந்த மண்ணில பிறந்த பொம்பளைகளுக்கு தெனாவெட்டு இருக்கத்தாண்டி செய்யும்..”

‘அது ஆம்பளைகளுக்கு சொன்னது.. பொம்பளைக எல்லாம் அடக்க ஒடுக்கமா இருக்கனும்..”

‘அது உன்னைப் போல புள்ளகளுக்கு சொன்னது.. என்னப் போல கிழவிகளுக்குச் சொன்னதில்ல..”

பேச்சு பேச்சாக இருந்தாலும்.. அந்த மூதாட்டியின் பார்வை நிவேதாவின் மீதே படிந்திருந்தது..

‘இந்தப் பொண்ணு யாரு..?”

‘எங்க வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளி..”

‘எந்த ஊராம்..?”

‘சென்னை..”

‘பார்த்தா அப்படித் தெரியலையே..”

‘வேற எப்படித் தெரியுமாம்…?”

‘அமெரிக்காக்கார பொண்ணு போல இல்ல தெரியுது..”

நிவேதா தூக்கிவாரிப் போட்டவளாக.. அந்தப் பெரியவளை பார்த்தாள்.. நிவேதாவிடம் தெரிந்த அந்த அதிர்வு மூதாட்டியின் கவனத்தில் பட்டுவிட்டதை உணர்ந்தவளாக அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..

அதற்குள் பாசத்தை பிழிந்து முடித்து விட்டிருந்த மரகதமும் மீனாட்சியும் பிரிந்து.. எதிரும் புதிரும் நடக்க ஆரம்பித்தார்கள்..

‘வாங்க அத்தை..”

மரகதம் அழைக்க.. நிவேதாவைப் பார்த்தபடியே.. மலையேறினாள் மரகதத்தின் அத்தை..

‘வாம்மா நிவேதா..”

மீனாட்சி அழைக்க.. மரகதத்தின் அத்தையை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி.. மீனாட்சியை பின் தொடர்ந்தாள் நிவேதா..

‘அந்த பாட்டி யாரு கல்யாணி..?”

‘அதுவா.. அது ரொம்பவும் வம்பு பிடிச்ச பாட்டி நிவேதா.. வாய் ஜாஸ்தி.. எட்டூருக்கு பேசும்.. இதை அடக்கத்தான் என்னால முடியலை..”

‘அவங்க யாருன்னுதானே கேட்டேன்..? அதைச் சொல்லாம நீ வேற எதையெதையோ சொல்ற..?”

‘எங்க அத்தையோட மாமியாக் கிழவிதான் அது.. பேரு.. கோசலை.. அத்தைக்கு மாமியாரா இருக்கிறதால.. எனக்கே மாமியாரா ஆகிட்டதைப் போல இந்த கிழவிக்கு நினைப்பு..”

“கோசலை..’

நிவேதா மீண்டும் ஓர் முறை திரும்பிப் பார்த்தாள்.. அதே சமயம் படிகளில் ஏறிக் கொண்டிருந்த கோசலையும் திரும்பிப் பார்த்து வைக்க இருவர் பார்வையும் மீண்டும் சந்தித்து மீண்டன..

“ஏன் அப்படிச் சொன்னாள்..? என்னைப் பார்த்து அமெரிக்காகாரி என்று எப்படி அவள் சொல்லலாம்..? எதை வைத்து அந்த வார்த்தையை அவ்வளவு ஈஸியாக சொன்னாள்..?’

‘எதுக்கு இப்படி உம்முன்னு வருகிற..?” கல்யாணி கேட்டாள்..

‘அந்தப் பாட்டியைப் பத்தி யோசிச்சுக்கிட்டு வர்றேன்..”

‘அதைப்பத்தியெல்லாம் நீ யோசிக்கலாமா..? அந்தக் கோசலை கிழவியெல்லாம் ஒரு ஆளா..? அது பேசிச்சாம்.. இவ உம்முன்னு வர்றாளாம்.. சும்மா ஊதித்தள்ளி விட வேணடாமா..?”

ஊதித் தள்ள முடியவில்லை.. நிவேதாவினால் கோசலையின் பேச்சை அலட்சியம் செய்ய முடியவில்லை.. எந்த இடத்தில்.. எந்த வகையில்.. அவளது ஆணி வேர் அடையாளம் காணப் பட்டிருக்கிறது என்று அவளால் அனுமானிக்க முடியவில்லை..

“அமெரிக்காகாரி..?’

நிவேதா.. கண்களை மூடித் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முயன்றபடி.. படிகளில் கால் வைத்து.. தடுக்கி விழத் தெரிந்தாள்..

சட்டென்று கூட வந்த கல்யாணி அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள்..

‘பார்த்தது நிவேதா.. கண்ணை என்ன பிடறியிலா வைச்சிருக்க..?”

