Chapter 14
இரவு முழுவதும் மகனுக்காக காத்திருந்த மீனாட்சி.. அறைக்குப் போகாமல் யுhல் சோபாவிலேயே படுத்து உறங்கி விட.. நிவேதா விடிய.. விடிய.. தூங்காமல் விழித்திருந்தாள்..
அவள் இமை மூட முயன்றால்.. மூடிய இமைகளுக்குள்.. சுட்டு விரலை நீட்டி.. “நீதான்..’ என்று குற்றம் சாட்டியபடி கார்த்திகேயன் நின்றான்..
“நீதான் என்னை அருவிக்கரைக்கு கூப்பிட்ட..’
எத்தனை உண்மையான வார்த்தைகள் அவை.. அவள்தானே அவனை அருவிக்கரைக்கு அழைத்தாள்..?
நிவேதா மனம் துடிக்க. படுக்கையில் புரண்டு படுத்தாள்.. அவளுக்கு மனச்சாட்சி உறுத்தியது..
“தேமே’ என்று மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தவனிடம் செல்ல கோபம் காண்பித்து வயலுக்கு அழைத்துப் போக வைத்தது.. அவள்தானே..
அங்கேயும்.. பாவம்.. அவன் கிளம்பிப் போகிறேனென்றுதான் சொன்னான்.. “நீ பாட்டைக் கேட்டுவிட்டு கால் பண்ணு.. வந்து கூப்பிட்டுக்கிட்டுப் போகிறேன்..’ என்று சொன்னானே.. அவள் கேட்கவில்லையே.. பிடிவாதம்பிடித்து.. அவனை கூடவே நிறுத்திக் கொண்டதும் அவள்தான்..
எவளோ ஒரு பெண்.. தன் காதலனிடம் ஏமாந்து விட்ட கதையை பாட்டிலே பாடினால் நிவேதாவிற்கு என்ன வந்தது..? இவள் மனதில் பாரத்தை சுமந்து கொண்டு.. மன மாற்றத்திற்காக அவனை அருவிக் கரைக்கு அழைத்தாளே.. அப்போதும் அவன் இருட்டப் போகிறது என்று சொல்லி மறுத்தானே.. சொல்லச் சொல்ல கேட்டகாமல்.. அவனை அருவிக் கரைக்கு அழைத்துச் சென்றதும் அவள்தான்..
மனம் லேசான பின்னால்.. ஊர் கதை.. உலகக் கதை பேசி அரட்டையடித்து.. இருட்டும் வரை அங்கேயே உட்கார்ந்து .. கூட அவனையும் உட்கார வைத்து விட்டாள் அவள்தான்..
அவனே சொன்னதைப் போல.. இருட்டில் கால் தடுக்கி அவன் மேல் சாய்ந்ததும் அவள்தான்..
அவன் தொட்டவுடன் விலகாமல்.. பற்றிக் கொண்ட மோகத்தீயுடன் அவன் கைக்குள் அடங்கியதும் அவள்தான்..
அவன் முத்தமிட்ட பொழுதில் முகம் விலக்காமல் கிறங்கிப்போய் இசைந்து நின்றதும் அவள்தான்..
இத்தனை காரியத்தையும் அவள் செய்துவிட்டு.. அவனை மட்டும் குற்றவாளியாக்கி கூறு போட்டது எந்த விதத்தில் நியாயமாகும்..?
மௌனக் கண்ணீரில் தலையணையை நனைத்தாள் நிவேதா..
அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடின.. எதற்காக கரிச்சான் பட்டிக்கு வந்து இறங்கியிருக்கிறாள் என்பதை நினைத்துப் பார்த்தாள் அவள்..
அவள் வந்த நோக்கம் என்ன..? இப்போது செய்து வைத்திருப்பது என்ன..? இதற்காகவா.. இத்தனை தூரத்தை கடந்து சிதம்பரநாதனின் வீட்டில் அவள் கால் பதித்தாள்..?
