Chapter 03

0Shares

இரவின் நிசப்தம் மனதிற்கு இதத்தைத் தர.. கௌசல்யா கண் மூடி உறங்க முயன்றாள்.. முடியவில்லை.. பக்கத்தில் அவள் மேல்  காலைத் தூக்கிப் போட்டு .. ஒன்றிப் படுத்திருந்த பூஜாவைப் பார்த்தாள்.. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. மெதுவாக.. அவளை விலக்கிப் படுக்க வைத்து போர்த்தி விட்ட கௌசல்யா.. எழுந்து ஜன்னலருகில்  சென்றாள்.. தெரு சந்தடியடங்கி.. உறக்கத்தை வரவேற்றுக் கொண்டிருந்தது..

எங்கிருந்தோ பாட்டுச் சத்தம் கேட்டது…

‘அம்ம்மா.. வானிலே.. மண்ணிலே..      

      நீரிலே.. நெருப்பிலே..

      எங்கும் நீதானம்மா…”

கௌசல்யாவிற்கு குழந்தைப் பிராயத்திற்கு திரும்பியதைப் போல இருந்தது..

அப்போது அவர்களின் குடும்பம்.. கோயம்புத்தூருக்கு அருகில் ஒரு சிற்றூரில் இருந்தது.. அந்தக் கிராமத்தில் ஒரு டென்ட் சினிமா தியேட்டர் உண்டு.. அந்தத் தியேட்டரில் மாலைக் காட்சி ஆரம்பிக்கும் முன்னால் திரைப்படப் பாடல்களை ஒலிப்பரப்புவார்கள்.. அந்தப் பாடல்களுக்கு முத்தாய்ப்பாக இந்தப் பாடலைப் போடுவார்கள்.. இந்தப் பாடல் ஒலித்தால்.. அடுத்து திரைப்படம் ஆரம்பிக்கப் போகிறது என்று அர்த்தம்..

‘ஏய்.. ‘அம்மா’ன்னு பாட்டு போட்டுடாங்கடி… சீக்கிரம் நடையை எட்டிப் போடு… ” வைதேகி பரபரப்பாள்..

‘நோக்கு எதுக்குடி இத்தனை அவசரம்..? உன்னைவிட சின்னவ அவ.. எவ்வளவு சமர்த்தா வர்றா.. நீயேண்டி பறக்கிற..? அதுதான் பெரியவா துணைக்கு வர்றோமோயில்லியோ.. பெரியவளா லட்சணமா.. அடங்கி.. ஒடுங்கி இரேண்டி..” ஆண்டாள் வைதேகியை கடிந்து கொள்வாள்..

ஆனாலும் வைதேகியின் காதுகளில் அது விழுகாது அவள் வேக நடையுடன் கௌசல்யாவை இழுத்துக் கொண்டு முன்னால் சென்று விடுவாள்..

”ப்பா.. எழுத்துப் போடும்போதே வந்துட்டோமடி..” என்று பரவசப்படுவாள்..

வைதேகிக்கு எல்லாம் அவசரம்தான்.. மார்கழிக் குளிரில் அதிகாலையில் எழுந்து.. தெருவிலேயே முதல் கோலமாக.. அவர்களின் வீட்டு வாசலில் கோலத்தைப் பரப்பி.. நடுவில் சாணியில் உருண்டை பிடித்து.. அதன் மேல் பூசனிப் பூவை நட்டு வைப்பதில் அவசரம்..

‘இட்லியை ஊற்றி வை வைதேகி..” என்று ஆண்டாள் சொல்லும் முன்னால்.. வேக வைத்த இட்லிகளை தட்டில் பரத்தி வைப்பதில் அவசரம்..

இரண்டு மாதங்களில் கற்றுக் கொள்ள வேண்டிய தையலை இரண்டே நாள்களில் கற்றுக் கொண்டதில் அவசரம்..

