Chapter 01

0Shares

‘கண்ணன் வந்தான் – அங்கே
கண்ணன் வந்தான்  – ஏழைக்
கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்… “

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக் கொண்டிருந்த கௌசல்யா தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்த பழைய பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்தாள்.

இந்த பாடலை வைதேகிக்கு மிகவும் பிடிக்கும். எந்த இடத்தில் இந்தப் பாடல் ஒலித்தாலும் அந்த இடத்திலேயே ஆணியடித்ததைப் போல அவள் நின்று விடுவாள். கண்கள் தளும்பி  அவளது மனம் தளும்புவதைக் காட்டிக் கொடுக்க.. இந்தப் பாடலில் மூழ்கி முத்தெடுப்பாள்.

‘இந்தப் பாட்டில் அப்படி என்னதாண்டி இருக்கு..?” கௌசல்யா ஒவ்வொரு முறையும் கேள்வியை எழுப்புவாள்”

‘எத்தனையோ இருக்கு கௌசி… எனக்காக யாருமில்லைன்னு ஏங்குகிற இதயங்களுக்கு.. உங்களுக்காக நானிருக்கிறேன்.. உன் கண்ணீரைத் துடைக்க நானிருக்கிறேன்னு சொல்லி அடைக்கலத்தைக் கொடுக்கிற கருணை இருக்கு…” 

‘இத்தனை மெஸேஜையும் கண்ணன் இந்தப் பாட்டு வழியா எஸ்.எம்.எஸ் பண்ணுகிறாராக்கும்..? ” கௌசல்யா மலர்ந்து சிரிப்பாள்..

‘போடி அரட்டை..”

கூடச் சேர்ந்து சிரித்த வைதேகியின் சிரிப்பு.. இப்போது எங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது…?

டைனிங் டேபிளின் மேல்; அமர்ந்திருந்த மூன்று வயது பூஜா.. இவளைக் கண்டதும் சிணுங்கினாள்.

‘மம்மிதான் புவ்வா ஊத்தனும்..”

அரைமணிநேரமாக பேத்தியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ஆண்டாள்.. இயலாமையுடன் மகளைப் பார்த்தாள்..

‘நானும் போராடித்தான் பார்க்கிறேண்டி கௌசி.. இந்தக் குட்டி வாயைத் திறப் பேனான்னு அடம் பிடிக்குதே..”

‘சாதத்தை எங்கிட்ட கொடும்மா.. நான் ஊட்டி விடறேன்..”

‘நோக்கு ஆபிஸிக்கு டயமாகலையோ..”

‘பரவாயில்லை.. இவ இப்படி அடம் பிடிச்சா .. நீயும்தான் என்ன பண்ணமுடியும்..? நீ அப்பாவைப் பார்ப்பியா..? என்னைப் பார்ப்பியா..? இல்லை.. இந்தக் குட்டியைத்தான் பார்ப்பியா..? உனக்கும் தான் ஆயிரம் கையா இருக்கு..? இரண்டு கைதானேம்மா இருக்கு..?

கௌசல்யா.. சாதம் பிசைந்த கிண்ணத்தை வாங்கிக் கொள்ள நன்றியுடன் மகளைப் பார்த்தபடியே.. சமையலறைக்குப் போகப் போனாள் ஆண்டாள்.. அதற்குள் !  ‘யுhலிலிருந்து சத்தம் கேட்டது..

‘டீ.. ஆண்டாளு..”

‘வந்துட்டேன்னா..” கணவருக்கு பதில் குரல் குடுத்தபடி மகளைப் பார்த்த ஆண்டாள்..”

‘என்னடா.. இன்னும் ரெண்டாவது டோஸ் காபி கேட்கலையேன்னு நினைச்சேன்.. அழைப்புக் குரல் வந்துடுத்து.. ஆனாலும் உன் அப்பா.. நாக்கை இவ்வளவு நீளத்திற்கு வளர்த்திருக்கக் கூடாது.. “என்று சொன்னாள்..

அதற்குள்.. ராமாமிர்தம்.. மீண்டும் அழைக்க.. ‘அடடா.. வருகிறேன்னா.. என்னகென்ன வயசா திரும்பிடுத்து..? நானும் உங்களைப் போல ஒரு மனுச ஜீவன்தான்.. எனக்கு காலில் சக்கரமா கட்டி வச்சிருக்கு..? காபி கலந்துட்டு வர.. கால் நிமிசமாவது ஆகாதோ…?” என்று பதில் குரல் கொடுத்தாள்.

