Chapter 01
ஆசிரியர் கடிதம்…
மனம் விட்டுப் பேசலாமா..?
என் பிரியத்துக்குரிய வாசக.. வாசகிகளே..!
நம்ம நாட்டில் அழிந்து கொண்டு வருவது கிராமங்கள் மட்டுமல்ல.. கிராமியக் கலைகளும்தான்.. தெற்கத்தி மாநிலங்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டதைப் போல, அவர்கள் தொன்று தொட்டு வளர்த்து வந்த கலைகளுக்கும் மதிப்பில்லாமல் போய் அழியத் துவங்கி விட்டன.. இதை எண்ணிப் பார்த்தவர் வெகு சிலரே..
என் சிறு வயதில் கிராமத் திருவிழாக்களில் ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், நாடகம் என்று நாளுக்கொரு நிகழ்ச்சியை நடத்துவார்கள்.. உழவனுக்கு அறுவடை நாள் எவ்வளவு இனிப்பானதோ.. அது போல ஒவ்வொரு நாட்டுப்புற கலைஞனுக்கும் வாய்ப்புக் கிடைக்கும் திருவிழா நாள்களே இனிமையானவை.. இன்று உழவுத் தொழிலும் அழிந்து வருகிறது.. நாட்டப்புற கலைகளோ முற்றிலுமாக நசிந்து விட்டது.. அதை நம்பி வாழ்ந்தவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது.. கலைகள் அழியக் கூடாது.. கலைஞன் கையேந்தக் கூடாது.
‘ஜல்லிக்கட்டு’ வீர விளையாட்டு என்பதற்காகவா தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி போராடினார்கள்..? அதில் உள்ள ஆபத்துக்களைப் பற்றி அறியாதவர்களா நம் இளையதலைமுறை..? இருந்தும் அவர்கள் ஏன் போராடினார்கள் தெரியுமா.. ‘ஜல்லிக்கட்டு’ என்பது தமிழர்களின் அடையாளம்.. பாரம்பர்ய விளையாட்டு.. நம் அடையாளத்தை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்ற எழுச்சிதான் அந்தப் போராட்டம்.
நாட்டுப்புற கலைகளும் நமது அடையாளங்கள்தான் மக்களே.. அவற்றைக் காக்க நாம் முன்வர வேண்டும்.. இன்றும் நாம் திருவிழாக்களைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம்.. நிகழ்ச்சி நிரல்கள் தான் மாறிவிட்டன.. அவற்றில் ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், நாடகம் முதலிய நாட்டுப்புறக் கலைகளுக்கு முதலிடம் கொடுங்கள்.. அழிந்து வருவது நாட்டு மாடுகள் மட்டுமல்ல.. நம் நாட்டுப்புற கலைகளும் தான்.. இனியேனும விழித்துக் கொண்டு வறுமையின் விளிம்பில் வாடும் கலைஞர்களுக்கு கை கொடுத்து வாழ வைக்க வேண்டுகிறேன்ப்பா..
இந்த பொற்கொடி இதழில் நான் எழுதியிருக்கும்
‘ரூப சித்திர மாமரக்குயிலே..’ என்ற தலைப்பு நவராத்திரி திரைப்படத்தில் நடிகர் திலகமும், நடிகையர் திலகமும் ஆடியிருக்கும் மேடைக் கூத்துப் பாட்டில் ஊடே வரும் வரிதான்.. கதையில் நாடகமும் வரும்..
அப்புறம் என்னப்பா.. அடுத்த ஆசிரியர் கடிதத்தில் பேசலாமா..?
– நட்புடன் –
முத்துலட்சுமி ராகவன்
கவிதை சொல்லவா..?
ஆத்தங்கரை மரமே..! அரசமரக்குயிலே..!
ஓடுகிற தண்ணியில
ஒன்பேர எழுதி விட்டேன்..
தண்ணியில வந்த பேர – நீ
கையில் அள்ளிப் படிக்கலயா..?
சேத்தில கால வைச்சு
நாத்து நட்ட போது மச்சான்
தெம்மாங்குப் பாட்டுப் பாடி
ஓனக்குத்தான தூது விட்டேன்..
ஆத்துத் தண்ணி ஒன் பேர
சேக்கறதுக்கு மறந்து போச்சா..?
காத்தில வந்த பாட்டு – உன்
காதில் சேராம விலகிப் போச்சா..?
ஆத்தரங்கர அசரமர
குயிலத்தான சாச்சி வைச்சு..
காத்திருக்கேன் ஒனக்காக – என்
நேச மச்சான் எப்போ வருவ..?