இது.. அடிக்கடி சிதம்பரநாதன் மீனாட்சியிடம் கூறும் வார்த்தைகள்.. அவள் மகளைப் பார்த்து பல்லைக் கடித்தாள்..

தவறை உணர்ந்த கல்யாணி நாக்கைக் கடித்துக் கொண்டு.. தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள்…

‘யதார்த்தமா வாயில வந்திருச்சும்மா..”

‘ம்ஹீம்.. விதையொன்னைப் போட்டா.. சுரையொன்னா முளைக்கும்..? கட்டினதுதான் அப்படின்னா.. பெத்ததும் இப்படியிருக்கு..”

மீனாட்சி.. இறுக்கமான முகத்துடன் முன்னால் சென்றுவிட..

‘உன்னால்தானே..” என்று நிவேதாவின் முதுகில் அடித்தாள் கல்யாணி..

‘நான் என்ன பண்ணினேன்..?” நிவேதா நியாயம் கேட்டாள்..

‘கண்ணை மூடிக்கிட்டு.. படியில் விழப் பார்த்தது யாரு.. நீயா.. இல்லை நானா..”

‘அதுக்கு என்ன இப்ப..?”

‘அதனாலதான அம்மா என்னைத் திட்டுது..?”

‘ஆண்ட்டி ஒன்னும் என்னைக் காப்பாத்தினதுக்கு உன்னைத் திட்டலை.. காப்பாத்தினவ.. வாயை வைச்சுக்கிட்டு சும்மாயிருக்க வேண்டியதுதானே.. உன்னை யாரு.. அங்கிள் பேசின டயலாக்கை பேசி வைக்கச் சொன்னது..?”

‘அதுவா வந்திருச்சு நிவேதா..”

‘அதுக்குத்தான் பேச்சு வாங்கின.. புரியுதா..?”

கைகளை ஆட்டி.. ஒற்றை விரலை உயர்த்தி.. நிவேதாவிடம் கறாராகப் பேசிக் கொண்டு வந்த கல்யாணியின் முகத்தில் திடீரென்று ஒரு மாற்றம் வந்தது.. ஒற்றை விரலை அவசரமாக மடக்கியவள்.. லேசாக தலையை குனிந்தபடி இறங்க ஆரம்பித்தாள்..

திடீரென்று அவள் பவ்யமாகிவிட்டதற்கான அடிப்படை புரியாமல் குழம்பிப் போனாள் நிவேதா..

“என்னடா.. இது.. திடீர்ன்னு சொர்ணாக்கா.. எங்க வீட்டு மகாலட்சுமியாய் மாறிட்டா..!’

அந்த மாற்றத்தின் பிண்ணணியை அறிந்து கொள்ளாவிட்டால் நிவேதாவுக்கு தலை வெடித்து விடாதா..?

அவள் அக்கறையாக குனிந்து.. குனிந்த தலை நிமிராமல் படியிறங்கிக் கொண்டிருந்த கல்யாணியின் பார்வை போகும் திசை வழியே தன் பார்வையையும் போக விட்டாள்..

தலைகுனிந்திருந்த கல்யாணியின் முகத்தில் நாணச்சிரிப்பு வந்திருந்தது.. அவளது உதடுகளில் ஓர்விதமான முறுவல் உதித்திருந்தது.. அவள் கீழ்பார்வையால் எதிரே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளது பார்வையை பின்பற்றிப் போன நிவேதாவின் பார்வை.. எதிரே.. மெதுவாக படியேறி வந்து கொண்டிருந்த வாலிபனின் மேல் நிலைத்தது..

அவனும் கல்யாணியை விழுங்கி விடுவதைப் போல பார்த்தபடிதான் படியேறிக் கொண்டிருந்தான்..

“ஓ.. கதை இப்படி போகுதா..’

நிவேதாவின் விழிகளில் கல்யாணியை கையும்.. காதல் பார்வையுமாக பிடித்து விட்ட வெற்றிக் களிப்பு தெரிந்தது..

“வசமா மாட்டிக்கிட்டயா.. யாரிந்த ரோமியோ..?’

அந்த ரோமியோ.. மீனாட்சியைப் பார்த்து கை குவித்து..

‘வணக்கம் அத்தை..” என்றான்..

“அத்தையா..? முறையெல்லாம் சரிதான்.. ஆனால்.. இவன் கல்யாணியின் குடும்பத்திற்குத் தெரிந்தவனா..?’

‘வாப்பா நிரஞ்சா.. ” மீனாட்சியும் அவனை வாயாற வரவேற்றாள்.. அவளது முகமும் மலர்ந்து விட்டிருந்தது..

‘சௌக்கியமா அத்தை..” தாயிடம் வினவியபடி மகளைப் பார்த்தான் அவன்..

கல்யாணியின் இமைகள் மூடித திறந்து “சௌக்கியம்’ என்று கூறின.. மீனாட்சி.. வாய் திறந்து.. ‘சௌக்கியம்தான்ப்பா.. நீ எப்படி இருக்க..?” என்று பதிலுக்கு நலம் விசாரித்தாள்..

