Chapter 11

0Shares

‘காகித ஓடம்.. கடலலை மேலே..

போவது போலே.. மூவரும் போவோம்..”

ராகம் போட்டு பாடிக்கொண்டிருந்தாள் நிவேதா….

இரவு நேரத்து அரட்டைக் கச்சேரிக்காக.. அவளும்.. கல்யாணியும் இரவுச் சாப்பாடு முடிந்த பின்னால்.. மாடி பால்கனியில் உட்கார்ந்திருந்தார்கள்..

கல்யாணி.. கண்களில் கனவு மிதக்க.. முழங்கால்களைக் கட்டியபடி சுவரில் சாய்ந்து அமர்;ந்திருந்தாள்..

அவளது தவத்தைக் கண்ட நிவேதா சிரித்தபடி.. ஊஞ்சலில் அமர்ந்து பாட ஆரம்பித்தாள்..

கல்யாணி நெற்றிக் கண்ணைத் திறந்தாள்..

‘உனக்கு கொழுப்பா..?”

‘யெஸ்..? அதுக்கென்ன இப்ப..?”

‘பாட்டுக் கச்சேரியெல்லாம் தூள் பரக்குது.. என்ன விசேசம்..?”

‘எனக்கா இது விசேச நாள்..? உனக்குத்தான் விசேச நாள்..”

இதைக் கேட்ட கல்யாணி தடுமாறிப் போனாள்.. அந்த மெல்லிய நிலா வெளிச்சத்திலும் அவளது முகச்சிவப்பை நன்றாகப் பார்த்தாள் நிவேதா..

‘எனக்கு.. எனக்கு.. எனக்கென்ன இன்னைக்கு விசேசநாள்..? உளராதே..”

‘நான் ஒன்றும் உளரலை.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. நீ கோவிலுக்குப் போய்.. உன் குல தெய்வத்தை பார்த்ததுவிட்டு வந்திருக்கிறாயே.. அதைத்தான் விசேச நாள்ன்னு சொன்னேன்..”

‘ஓ.. அதுவா..?”

‘நீ வேற எதுன்னு நினைச்ச..?”

‘நான் ஒன்னும் எதையும் நினைக்கல..”

‘நிஜமா..?”

‘நிஜமா..”

‘ஆனாலும் பாரு கல்யாணி.. நீ உன் பெருமாளைத் தரிசனம் பண்ணினப்போ.. உன் உதடு துடிச்ச துடிப்பு இருக்கே.. ஆஹா.. ஹா.. அம்பிகாபதி.. அமராவதியெல்லாம் உன் முன்னால் நிற்கவே முடியாம ஓடிப் போயிடுவாங்க..” நிவேதா கேலியாகச் சிரித்தாள்..

‘நிவேதா..” கல்யாணியின் குரல் நடுங்கியது..

அதைக் கவனிக்காததைப் போல.. நிவேதா கேட்டாள்..

‘ஏன் கல்யாணி.. நான் பாடிய பாட்டு.. எந்த சினிமாவில் வந்தது..?”

‘எனக்குத் தெரியாது..”

‘நான் சொல்லவா..”

‘சொல்லு..”

‘மறக்க முடியுமா..?” நிவேதா கண் சிமிட்டினாள்;..

‘நிவேதா..” கல்யாணியின்.. குரலில் பயம் தென்பட்டது..

‘ஏய்ய.. நான் சினிமாப் பெயரைச் சொன்னேன்.. கல்யாணி..”

அதற்கு மேல் தாள் முடியாதவளாக கல்யாணி விசும்பி அழுது விட்டாள்.. ஊஞ்சலில் இருந்து இறங்கிய நிவேதா கல்யாணியின் அருகே அமர்ந்து தன் தோளில் அவளை சாய்த்து முடி கோதினாள்…

‘பைத்தியம் போல ஏன் அழற கல்யாணி..?”

‘அவர் பெயர் நிரஞ்சன்..”