– முத்துலட்சுமி ராகவன்
“குக்கூ…”
என்னங்க.. குயிலோட பாட்டுப் போல இருக்குதுன்னு பாத்தீகளா.. குயில்ப் பாட்டுத்தாங்க.. பாரதியாருக்குத்தான் குயிலுப் பாட்டுப் பிடிக்கனும்ங்கிறதில்ல.. உங்களுக்கும் பிடிக்கலாம்.. அதுக்கு என் பாட்ட நீங்க கேட்டுப் பாக்கனும்.. நீங்க கேட்டாலும் கேக்கலன்னாலும் நான் உங்களுக்கு ஒரு சங்கதியச் சொல்லனும்.. அதுக்கு நீங்க ஊருப்பக்கமா போகாம.. ஊரோரமா இருக்கற இந்த மாந்தோப்புப் பக்கமா வரனும்.. வந்துட்டீகளா.. அண்ணாந்து பாருங்க.. இழையும் தழையுமா செழிச்சு நிக்கிற மாமரத்து மேல ஒரு குயிலு தெரியுதுங்களா.. அது நான்தானுங்க.. மாமரக் குயில்..!
அந்தா தெரியுது பாருங்க.. ஒத்தையடிப் பாதை.. பாதைக்கு ரெண்டு பக்கமும் மரமும் செடியுமா பச்சைப் பசேல்ன்னு இருக்குதுன்னு பாத்தீகளா.. ஆத்துக்குப் போற பாதை வேற எப்படிங்க இருக்கும்..? ஒத்தையடிப் பாதையில போனா ஆறு வரும்.. ஆத்தில இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இருக்கிற கரைகளத் தொட்டுக்கிட்டு தண்ணி ஓடிக்கிட்டு இருக்கும்.. உடனே ஓடினாத்தான் அது ஆறு.. தேங்கி நின்னா குட்டை, மட்டைன்னு தத்துவம் சொல்லக் கிளம்பிராதீக.. கேட்டுக் கேட்டுச் சலிச்சுப் போச்சு..
ஆத்துத் தண்ணி அலை மோதி ஓடுறதப் பாத்தீகளா.. எங்க ஊரு ஆறுங்க.. வத்தாத தண்ணி.. ஒரு மழ பெஞ்சாப் போதும்.. ஊரக் காப்பாத்த ஆறு ரெண்டு பக்கக் கரையையும் தொட்டுக்கிட்டு தண்ணியக் கொண்டாந்திரும்.. இந்த ஊரோட குலசாமிங்க இந்த ஆறு.. இதெல்லாம் உங்களுக்கு எங்கேப் புரியப் போகுது..? நீங்கள்ளாம் வெள்ளயும் சொள்ளயுமா தூசி படாம ஏஸிக் காத்துக்குள்ளப் பதுங்கிக்கிட்டு இருக்கற பட்டினத்து சனங்க.. ஆத்தப் பத்தியும் அது விளைய வைக்கிற பூமியப் பத்தியும் தெரியாதில்ல.. எளிசாச் சொல்லுவீக.. காசு வாங்காமலா நெல்ல விக்கறீங்கன்னு.. கார விக்கிறவனும் காச வாங்கிட்டுத்தான் விக்கிறான்.. அது பசியத் தணிக்காது.. அதப் பொங்கிச் சாப்பிட முடியாது.. எங்க ஆத்தா அன்னபூரணியோட அம்சம்ய்யா வெவசாயிக வௌய வைக்கிற நெல்லு.. அதப் போயி வியாபாரப் பொருளாக்கறீங்களே.. மழயிலும் வெயிலிலும் சேத்தில கால வைச்சு.. முள்ளுத் தக்க.. நாத்து நட்டு.. கள பறிச்சு.. கதிரறுத்து.. நெல்லக் கண்ணில பாக்கிறவக வயித்துப் பாட்டுக்கும் வாழறதுக்கும் அதுக்கு ஒரு விலயச் சொல்லி வித்தா அது ஒரு குத்தமாய்யா..?
தெரியாமத்தான் கேக்கறேன்.. இந்த நாட்டுக்குள்ள தயாரிக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒன்னு போலவா விலயிருக்கு..? அவனவனுக்குத் தக்கபடி ஒரே பொருளுக்கு ஆயிரம் வில வைக்கறானுகள்ல.. நெல்லுக்கு அப்படியாய்யா..? ஒரே விலதான்.. விளய வைக்கிற விவசாயி வில வைக்க முடியாது.. பேச வந்துட்டிக.. பேச்சு.. போவீகளா..
