Chapter 12

0Shares

தோட்டத்துச் செடியிலிருந்த பட்டாம் பூச்சியை தன் செல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த நிவேதாவை பார்த்தபடி.. தன் டாடா சுமோவிலிருந்து இறங்கினான் கார்த்திகேயன்..

காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த நிவேதா.. பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

‘என்ன ஆச்சு.. கோபமா..?” கார்த்திகேயனின் குரல் குழைந்தது..

‘ஆமாம்..” நிவேதா பட்டென்று பதில் சொன்னாள்..

‘சும்மா என்கிட்ட கோவிச்சுக்கிட்டா எப்படி..? கொஞ்சம் கல்யாணிக்கும் பகிர்ந்து கொடுக்கலாமே.. அவகிட்ட மட்டும் அப்படியே மலர்ச்சியா பழகறே.. என்னைக் கண்டா மட்டும் என்ணையில் கடுகைப் போட்டதைப் போலப் பொரியற.. ஏன்..? என்னைப் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா..?”

‘இல்லை..”

‘உனக்கு இரக்கமே இல்லை..”

‘இல்லை..”

கார்த்திகேயன் என்ற ஒருவன் அங்கே இல்லாததைப் போன்ற பாவனையுடன் நகர முற்பட்டவளின் முன்னால் கை நீட்டி தடுத்தான் அவன்..

‘எதுக்கு இத்தனை கோபம்..”

‘நான் எதுக்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன்..?”

அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கேட்ட விதத்தில் அவனுக்கு மனசுக்குள் சில்லென்ற  ஐஸ் மழை பொழிந்தது..

ஆற்றங்கரையருகே.. அவள் அவனுக்கு ஆறுதல் சொல்லிப் பாடிய பொழுதிற்குப் பின்னால் … அவர்கள் இப்படித்தான் உரிமையுடன் பேசிப் பழகுகிறார்கள்..

‘அதுவா..? என் வீட்டில் தங்கி.. மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு என் அம்மா கூடவும்.. தங்கச்சி கூடவும் ஊர் சுற்ற வந்திருக்கிற..”

‘என்ன சொன்னீங்க..?” நிவேதா இடுப்பில்  கை வைத்து அவனை முறைத்தாள்..

‘ஹப்பா.. அனல் வீசுது..” அவன் கையுயர்த்தி சிரித்தான்..

‘உங்ககூட “டூ’.. என்கூடப் பேசாதீங்க..”

‘நீ அதிலேயே இரு.. இப்ப உனக்கு என்ன வேனும்..? நீ எதுக்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன்னு நான் சொல்லனும்.. அவ்வளவுதானே.. சொல்லிட்டாப் போச்சு.. நாட்டுப் பாடல்களை ஆராய்ச்சி பண்ண வந்திருக்கிற.. போதுமா..? சொல்லிட்டேன்..?

‘இப்படி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா எப்படி என் ஆராய்ச்சியை செய்ய முடியும்..?”

‘வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடன்னு நானா சொன்னேன்..? நீதானே கல்யாணியின் தாவணியைப் பிடிச்சுக்கிட்டு அவள் பின்னாலேயே சுத்தற..”

இதைச் சொன்னவனின் குரலில் பொறாமை பொங்கி வழிந்தது..

‘அவகூட நீங்க ஏன் போட்டி போடறீங்க..”

‘நீ அவளை விட்டுட்டு என்கூட மட்டும் ஏன் சண்டை போடற..?”

‘அவளால என்னை வயல் பக்கம் கூப்பிட்டுக்கிட்டுப் போக முடியுமா..? உங்க அப்பாதான் வீட்டுப் பெண்களை வெளியில் விட மாட்டாரே..”

“ஓ.. அதை வேற கேட்டாச்சா..? அவளால் வெளியில் கூப்பிட்டுக் கொண்டு போக முடிந்திருந்தா.. நீ அவகூடப் போகிற உத்தேசத்தில்தான் இருந்திருக்கிற..”

‘ஆமாம்.. பட்.. உங்க அப்பா போட்ட தடையுத்தரவால் உங்களை பிடித்து தொங்க வேண்டியிருக்கு..”

“வேறு வழியில்லாமல்தான்.. இவள்.. என் கூட வருகிறாளா..?’

  கார்த்திகேயன் ஏமாற்றமாக உணர்ந்தான்.. அதை அவள் கண்டு கொள்ளாமலிருக்கும் பொருட்டு.. முகத்தை திருப்பிக் கொண்டு நடந்தபடி.. அவளை அழைத்தான்..

‘வா போகலாம்..”

‘ஹைய்யோ.. இப்பவேயா..?”