‘அதைத்தான் அவரே சொல்லிட்டாரே..”

‘அவர் யார் தெரியுமா..?”

‘நீ சொன்னாத்தானே தெரியும்..”

‘அவர்தான் என் அத்தையின் மகன்..”

‘வாட்..?”

இன்னும் எத்தனை ஆச்சரியங்களை இந்த கரிச்சான்பட்டி அவளுக்கு அளிக்கப் போகிறதோ என்று நினைத்துக் கொண்டாள் நிவேதா..

ஜென்மப் பகை பாராட்டும் சிதம்பரநாதனின் மகள்.. அவரது பகையாளியான அத்தையின் மகனைக் காதலிக்கிறாள்..

அந்த அத்தையின் மகனும்.. வேலைக்கு இடையே.. அவளைப் பார்த்து விட்டு போவதற்காக.. கரிச்சான்பட்டிக்கு ஓடி வந்திருக்கிறான்..

இதை என்னவென்று சொல்லுவது..?

‘எப்படி கல்யாணி..? உன் அத்தையின் குடும்பத்துக்கும்.. உன் அப்பாவுக்கும் ஆகாதே..”

‘எனக்கும் அத்தானுக்கும் ஆகுமே..”

‘உண்மையிலேயே அவர் உன்னை காதலிக்கிறாரா..?”

‘நீதான் கெட்டிக்காரியாச்சே.. என்னை கண்டு பிடிச்சவ.. அவரைக் கண்டுபிடிச்சிருக்க மாட்டாயா..?”

கண்டுபிடித்துத்தானே வைத்திருக்கிறாள்..

“மறக்க முடியுமா..?’ என்று அந்த நிரஞ்சன் கேட்டபோது அவன் முகத்தில் பிரதிபலித்த உண்மையான காதல் உணர்வை.. கண்டுபிடித்துத்தானே வைத்திருக்கிறாள்..

‘உனக்குத் தெரியாது நிவேதா.. அப்பா என்னை ப்ளஸ் டூவிற்கு மேல படிக்க விடலை..”

‘ஓ.. காட்..”

‘இந்தப் பட்டிக்காட்டில் .. பாவாடை தாவணியில் என்னை சிறையிருக்க வைத்துட்டாரு..”

‘டூ பிட்டி..”

‘என் சித்தப்பா அப்படியில்ல.. சுகந்தியக்காவ.. டவுனுக்கு அனுப்பி காவேஜில் சேர்த்து விட்டு என்ஜினியருக்கு படிக்க வைக்கிறாரு.. அது இஷ்டப்படி டிரெஸ் பண்ணிக்க சம்மதம் கொடுத்திருக்காரு..”

‘பரவாயில்லையே.. உன் சித்தப்பா குடும்பத்து மேல அக்கறையாய் இருக்கிறவர்தான் போல..”

‘அவரைப் போல யார் அக்கறையாய் இருப்பாங்க..?”

‘அதுக்காகவெல்லாம் ஏக்கப்படக் கூடாது கல்யாணி.. சுகந்திக்குக் கிடைக்காத ஏதோ ஒன்னு உனக்கு கிடைச்சிருக்கலாம்..”

‘அதுதான் கிடைச்சிருக்கே..”

கல்யாணியின் குரலில் கர்வம்.. பெருமிதம்.. வெற்றிக் களிப்பு.. காதல் என்று எல்லாமே சேர்ந்து கலவையாக ஒலித்தன..

‘எது..?”

‘என் அத்தானின் காதல்..”

அப்போதுதான் அந்த உண்மையை நினைத்துப் பார்த்தாள் நிவேதா.. சிதம்பரநாதனின் மகளுக்கு.. அவரின் அக்கா மகன் “அத்தான் ‘ என்றால்.. மேகநாதனின் மகளுக்கும்.. அவன்தானே ; “அத்தான் ‘

‘ஓ.. நீ அப்படி வருகிறாயா..?”