இந்தா.. இந்தா.. அதுக்குன்னு விசுக்குன்னுத் திரும்பிப் போகப் பாக்கறீகளே.. நானு ஒரு கூறுகெட்ட மாமரக் குயிலு.. கதயச் சொல்ல வந்தவன் கதய விட்டுட்டு கருதறுக்கற வெவசாயிக கஷ்டத்தச் சொல்லக் கௌம்பிட்டேன்.. கிராமத்துக் குயிலு பாருங்க.. மனசு தாங்கல..
என்னாது..? குயிலுக்கு மனசிருக்கான்னு கேக்கறீங்களா.. பின்னே.. இருக்காதா..? ஆத்தாடி.. எப்படிய்யா இப்படி ஒரு கேள்வியக் கேட்டுப்புட்டீக..? என்னாது.. வாயிலதான் கேட்டீகளா.. கேப்பீக.. கேப்பீக.. எங்க ஊருப் பக்கம் வந்துட்டீகள்ல.. இந்த ஊரு ‘குசும்பு’ உங்களுக்கும் ஒட்டிக்கத்தான் செய்யும்.. ஆரு நாங்க..? வாயக் கொடுத்து வாயப் பிடுங்கற சனங்க சாமி.. சரிசரி.. கதைக்கு வருவோம்..
ஆத்துக்கு வந்துட்டீகளா.. குளுகுளுன்னு காத்தடிக்குதுல்ல.. இங்கனயே உக்காந்துரலாம்ன்னு தோணுதுல்ல.. உக்காருங்க.. நானு எங்கன உக்காருவேன்னு கேக்கறீகளா.. இந்தா, ஆத்தோரமா இருக்கிற ஆலமரம் இருக்கு.. அதுக்கு அடியில எங்கப்பன் விநாயகரு ஒய்யாரமா உக்காந்திருக்காரு.. மரத்துக் கிளமேல நான் உக்கார மாட்டேனா..? இதென்ன கான்கிரிட்டுக் கட்டிடமா இருக்கிற பட்டினமுன்னு பாத்தீகளா.. கிராமம்ங்க.. ஆறும், தோப்பும், வயலுமா செழிப்பா இருக்கிற ஊரு.. இங்க குயிலு உக்கார கோடிக் கணக்கில இடமிருக்கு.. பட்டினத்திலதான் பறவைக பறக்கறதுக்குக் கூட தோது இல்லாமப் போச்சில்ல..
என்னாத்தப் பாக்கறீக.. ஆத்துத் தண்ணி அல மோதித் தொட்டுக் கும்பிட்டுக்கிட்டு இருக்கிற கோவிலப் பாக்கறீகளா.. பெருமாள் கோவிலுங்க.. ஸ்ரீதேவி, பூதேவி சமேதரா ஊரைக் காவக் காக்கிற சாமி இவரு.. என்னாது.. அங்கன கருப்பண்ண சாமி கோவிலு இருக்குன்னு காட்டறீகளா.. ஆமா.. அவரும் ஊரக் காவக்காக்கற சாமிதான்.. இவரும் ஊரக் காவக் காக்கிற சாமிதான்.. ஆரு இவரு.. கள்ளழகராச்சே..
கோவிலத் தொட்டு ஊரு ஆரம்பிக்குது பாத்தீகளா.. கோவிலச் சுத்தி ஊருதான்.. பேரு என்னன்னு கேக்கறீகளா.. ‘மாந்தோப்பு..’ ங்க. என்னாது.. இப்படி ஒரு ஊருபேரு இருக்கான்னு ஆச்சரியப்படறீகளா..? இதில என்னாங்க ஆச்சரியமிருக்கு.. ‘மாந்தோப்பு’ன்னு ஊரு இருக்கக் கூடாதுங்களா..? சந்தேகமா இருக்கா.. என்னாத்துக்கு இந்தச் சந்தேகம்ன்னேன்.. என்னடா.. மாமரக் குயிலு தனக்குத் தோதா ‘மாந்தோப்பு’ன்னு ஊரு பேரைச் சொல்லுதுன்னு நெனைக்கறீகளாக்கும்.. சரியாப் போச்சு போங்க.. அப்படியெல்லாம் எனக்குத் தோதாப் பேரை வைச்சா.. ஊருசனம் என்னச் சும்மா விட்டிருவாகளா..?