பெண்பார்க்க வந்த மாப்பிளை வீட்டார்.. அழைப்பதற்கு முன்னாலேயே.. காபியுடன் அவர்கள் முன்னால் பிரசன்னமானதில் அவசரம்…

அவசரப்பட்டு.. அவசரப்பட்டு.. கடைசியில்.. மறைவதிலும் அவசரத்தைக் காட்டி விட்டாள்…

ஜன்னல் கம்பியில் முகம் புதைந்திருந்த கௌசல்யா மனம் கலங்கினாள்.. ஜன்னலருகிலிருந்து அவள் திரும்பப் போனபோது.. அடுத்த பாடல் ஒலிபரப்ப ஆரம்பித்திருந்தது..

    ‘கடவுள் அமைத்து வைத்த மேடை…

  இணைக்கும் கல்யாண மாலை…

     இன்னார்க்கு இன்னாரென்று…

  எழுதி வைத்தானே.. தேவன் அன்று…”

கௌசல்யா காதுகளைப் பொத்திக் கொண்டாள்.. அவசரமாக ஜன்னல் கதவுகளை இறுக்கி மூடிவிட்டு.. சுவரோடு சரிந்து அமர்ந்தாள்..

என்ன செய்தாலும்.. அந்தப் பாடல் ஒலி கேட்டுக் கொண்டுதான் இருந்தது..

 ‘வைதேகி…’ அவள் மனம் அரற்றியது..

இந்தப் பாடல் தான் இதே பாடல் தான்.. சிரிப்பும் .. பேச்சுமாக குலுங்கி வலம் வந்தவளை.. ஒரு ஓலைப் பாயில் சுருட்டி.. மார்ச்சுவரியில் தந்த போது.. பக்கத்திலிருந்த டீக்கடயில் ஒலித்தது.. இந்தப் பாடல்தான்.

அன்றிலிருந்து.. இன்று வரை.. அந்தப் பாடலைக் கேட்டவுடன் மனதில் ஏற்படும் பிசைவு.. அப்போதும் ஏற்பட.. கௌசல்யா.. முழங்கால்களில் முகம் புதைத்தாள்..

‘ஏண்டி.. அப்படிச் செய்தாய்..? உனக்காகத் தானே.. நான் என் உயிரானவனைப் பிரிந்தேன்..? அவன் காதலை விட்டேன்.. நீ மட்டும் ஏண்டி.. எனக்காக உயிரோடு இருக்காமல் என்னை விட்டுப் போனாய்..?’

கௌசல்யாவின் மனதில்.. கடந்த கால நினைவுகள் ஒரு சுழலாக எழுந்தன..

‘டீ கௌசி.. நம்ம பட்டம்தாண்டி மேலே.. மேலே போகுது…”

பட்டம் விடுவதிலும் அவசரம் காட்டிய வைதேகியின் கையிலிருந்த நூலைத் தன் கையில் வாங்கிக் கொள்ள முயன்ற கௌசல்யாவிடம் பட்டத்தைப் தர மறுத்தாள் வைதேகி..

‘நீ ஸ்லோமோசன் பேபிடி.. உனக்கும் இந்த விளையாட்டுக்கும் சரிப்ட்டு வராது…”

கௌசல்யா ஏமாற்றத்துடன் மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்த போதுதான.. அந்தக் குரல் கேட்டது..

‘ஏண்டா ரங்கா.. இந்த பேபிக்கு வேற எந்த விளையாட்டு சரிப்பட்டு வருமாம்.. மரப்பாச்சி பொம்மை விளையாட்டா..?”

கௌசல்யா ரோசத்துடன் திரும்பிப் பார்த்தாள்.. பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் கள்ளச் சிரிப்புடன் அவன் நின்றிருந்தான்.. கௌசல்யா திரும்பியதும்.. கனகாரியமாக கூடநின்ற சிறுமியிடமும்.. சிறுவனிடமும் பேசுவதைப் போல் பாவனை செய்ய ஆரம்பித்தான்.

