Chapter 19

0Shares

பெற்றவளைப் போல.. குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து பரவசமடைந்த கௌசலயாவை பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்.. 

அன்றைய நாள் முழுவதும் அவளோடுதான் அவன் கழித்தான்.. ஒவ்வொரு தருணத்திலும் அவள் வெளிப்படுத்திய ஒவ்வொரு பரிணாமமும் அவனை வசீகரித்தன..

உடன் பிறந்தவளுக்காக போராடிய களைப்பு முகத்தில் தெரிந்தாலும்.. அதையும் தாண்டிய ஒரு நிறைவு.. குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளின் முகத்தில் தெரிந்தது..

நிமிர்ந்து சங்கரின் முகம் பார்த்தவளின் கண்களில் நன்றியுடன் பிரவாகம் தெரிந்தது..

‘நன்றிங்கிற ஒரு சொல்லில் என் உணர்வுகளைச் சொல்லி விட முடியாது.. இருந்தாலும் சொல்கிறேன்.. தேங்ஸ்.. தேங்ஸ்; பார் ஆல்..”

‘இது என் கடமை..”

‘முகம் தெரியாத ஒருத்திக்கு இவ்வளவு உதவிகளையும் செய்துட்டு.. கடமைன்னு சொல்கிறீங்களே சங்கர்..”

‘உங்களின் முகம் எனக்குத் தெரியாதுன்னு எப்படி நீங்க சொல்லலாம்..? உங்களின் முகம் எது தெரியுமா? நீங்க தின ஒலியின் ஸ்டாப் என்பதுதான்..”

முரியாதையின் பொருட்டு லேசாக இதழ் விரித்து சிரித்தாள் கௌசல்யா.. அந்தச் சிரிப்பு சாரலாய் அவன் மனம் நனைக்க.. அவளோடு தொடர்ந்து பேச அவன் ஆசைப்பட்டான்..

‘ஸோ.. இந்தக் குழந்தையை நீங்க தான் இனிமே வளர்க்கப் போகிறீங்க..”

‘யெஸ்..”

‘உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..?”

‘என் வாழ்க்கை இனி என் குழந்தையோடுதான்..”

‘இது பிராக்டிகலா சாத்தியப்படுமா..?”

‘எனக்கு சாத்தியப்படும்..”

‘நாளைக்கு உங்களுக்கு கல்யாணமாகலாம்.. நீங்க இந்தக் குழந்தையை நேசிக்கிறதைப் போல.. வருகிறவனும்.. நேசிப்பானா..? ஏன் சொல்கிறேன்னா இது உங்க அக்காவின் குழந்தை.. உங்களுக்கு ரத்த சம்மந்தம் இருக்கு.. பட்.. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவனுக்கும்.. குழந்தைக்கும் என்ன சம்மந்தம்..?”

கௌசல்யாவின் முகம் சிவந்து விட்டது..

‘இதெல்லாம் நான் கல்யாணம் பண்ணிக் கொண்டால் மட்டுமே சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் சங்கர்..நான் தான் கல்யாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லையே..”

‘ஏன் அப்படியொரு முடிவை எடுக்கனும்..? உங்களையும்.. உங்க அக்கா குழந்தையையும் நேசிப்பவனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே..”

கௌசல்யா பதில் சொல்லாமல்.. குழந்தையிடம் கவனமாகிவிட.. சங்கரே சொன்னான்..

‘அப்படியொருத்தன் கிடைக்கனுமேங்கிற எண்ணம் உங்களுக்கு வேண்டாம்.. நான் இருக்கிறேன்..”

‘வாட்..?”

கௌசல்யா வியப்புடன் அவனைப் பார்த்த போதுதான் அவன் கண்களில் தெரிந்த காதலை உணர்ந்தாள்..

‘சங்கர்..” அவள் குரல் நடுங்கியது..

‘யெஸ்.. ஐ லவ் யு..”

எந்த  நேரத்தில் எதை வந்து சொல்கிறான் என்ற கோபம் நெஞ்சில் எழுந்த போதும்.. அவனது முகத்தில் தெரிந்த உண்மை அவளைக் கடுமையாக பேச விடாமல் தடுத்தது..

‘இவன் நல்லவன்.. உற்ற நண்பனைப் போல உதவினான்..’

கௌசல்யா மனதிற்குள் அவனுடன் பேச வேண்டிய வார்த்தைகளை சேகரித்து கோர்க்கத் தொடங்கினாள்.. பின் நிதானமாக அவனை விழிகளுக்குள் பார்த்தாள்..

‘இதே வார்த்தைகள் மூனு வருசத்துக்கு முன்னால் வேறொருத்தர் என்னிடம் சொன்னார் சங்கர்..”

அவன் முகம் மாறினான்.. அவசரமாக வினவினான்..

‘நீங்க என்ன பதிலைச் சொன்னீங்க..?”

‘அவர் சொன்னதைத் திரும்பச் சொன்னேன்..”

