Chapter 17
வல்லவர்களுக்கு புல்லும் ஆயுதம்.. சாகஸக்காரர்களுக்கு பொடித்துகள்கூட ஆயுதம்..
மனோஜின் தாய் ஒன்றுமேயில்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்கினாள்.. திட்டமிட்டு வைதேகியின் பெற்றோர் அவளை மனம் புண்படப் பேசி அவமானப் படுத்தி விட்டதாக குற்றம் சாட்டினாள்.. இனி அவர்களுக்கும்.. தன் குடும்பத்திற்கும் ஒட்டுமில்லை.. உறவுமில்லை என்று அறிவித்துவிட்டாள்..
‘என்னண்ணா இப்படிப் பேசறாங்க..”
‘பதறாதேடி.. நமக்கும் மனுஷா இருக்கா.. நியாயம் கேட்போம்..”
இங்கே ஏதோ சரியில்லை என்று மூன்று வருடங்கள் கழித்துப் புரிந்து கொண்ட ராமாமிர்தம் .. மனம் பதற தன் மேல்தட்டு அதிகார வர்க்க உறிவனர்களை அணுகினார்..
‘நான் பேசினப்போ நல்லாத்தான் பேசறாங்க ராமாமிர்தம்..”
‘அப்புறமெதற்கு எங்க குழந்தைய எங்க கண்ணில காட்டாம மறைச்சு வைக்கிறா..?”
‘நான் பார்த்தேனே.. நல்லாத்தானே பேசினா.. அவதான் டிபன் காபி கொடுத்தா.. ஆத்துல சௌக்கியமான்னு கேட்டா..”
‘அவ சௌக்கியமா இருக்கிறாளா..?”
‘நேக்கென்ன மாமா குறைன்னு கேட்டாளே..”
‘ஒரு தடைவ அவளை நேரில பார்க்கனும் சம்பந்தம்..”
‘அவசரப் பட வேணாம்.. அவா வீட்டு பொம்மானாட்டியை நீயும் மரியாதை குறைவாய் Nபிசயிருக்கக் கூடாதுல்லியா..? அவா மனசில அந்த கோபம் இருக்கு..”
‘நான் தப்பாப் பேசலை சம்மந்தம்..”
‘வைதேகியை வீட்டுக்குள்ள மறைச்சு வைச்சிருக்கிறதா சொன்னாயாமே..”
‘அப்படிச் சொல்லவேயில்ல சம்மந்தம்..”
‘இப்ப நீதானே என்கிட்ட வைதேகியை உன் கண்ணில் காட்டாம மறைச்சு வைச்சிருக்கிறதா சொன்னே.. அதுக்குள்ள மாத்திப் பேசறியே ராமாமிர்தம்..”
ஐ.ஏ.எஸ் படித்த சம்பந்தத்தின் விழிகளில் ராமாமிர்தத்தை நம்பாத தன்மை வெளிப்படையாகத் தெரிந்தது..
மனோஜின் தாயை பொய்க்காரி என்று சொல்லியதாகக் கூறப்பட்ட ராமாமிர்தம் பொய்க்காரராக சித்தரிக்கப் பட்டார்.. மனோஜின் குடும்பம் பண்பாடுடைய குடும்பமாக மாறியது.. ராமாமிர்தத்தின் பேச்சும்.. செயல்களும் பிடிக்காத காரணத்தினால் அவர்கள் வீட்டு மருமகளை பிறந்த வீட்டுக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை அவர்கள் எடுத்ததாக அனைவரும் கூறினர்..
ராமாமிர்தம் சோர்ந்து போனார்..
‘உன்னை மலை போல நம்பியிருந்தேனே சம்மந்தம்..”
‘என்னை என்ன செய்யச் சொல்கிறப்பா.. உன் பெண்ணே உன்மேலதான் தப்புன்னு அடிச்சுச் சொல்றா.. என் புக்ககத்தை குறைவாப் பேசின பிறந்தகத்து வீட்டுப் படியை இனிமே மிதிக்க மாட்டேன் மாமான்னு என்கிட்டேயே சொன்னாளேப்பா..”
‘அப்படியா சொன்னா..?”