அவள் குதூகலத்துடன் காரில் ஏறி.. அவனருகில் அமர்ந்தாள்.. வழியில் தென்பட்ட செடி.. கொடிகளைப் பற்றி.. வயல் வரப்பைப் பற்றி.. பறவைகளைப் பற்றி.. அவனிடம் கேட்க.. அவளுக்கு ஆயிரம் சந்தேகங்கள் இருந்தன..

எல்லாவற்றுக்கும் பட்டுக் கொள்ளாமல் பதில் சொல்லியபடி வண்டியை ஓட்டினான் அவன்..

வெகு நேரத்திற்கு பின்னால்தான் அவனது விலகுதலை கவனித்தாள் நிவேதா..

“ஏன் இப்படி விட்டேற்றியாக பதில் சொல்லிக்கிட்டு வருகிறான்..?’ அவளுக்குப் புரியவில்லை..

‘ஆர் யு ஆல்ரைட்..?” என்று வினவினாள்..

‘ம்ம்ம்..” என்ற முணுமுணுப்புத்தான் பதிலாக வந்தது..

“இவனுக்கு என்னதான் ஆச்சு..’ அவளுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது..

களையெடுத்துக் கொண்டிருந்தவர்களின் அருகே அவளை அழைத்துச் சென்ற கார்த்திகேயன்.. அங்கேயிருந்தவர்களிடம் அவளை அறிமுகப் படுத்தி வைத்தான்..

‘அப்பத்தா.. இந்தப் பொண்ணு நம்ம பக்கத்து தெம்மாங்குப் பாட்டைப் பத்தி ஆராய்ச்சி பண்ண வந்திருக்குது.. உனக்குத் தெரிஞ்ச பாட்டைடெயல்லாம் அவிழ்த்து விடு..”

‘அதுக்கென்ன ராசா.. பாடிட்டா போகுது.. இங்க வா புள்ள..”

அந்த மூதாட்டி பாட்டுப் பாட தயாராக.. நிவேதா.. கையிலிருந்த டேப்ரிகார்டரில் அதை பதிவு பண்ணத் தயாரானாள்..

‘அப்ப நான் கிளம்பவா..?” கார்த்திகேயனும் அங்கிருந்து  கிளம்பத்  தயாராக.. நிவேதா அவனை முறைத்துப் பார்த்தாள்..

‘என்ன.. விளையாடுகிறீங்களா..?”

‘யாரோடு..? உன்னோடா.. ? இப்ப நீதான் விளையாடுகிற..”

‘கூப்பிட்டுக்கிட்டு வந்து நடுக்காட்டில தனியாய் விட்டுவிட்டு.. கிளம்பறேன்னு சொன்னா.. என்ன அர்த்தம்..?”

‘தனியாய் விட்டுட்டுப் போறேனா..? ஏன்.. இவங்களையெல்லாம் பார்த்தால்.. உனக்கு ஆளாய் தெரியலையா..?”

‘எதுக்கோ.. என்னை பழிவாங்குகிறீங்கன்னு  மட்டும் தெரியுது.. ஆனா அது.. என்னன்னு மட்டும் தெரியலை..”

‘அப்படியெல்லாமில்லை..”

‘பெரிய பண்ணையாரின் மகனுக்கு பொய் சொல்லக் கூடத் தெரியுமா..?”

‘இப்ப உனக்கு என்னதான் வேனும்..?”

‘நான் இவங்ககிட்ட பாட்டுக் கேட்டு.. ரிகார்டு பண்ணி முடிக்கிற வரைக்கும்.. நீங்க இங்கேயே வெயிட் பண்ணனும்..”

‘எனக்கென்ன வேற வேலை வெட்டியே இல்லைன்னு நினைச்சியா..?”

‘இதுவும் உங்க வேலைதான்..”

‘நீ  பாட்டு கேட்டு முடிச்சதும் கால் பண்ணு.. நான் வந்து கூப்பிட்டுக்கிட்டுப் போகிறேன்..”

‘அதெல்லாம் முடியாது..”

‘அடம் பிடிக்காதே நிவேதா..”

‘நீங்கதான் அடம் பிடிக்கிறீங்க..”

‘இல்லை… நீதான் அடம் பிடிக்கற…” 

‘யார்..? நானா.. அடம் பிடிக்கிறேன்..?”

‘உன் மனச்சாட்சியை கேட்டுப்பார்.. தெரியும்..”

‘இப்ப எதுக்கு தேவையில்லாம மனச்சாட்சியை வம்புக்கு இழுக்கறீங்க..”

‘அதானே.. அதைப்பத்தி.. அது இருக்கிறவங்க கிட்டயில்ல பேசனும்.. உன்கிட்ட கேட்டா.. உனக்கென்ன தெரியப் போகுது..”

‘அதை நீங்க சொல்லக்கூடாது.. மனச்சாட்சியை கழட்டித் தூக்கிப் போட்டு விட்ட ஆள்தானே நீஙக..”