அவன் முகம் விழுந்து விட்டது.. அவர்கள் அமர்ந்திருந்த பூங்காவிலிருந்த செயற்கை குளத்தில் நீந்திக் கொண்டிருந்த வாத்துக்களையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. தோள்களைக் குலுக்கினான்..

‘இட்ஸ் ஆல்ரைட்.. உங்க கல்யாண இன்விடேசனை அனுப்புங்க.. கட்டாயம் நான் வருவேன்..”

‘அது நடந்தால் அனுப்பறேன்..”

‘புரியலை..”

‘நாங்க பிரிந்துட்டோம்.. அப்பாவுக்கு எங்க காதலில் விருப்பமில்லை..”

‘அவர் விருப்பத்தை கேட்டா காதலித்தீங்க..?”

‘சரியான கேள்விதான்.. அப்பாவை சம்மதிக்க வைத்துடலாம்ன்னு நினைச்சோம்.. பட். அப்பா அதற்குள் முந்திக்கிட்டார்..

‘எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா..? உங்க அப்பா போன்னு சொன்னா.. உங்க காதலர் போயிடுவாரா..?”

‘போக மாட்டார்.. அப்பான்னு இல்லை.. எவ்வளவு பெரிய ஆள் வந்து சொன்னாலும்.. என்னையும்.. என் காதலையும் ;அவர் விட்டுக் கொடுக்க மாட்டார்.”

“அப்புறமெதுக்குப் போனாராம்..?”

‘போகச் சொன்னது நானாச்சே..”

‘நீங்களா..?”

சங்கரின்  வார்த்தைகளில் மித மிஞ்சிய ஆச்சரியம் வெளிப்பட்டது..

‘நான்தான்.. அப்பா எனக்கு கட்டளை போட்டார்.. நான் அதை அவருக்கு போட்டேன்..”

‘ஏன் கௌசல்யா..?”

கௌசல்யா வாடிய புன்னகையொன்றை உதிர்த்தாள்.. அiத்த தொடர்ந்து தன் கடந்த காலத்துயரை அவன் முன் உதிர்த்தாள்..

பொறுமையாக கேட்டுக கொண்டிருந்த சங்கரின் கண்களில் காதலுடன் கலந்த அனுதாபம் தெரிந்தது..’

‘அதுக்குப் பின்னால் .. அவனிடம் பேசவே இல்லையா..?”

‘இல்லை..”

கௌசல்யாவையும்.. ராமாமிர்த்தையும் ரயிலேற்றிவிட வந்திருந்தவன்.. ரயில் கிளம்ப ஆரம்பித்த கடைசி நொடியில் ரயிலோடு ஓடிவந்து அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தான். ரயில் வேகமெடுக்க .. புள்ளியாய் மறைந்தான்.. அவன்  கொடுத்த கவரை ராமாமிர்தம் அறியாமல் பிரித்துப் படித்தாள் கௌசல்யா..

     ‘உங்களைச் சந்தித்த பொழுதை..

        சிந்தித்துக் கொண்டேயிருப்பேன்..

     என்றேனும் ஓர் நாளில்

என் நினைவு உங்கள் மனதில் வந்தால்..

     குறுஞ் செய்தி ஒன்றையனுப்புங்கள்..

பறந்தோடி.. உங்களைத் தேடி வருவேன்..’

‘சங்கர்..’

இது என்னமாதிரியான அன்பு…? கௌசல்யா.. கண் மூடி.. ரயிலின் ஜன்னல் கம்பிகளில் சாய்ந்தாள்.. அவள் மடியில் விரலைச் சுவைத்துக் கொண்டு வைதேகியின் குழந்தை படுத்திருந்தது..

கோயம்புத்தூரில் இறங்கி.. வீட்டுக்குள் நுழைந்த போது.. ஆண்டாள் பெருங் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.. அக்கம்.. பக்கம்.. இருந்தவர்கள் கூடி விட்டனர்..

‘இந்த பச்சை மண்ணை எங்களுக்குன்னு விட்டுட்டு போனயாடி..? அம்மா.. நான் நம்மாத்திலேயே இருந்துடறேன்ம்மான்னு.. சொன்னயே.. இந்தப் பாவி அதைக் காதில் போட்டுக்கலயே.. வாழாவெட்டியாய் என் பொண்ணு இருந்துடுவாளேன்னு பயந்தேனே.. இப்படி வாழ்க்கைகை முடித்துக்குவான்னு தெரியாம ;போச்சே..”

‘தெரிந்திருந்தால் மட்டும் எண்ண பண்ணியிருப்பாய்..? ‘ கௌசல்யா மனம் கடுத்தாள்..

நிச்சயம் ஆண்டாள் வைதேகியை பிறந்த வீட்டில் தங்கி விட அனுமதித்திருக்க மாட்டாள்..

‘இது வாழ வேண்டிய வயசுடி.. நோக்கென்ன தெரியும்.. நீ நேத்துப் பிறந்தவ.. நான் வாழ்ந்து பார்த்தவ.. அதெல்லாம் கல்யாணமான பொம்மனாட்டிக தனிச்சு நிற்கப்படாதுடி..”