‘இந்த பேபியை பாரேன்.. குண்டு கன்னமும்.. முட்டை.. முட்டையாய் கண்களையும் வைத்துகிட்டு.. ஆளை மயக்குது…”

 ‘நீ என்னைத்தான் சொல்கிறாய்..’ என்று எப்படி அவளால் அவனை கேட்க முடியும்..?

அவன் தான் அந்தச் சிறுமியைக் கொஞ்சிக் கொண்டிருந்தானே.. ஆனால் பேச்சு அங்கேயிருக்க.. அவனது பார்வை பூராவும் கௌசல்யாவின் மீதே இருந்தது..

 ‘கள்ளன்…’ கௌசல்யா பல்லைக் கடித்தாள்..

‘என் செல்ல பேபிக்கு என்ன வேணும்..? எதுக்கு இந்த முறைப்பு முறைக்கிற..? போன பிறவியில் எனக்கு முறைப் பெண்ணாய் பிறந்து வைத்தியா என்ன… அதுதான் இந்த முறைப்பு.. முறைக்கிற..”

அவளது கோபப் பார்வைக்கும் அவனிடமிருந்து பதில் வர.. இது வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன் கௌசல்யா வெற்றிகரமாக பின் வாங்கினாள்..

‘ஏண்டி கீழே வந்தட்ட..?” என்றபடி வந்த வைதேகியிடம் 

‘உன்னை யாரு.. என்னை பேபின்னு சொல்லச் சொன்னது..?” என்று எரிந்து விழுந்தாள்..

‘இன்னைக்காடி நான் புதுசா உன்னை பேபின்னு கூப்பிடறேன்.. நீ பிறந்ததிலிருந்தே.. அப்படித்தானே கூப்பிடறேன்..?” வைதேகி குழம்பினாள்..

வெள்ளிக்கிழமை கோவிலுக்கு அவள்.. வைதேகியிடன் போனபோதுதான் கவனித்தாள்..

அவனும்.. அவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்..

 ‘இன்னைக்கு என்ன சொல்லி வைக்கப் போகிறானோ…’ கௌசல்யாவிற்கு கலலையே வந்துவிட்டது..

‘பராக்குப் பார்கககாமல் வாயேண்டி..” வைதேகி அவளைக் கடிந்து கொள்ள..

“ஏண்டா ரங்கா.. பராக்குப் பார்த்தால்தானே.. பின்னாலே யார் வருகிறாங்கன்னு பார்க்க முடியும்ன்னு சொல்ல வேண்டியது தானேடா..” என்று பக்கத்தில் வந்து கொண்டிருந்த சிறுவனிடம் சொன்னான் அவன்..

அவன் பேசியதை வைதேகி கவனித்தாளா என்று அவள் முகம் பார்க்கத் திரும்பிய கௌசல்யா திகைத்துப் போனாள்..

வேக நடையுடன் வைதேகி கோவிலுக்குள் நுழைந்திருந்தாள்..

‘என்னவோடா ரங்கா.. பொதுவாக ஒரு வீட்டில்.. மூத்ததுதான் அமைதியாய் இருக்குமாம்.. இளையது வேகமாக இருக்குமாம்.. இங்கே அதுக்கு நேர் மாறாய் இருக்கு…”

அவன் சொன்னதற்கு.. அந்த பத்து வயது ரங்கன் பெரிய மனிதனைப் போல தலையை வேறு ஆட்டி வைத்தான்..

கௌசல்யாவிற்கு கோபம் பீறிட்டது..

‘ஏய்ய்.. இங்கே வாடா..” என்று ரங்கனை அதட்டினாள்

‘என்னங்க..?” என்றபடி அவன் அவள் முன்னால் வந்து நிற்கவும்.. அவளுக்கு பதட்டமாகி விட்டது..

