Chapter 02

0Shares

‘அவன் பெயர் சக்தி வேலாம்… சந்தனக் கடத்தல் வீரப்பனைத் துரத்தி விட்டுவிட்டு.. அவனுக்குப் பதில்.. இவன் காட்டைச் சுத்தினானாம்..” வசுமதி.. மதிய உணவு வேளையில் கூறினாள்..

‘அதுக்குள்ளே செய்தியை சேகரிச்சுட்டாடி..” அனிதா சிரித்தாள்..

‘பின்னே.. தின ஒலியில் நிருபர் வேலை பார்க்கிறவள்ன்னா சும்மாவா..?” வசுமதி இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்..

‘அது சரி.. காட்டுக்குள் இவன் எதுக்குச் சுத்தினானாம்..?” ஜெனிபர் ஆர்வமாக விசாரித்தாள்..

‘நிச்சயமாய்.. சந்தனக் கடத்தல் வீரப்பனின் சாம்ராஜ்யத்தை பிடிக்கிறதுக்காக இல்லை.. செய்தி சேகரிக்கத்தான்..” வசுமதி.. சப்பாத்தியை வாயில் திணித்தபடி பதில் சொன்னாள்..

‘தோடா.. தமிழ்நாட்டில் இத்தனை ஊரிருக்க.. இவனுக்கு வேலை செய்ய.. சந்தனக் கடத்தல் வீரப்பனோட காடுதானா கிடைச்சது?” அனிதா ஆச்சரியப்பட்டாள்..

‘அது இந்த ஆறு வருசமாகத்தானாம்.. அதுக்கு முந்தி.. இவன் கோயம்புத்தூரில் வேலைப்பார்த்தானாம்…” வசுமதி.. சப்பாத்தியில் கவனமானாள்..

‘கோயம்புத்தூருக்கு பக்கத்திலேயே ஊட்டி இருக்கே.. அங்கே டிரான்ஸ்பர் கேட்டுக்கிட்டுப் போகாமல்.. ஆள் விழுங்கிக் காட்டுக்கு;ளள போய் அலைஞ்சிருக்கான் பாரு..” ஜெனிபர் பரிதாப்பட்டாள்..

‘தனிக்கட்டையாய் இருக்கும்..” அந்த அனிதாவிற்கு சக்திவேலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம்..

அவளது கணிப்பு தவறவில்லை.. அனைத்து விவரங்களையும் அறிந்து வைத்திருந்த வசுமதியிடமிருந்து உடனடியாக பதில் வந்தது..

‘அதையேண்டி கேட்கிற..? ஆசாமிக்கு நாலு வயசில் மகன் இருக்கானாம்..”

‘அதைச் சொல்லு.. நீ இதைத்தான் முதலில் கேட்டிருப்ப? ஏன் ஜென்னி.. உனக்குப் புகையிற வாசனை வரலை..? ” அனிதா குறும்பாக வினவ…

‘அதெப்படி வராமல் போகும்..?” என்று ஜெனிபர் குலுங்கிச் சிரித்தாள்…

‘ஆமாண்டி.. இந்த நியுஸைக் கேட்டு.. எனக்கு மட்டும்தான் வயிறு எரியுது.. உங்களுக்கெல்லாம் குளு.. குளுன்னு இருக்கு.. போங்கடி இவளுகளா… எனக்கு.. உங்களைப் பற்றித் தெரியாதா..? இதோ வாயைத் திறக்காமல் உட்கார்;ந்திருக்கிறாளே கௌசல்யா.. இவளுக்கு வேணும்னா இந்த நியுஸ் குளுகுளுன்னு குற்றால அருவி போல இருக்கும்.. உங்களுக்கெல்லாம் வயிறு எரியுதுன்னு எனக்குத் தெரியும்டி ” வசுமதி அலட்டிக் கொள்ளாமல் சப்பாத்தியை காலி செய்தாள்..

‘அதெப்படி நீ அப்படிச் சொல்லலாம்..? ஜெனிபர் எகிற ஆரம்பிக்க..

‘விடு ஜென்னி.. வசுமதிக்கு.. தன்னைப் போல.. மத்தவங்களையும்  நினைக்கும் குணம்..” என்று ஜெனிபரை சமாதானப் படுத்தும் பாவனையில் வசுமதியை வாரினாள் அனிதா..

அவர்கள் வாதாடிக் கொண்டே எழுந்து சென்று விட.. கௌசல்யா தணல்  கொண்ட நெஞ்சோடு.. அங்கேயே அமர்ந்து விட்டாள்.

அவளுக்கா குளுகுளுவென்று இருக்கிறது..? வென்னீர் அருவியில் தலை கொடுத்தது போல்.. உடல் பூராவும் பற்றி எரிகிறதே..