கௌசல்யா.. மெலிதான குரலில்.. பூஜாவுடன் கதை பேசியபடி ஸ்பூனில் சாதத்தை எடுத்து ஊட்டி விட.. தன் சிமிழ் வாயைத் திறந்து சாப்பிட்டவாறே.. கண்களை அகல விரித்து.. கௌசல்யா சொன்ன கதையைக் கேட்டுக் கொண்டிருந்தாள் பூஜா..”

‘அந்தக் குருவிக்கு நீட்டமான வாலிருந்துச்சாம்.. அதனால.. அதை வாலட்டிக் குருவி வாலாட்டிக் குருவி என்று எல்லோரும் சொன்னார்களாம்..”

‘ஊம்..”

கணவருக்கு காபியைக் கொடுத்து விட்டு வந்த ஆண்டாள் காலியாக இருந்த சாதக் கிண்ணத்தைப் பார்த்து.. என்றைக்கும் போல.. அன்றைக்கும் அதிசயித்தாள்..

‘என்னடி இது… இந்தக்குட்டி நான் சாதத்தை ஊட்டப் போனா.. வாயை இறுக்கி மூடிக்கிட்டு.. திறப்பேனான்னு அழிச்சாட்டியம் பண்ணுது.. அதுவே நீ ஊட்டினா.. அஞ்சு நிமிசத்தில் காலி பண்ணிடறதே.. எப்படிடீ..”

பு+ஜாவின் வாயைத் துடைத்து விட்டு.. டைனிங் டேபிளிலிருந்து கீழே இறக்கி விட்ட கௌசல்யா சிரித்தாள்..

‘நீ பாட்டி.. நான் அம்மா..அதுதான் இப்படி..”

இதைக் கேட்டதும் ஆண்டாளின் முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்து போனது.. அவள் முகத்தில் சோக மேகம் கவிழ்ந்தது.

‘கௌசி..” நாத்தளுதளுக்க எதையோ சொல்லப் போனாள்..

‘உஸ்ஸ்.. ..” பூஜாவை விழிகளால் காட்டி இதழ்களின் மீது ஒற்றை விரலை வைத்து தாயை எச்சரித்தாள் கௌசல்யா..

‘பூஜாக்குட்டி.. தாத்தாகிட்டப் போய் இரு.. மம்மி.. சாப்பிட்டுவிட்டு வந்துடறேன்..” என்று குழந்தையை அனுப்பி விட்டு.. தாயை ஏறிட்டுப் பார்த்த கௌசல்யாவின்  விழிகளில் கண்டிப்பு தெரிந்தது..

‘என்னம்மா.. நீ.. குழந்தைக்கு முன்னாலே.. எதைப்பேசனும்.. எதைப் பேசக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா..?”

‘நீ என் குழந்தைடி .. கௌசி..”

‘வைதேகியும் உன் குழந்தைதான்ம்மா..”

வைதேகி பெயரைக் கேட்டதும்… ஆண்டாளின் கண்களில் பொல பொலவென்று கண்ணீர் துளிகள் உதிர்ந்தன..

அதைப் பார்த்த கௌசல்யாவின் மனதில் பாறாங்கல் ஏறியது.. கனத்த மனத்துடன் தட்டைப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்..

‘நாழியாகுதும்மா.. சாதத்தைப் போடு..”

‘எப்படி வளர்த்தேண்டி என் பொண்ணை.. கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்துட்டேனே..”

‘போனதை  நினைச்சுப் புலம்பினா.. எல்லாம் சரியாப் போகுமா..?

‘மனசு ஆறலையேடி….”

ஆண்டாள் புலம்பினாள்.. கௌசல்யா உதட்டைக் கடித்து தன் உணர்வுகளை அடக்கினாள்..

ஆறாதுதான்.. எவ்வளவு காலம் ஆனாலும் ஆறாத மன ரணம்தான். ஆனாலும் என்ன செய்வது..? வாழ்ந்தாக வேண்டுமே.. மீதி வாழ்க்கையை வாழ்ந்து முடித்தாக வேண்டுமே…

‘பு+ஜா இருக்காம்மா.. அவ முகத்தைப் பாரு..”