இந்த ஊருக்கு ஏன் ‘மாந்தோப்பு’ன்னு பேரு வந்துச்சுன்னா, ஊரச் சுத்தி மாந்தோப்பு அதிகமுங்க.. அப்புறம் எதுக்கெடுத்தாலும் கிராமத்துப் பேரா.. ‘பூம்பொழில்..’ ‘பூந்தோட்டம்..’ அப்படி இப்படின்னு பூவைச் சுத்தியே பேர வைக்கிறதால தோப்பு, துரவெல்லாம் இந்தக் கதய எழுதற முத்துலட்சுமியம்மா மேல கோபப் பட்டிருச்சுகளாம்.. எதுக்குப் பொல்லாப்புன்னு அந்தம்மா இந்தக் கதையோட ஊருக்கு ‘மாந்தோப்பு’ன்னு பேர வைச்சுருச்சாம்.
பொருத்தமான பேரா.. ஒப்புக்கிட்டிகளா.. அதேன்.. எழுத்தாளரும் இந்த ஊர ‘மாந்தோப்பு’ன்னு ஆக்கியிருக்காக.. இல்லேன்னா இந்த ஊரோட பேரும் ‘பூந்தோப்பு..’ன்னுல்ல ஆகியிருக்கும்..? அந்தக் கதய விடுங்க.. நாம இந்தக் கதைக்கு வருவோம்.. ஓகே..?
என்னடா.. குயிலு இங்கிலிபீசில பேசுதுன்னு பாத்தீகளா.. ‘ஓகே’ அப்படிங்கிறது அம்புட்டுப் பெரிய இங்கிலீபீசு வார்த்தயா..? இங்கிலீபீசு என்ன பெரிய கழுதைங்களா..? கத்துக்கிட்டா வந்துட்டுப் போகுது.. அதக் கத்துக்கிட்டுப் பேசறவன்தான் அறிவாளி.. மத்தவங்கள்ளாம் ஜோக்கருங்களா..?
அப்பு.. இங்கிலீபீசுங்கிறது அறிவு இல்லய்யா.. அது ஒரு மொழி.. அம்புட்டுத்தான்.. அத்த விடுங்க.. மாந்தோப்புக்கு வாங்க.. அந்தாத் தெரியற மாந்தோப்புங்கிற ஊருக்குள்ளாரதான் நம்ம கதயோட கதாநாயகனும், கதாநாயகியும் இருக்காங்க.. சண்டைக்காரக் குடும்பங்கள்ல பொறந்துட்டு இதுக ரெண்டும் சரமாடிக்கிட்டு இருக்குதுக.. இதுக பண்ற சரசத்தில எனக்கும் காதல் வந்து மாந்தோப்புக் கிளிக்கு ரூட்டு விட்டுப் பாக்கறேன்.. அது என்னடான்னா அது கிளி சாதி, நானு குயிலு சாதின்னு கண்ணக் கசக்கிக்கிட்டுக் காதலிக்க மாட்டேங்குது.. குயிலுப் பாட்ட எழுதின பாரதி ‘சாதிகள் இல்லயடி பாப்பா’ன்னு சொல்லியிருக்காருடின்னு சொன்னா, அத பாப்பாவுக்குத்தான சொல்லியிருக்காரு.. கிளிக்குச் சொல்லலையேன்னு வித்தாரம் வேற பேசுது.. ம்ஹீம்.. என்னவாகப் போகுதோ..
இந்தக் கதயோட கதாநாயகன் ஆருன்னு தெரியுமா..? சொன்னாத்தான தெரியும்ங்கறிங்களா..
அவன் பேரு வசந்த ரூபன்..!
அவ பேரு சித்ர லேகா..!
நானு மாமரக்குயில்..!
இப்பப் புரியுதுங்களா.. இந்தக் கதைக்கு ஏன் எழுத்தாளரு ‘ரூபசித்திர மாமரக்குயிலே..!’ ன்னு பேரு வைச்சாகன்னு..?
ரூபனும், சித்திராவும் பேசிப் பழக மாந்தோப்புக்குள்ள தான் வருவாக.. மரத்து மேல இருக்கற எனக்கு சினிமாப் பார்த்தாப்புல இருக்கும்.. அவுக பேசறத அப்படியே என் ஜோடிக் கிளிகிட்டச் சொல்லுவேன்.. அவ செவந்த மூக்க வெடச்சுக்கிட்டு என்ன வில்லனப் போலப் பாப்பா..
இதுதான் இந்த ‘ரூப சித்திர மாமரக் குயிலே..’
அம்புட்டுத்தான்.. கதைக்கான இன்ட்ரொடுக்சனைக் கொடுத்து முடிச்சாச்சு.. இனி வாங்கப்பு.. கதைக்குள்ள போகலாம்.. இப்புடியே உக்காந்துட்டா எப்படி.. இனித்தான் கதை ஆரம்பிக்கப் போகுது.. போலாம்.. ரைட்..
Reviews – Roopachithra Mamarkuyile / ரூபசித்ர மாமரக்குயிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.