 நான்கு வயதுக் குழந்தைக்கு தகப்பனா…? அவனா…? எப்படி அவனால் முடிந்தது…?

 ‘இதை நீ கேட்கக் கூடாது..’ என்றது அவள் மனம்..

 ‘அவனை விலகிச் செல்லச் சொன்னது நீதான். விலகிப் போனவன்.. தனக்கென்று ஒரு துணையைத் தேடித் கொள்ளாமல் இருப்பானா..?’

 ‘நானிருக்கிறேனே…’ அவள் தவித்தாள்..

 ‘நீ தனியாகவா இருக்கிறாய்..? கையில் மூன்று வயதுக் குழந்தையோடு இருக்கிறாய்..?’  அவளது மனம் நினைவுறுத்தியது..

அவள் மனம் தளர்ந்தாள்.. அப்படியே டைனிங் டேபிளில் தலை சாய்த்தாள்.. விழி மூடினாள்.. மூடிய விழிகளுக்குள் தெரிந்த இருளில் தொலைந்து போன தன் காதலை.. கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் தேடினாள்..

‘கௌசி.. என்னடி.. கையைக் கூட கழுவாமல்.. இப்படிப் படுத்திருக்க.. ? எழுந்திரு.. உன்னை எடிட்டர் கூப்பிடுகிறார்..” வசுமதி அவளைத் தட்டி எழுப்பினாள்..

‘ஸாரி.. ஸாரி..” பதறி எழுந்தாள் கௌசல்யா..

‘எதுக்கு இத்தனை ஸாரி..? போய் கையைக் கழுவிட்டு எடிட்டர் ரூமூக்கு போ.. நீ கொடுத்த நியுஸைப் பத்தி.. அவர்.. பைனலைஸ் பண்ணனுமாம்..” வசுமதி போய் விட்டாள்.

எடிட்டரின் அறைவாசலில் நின்று கதவை ஒருவிரலால் தட்டினாள் கௌசல்யா..

‘யெஸ்.. கமின்..” சுப்ரமணியத்தின் குரல் ஒலித்தது..

அகன்ற மேஜையின் அந்தப் பக்கம் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சுப்பிரமணியம்..

‘இவர் சக்திவேல்.. காலையில் நம் சென்னை பிரான்சில் ஜாயின் பண்ணியிருக்கிறார்.. உனக்குத் தெரியும்தானே கௌசி..? ” என்று வினவினார்.

அப்போதுதான் அவருக்கு எதிரே.. சக்திவேல் அமர்ந்திருந்ததைக் கவனித்தாள் கௌசல்யா..

 ‘இவனையா  எனக்குத் தெரியாது…?’

அலைகடலாய் அவள் மனம் பொங்கியது.. அடக்கிக் கொள்ளப் பெரும்பாடு பட்டவள்.. அவனைப் பார்த்தாள்..

அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆளைத் துளைக்கும் அதே பார்வை…?

‘தெரியும் சார்…” கௌசல்யாவின் பதிலில் ஆயிரம் அர்த்தங்கள், அதை உணர்ந்தவனாக அவன் பார்வையில் மீண்டும் அவளை ஊடுருவினான்..

‘இப்படிப் பார்க்காதே..’ அவள் மனம் தவித்தாள்..

‘உன் பார்வை என்னைக் கொல்லுகிறது.. கையில் பொக்கிசம் கிடைத்தும் அதை கை நழுவ விட்ட துரதிர்ஷ்டசாலி நான்.. எனக்காக நீ உன்னைக் கொடுத்தாய்… என் குடும்பத்திற்காக.. நான் என்னைக் கொடுக்க மறுத்தேன்.. உறவைக் கொடுத்தவனிடம்.. பிரிவை வேண்டி நின்றேன்.. நீ பிரிந்து போய் விட்டாய்.. போனவன்.. போனவனாகவே இருந்திருக்கக் கூடாதா..? ஏன் திரும்பவும் என் கண்ணில் படுகிறாய்..?’

அவளது இதயம் கேட்ட கேள்வியை உணர்ந்தவனைப் போல் சுப்பிரமணியத்திடம்..

‘கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்பர் தரவான்னு கேட்டாங்க சார்.. நான் மறுத்து விட்டேன்.. சென்னைதான் வேண்டும்ன்னு கேட்டு வாங்கிக் கொண்டு வந்தேன்.. .” என்று கூறினான்..

இந்தப் பதில் அவளுக்கானது என்பதை உணர்ந்து கொண்டாள் கௌசல்யா..

நீ கோயம்புத்தூரில்தானே இருந்தாய்..? அங்கே வந்தால் உன் கண்ணில் பட்டு விடுவேன்னுதானே சென்னைக்கு வந்தேன்.. இங்கே நீ இருப்பாய்ன்னு கனவா கண்டேன்..?  என்று கேட்மாமல் கேட்கிறான்..