‘ஆமாம்ப்பா.. பாவம் வயித்து வலியால துன்பப் படற பொண்ணு.. இப்பக் கூட அவளை வெளியூருக்கு ட்ரீட்மென்டுக்குத்தான் மனோஜ் கூப்பிட்டுக்கிட்டுப் போனானாம்..”
‘வயிற்று வலியா..?”
‘இது எப்போ..?’ ராமாமிர்தம் பதறினார்..
‘தெரியாதவனைப் போலக் கேட்கறியே.. உனக்கு இதுவே பிழைப்பா போச்சு.. பிறந்ததிலிருந்தே உன் பொண்ணுக்கு வயிற்று வலியாமே.. நீ மறைத்து வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டயாமே.. உன் சம்பந்தகாரங்களின் கோபத்துக்கு இதுவும் ஒரு காரணம்..”
இந்தப் புது ப் பழி எதற்காக உருவாக்கப்படுகிறது என்று புரியாதவராக திகைத்தார் ராமாமிர்தம்..
அன்றே வைதேகிக்கு நாள் குறித்து விட்டார்கள் என்பது அவருக்கு அப்போது தெரியாமல் போய் விட்டது..
‘தீராத வயிற்று வலி’ யால் தற்கொலை என்று வைதேகியின் மரணம் முடிவு செய்யப்பட்ட அன்றுதான் அவருக்கு அதற்கான காரணம் புரிந்தது..
‘ஏன்ய்யா.. சின்ன வயதிலிருந்தே உன் பொண்ணுக்கு வயிற்று வலியாமே.. நீ மறைச்சு வைச்சு கல்யாணத்தை பண்ணிட்டயாமே.. உன் சொந்தக்காரங்களே இதைச் சொல்றாங்க.. உன் பொண்ணும் தெளிவா அதை எழுதி வைச்சுட்டு செத்துருக்கா.. எங்களை என்ன பண்ணச் சொல்கிற..?”
என்ன பண்ண முடியும்..? யாரைத்தான் என்ன பண்ண முடியும்..? என்ன பண்ண முடிந்தது..?
வைதேகிக்கு வளைகாப்பு நடத்த அனுமதிக்கவேயில்லை.. அவளை பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு அனுப்பவில்லை..
‘அவ ட்ரீட்மென்டில் இருக்கிறாளாமே.. சாஸ்திர சம்பிரதாயம் எல்லாம் நாமளா வைச்சுக்கறதுதானே.. முதல்ல அவ உடம்பு சரியாயகட்டும்.. அப்புறமாய் உன் பேரக் குழந்தையோட உன் பெண்ணை அழைச்சுண்டு போய் சீராட்டு..”
முடியவில்லையே.. அது நடக்கவில்லையே.. வைதேகிக்கு குழந்தை பிறந்த செய்தியைக் கூட அவர்கள் ராமாமிர்தத்திற்கு சொல்லவில்லையே.. கையில் மூன்று மாதக் குழந்தையோடு இருந்தவளின் சாவுச் செய்தியைத்தானே சொல்லி அனுப்பினார்கள்.. அதையும் அவர்கள் சொல்லவில்லையே.. காவல்துறைதானே சொன்னது..
‘மூனுமாசக் குழந்தைய விட்டுட்டுப் போக எப்படி அவளுக்கு மனம் வந்தது?”
மற்றவர்களின் கேள்வியில் ராமாமிர்தம் விழித்துக் கொண்டார்.. அவர் பெற்ற மகளுக்கு அந்த மனம் வந்திருக்காது.. கடமையைத் தட்டிக் கழிப்பவள் அல்ல அவள்..
‘வயித்து வலிதான் பிறந்ததிலிருந்து இருந்திருக்குன்னு சொல்கிறிங்களே இன்ஸ்பெக்டர்..”
‘அதை நாங்க சொல்லைங்க.. உங்க பொண்ணு எழுதி வைச்சிருக்கிற லெட்டர் சொல்லுது.. அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் சர்டிபிகேட் சொல்லுது..”
‘அப்பச் சாகாதவ.. மூனுமாசக் குழந்தையை விட்டுட்டு இப்பச் சாவாளா..?”