‘இவனென்ன இப்படி செய்து வைக்கிறான்..?’ கலவரத்துடன் அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்..

‘கூப்பிட்டுவிட்டு .. ஒன்னும் சொல்லாமல் நின்றால் எப்படி..?” அவன் விழிகளில் விசமம் இருந்தது..

‘நான்.. நான்.. உங்களையா கூப்பிட்டேன்..?”

‘என்னைக் கூப்பிடலையா.. நான் கூட.. வாடான்னு கூப்பிட்டதும் என்னைத்தான் உரிமையா கூப்பிடறீங்களோன்னு நினைத்து வந்து விட்டேன்..”

”லோ.. யார் சார் நீங்க..?”

‘அப்பாடா.. ஒருவழியாய் நீங்க இந்தக் கேள்வியை கேட்டுட்டீங்க..? இந்தக் கேள்வியை உங்களை கேட்க வைக்கிறதுக்குள்ள எத்தனை பாடு..? என் பெயர் சக்திவேல்.. வயது இருபத்தி நாலு.. தின ஒலியில் நிருபர் வேலை.. கைநிறைய சம்பளம்.. அம்மா.. அப்பா.. கிராமத்தில் இருக்காங்க.. முக்கியமாக எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை..”

‘நான் கேட்டேனா..?” அவள் முறைத்தாள்..

‘நீங்கதானே யார் நீங்கன்னு கேட்டீ ங்க..?”

‘அதுக்காக.. உங்க வீட்டு நாய் குட்டி வரைக்கும் பட்டியலை ஒப்பிக்கனுமா..? நானென்ன சென்சஸ் கணக்கா கேட்டேன்..? தெரியாமல்தான் கேட்கிறேன்.. உங்களுக்கு கல்யாணமானா.. எனக்கென்ன.. ஆகலைன்னா எனக்கென்ன..?”

‘நீங்களே தெரியாமல் கேட்கறீங்க.. நான் சொன்னால்தானே அது உங்களுக்குத் தெரியும்..?”

‘உங்களைப் பத்தின விவரம் எனக்கெதுக்கு சார்..?”

‘அதை இப்பவே நீங்க முடிவு பண்ணினா எப்படி..?”

‘வேற எப்ப முடிவு பண்ணுகிறது..?”

‘இப்போத்தானே என்னைப் பத்திச் சொல்லியிருக்கிறேன்..? அதைப் பற்றி.. ஆறஅமர யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க..”

‘உங்களைப் பற்றி நினைக்க என்ன இருக்கு..?”

‘எத்தனையோ இருக்கு..”

‘உதாரணத்துக்கு ஒன்னே ஒன்னைச் சொல்லுங்க பார்ப்போம்..”

‘சொல்லவா..?”

‘சொல்லுங்க சார்..”

‘சொல்லி விடுவேன்..”

‘இதென்ன சார் வம்பாப் போச்சு.. சொல்லித் தொலைங்கன்னுதானே நானும் சொல்கிறேன்..”

அவன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.. ஊடுருவும் அந்தப் பார்வையை எதிர் கொள்ளத்  திராணியில்லாமல் கௌசல்யா.. உடல் நடுங்க முகம் திருப்பிக் கொண்டாள்..

அவன் இதழ்களில் வெற்றிப் புன்னகை உதித்தது..

‘எல்லோரும் தூங்கும் போது.. நீங்க மட்டும் தூங்காமல்.. என் முகத்தை நினைக்கலாம்..,” அவன் மெதுவான குரலில் கூறியதும்.. அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது..

‘என்னது..?” அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்க்க..

‘பை…” என்றபடி அவன் போயே.. போய் விட்டான்.. அவன் போன திசையைப் பார்த்தபடி கௌசல்யா அசையாமல் நிற்க.. அவள் முதுகில் ஒரு அடி விழுந்தது..