‘சின்னவயதிலிருந்தே.. எனக்கு அத்தான் மேல கொள்ளை ஆசை நிவேதா.. ஆனா.. என்னைவிட சுகந்தி அதிகமாக படிக்க ஆரம்பிச்சா.. உன்னைப் போல அழகழகான துணிகளை உடுத்த ஆரம்பிச்சா..”

‘இதனாலெல்லாம் நிரஞ்சன் உன்னை விட்டு அவளைக் காதலித்து விடுவாராமா..? முட்டாள்;.. காதல் ஆள் பார்த்து வராது..தானாய்.. மனசில இருந்து வெளிவரும்'”

‘அது மட்டுமில்ல நிவேதா.. என் அத்தான் சாப்ட்வேர் என்ஜினியர்.. சுகந்தியும் அதே படிப்பைத்தான் படிக்கிறா..”

‘இப்பத்தானே சொன்னேன்.. காதல் தானாய் வரணுமுன்னு.. ஒரே படிப்பை படிச்சுட்டா.. உன்னை விட்டு அவ பின்னால் அவர் போயிடுவாரா..?”

‘இத்தனைக்கும் மேல.. வேற ஒன்னு இருக்கு நிவேதா..”

‘என்னவாம்..?”

‘சுகந்தி என் அத்தானுக்கு முறை பொண்ணு..”

நிவேதாவுக்கு சுத்தமாக விளங்கவில்லை.. மரகதம்.. சிதம்பரநாதனுக்கும்.. மேகநாதனுக்கும்.. கூடப் பிறந்த அக்கா.. அவள் மகனுக்கு.. சுகந்தியும்.. கல்யாணியும் தாய் மாமன் மகள்கள்.. இதில் சுகந்தி மட்டும் எப்படி நிரஞ்சனுக்கு முறை பெண்ணாவாள்..?

‘நீயும்தான் அவருக்கு முறைப் பொண்ணு..”

‘நான் தாய் மாமன் மகள் மட்டும்தான்.. ஆனால் சுகந்தி அவருக்கு அத்தை மகளுமாச்சே.. இரட்டை சொந்தம்.. அப்படின்னா என்னைவிட அவளுக்குத்தான் அவர் மேல உரிமை அதிகம்..”

‘அத்தை மகளா..?”

‘இது உனக்குத் தெரியாதா..? என் சித்தி அமராவதி இருக்குதே.. அதை யாருன்னு நினைச்சே..?”

‘உன் சித்தப்பாவின் வொய்ப்.. உனக்கு சித்தின்னு நினைச்சேன்..”

‘கிண்டலா..?”

‘ரொம்பவும் சீரியஸா இருந்தா.. மண்டை காய்ஞ்சுரும் கல்யாணி.. அப்பப்ப.. மூளை சூட்டை தணிச்சுக்கனும்..”

‘பிழைத்துப் போ.. என் சித்தி.. என் அத்தையைக் கல்யாணம் செய்திருக்கிற மாமா கூடப் பிறந்தது..”

‘வாட்..?”

“என்னங்கய்யா இது… ‘  என்று அயர்ந்து விட்டாள் நிவேதா..

இப்படியா.. தோண்டத் தோண்ட.. புதிது புதிதாய் விவரங்கள் புறப்பட்டு வரும்..? இது என்ன வீடா..? இல்லை.. ரகசியங்களின் கிடங்கா..?

‘அதாவது.. உன் நிரஞ்சனுக்கு.. சுகந்தி சொந்த அத்தையின் மகளும் ஆவாள் என்கிறாய்..”

‘அதே…”

நிவேதா இதை சுத்தமாக நினைத்தும் பார்க்கவில்லை..