இருவருமே எதற்காக வழக்கடிக்கிறோம் என்று தெரியாமல் வழக்கடித்துக் கொண்டிருக்க.. களையெடுத்த பெண்கள்.. வேலை முடிந்து.. வீட்டுக்கு கிளம்பத் தயாரானார்கள்..

‘அப்ப நாங்க போயிட்டு வரவா ராசா.. காலாகாலத்தில் சண்டையை முடிச்சிட்டு.. பொழுதோட வீட்டுக்குப் போயி சேருங்க..”

“போச்சுடா..’ தலையில் கைவைத்துக் கொண்ட கார்த்திகேயன் அவசரமாக அந்தப் பெண்களை சமாதானம் செய்து கொஞ்ச நேரம் பொறுத்துப் போகச் சொன்னான்..

நிவேதா பக்கம் திரும்பினான்..

‘உனக்கு என்ன வேனும்..? நான் போகக் கூடாது.. அவ்வளவுதானே.. பேசாமல் அடங்கி.. உட்காருகிறேன்.. போதுமா.. இவங்கள்ளாம் பாவம் வேலையை முடிச்ச களைப்பில் இருப்பாங்க.. வீட்டுக்குப் போய் அங்கேயும் வேலை பார்க்கனும்.. அதானால.. அவங்கனை தொந்தரவு செய்யாம பாட்டைக் கேட்டுட்டு.. அனுப்பும்மா..” என்றான்..

‘என்னது அம்மாவா..?”

நிவேதா சிலிர்த்துக் கொண்டு.. மீண்டும் ஒரு சண்டைக்கு தயாராக.. 

‘ஏம்மா.. நாங்க இருக்கவா.. இல்லை போகவா..?” என்று கேட்டாள் அந்த மூதாட்டி..

‘உங்களை நான் போகச் சொல்லலையே..”

‘போகாம இருந்து நீங்க ரெண்டு பேரும் போடற சண்டையை வேடிக்கை பார்க்கச் சொல்றியா..?”

‘அப்படிச் சொல்வேனா பாட்டி..”

‘அப்புறம் எதுக்காக.. திரும்பவும் சிலிர்த்துக்கிறவ.. எங்க பண்ணையாரு மகன் பொம்பளப் புள்ளககிட்ட பேசி.. நாங்க யாரும் பார்த்ததில்ல.. காணாத காட்சியா உங்கூட பேசிட்டு வருகிறாறேன்னு பார்த்தா நீ இப்படி சண்டைக்காரியாய் இருக்கிற..”

கார்த்திகேயன் நமட்டுச் சிரிப்புடன் கார் பானெட்டில் ஏறி கால் மேல் கால் போட்டு தோரணையாய் அமர்ந்து கொண்டான்..

“மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கறியா..’ அவள் பல்லைக் கடித்தபடி அந்த பெண்களை தாஜா செய்து பாட வைத்தாள்..

‘ஒத்தையில நான் போகும் போது..

ஒதுக்கத்திலே வந்த மச்சான்..

வழித்துணையாய் வரவான்னு கேட்டான்..

வழக்கம் கெட்டு சம்மதம் சொன்னேன்..

பேசி வைச்ச பேச்சையெல்லாம்..

காத்து வழி பறக்க விட்டு

தூரம் தொலைவில் ஓடிப் போனான்..

என் உசிருக்குள்ள அவன் உசிரைச் சுமந்தேன்..

எட்டுப் பட்டி ஊருக்குள்ள..

இட்டுக்கட்டி ஜனம் பேசுதடி..

என் மனசு ரணத்தைப் பத்தி..

ஒரு ஜனமும் பேசலைடி..”

நிவேதா கல்லாக சமைந்து போனாள்.. அந்தப் பாடல் வரிகள் உணர்த்திய துயரம் அவளது மனதை வாள் கொண்டு அறுத்தது..

நம்பினவன் கைவிட்டு ஓடிப்போன துரோகத்தை இதை விடவும் ஒரு பெண்ணால் சொல்லி விட முடியுமா என்ன..?

அந்தப் பாடலைப் பாடியவளின் குரல் அழுதது.. அந்த மூதாட்டி அவளை அதட்டினாள்..

‘போதும் புள்ள.. ஒப்பாரி வைக்காதே.. சேலை மேல முள்ளு பட்டாலும்.. முள்ளு மேல சேலை பட்டாலும்.. சேதம் சேலைக்குத்தான்.. இந்த புத்தியோட பொழைச்சிருக்கனும்.. அப்ப புத்தியக் கடன் கொடுத்திட்டு.. இப்ப புலம்பி அழுது என்ன பண்ண..?”

‘என்னவோ மனசு தாங்காம அழுது கொட்டிப்புட்டேன் ஆத்தா.. நீயும் அதட்டாதே..”