‘சதா உங்க நினைப்பில் இருந்தாலும்.. சௌக்கியமாத்தான் இருக்கேன் அத்தை..” இப்போதும்.. இதை கல்யாணியைப் பார்த்தபடிதான் கூறினான் நிரஞ்சன்..

கல்யாணியின் கண்களில் கனவு மிதந்தது.. அவள் கீழ்பார்வையாலே நிரஞ்சனை.. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவனும் சளைக்காமல் பதில் பார்வையை தந்து கொண்டிருந்தான்..

‘இப்ப எங்கேப்பா வேலை பார்க்கிற..?” என்று மீனாட்சி கேட்டபோது.. 

‘நியூ ஜெர்ஸியில்..” என்று பதிலைத் தந்தான் அவன்..

மீண்டும் நிவேதாவுக்கு தூக்கிவாரிப் போட்டது..

“இவன் பாரினில் வேலை பார்க்கிறானா..?’

‘எப்ப வந்த..?”

‘நைட்டுதான் வந்தேன்..”

இரவில் வந்தவன்.. காலையில் ஓய்வெடுக்காமல் கோவிலுக்கு வந்திருக்கிறான்.. நியூ ஜெர்ஸியில் வேலை செய்பவனைப் பார்த்தால் பக்தி பழமாகவும் தெரியவில்லை..

“ஆக.. ஐயா கல்யாணியோட தரிசனத்துக்குத்தான் வந்திருக்கிறார்..’ நிவேதாவின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு வந்தது..

‘எத்தனை நாள் லீவுப்பா..”

‘பத்து நாள்தான இங்கே இருப்பேன் அத்தை..”

‘ஏம்ப்பா.. லீவு எடுத்துக்கிட்டு வர்றதும் வருகிற.. ஒரு மாசமாவது லீவு போட்டுக்கிட்டு வந்தால்தானே ஆச்ச..”

‘நான் லீவில் வரலை அத்தை.. ஆன்டியுட்டியில் தான் வந்தேன்..”

‘புரியலை..”

‘வேலை சம்மந்தமாக வந்தேன் அத்தை..”

‘இப்பவும் புரியலை..”

‘எங்க கம்பெனிக்கு சென்னையில் ஒரு பிரான்ச் இருக்கு.. இங்கே இரண்டு மாதத்துக்கு நான் ஒரு புராஜெக்ட் வொர்க்கை பண்ணி முடிக்கனும்.. அதுக்கு இடையில் ஒரு கேப்.. பத்து நாள் அம்மா அப்பா கூட இருந்துட்டுப் போகலாம்ன்னு கரிச்சான் பட்டிக்கு வந்தேன்..”

கல்யாணியின் முகத்தைப் பார்த்தபடி.. பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை சற்று இடுங்கியது.. கல்யாணியின் முகம் சிணுங்கியது…. அந்த முகச்சிணுக்கத்தை கண்டு கொண்டவனின் புருவங்கள் லேசாக உயர்ந்து 

“என்ன..’ என்று வினவின…

அவள் ஊடலை உணர்த்தியபடி பார்வையை அவன் முகத்திலிருந்து விலக்கி நிலத்தில் பதித்திருந்தாள்..

மகளின் மனதைப் படித்ததைப் போல..

‘ஏம்ப்பா.. உங்க அப்பாம்மா கூட இருந்துட்டுப் போகலாமுன்னுதான் வந்தயா..? எங்க நினைப்பெல்லாம் இல்லயா..?” என்று யதார்த்தமாக கேட்டு வைத்தாள் மீனாட்சி..

‘இதென்ன அத்தை.. இப்படிக் கேட்டுட்டிங்க.. உங்க எல்லோரையும் எப்பப் பார்ப்போம்ன்னு தவிச்சுக் போய் ஓடி வந்திருக்கேன்.. அந்த தவிப்பு உங்க கண்ணுக்குத் தெரியலையா..?” இந்த பதிலையும்.. கல்யாணியை பார்த்தபடிதான் சொன்னான் நிரஞ்சன்..

கல்யாணியின் முகச் சிணுக்கம் மறைந்து விட்டது.. பழைய வெட்கச் சிவப்பு முகத்துக்குத் திருமிபியிருந்தது..

“இதுதான் கோபமா..?’ அவன் கண்கள் மின்னின..

‘எப்படியோப்பா.. எங்களையெல்லாம் மறக்காம நினைவில் வைச்சுக்கிட்டா சரிதான்..”

‘மறக்க முடியுமா..?”

அந்த வார்த்தைகளில் முகம் பிரகாசிக்க விழிகளை உயர்த்தி நிரஞ்சனைப் பார்த்தாள் கல்யாணி.. அவளது விழிகளில் நீர் நிரம்பியிருந்தது.. அருகிலிருந்தவர்களை மறந்து.. அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிலையாக நின்றிருந்தார்கள்..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link