தொண்டை வறண்டு விட்டதை உணர்ந்தவள்.. தண்ணீரைத் தேடினாள்.. தண்ணீர் ஜக்
காலியாக இருந்தது.. எழுந்து அறைக்கதவைத் திறந்து..மாடிப்படிகளில் இறங்கினாள்.. யுhலில் விளக்கு வெளிச்சம் தெரிய.. அவளது புருவங்கள் ஏறின..
“யுhலில் யார் இருக்கிறது..?’
மீனாட்சி இருந்தாள்.. தரையில் அமர்ந்து.. சோபாவில் தலை வைத்து கண் மூடி.. தன்னையுமறியாமல் அவள் உறங்கிக்க கொண்டிருந்தாள்..
அனைவரையும் மடியில் தாங்கும் அந்தத் தாய்க்கு ஆறுதல் கொடுக்கும் தாயின் மடியாக அந்த சோபாதான் இருக்கிறதா..?
எல்லோரையும் அரவணைக்கும் அந்த தாயை அரவணைக்க தனிமை மட்டும்தான் இருக்கிறதா..?
சாப்பாட்டு மேஜையில் மூடப்பட்டிருந்த பாத்திரங்கள்.. மகனின் வரவுக்காக அவள் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பதை உணர்த்தியது..
நிவேதா தண்ணீர் குடிக்க மனமில்லாமல் மாடிக்கு திரும்பி விட்டாள்.. செல்போனை எடுத்து மணிபார்த்தாள்.. அதிகாலை நான்கு மணி என்றது..
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. செல்போனில் கார்த்திகேயனின் செல்போன் எண்களை அழுத்தினாள் நிவேதா..
மறுமுனையில் அழைப்பு ஒலி கேட்க.. மௌனமாக காத்திருந்தாள்.. அழைப்பு ஒலி நின்று விட்டது.. ஆனால் அவன் பேசவில்லை.. மௌனமாக மறுமுனையில் இருந்தான் அவன்..
‘கார்த்திக்..” குரல் நடுங்க அழைத்தாள் நிவேதா..
‘ம்ம்ம்..”
இந்த முணுமுணுப்பை கேட்டபோது மனதில் ஏன் சொல்லத் தெரியாத உணர்வுகள் எழுந்து ஆக்ரமிக்கின்றன என்று புரியாமல் திகைத்தாள் நிவேதா..
‘எங்கேயிருக்கிறீங்க..?”
‘அது உனக்கு தேவையில்லாதது..”
‘ப்ளீஸ்.. வீட்டுக்கு வாங்க..”
‘அதை சாயங்காலமே நீ செய்திருந்தால்.. எனக்கு இந்த மனக்கஷ்டம் வந்திருக்காது.. வீட்டுக்கு போகாமல் அருவிக்கரைக்கு இழுத்துக்கிட்டு போயிட்டு இப்ப வீட்டுக்கு வாடாங்கறியா..? அங்கேயும் என்ன செய்ய காத்திருக்க..?”
‘கார்த்திக்.. ப்ளீஸ்..”
‘உன் மனசுக்கு கஷ்டமாயிருந்ததாலதானே நீ வீட்டுக்குப் போகல.. என் மனசுக்கு இப்ப எப்படியிருக்கு..? அதைப் பத்தி உனக்குத்தானே தெரியும்..? இப்படி பித்துப்பிடிச்சவனைப் போல.. ராத்திரி முழுவதும்.. ஊரைச் சுத்த வைச்சவ நீதானே.. நீயே இதுக்கு ஒரு பதிலைச் சொல்லு..”
‘நான் என்ன பண்ணியிருக்கனும் கார்த்திக். ? நீங்களே சொன்னதைப் போல.. அந்த அருவிக்கரையில் உங்க கூட முதலிரவைக் கொண்டாடியிருக்கனுமா..? அதுதான் உங்க கோபமா..?”