‘உனக்காக பெருமாளை தரிசனம் பண்ணாம எத்தனை நாழிடி கால் கடுக்க நிற்கிறது..? கோவிலுக்குள்ள வராம.. வாசலில் என்னடி பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்கிற..?”

வைதேகியின் கோபமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மலங்க.. மலங்க.. விழித்தாள் கௌசல்யா..

அவன்.. அவளைச் சுற்றி ஏற்படுத்தி விட்டுச் சென்றிருந்த அதிர்வலைகளிலிருந்து அவள் இன்னும் மீண்டு வெளி வரவில்லை.. 

‘நோக்கு என்னடி ஆச்சு..?” வைதேகி கவலையுடன் அவள் முகம் பார்த்தாள்..

கௌசல்யாவிடமிருந்து பதில் வராமல் போகவும் அவளது கவலை அதிகரித்தது..

‘ராமா.. கார்த்தாலே எழுந்திருக்கச்சே.. இவ நல்லாத்தானே இருந்தா.. இப்ப எந்தக் காத்துக் கருப்பு அடிச்சுச்சோ தெரியலையே.. என் தங்கை இப்படி பேக்கு மாதிரி முழிக்கிறாளே..?

இதைக் கேட்டதும் கௌசல்யாவிற்கு தன்னுணர்வு மீண்டு விட்டது.. 

‘யாரைப் பார்த்து ‘பேக்கு’ன்னு சொல்கிற..?” என்று வைதேகியிடம் சண்டைக்குப் போனாள்..

‘இந்த ரோசத்துக்கொன்னும் குறைச்சலில்லை.. கோவிலுக்கு வந்தவ.. வாசலிலியே ஏன்டி நின்ன..?”

‘ஊம்.. நீ காலில் சக்கரம் கட்டிக்கிட்டு ஏண்டி.. என்னை விட்டுட்டு முதல் ஆளா உள்ளே ஓடின..?”

‘நீ திருவாரூர் தேர் போல ஆடி.. அசைஞ்சு.. நிதானமாக வந்துட்டு என் மேல குத்தம் சொல்கிறாயா..?”

‘கூட வந்த தங்கையை நின்னு கூப்பிட்டுக்கிட்டுப் போகாமல்.. உள்ளே ஓடிவிட்டு.. நீ என் மேல் குத்தம் சொல்கிறாயா..?”

இருவரும் சண்டைக் கோழிகளாய் சிலிர்த்துக் கொள்ள.. அங்கே யுத்தம் மூளாமல்.. அடுத்த வீட்டு தான்யலட்சுமி வந்து காப்பாற்றினாள்..

‘என்னடி பெண்களா.. இன்னுமா பெருமாளை சேவிக்காம வாசலில் நிற்கறீங்க..? அங்கே உங்களைக் காணோமுன்னு உங்க அம்மா.. ஆத்து வாசலில் கால் கடுக்க நிற்கிறாள்..”

‘எங்கே மாமி.. இவளைக் கூட வைச்சுக்கிட்டு .. நேரத்துக்கு பெருமாளை சேவிக்க முடியறதா..?”

‘இவதான் மாமி.. என்னை விட்டுட்டு கோவிலுக்குள் ஓடினா..” இருவரும் தான்யலட்சுமியை பஞ்சாயத்து தலைவராக்க.. அவள் அநதப் பதவியை ஒப்புக் கொள்ளாமல் பின் வாங்கினாள்..

‘சரி.. சரி.. அடிச்சுக்கிட்டது போதும்.. கோவிலுக்குள்ள வாங்க..”

தீபாராதனை ஒளியில் பெருமாளை தரிசனம் செய்து விட்டு..சகோதரிகள் இருவரும் சண்டைக் கோழிகளாய் முறைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள்.. அன்று இரவு கௌசல்யாவிற்கு உறக்கம் வந்து தொலைக்காமல்.. அவன் முகம் நினைவுக்கு வந்து தொலைத்தது..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link