அவள் கோர்வையாக யோசிக்கலானாள்.. சிதம்பரநாதனும்.. மேகநாதனும் அண்ணன் தம்பிகள்.. அவர்களுக்கு மூத்த அக்கா மரகதம்.. மரதகத்தின் கணவர் கேசவ மூர்த்தி.. அவரின் தங்கை அமராவதி.. அமராவதியைத்தான் மேகநாதனுக்கு மணமுடித்து வைத்திருக்கிறார்கள்..

‘பெண் கொடுத்து பெண் எடுத்தாங்களாம்..” என்றாள் கல்யாணி..

‘அப்ப அந்த கோசலைப் பாட்டி..?”

‘அதுதான் அந்த அழகுத் திரு பிள்ளைகளை பெற்றுப் போட்டது..”

கேசவமூர்த்தியையும்.. அமராவதியையும் கூடப் பிறந்த பிறப்புகளாக பெற்று விட்டதற்காக.. கோசலை கல்யாணியின் வாயில் அரை படுவதைக் கண்ட நிவேதாவிற்கு சிரிப்பு வந்தது..

‘போகுது விடு.. ஏதோ.. அந்தக் காலத்தில் தெரியாத்தனமாய் பெற்றிருப்பாங்க.. இப்படி அதற்காக உன்கிட்ட திட்டு வாங்க வேண்டியிருக்கும்ன்னு.. அவங்க என்ன ஜோஸியமா கண்டாங்க..?”

‘இரட்டைச் சொந்தமா இருந்தாலும்.. சுகந்தியை என் அத்தான் திரும்பிக் கூட பார்க்கலை.. ஆனா.. அவ மனசில அத்தான் மேல நினைப்பிருக்கு.. என் சித்தப்பாவுக்கும்.. அவளை என் அத்தானுக்கு கொடுக்கும் எண்ணமிருக்கு..”

‘உனக்கு எப்படித் தெரியும்.. நீயாய் எதையும் சொல்லாதே..”

‘இல்லை நிவேதா.. சுகந்தியை நான் கண்டுபிடிச்சுட்டேன்.. சித்தி மனசில அந்த நோக்கம் இருக்கிறதா.. அம்மாக்கிட்ட அதுவே சொல்லியிருக்கு..”

‘என்னன்னு சொன்னாங்களாம்..?”

‘என் அண்ணன் மகனுக்கு தோதா இருக்கனுமுன்னுதான் சுகந்தியை என்ஜினியருக்கு படிக்க வைக்கிறேன்னு சொல்லுச்சாம்..”

“இது போதாதா..?’

நிவேதா கல்யாணியை இரக்கத்துடன் பார்த்தாள்.. கல்யாணியின் முகத்தில் கைப்பொருளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளும் பதட்டம் தென்பட்டது..

‘ஆயிரம் பேர்.. ஆயிரம் நினைத்தாலும்.. நிரஞ்சன் உன்னைத்தானே நினைக்கிறார்..? நீ அதை மட்டும் நினை..”

‘எனக்கும் அது தெரியுது.. ஆனா.. என் அப்பா..”

‘அங்கே .. உன் சித்தப்பாவும் உன் அத்தை வீட்டோடு பேச மாட்டாரே..”

‘அவங்க கதையே வேற.. என் சித்தப்பா.. சித்தி முந்தானையை பிடித்துக்கிட்டு போகிறவர்.. சித்திக்கு அதோட அண்ணன் மகனுக்குத்தான் பெண் கொடுக்கனுமுன்னு தோணிருச்சு.. நாளைக்கே சித்தி.. சொல்கிற விதமாய் சொன்னா.. என் சித்தப்பா.. அத்தைமேல கோபத்தை விட்டுட்டு.. ஒன்றாய் சேர்ந்துக்குவாங்க..”

‘அது வேற இருக்கா..?”

‘இங்கே.. நம்ம வீட்டுக் கதைதான் உனக்குத் தெரியுமே.. அப்பா யாருக்கும் கட்டுப்பட மாட்டார்.. இதில் என் எண்ணம் எப்படி நிறைவேறும்..? நீயே சொல்லு..”