‘அடச்சீ.. என் உணர்வுகளை கேவலப்படுத்தாதே.. உன்னிடம் ஒன்னு சொல்கிறேன்.. மனதில் வச்சுக்க.. உன்னைத்தவிர.. வேறு ஒருத்தி.. அந்த நேரத்தில் என் பக்கத்திலிருந்து.. தோளில் சாய்ந்திருந்தா.. நான் உடனே விலக்கி விட்டிருப்பேன்.. தொட்டுக் கூட பேசியிருக்க மாட்டேன்..”
நிவேதா விழி விரித்தாள்.. கார்த்திகேயனின் வார்த்தைகளில் இருந்த உண்மை அப்போதுதான் அவளுக்கு புலப்பட்டது..
அவனைத் தவிர வேறு ஒருவனின் கை அவள் மீது பட்டிருந்தால் அது அவளை தீயாக சுட்டிருக்காதா..? அனல் பட்டவளாக அவள் பதறி விலகியிருக்க மாட்டாளா..?
ஏன் அவள் விலகவில்லை..? அவனது முத்தத்தை ஏன் அவள் அனுமதித்தாள்…? கண் மூடி ஏன் கிறங்கினாள்..
புரியாத பல புதிர்கள் அவள் மனதில் விடுபடத் தொடங்கின..
‘எங்கிருந்தோ வந்தவளுக்கு என் மேல ஏண்டி அக்கறை..? ஏன் எனக்கு அன்னைக்கு ஆறுதல் சொல்லிப் பாட்டுப் பாடின..? என் சோகத்தை ஏன் பங்கு போட்டுக்கிட்ட..? சுமைதாங்கியாய் என் மனபாரத்தை நீ தாங்கிக்குவேன்னு சொன்னியே.. அப்படி.. கஷ்டத்தைப் பகிர்ந்துக்கிறவளுக்கு என்ன பெயர்..? எங்க ஊரில அவளுக்கு பெண்டாட்டின்னு பெயர்டி..”
அவன பேசப்பேச.. நிவேதாவிற்கு காதில் தேன் பாய்வதைப் போல.. மனம் இனிக்க ஆரம்பித்தது.. அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்த அத்தனை குற்ற உணர்வுகளும் விலகிப் போய்விட அவள் மனம்.. இறகை விட லேசாக மாறி.. சிறகடித்தது..
‘நான் உன்னை விரும்பினேன் நிவேதா.. காதலித்தேன்.. உன்னை என் வாழ்வைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கும் தேவதைன்னு நினைச்சேன்.. நீ என்னை ராட்சஸன்னு சொல்லிட்டயேடி..”
அவன் மனம் குமுறினான்.. நிவேதா உதட்டைக் கடித்துக் கொண்டாள்..
‘நீ என்னிடம் தனியாகவே சிக்கலை.. எப்பப் பார்த்தாலும் கல்யாணி கூடவே சுத்திக்கிட்டு இருந்த.. என் நினைப்பே உன் மனசில் இல்லை.. எனக்கு மனசு கசந்திருச்சு.. காதலைச் சொல்ல வேணாம்ன்னு மனசில போட்டு புதைச்சிட்டேன்.. அப்பப் பார்த்து நீ என் மேல கோபப்பட்டே.. உரிமையாய் என் மேல கோபப்பட்டயே.. அந்த உரிமை என் மனசில் அடியில் கிடந்த காதலை தட்டி எழுப்பிருச்சுடி..”
நிவேதாவின் மனம் கசிந்தது..
‘வயலுக்கு வந்தா.. கூடவே இருக்கச் சொன்ன.. நீ அந்தப் பெண்களிடம் பேசிப் பழகற அழகை ரசிச்சுக்கிட்டு இருந்தப்ப.. அந்தக் காதல் என்னைப் பாடாய் படுத்த ஆரம்பிச்சுருச்சு.. அதனாலதான் வீட்டுக்கு போயிரலாமுன்னு சொன்னேன்.. நீ கேட்கலை.. கட்டாயப்படுத்தி அருவிக்கரைக்கு அழைச்சிட்டுப் போயிட்ட..”