இதிலெல்லாம் அவன் வல்லவன் என்ற நினைவு அவள் மனதில் இதமாக படர்ந்தது..

அவளை துரத்திக்  காதலித்த காலங்களிலும் இப்படித்தான் ஜாடையாக அவளிடம் பேசுவான்..

‘என்னடா ரமேஷ்.. கண்டுக்கவே மாட்டேங்கறே..”

எதிர் வீட்டு ரமேஷின் மேல் கை போட்டுக் கொண்டே இவளைப் பார்ப்பான்.. இவளுக்குத் தெரியும்.. அவன் கேட்பது இவளிடம் தான் என்பது..

அதை உணராத அந்த ரமேஷ்.. குதூகலமாகி விடுவான்..

‘ஏன்ப்பா.. நீதான் நிற்கவே நேரமில்லைன்னு.. காலில் சக்கரம் கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டிருக்க.. இதில.. என்னைக் கண்டுக்கவே மாட்டேன்னு புகார் சொல்றியே.. நியாமாப்பா..” என்று நியாயம் கேட்க ஆரம்பித்து விடுவான்.

‘என்ன ஓடி.. என்ன பிரயோசனம்.. எதையும் பிடிக்க முடியலையே…” சக்திவேலின் பெருமூச்சில்.. அவளைப் பிடிக்க முடியாத தாபம் தெரியும்..

அவளுக்கு அது பிடிக்கும்.. அவனின் அந்த ஜாடைப் பேச்சு பிடிக்கும்.. அவளைக் கண்டால்..  அவனின் விழிகளில் தெறிக்கும் மின்னல் பிடிக்கும்.. அவள் போகுமிடமெல்லாம்.. நிழலாக அவன் தொடர்வது பிடிக்கும்.. அவளது பார்வைக்காக.. காத்திருக்கும் அவனது பார்வையைப் பிடிக்கும்..

மொத்தத்தில்.. அவனை.. அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. 

ஆனால் அதை அவள் ஒப்புக்; கொள்ள மாட்டாள்.. அவனைப் பாராததைப் போலக் கடந்து விடுவாள்..

‘எங்க கௌசி.. குனிந்த தலைநிமிராமல் நடக்கிற பொண்ணு.. ஒரு பொண்ணு.. ஆத்து வாசல்படியைத் தாண்டினால்.. கூடப் போவது அவளுடைய குடும்ப கௌரவம்தான் என்கிறதை தெரிஞ்ச பொண்ணு.. பெத்தவா பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத பொண்ணு.. ஆத்துக்கு ஒரு பொண்ணு இப்படி இருந்தா போதும்.. அந்த குடும்பம் தழைச்சுடும்..”

இப்படிப் பேசிப் பேசியே.. அவளது சிறகை ஒடித்து வளர்த்தாள் ஆண்டாள்..

அடித்துச் சொன்னால் எதிர்த்து கேட்கலாம்.. இப்படி அன்பில் கொன்றால்.. புதையுண்டு போவதைத் தவிர.. வேறு வழி என்ன இருக்கிறது?

கௌசல்யாவும்.. அந்த அன்பில் புதையுண்டாள்.. அவனது காதலை உணர்ந்தும்.. பதிலுக்கு அவள்.. அவனைப் காதலிப்பதை உணர்ந்தும்.. அதை வாய் விட்டுச் சொல்லாமல்.. அவனைத் தவிர்த்தாள்

‘அதெல்லாம் ஒரு காலம்…’ கௌசல்யா பெருமூச்சை அடக்கிக் கொண்டாள்..

எல்லோருடைய வாழ்க்கையிலும் இனிமையான நிலாக்காலங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. அந்த நிலாக்கால நினைவுகளின் இதத்தில் அவர்கள் சுட்டெரியும் வாழ்க்கையை கடக்கத்தான் செய்கின்றனர்..

கௌசல்யாவும் அப்படித்தான்.. ஒரு காலத்தில்.. சக்திவேல் அவளுக்கு கொடுத்த காதலின் நிலாக்கால நினைவுகளில்தான் இத்தனை நாள்களும் அவள் வாழ்ந்து வந்தாள்..

கையில் மூன்று வயதுக் குழந்தையோடு அவளிருக்க.. நான்கு வயதுக் குழந்தையின் தகப்பனென்று சொல்லிக் கொண்டு.. அவன்.. அவள் முன்னால் வந்து நிற்கிறான்..

 ‘கடவுளே.. இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடு..’ அவள் மனதில் வேண்டிக் கொண்டாள்..