கல்யாணி வெகு இயல்பாக.. “நம்ம வீடு..’ என்று சொன்னதில் நிவேதா நெகிழ்ந்து விட்டாள்..

அவளது குழந்தை முகத்தை தன் கைகளில் ஏந்தி.. அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தாள்..

‘என்னிடம் சொல்லிட்டல்ல.. கவலையை விடு.. உனக்கு உன் அத்தான் கூடத்தான் கல்யாணம் நடக்கும்..”

‘நடக்குமா நிவேதா..?”

‘கட்டாயம் நடக்கும்..”

கல்யாணியின் கவலையை அகற்ற.. பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள் நிவேதா.. நிரஞ்சனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.. காதலிப்பவனைப் பற்றிய பேச்சு என்றால்.. எந்தப் பெண்ணுக்குமே அது வெல்லக் கட்டிதானே..

கல்யாணி கலகலப்பாக நிரஞ்சனைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.. 

‘அம்மா முன்னாடி பவ்யமாய் வேசம் போடுகிறாரே.. அதையெல்லாம் நம்பி விடாதே.. எல்லாம் நடிப்பு.. அவர் மகாத் திருடன்..”

‘அப்படியா.. பார்த்தாத் தெரியலையே..”

‘பார்த்தா தெரியாது.. பழகினாத்தான் தெரியும்..”

‘ஐ.. ஸீ..”

‘அதுக்காக நீ பழகிப் பார்க்க கிளம்பிராதே..”

‘அடச்சீ.. அவர் எனக்கு அண்ணன்..”

‘அண்ணனா..? இது எப்போதிருந்து..?”

‘எப்ப அவர் உன் காதலன்னு தெரிஞ்சதோ.. அப்போதிருந்து..”

‘நம்பலாமா..?”

‘தாராளமாய் நம்பலாம்..”

‘ஆள் வேற.. இந்தி சினிமா நடிகையைப் போல இருக்கே..”

‘இப்ப தமிழிலும் அதைவிட அழகான நடிகைகள் வந்திட்டாங்க..”

‘அத்தனைப் பேரையும் தூக்கி சாப்பிடறதைப் போல இருந்து வைக்கிறயே..”

‘அதுக்கு என்ன இப்ப..?”

‘அதை நினைச்சுக்கிட்டு என் ஆள் முன்னால சுத்தி சுத்தி வராதே..”

‘இப்ப நீ அடிதான் வாங்கப் போறே கல்யாணி.. கடவுள் சத்தியமா அவர் எனக்கு அண்ணன் தான் போதுமா..?”

‘அப்பாடா.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு..”

கல்யாணி தலை சாய்த்து சிரிக்க.. அவள் தோள் மீது கை போட்டு அவளது நெற்றியோடு தன் நெற்றியை மோதினாள் நிவேதா..

‘நீ இப்படியே சிரிச்சுக்கிட்டு இருக்கனும் கல்யாணி.. எனக்கு அதுதான் வேணும்..”

நிவேதாவின்  குரலில் நெகிழ்ச்சி இருந்தது.. அதை உணர்ந்த கல்யாணி அவளை விசித்திரமாய் பார்த்தாள்..

‘சில சமயம் நீ பேசறதும். . நடந்துக்கிறதும்.. புதுசா இருக்கு நிவேதா.. என் அத்தான் என்கிட்ட பேசறதைப் போல் நீயும் பேசி வைக்கிற..”

‘ஏன்.. எனக்கு உன்மேல் அன்பிருக்கக்கூடாதா..?”

‘அளவுக்கு மீறின அன்பிருக்கு.. அதுதான் ஏன்னு எனக்கு பிடிபடமாட்டேங்குது..”

அன்று இரவு.. படுக்கையிலே.. அது ஏன்.. என்று நினைத்துப் பார்த்த நிவேதாவின் கண்களிலிருந்து.. கண்ணீர் பொங்கி வழிந்தது..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link