நிவேதாவின் மனதில் அந்த அருவிக்கரை தெரிந்தது.. அருகில் அவன் தெரிந்தான்.. அவனது ஆண்மை ததும்பும் தோற்றத்தில் மனம் நிறைந்தாள் அவள்..
‘உனக்கு இரக்கப்படற மனசுடி.. அடுத்தவங்க கஷ்டத்தை தாங்கிக்க முடியாத பூஞ்சை மனசு உனக்கு.. அந்த மனசுதாண்டி என்னை உன் பக்கம் இழுத்துச்சு.. மத்தபடி.. நீ கண்ணுக்கு அழகானவளா இருக்கேன்னு நான் உன் மேல ஆசைப்படல.. நீ எப்படியிருந்தாலும்.. நான் உன்னைத்தான் காதலிச்சிருப்பேண்டி.. நீ அசிங்கமா பார்வைக்கு அழகில்லாதவளா இருந்திருந்தாலும்.. அதைப்பத்தி நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்.. எனக்கு நீ வேணும்ன்னு நினைச்சேண்டி.. நீன்னா.. அது உன் மனசுன்னு நான் நினைத்தேன்.. உடம்புன்னு நீ நினைச்சிட்டயே..”
‘போதும் கார்த்திக்.. ” நிவேதா தழுதழுத்தாள்..
அவளது குரல் மாற்றத்திலிருந்து கார்த்திகேயன் எதை உணர்ந்தானோ..
‘நிவேதா..?” என்று கேள்வியாக அழைத்தான்..
‘எனக்கு மனசு கஷ்டமாயிருக்கு கார்த்திக்..”
‘எனக்கு மட்டும் மனசுக்கு கஷ்டமா இல்லையபா..? சந்தோசப்படற மாதிரிதான் எல்லாமே நடந்துச்சு.. ஆனா என்னால சந்தோசப்பட முடியுதா..? நான் யாரைடி தொட்டேன்..? உன்னைத்தானே தொட்டேன..? என் மேல் கோவிச்சுக்க.. கட்டுப்படுத்த.. உன் மனசுபோல இழுத்தடிக்க.. உனக்கு உரிமை இருக்கிறப்போ.. உன்னைத் தொட்டு முத்தம் கொடுக்க எனக்கு உரிமை இல்லையா..?”
‘ஏன் இல்லை..?”
‘நிவேதா..!..”
‘உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.. இன்னும் சொல்லப் போனா உங்களுக்கு மட்டும்தான் எல்லா உரிமையும் இருக்கிறது..”
‘நீ என்னடி சொல்ற..?”
‘ஐ லவ் யு கார்த்திக்..”
மறுமுனை ஒரு நொடி மௌனமாகிவிட… நிவேதா பயந்து விட்டாள்.. அவளது மனதிலிருந்த கார்த்திகேயனின் மீதான காதல் உணர்வுகளை அவளுக்கு உணர்த்திய அவளது கார்த்திகேயன் அவளை வெறுத்து விட்டானா..?
‘கார்த்திக்..” அவள் பதட்டத்துடன் அழைத்தாள்..
‘சொல்லுடி.. ” அவனது குரல் உணர்ச்சி வசத்தில் கரகரத்தது..
அந்த ஒரு அழைப்பில் மனம் குளிர்ந்து விட்டாள் நிவேதா..
‘வீட்டுக்கு வாங்க..”
‘வந்து..?”
‘சாப்பிடுங்க..”
‘நீ சாப்பிட்டயா..?”
நிவேதா பதில் சொல்லவில்லை.. உண்மையில் அவள் சாப்பிடவில்லை.. அவளால் சாப்பிட முடியவில்லை.. அது குற்ற உணர்வினால் என்று நினைத்திருந்தவளுக்கு.. இப்போதுதான் அவளது மனம் புரிந்தது..
அவன் சாப்பிடாமல்.. அவளால் சாப்பிட முடியவில்லை..
‘என்ன பதிலைக் காணோம்..”
‘சாப்பிட்டேன்..”