‘உன் மனசு ரணத்தைப் பத்தி ஊரு ஜனத்துக்கென்னடி கவலை..? நாளைக்கு .. உனக்கும்.. உன் பிள்ளைகளுக்கும்.. ஊரு ஜனமா கஞ்சி ஊத்தப் போகுது..? உன் புருசன் உன் கூட இருந்தாலும் நீ பாடுபட்டாத்தான் உனக்கு கஞ்சி.. ஓடிப் போனாலும் நீ பாடுபட்டாத்தான் உனக்கு கஞ்சி இதில எதுக்கு அழுது நோகனும்..?”

திரும்பி வரும் வழியில் நிவேதா பேசவேயில்லை.. கார்த்திகேயன் அவளைக் கவலையுடன் பார்த்தான்..

“இவளுக்கு பூஞ்சை மனசு..’ அவன் மனம் இளகியது..

‘நிவேதா.. ” அவனே பேசினான்

‘ம்ம்ம்..”

‘ஏன்.. என்னவோ போல இருக்கே..”

‘அந்தப் பொண்ணு பாடினத கேட்டிங்கதானே..”

‘இதைப் போல இங்கே ஆயிரம் கதைகள்..”

‘அதை எப்படி இவ பாட்டுக்குள்ள கொண்டு வந்தா..?”

‘அதெல்லாம் இவங்களுக்கு இயல்பா வரும்..”

‘கிரேட் கார்த்திக்.. எதுகை மோனையோட.. ஒரு நொடியில பாட்டைப் பாடி விடறாங்களே.. இவங்களுக்கு இவங்க திறமையைப் பத்தி தெரியுமா..?”

‘இது மட்டுமா இவங்க திறமை..? புள்ளி கோலம் போடுகிறார்களே.. அதுவும் இவங்க திறமைதான்.. ஒரு மணி நேரத்துக்குள்;ள ஊருக்கெல்லாம் சமைச்சு பந்தி பரிமாறுவாங்களே.. அதுவும் இவங்க திறமைதான்.. என்ன ஒன்னு.. இதையெல்லாம் பாராட்ட ஆளில்லை..”

கார்த்திகேயனின் கார் சீரான வேகத்துடன் சென்றது.. நிவேதாவிற்கு.. அப்போது இருந்த மனநிலையில் உடனே வீட்டுக்குப் போக மனமில்லை..

சாலையை ஒட்டி இருந்த.. அடர்ந்த மரங்கள் அடர்ந்திருந்த பகுதியைப் பார்த்தாள் அவள்.. அங்கிருந்து வந்த குளிர் காற்று அவளை இழுத்தது..

‘அது என்ன.. காடா..?”

நிவேதா கைகாட்டிய திசையில் பார்த்தவன்..

‘வெறும் காடில்லை.. அருவிக்காடு..” என்று சொன்னான்..

‘அருவியா..? என்னை அங்கே கூப்பிட்டுக்கிட்டு ப் போங்களேன்..”

‘இந்த நேரத்திலா..?”

மாலை மயங்கிக் கொண்டிருந்த அந்த வேளையில் கார்த்திகேயன் யோசனையுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்..

‘நீங்கதான் கூட இருக்கீங்களே..” நிவேதா வற்புறுத்தினாள்..

அருவிக்காட்டுக்கு போகும் பாதையில் கார் திரும்பியது..

கொட்டும் நீர்வீழ்ச்சியைப் பார்த்த போது.. நிவேதாவின் மனபாரம் அகன்று விட்டது..

‘கிட்டே போகலாமா..?” ஆவலுடன் கேட்டாள்..

‘இப்ப வேணாம் நிவேதா..” அவன் மறுத்தான்..

‘ஏன்..?”

‘இருட்டிக்கிட்டு இருக்கு.. இன்னொரு நாள்.. இங்கே வரலாம்.. நானே கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்..”

இருள் வந்தே விட்டது.. அவர்கள் அமர்ந்திருந்த பாறையிலிருந்து காருக்கு வரும் வழியில் பெரிய கற்கள் இருக்க.. அதில் கால் தடுக்கி நிவேதா கீழே விழப் போனாள்..

‘பார்த்து..” கார்த்திகேயனின் கரம் அவளை தடுத்து அணைத்துக் கொண்டது..

விழுந்த வேகத்தில் பற்று கோலாக அவனது கை கிடைத்ததும் அதை இறுகப் பற்றிக் கொண்ட நிவேதா.. தன்னை சமனப் படுத்திக் கொள்ள.. அவளையறியாமல் அவன் தோள் மீது சாய்ந்தாள்..

ஆதரவுக்காக சாய்ந்து நின்றவளின் தோள் தொட்ட அவனது கரங்கள் அவளை இறுக்கிக் கொண்டன.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவன் அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டான்..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link