‘தாங்க முடியாத வயிற்று வலின்னு அவங்களே எழுதியிருக்கிறாங்களே..”
வைதேகியின் பைலை மூடுவதில் காட்டிய தீவிரத்தை விசாரணையில் காட்டவில்லை அந்த இன்ஸ்பெக்டர்..
‘கேஸ் தெளிவா இருக்கு பெரியவரே.. உங்களுக்கு இது ஒன்னுதான் பிரச்சனை.. எங்களுக்கு பொழுது விடிஞ்சு பொழுது போகிற வரைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சனை.. இதில போயி தலை கொடுத்து ஒன்னும் ஆகப் போகிறதில்லன்னு தெரிஞ்ச பின்னாலையும் எங்க டயத்தை நாங்க வேஸ்ட் பண்ண முடியுமா நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க..”
தோற்றுப் போய் திரும்பிய ராமாமிர்தத்திடம்..
‘நில்லுங்கப்பா..” என்றாள் கௌசல்யா..
‘என்னம்மா..?”
அவருக்கு கௌசல்யாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. ஒரு அயோக்கியன் ஒரே சமயத்தில் அவர் பெற்ற இரண்டு பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடியிருக்கிறான்.. அவர் அதற்கு துணை போயிருக்கிறார்..
மூத்தவளைக் கொண்றே விட்டான்.. இளையவளின் வாழ்வை குலைத்து விட்டான்..
சக்திவேலின் நினைவில் அவர் தலை குனிந்தது.. நல்லவன்.. கோபக்காரன்.. அவர் சொன்ன ஒருவார்த்தைக்காக அவனை ஊரை விட்டே வெளியேற்றினாள் அவர் மகள்.. அவர் மகள் சொன்ன ஒருவார்த்தைக்காக ஊரை விட்டே போனான் அவன்..
அவனல்லவோ முழுமையான ஆண்மகன்..! அப்படிப்பட்டவனின் கைபிடித்து மகளைக் கொடுக்காமல் அவளது காதலை அழித்தாரே.. எதற்காக..?
வைதேகியின் கணவனின் திருப்திக்காக.. உனக்கு நான் மாப்பிள்ளையா வர வேண்டுமென்றால்.. அவன் மாப்பிள்ளையாக வரக்கூடாது என்று சொன்னானே.. அதற்காக..
‘நானா.. அவனா…?’ என்ற மனோஜின் கேள்வியில் மனோஜ்தான் வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.. சக்திவேலை விலக்கி வைத்தார்..
இன்று அதற்கான விலையையும் கொடுத்து விட்டார்..
‘என்னை அனுப்பி விடாதீங்கப்பா..’
வைதேகி கதறக்கதற.. மனோஜோடு அனுப்பி வைத்தாரே.. அன்றே அவர் அவளை மரணத்தின் பாதைக்கு அனுப்பி விட்டார்.. அது தெரியாமல்.. ‘என் குழந்த ராணிபோல வாழ்வாடி.. ‘ என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்தார்..
‘அந்த ராட்சஸனின் வீட்டுக்குப் போகலாம்..”
‘எதுக்கும்மா..அவனைத்தான் நம்மால ;தொட முடியாதுன்னு ஆகிப் போச்சே..”
‘அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா..?”
‘வேறென்ன செய்ய முடியும்..?”
‘நம்ம வைதேகியின் சொத்து அவாகிட்ட இருக்குப்பா.. அதைக் கைப்பத்த வேணாமா..?”
‘அவளே போனதுக்கப்புறம்.. அவளோட நகைகளையும்.. சீர் வரிசைகளையும் திருப்பி வாங்கி என்ன செய்யப் போகிறேன்..?”
‘ஏம்பா.. நகையும் சீர் வரிசையும் தான் அவளோட சொத்தா..? அது மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுதா..?”
‘நீ எதைச் சொல்கிற கௌசி..?”
ராமாமிர்தம் குழம்பினார்.. அவரை தீர்க்கமாகப் பார்த்தாள்.. கௌசல்யா..