‘அதை உடனே ஏன் சொல்லலை..? சாப்பிட்டதாய் பேர் பண்ணினாயா..?”
“கண்டுபிடித்து விட்டான்..’ அவள் முகம் சிவந்தது..
‘என்ன.. திரும்பவும் ஊமையாகிட்ட..? கண்டு பிடிச்சுட்டானேன்னு நினைக்கிறயா..?”
“கில்லாடி..!’ அவள் உதடுகளில் குறுநகை படர்ந்தது..
‘இதைக் கண்டுபிடிக்கிறதில எனக்கென்ன கஷ்டம்..? அருவிக்கரையில தொட்டவுடன்.. நீ உருகிப் போனயே.. அப்பவே உன் மனசை கண்டு பிடிச்சுட்டேன்.. அது தெரிஞ்ச பின்னால உன்னை விட என்னால முடியலைடி..” அவன் குரலில் கிறக்கம் தெரிந்தது..
‘போதும்..” நிவேதா லஜ்ஜையுடன் கூறினாள்..
‘ஏன்..? எனக்குப் போதாது..”
‘கார்த்திக்.. ப்ளீஸ்.. எனக்காக..”
‘ம்ம்ம்.. உனக்காக எதை வேணும்னாலும் செய்வேன்.. இதைச் செய்ய மாட்டேனா..? நிறுத்திட்டேன்..”
‘அப்பா… நிம்மதி..”
‘ஓ.. உன் நினைப்பு அப்படிப் போகுதா..? அந்த ஆசையெல்லாம் படாதே.. இது ருசி கண்ட பூனை.. மறுபடி ருசி பார்க்காம விடாது.. நான் நிறுத்திட்டேன்னு சொன்னது.. இந்த பேச்சைத்தான்.. வேற எதையும் நிறுத்தும் உத்தேசம் எனக்கு இல்லை..”
‘படவா.. ராஸ்கல்.. உன்னை..!”
‘என்ன செய்யப் போகிற..?”
‘வீட்டுக்கு வாங்க சொல்கிறேன்..”
‘வந்துட்டேனே..”
‘வந்துட்டிங்களா..?”
‘ஆமாம்.. நீ ஐ லவ் யுன்னு சொன்ன பின்னாடியும் ரோட்டில அலைய என்னால் முடியுமா..? உடனே உன்னைப் பார்க்கனுமுன்னு தோணிருச்சு.. ஓடி வந்திட்டேன..”
‘என் கூடப் பேசிக்கிட்டு இருந்தீங்களே..”
‘காரோட்டிக்கிட்டே பேசினேன்..”
‘செல்போனில் பேசிக்கிட்டே காரை ஓட்டினீங்களா..? எனக்கு இது பிடிக்காது..”
‘ஏய்ய்.. இது சென்னையில்ல.. டிராபிக் ஜாமில நான் காரோட்டிக்கிட்டே.. செல் போனில் பேசினேன்னு நீ கோவிச்சுக்க.. இது கரிச்சான்பட்டி.. பகல் நேரத்திலேயே இந்த ரோட்டில்.. ஒரு காக்கா.. குருவி இருக்காது.. ராத்திரியில.. ஈ எறும்பு கூட இருக்காதுடி..”
‘இப்ப எங்கே இருக்கீங்க..”
‘வீட்டுக் கதவுகிட்ட இருக்கேன்..”
நிவேதா செல்போனை அணைத்து கட்டிலில் தூக்கி எறிந்துவிட்டு மின்னலாக.. மாடிப் படிகளில் இறங்கி ஒட்டினாள்.. அதற்குள் அழைப்பு மணியின் சத்தம் கேட்டு மீனாட்சி கதவைத் திறந்து விட்டிருக்க கார்த்திகேயன் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்..
மூச்சிரைக்க ஓடி வந்த நிவேதா.. மாடிப் படிகளின் கடைசிப் படியில் நின்று அவனைப் பார்க்க.. வீட்டுக்குள் காலடி வைத்த படியே அவன் அவளைப் பார்த்தான்..
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.