Chapter 14
பூவோடு பொட்டும் தந்தாய்…
பொன்தாலி கேட்டேன்.. தந்தாய்…
லலிதா ஸ்தம்பித்து விட்டாள். அது கிராமம். சாதாரணமாக இளம் பெண் ஒருத்தியை ஒரு தடவைக்கு மேல் இரு தடவை பார்த்து வைத்தாலே கதை கட்டிவிடும். மித்ரன் என்னடாவென்றால் வெகு சுதந்திரமாக ஆற்றில் இறங்கி பெரிய வீட்டுப் பெண்ணின் குடத்தைப் பிடித்து தூக்குகிறானே..
அவள் மனதில் பதட்டம் வந்தது. இதை வேறு யாராவது கவனித்து விடப் போகிறார்களே என்று… சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். நல்லவேளையாக அருணும் அபிநயாவும் அரசமரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்வைப் பார்க்கவில்லை.
அவளுடைய பதட்டத்தைக் கண்டு கொள்ளாமல்.. காயத்ரியும் மித்ரனும்.. ஆற்றுத் தண்ணீரின் கடைசிப் படியில் நின்று கொண்டு கால்கள் தண்ணீரில் நனைய வழக்கடித்துக் கொண்டிருந்தார்கள்.
“குடத்தை விடுங்க…”
“முடியாது.. நீங்க ஏன் கண் கலங்கினீங்க..? அதுக்கான காரணத்தை முதலில் சொல்லுங்க…”
“ஏன்.. உங்களுக்குக் காரணம் தெரியாதா…?”
“தெரியாமல்தானே கேட்கிறேன்…”
“சைட் அடிக்க வந்தவரிடம் எனக்கென்ன பேச்சு வேண்டிக்கிடக்கு.. எனக்கு வெறுமனே சைட் அடிப்பவங்களைக் கண்டாலே சுத்தமாய் ஆகாது..”
“ஓ.. அதுதான் உங்க கோபத்திற்கான காரணமா..? கண்ணுக்கு முன்னால் அழகாக ஒரு பூ இருந்தால் ரசிக்கிறோமா இல்லையா..? அதைப் போல் ஒரு பெண்ணையும் ரசிக்கிறோம். இது ஒரு தப்பா…?”
“நீங்க பட்டணத்துக்காரராச்சே.. உங்களுக்கு எதுவும் தப்பாய் தெரியாது..”
“பட்டணத்துக்காரங்க எல்லோரும் கெட்டவன்னே நீங்க நினைத்தால் அதுக்கு நான் ஒன்றும் பண்ண முடியாது..”
“உங்களைப் போய் நல்லவர்ன்னு நினைத்தேனே.. என் புத்தியைச் சொல்லணும்…”
“ஏங்க இப்படி அலுத்துக்கறீங்க.. நீங்க எவ்வளவுக் கெவ்வளவு என்னைக் கெட்டவன்னு நினைக்கறீங்களோ.. அவ்வளவுக்கவ்வளவு நான் நல்லவன்ங்க..”
“இந்த சினிமா டயலாக்கை நானும் கேட்டிருக்கிறேன்…”
“அதுதான் மூலை முடுக்கெல்லாம் டி.வி. வந்து விட்டதே.. புன்னை வனத்துக்குள் வராதா என்ன…?”
பேசிக்கொண்டே மித்ரன் குடத்தை தன் பக்கம் இழுக்க – அதை தன் பக்கம் வேகமாய்.. தடுத்து இழுத்த காயத்ரி.. குடத்தோடு சரிந்து.. ஆற்று நீரில் மூழ்கினாள். லலிதா பதறிப் போனாள்.
“ஐயையோ.. மித்ரா.. அவளைக் காப்பாத்துடா…”
காயத்ரிதேவியின் தலை.. நீருக்கு மேலே எழுந்து.. மீண்டும் ஆற்று நீரில் அமிழ்ந்தது. மித்ரன் நீருக்குள் பாய்ந்தான். இப்போது காயத்ரியின் தலை இரண்டாம் முறையாக நீருக்கு மேல் எழுந்து திரும்பவும் மூழ்க.. அதே இடத்தில் மித்ரனும் மூழ்கினான்.
சற்று நேரத்தில்.. காயத்ரியைப் பிடித்து வளைத்துக் கொண்டு, மித்ரன் கரைக்கு நீந்தி வர.. படித்துறையில் நின்று கையைப் பிசைந்து கொண்டிருந்த லலிதா பிரகாசமானாள்.
“மெல்லடா.. மித்ரா.. அவளை மெதுவாய் தூக்கு…”
மித்ரன் காயத்ரிதேவியின் இடுப்பைப் பிடித்துத் தூக்க முயல – அவன் கை.. மீண்டும் தண்ணீரில் அமிழ்ந்தது.
“என்னடா மித்ரா…”
“என்னன்னு தெரியலை சித்தி.. இந்தப் பெண் பார்க்க பூங்கொடி போல இருக்கா.. தூக்கினால் இந்த கனம் கனக்கிறா…”
லலிதாவின் பார்வை காயத்ரிதேவியின் தொய்ந்து கிடந்த வலக்கரத்தின் மீது சென்றது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“மித்ரா.. அவள் குடத்தை கெட்டியாகப் பிடித்துக் கிட்டு மயக்கமாகிட்டா போல இருக்குடா.. குடம் நிறைய தண்ணீர் இருந்தால் கனக்காமல் என்ன செய்யும்…?”
லலிதா ஆற்றின் கடைசிப் படியில் இறங்கி.. காயத்ரிதேவியின் வலக்கரத்தில் இருந்த குடத்தைப் பிரித்து.. கரையில் தூக்கி வைத்தாள்.
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.