‘அந்தப் பிஞ்சு முகத்iப் பார்த்தா.. இன்னும் மனசு பொங்குதேடி..”

‘கோயம்புத்தூரிலேயே இருந்தா.. இப்படி புலம்பிப் புலம்பி.. உன் உயிரை குறைச்சுக்குவேன்னுதானே சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்..? இங்கேயும் மறக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா நான் என்ன செய்வேன்னு சொல்லு..?”

‘முடியலைடி..”

‘முடியனும்..”

ஆண்டாளை அதட்டி.. சாப்பாடு போட வைத்து.. சாப்பிட்டு விட்டு மதிய உணவு டப்பாவை Nயுண்ட் பேகில் வைத்துக் கொண்ட கௌசல்யா யுhலுக்கு வந்தாள்..

பேத்தி பேசியதை ரசித்துக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த ராமாமிர்தம் அலுவலகம் போகத் தயாராகி வந்து நின்ற மகளை வாஞ்சையுடன் பார்த்தார்…

‘ஆபீஸ்க்கு கிளம்பிட்டியாம்மா..”

‘ஆமாம்பா.. உங்க பேத்தி என்ன சொல்றா..?”

 ‘அவ என்னென்னமோ சொல்றா..இப்பப் பிறக்கிற குழந்தைகளுக்குத்தான் உடம்பெல்லாம் மூளையாச்சே…”

‘அதைச் சொல்லுங்க.. பூஜா.. ஸ்கூலுக்கு டயமாச்சு.. வா.. வா..”

பு+ஜாவை பாதுகாப்பாக பின்னால் உட்கார வைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியைக் கிளம்பினாள் கௌசல்யா..

‘வரேம்மா.. கேட்டைப் பூட்டிக்க…”

சின்னஞ்சிறு குழந்தைகளின் மத்தியில் பூஜாவை விட்டு விட்டு தன் ஸ்கூட்டியைக் கிளப்பிய போது கௌசல்யாவின் மனதில் தாய்மையுணர்வு பொங்கியது.

‘மம்மிக்கு டாட்டா சொல்லு..”

‘தாத்தா…”

‘குழலினிது யாழினிது என்பார் – தம் மக்கள்

மழலைச் சொல் கேட்காதவர்”

‘வள்ளுவர் ஏன் அப்படிச் சொல்ல மாட்டார்..? ‘ என்று நினைத்துக் கொண்ட கௌசல்யா அந்த நொடியில் அதை உணர்ந்தவளாய்.. பதிலுக்கு கையசைத்து விட்டுக் கிளம்பினாள்.

‘தின ஒலி’ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் நுழைந்தபோது அனைத்தும் மறந்து போக.. ஓர்விதச் சுறுசுறுப்புடன் தன் கேபினுக்குள் சென்று அமர்ந்தாள் கௌசல்யா…

”hய் கௌசல்யா.. குட்மார்னிங்…”

‘குட்மார்னிங் வசு…”

‘இன்னைக்கு எப்படி..? உன் மகள் அழுகாமல் கிளாஸ் ரூமுக்குள் போய் விட்டாளா..?

‘டாட்டாவே  சொல்லிட்டா..”

‘அப்படியா..? என்னவோ போ.. நாமெல்லாம் மூணுவயசில அம்மா முந்தானையை பிடிச்சுக்கிட்டு  பொம்மையை வைச்சு விளையாடிக்கிட்டு வீட்டுக்குள்ளேயே இருப்போம்..”

‘இப்போ மட்டும் என்னவாம்..? பூஜா.. அவளோட டீச்சரின் சேலை முந்தானையை பிடிச்சுக்கிட்டு.. பொம்மையை வைச்சு விளையாடிக்கிட்டு கார்ட்டூன் பார்த்துக்கிட்டு இருக்கிறா.. பெரிசா ஒன்னும் 

அவதலையில சுமை  ஏறிடலை..”

‘இது வீட்டுகுள்ள இருக்க வேண்டிய வயசுடி…”

‘வெளியுலகத்தை இப்போதிலிருந்தே பார்த்துப் பழகிக்கட்டும்.. தப்பில்லை..”