இதே ஆண்டாள் தான் இந்த வார்த்தைகளையும் கூறினாள்..

இறந்த பிறகு கிடைக்கும் நியாயங்கள்.. உயிரோடு இருக்கும் போது யாருக்கும் கிடைப்பதில்லை..

கௌசல்யா வேலைக்கு போக ஆரம்பித்தாள்.. குழந்தையை ‘பாப்பா.. ‘ என்றே ஆண்டாளும்.. ராமாமிர்தமும்.. சொல்லிக் கொண்டிருக்க..

‘பூஜா.. ” என்று அழைத்து.. குழந்தைக்கு பெயரை வைத்தாள்..

ஏழுமாதக் குழந்தையாக பூஜா இருந்த போது.. மனோஜிற்கு மறுமணமாகி விட்ட செய்தி சங்கரிடமிருந்து வந்தது.. கூடவே.. ‘நலமா.. ? ‘ என்று கேட்டிருந்தான்..

‘நலம்தான்’ என்று பதில் அனுப்ப அவளுக்கு மனமில்லை..

அவன் நட்பை மட்டுமே காட்டியிருந்தால்.. அவளும் பதிலுக்கு அதைக் காட்டியிருப்பாள்.. அவன் காதலைச் சொல்லி விட்டான்.. அவளால் பதிலுக்கு காதல் சொல்ல முடியவில்லை..

இரவும்.. பகலும் சக்திவேலின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளிடம் சங்கர் ‘நலமா..? ‘ என்று விசாரித்தால்.. அவளால் என்ன பதிலைச் சொல்ல முடியும்..?

அவள் மௌனித்து விட்டாள்..பூஜாவின் முதல் வருட பிறந்த நாளின் போது தான் அது நிகழ்ந்தது..

‘அம்மா..” என்று மழலையாகத் தாவிய பூஜாவை அள்ளிக் கொண்ட கௌசல்யாவைப் பார்த்த.. பக்கத்து வீட்டு தான்யலட்சுமி அதிசயித்தாள்..

‘வைதேகியின் பெண்ணுக்கு நீ சித்தியில்லையோ.. இது அம்மாங்கிறது.. நீயும் தூக்கிக் கொஞ்சறே.. பாவம்.. தாயில்லாக் குழந்தை.. தகப்பனும் இன்னொருத்தியை கட்டிண்டு போயிட்டான்.. அநாதையாகிட்ட குழந்தைகிட்ட வெறும் பாசத்தை காண்பிக்கலாம்.. தாய் பாசத்தை காண்பிக்கலாமோ..? நாளைக்கு உனக்கொரு ஆம்படையான் வந்தா.. என்னடி இதுன்னு கேட்க மாட்டானோ..? அதனால ‘சித்தி’ன்னு சொல்லிக் கொடுத்து வளர்க்கப் பாருடி கௌசி..”

அன்று இரவு கௌசல்யா தூங்க வெகு நேரமானது.. மறுநாள் அலுவலகம் போனதும்.. முதல் நாளிரவில் அவள் முடிவு செய்திருந்ததை செயலாற்றினாள்..

அந்த வார இறுதியில் அவள் முயற்சிக்கு பலன் கிடைத்திருந்தது..

‘அப்பா.. எனக்கு சென்னைக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு..”

‘என்னம்மா.. இது.. திடீர்ன்னு சொல்கிறயே..”

‘இது திடீர்ன்னு வந்த டிரான்ஸ்பர் இல்லேப்பா.. நான் கேட்டு வந்த டிரான்ஸ்பர்..”

‘நீ கேட்டாயா.. ? ஏம்மா..? இது நம்ம சொந்த ஊர்..”

‘அதனால்தான் நாம இங்கேயிருக்க வேண்டாமுன்னு நான் முடிவு பண்ணினேன்.. அப்பா.. இங்கே இருக்கிறவாளுக்கு நம்ம குடும்பத்தின் கதை தெரியும்.. போன வாரம் தான்யா மாமி என்ன பேசினான்னு நீங்களும் தானே கேட்டுக்கிட்டு இருந்தீங்க..?”

‘அதுக்காகவா.. ஊரை விட்டுப் போகனும்கிற..?”

‘ஆமாம்..  பூஜா இனி வளர்வாள்.. அவளுக்கு தாயில்லை.. தகப்பன் இருந்தும் இல்லைங்கிறது தெரியவே கூடாது.. அவ என் பொண்ணா வளரட்டும்.. அதுக்கு நமக்கு முகம் தெரியாத ஊர் தான் சரிப்பட்டு வரும்.. சென்னைக்கு போயிடலாம்..”

‘கௌசி.. நான் என்ன சொல்ல வருகிறேன்னா..”

ராமாமிர்தம் எதையோ பேச முயல…

‘வேண்டாம்பா..” என்று தீர்மானமான குரலில் அவரை தடுத்து விட்டாள் கௌசல்யா..

அந்த நொடியிலிருந்து அந்தக் குடும்பத்தில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கௌசல்யாவின் கைக்கு இடம் மாறியது..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link