‘அவ பெற்ற குழந்தையிருக்கேப்பா.. அது உங்க கண்ணுக்கும்.. அறிவுக்கும் தெரியலையா..?”
ராமாமிர்தத்தின் உடவ் தூக்கிப் போட்டது.. அதை எப்படி ராமாமிர்தம் மறந்தார்..?
‘பெண் குழந்தைப்பா.. அவளையே சாகடிச்சவங்க அந்தக் குழந்தையை விட்டு வைப்பாங்களா..?”
‘கடவுளே .. இதை எப்படி மறந்தேன்..?”
ராமாமிர்தத்தின் கண்களில் பயம் வந்தது..
‘அவ குழந்தையை வாங்கிண்டு போயிடலாம்ப்பா..”
‘கேட்டா கொடுப்பானா..?”
‘கேட்கிற விதத்தில் நான் கேட்கிறேன்..”
‘என்னையே அந்த வீட்டு காம்பவுண்டு கேட்டைத் தாண்டி உள்ளே விட மாட்டாங்க.. இதில் நீ எப்படிம்மா அவன்கிட்டப் பேச முடியும்..?”
‘முடியும்ப்பா.. என் பலம் உங்களுக்குத் தெரியாது.. நான் மீடியாவில் இருக்கிறவ.. கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது.. எதையும் குத்திக் கிழித்து விடும் சக்தி கொண்டது.. அவன் வீட்டுக் கதவு.. நமக்காக திறக்கும்.. நான் திறக்க வைக்கிறேன்..”
ராமாமிர்தம் ஆச்சரியத்துடன் இளைய மகளைப் பார்த்தார்.. அவரறிந்த கௌசல்யா வாய் திறந்து பேச மாட்டாள்..
பூவொன்று புயலானது என்பதை கேள்விப் பட்டிருக்கிறாள்.. அவர் பெண்ணும் புயலானதை அன்றுதான் நேரில் பார்த்தார்..
கௌசல்யா அவளுக்கு உதவிய பத்திரிக்கை நிருபரை நேரில் சந்தித்தாள்..
‘ஐ ஆம் கௌசல்யா.. கோயம்புத்தூர் பிரான்ச்..”
‘ஓ உங்க அக்காவின் பேமிலியப் பற்றி ரிப்போர்ட் கேட்டீங்களே.. அந்த கௌசல்யா..?”
‘யெஸ்..”
‘ஐ ஆம் சங்கர்.. இப்ப உங்க அக்கா எப்படியிருக்கிறாங்க..?”
கௌசல்யாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.. அவள் இமை கொட்டி கண்ணீர் வழிந்து விடாமல் தடுத்தாள்..
‘அவ இப்ப உயிரோட இல்லை..”
‘ஏன்.. என்னாச்சு..?”
‘என்ன ஆகனும்..? செத்துப் போயிட்டா.. கொலைன்னு எங்களுக்குத் தெரியும்.. தற்கொலைன்னு அவா சொல்றா..”
‘போலீஸுக்கு போகலையா..?”
“போகாம இருப்போமா..? தாங்க முடியாத வயிற்று வலியால் தற்கொலை பண்ணிக்கப் போகிறேன்னு வைதேகி கைப்பட லெட்டர் எழுதி வச்சிருக்கிறதை அவா காண்பிக்கிறாளே..”
‘உங்க அக்காவின் டெத் நியூஸ் எப்படி மீடியாவிற்கு தெரியாமப் போச்சு..?”
‘நாங்க தெரிய விடலை..”
‘ஏன்..? நீங்க மீடியாவில் இருக்கிறவங்க.. நீங்களே இப்படிப் பட்ட நியூஸை மீடியாவிற்கு மறைக்கலாமா..? உலகத்திற்கு உண்மை தெரிந்தால்தானே உங்க அக்காவின் சாவுக்கு நியாயம் கிடைக்கும்?” சங்கர் கோபத்துடன் படபடத்தான்.. அவனது கேள்வியில் தார்மீக கோபம் இருந்தது.. அவனது கேள்விகளுக்கான பதில் கௌசல்யாவிடம் இருந்தது..
Reviews – Aarathanai / ஆராதனை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.