‘உன் பொண்ணை பெரிய படிப்பு படிக்க வைக்கிற.. விட்டுக் கொடுத்தா பேசுவ..?”

‘ரொம்பப் பெரிய படிப்பு…  பிரி.கே.ஜி..”

கௌசல்யா வாய் விட்டுச் சிரித்தபடி நிமிர்ந்து பார்த்தாள்.. பார்த்தவளின் பார்வை உறைய.. அப்படியே அசைவற்று உட்கார்ந்து விட்டாள்..

‘இவனா….’ அவளது மனம் பொங்கியது…

 ‘இத்தனை வருசமாய் எங்கிருந்தான்..?’ ஓடி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள அவளது மனம் துடித்தது..

 ‘ஆறு வருடம் கழித்து என் முன்னால் வந்து நிற்கிறானே.. இந்த ஆறுவருடத்தில் ஓர் நொடியாவது என்னை நினைத்துப் பார்த்திருப்பானா…?’ அவளது மனம் ஏங்கி தவித்தது…

 ‘என்னைப் பெண்ணென்று உணர வைத்தவன்… என் ஆணென்ற உரிமை எடுத்துக் கொண்டவன்..’ அவளது மனம் கிளர்ந்தது..

 ‘அவன்’ …. அந்த  ‘அவன்’ .. ஆறு வருடங்கள் கழித்து திரும்பி வந்திருந்த  ‘அவன்’… கௌசல்யாவின் மீது விழி பதித்து.. தன் கம்பீரமான அழகு கொஞ்சம் கூடக் குறையாதவனாய் நிமிர்ந்து நின்றான்..

அவனுடைய பார்வை அவளை ஊடுறிவிக் கொண்டிருந்தது.. அவளது பார்வை தவிப்புடன்.. அந்தப் பார்வையில் எதையோ தேடித் துழாவியது…

 ‘அதே பார்வை….’ கௌசல்யா கண் கலங்கினாள்..

 ‘நிமிர்ந்த நேர் கொண்ட பார்வை.. மனதிலிருப்பதை படிக்க முயலும் பார்வை.. எதையும் மறைக்க இடம் கொடுக்காமல் வெளிக் கொணரும் பார்வை.. நிலவின் குளிர்ச்சியையும்.. ஆதவனின் வெப்பத்தையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் பார்வை…’

அந்தப் பார்வை பார்த்துத்தான்.. அவன்.. அவளை மனம் துடிக்க வைத்தான்.. அந்தப் பார்வை பார்த்துத்தான் அவள் மனதை வென்றான்.. அந்தப் பார்வை பார்த்தபடிதான்.. அவளது வேண்டுகோளுக்கிணங்கி.. அவளை விட்டு  விலகிச் சென்றான்..

இன்று ஆறு வருடங்கள் கழித்து.. அதே பார்வை பார்த்தபடி அவள் முன்னால் வந்து நிற்கிறானே..

‘என்ன சக்தி.. இங்கே நிற்கறீங்க..? ஜாயின் பண்றதுக்கு முன்னாடி எடிட்டரைப் பார்த்துவிட்டு வந்துருங்க..” மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி அங்கே வந்து நின்ற ஞானப் பிரகாசம் கூறினார்..

‘இதோ சார்..” அவன் நகராமல் பதில் சொன்னான்..

வசுமதி அவனை ஆர்வத்துடன் பார்த்தபடி…

‘சார்.. யார் சார்..? எங்களுக்கு அறிமுகப் படுத்தலையே..” என்று ஞானப் பிரகாசத்திடம் கேட்டாள்..

‘அறிமுகப் படுத்தலேன்னா.. விட்டு விடுவியா.. கௌசல்யாவது மூணுவயசுக் குழந்தைக்கு அம்மா.. விட்டு விடுவா.. நீதான் கழுத்தில் மூணு முடிச்சு விழுகாத சுதந்திரப் பறவையாச்சே.. உன்னிடம் சொல்லாமல் தப்பிக்க முடியுமா..?”

 ‘வார்த்தை தவறி விட்டாய்…’

இதைக் கேட்ட கண்ணம்மா மனம் துடித்தாளோ இல்லையோ… அந்தப் பார்வையைப் பார்த்த கெள்சல்யா மனம் துடித்தாள்..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link