 ‘என் மனம் லேசாக கலங்கினால் கூட.. அந்தக் கலக்கத்தின் நிழல்.. என் சக்தியை பாதித்து விடக் கூடும்.. என் சக்தி நன்றாக வாழ வேண்டும்.. மனைவி.. மகன்.. என்று அருமையான குடும்ப வாழ்க்கையை அவன் வாழவேண்டும்.. அதனால் மனமே.. கலங்காதே…’

கௌசல்யா சக்திவேலைப் பார்த்து தெளிந்த முகத்துடன் 

”லோ..” என்றாள்..

அவன் பதிலுக்கு தலையசைத்தான்..

‘உட்கார் கௌசி..” என்றார் சுப்பிரமணியம்..

அவனருகில் கௌசல்யா அமர்ந்து கொண்டாள்..

‘எவ்வளவு நாள்களாச்சு.. இவனருகில் உட்கார்ந்து..’ அவள் மனம் படபடக்க அவனை லேசாக பார்த்துக் கொண்டாள்..

அவன் விழிகளும் அதையே கூற.. அவசரமாக பார்வையை விலக்கிக் கொண்டாள்..

‘அலைபாயாதே.. இவன் இன்னொருத்தியின் கணவன்..’

‘கூப்பிட்டிங்களாமே சார்..”

‘யெஸ்.. யெஸ்.. உன் ஆர்டிகலைப் படிச்சுப் பார்த்தேன் இட்ஸ் வெரி நைஸ்.. அடுத்து நீ எடுக்கப் போகிற பேட்டியை சக்திவேலுடன் சேர்ந்து எடுக்கப் போகிற…”

‘சேர்ந்தா..?”

‘ஆமாம்… நீங்க செய்தி சேகரிக்கப் போகிற நபர் அரசியலில் பெரிய புள்ளி.. அங்கே நீ தனியாகப் போய் பேட்டி எடுப்பது உனக்கு பாதுகாப்பாக இருக்காது.. சக்திவேலுடன் ஜாயின் பண்ணிக்க.. இட்ஸ் பெட்டர்..”

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் திணற…

‘என்னுடன் வொர்க் பண்ணுவதை அவங்க கம்பர்ட்டபிளா பீல் பண்ணலை போல இருக்கு சார்.. நான் தனியே போகிறேனே..” என்றான் சக்திவேல்..

‘நோ.. நோ.. அந்த ஆளைப் பற்றிய விவரங்களை சேகரித்தது கௌசல்யாதான்.. இந்த வொர்க்கில் கௌசியின் பார்ட் கட்டாயம் இருக்க வேண்டும்.. நீங்க சேர்ந்து இந்த வேலையைச் செய்ங்க..” என்று தீர்மானமாக கூறிவிட்டார் சுப்பிசமணியம்..

கௌசல்யா யோசனையுடன் எழுந்து கொள்ள.. அவளைப் பின்பற்றி.. அறையை விட்டு வெளியே வந்த சக்திவேல்..

‘ஐ ஆம் ஸாரி..” என்றான்..

‘எதுக்கு..? ” கௌசல்யா குற்ற உணர்வுடன் கேட்டாள்..

‘இங்கே நீயிருப்பாய்ன்னு எனக்குத் தெரியாது.. நீ கோயம்புத்தூரை விட்டு வரமாட்டேன்னு  நினைச்சேன்..”

‘வர வேண்டியதாகி  விட்டது…”

‘ஓ.. உன் ‘ஸ்பெண்ட் இங்கேதான் வொர்க் பண்ணுகிறாரா..? அவருக்காக சென்னைக்கு  டிரான்ஸ்பர் கேட்டு வந்தாயா..?”

எதையோ சொல்லப் போன கௌசல்யா.. எதையோ நினiத்துக் கொண்டவளாய்..

‘ஆமாம்..” என்றாள்..

அவன்  முகம் மாறியது.. துளைக்கும் பார்வையுடன்..

‘மூன்று வயதில் பெண்குழந்தை இருக்கிறது போல..,” என்று கேட்டான்..

‘ம் ம்.. பூஜான்னு பெயர்.. உங்க பையனின் பெயர் என்ன..?”

அவளது கேள்வியில் தூக்கி வாரிப் போட்டவனாக அவன்.. அவளைப் பார்த்தான்.. அந்தப் பார்வையில் ஏதோ இருந்தது.. அது என்னவென்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளிடம்..

‘கௌசிக்.. ” என்று சொன்ன சக்திவேல்.. அதற்கு மேல் அங்கே நிற்காமல்.. வேக நடையுடன் அகன்றான்..

‘கௌசிக்’.. கௌசல்யாவின் விழிகளில் நீர் நிரம்பியது… ‘நான் உன்னைக் கொல்லாமல் கொன்று இந்த மண்ணில் புதைத்தவள். என் பெயரைஉன் மகனுக்கு வைத்தாயா…?’

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link