Chapter 15

0Shares

காற்றோடு நான் தூது விட்டும்…

காலம் கடந்து நீ வந்தாய்…

படித்துறையின் நீண்ட படிக்கட்டில் காயத்ரிதேவியை படுக்க வைத்த மித்ரன், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல்.. லலிதாவைப் பார்த்தான். அவள் சுற்று முற்றும் பார்த்தாள். ‘ஆற்றில் எது நடந்தால் எங்களுக்கென்ன..? எங்கள் உலகம் தனி..’ என்று அருணும்.. அபிநயாவும் இந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் விளையாட்டிலேயே கவனமாக இருந்தார்கள்.

“ஆபத்துக்கு பாவமில்லைடா மித்ரா…”

“இதை எதுக்கு சித்தி.. இப்போது சொல்கிறீங்க…?”

“அவள் வயிற்றில் கை வைத்து அமுக்கு…”

“ஐயையோ…”

“அலறாதேடா.. அருணுக்கும்.. அபிநயாவிற்கும் தெரிந்தால்.. இந்த ஊருக்கே தெரிந்தது மாதிரி…”

“சும்மா இந்தப் பெண்ணை நான் பார்த்து வைத்ததுக்கே.. நான் ஏதோ கொலைக் குற்றம் பண்ணியது போல.. ஓடக்காரன் என்னை மிரட்டி விட்டுப் போனான். நான் இவள் வயிற்றில் கை வைத்தால் வேறு வினையே வேண்டாம்..”

“வயிற்றை அமுக்கினால்தான்.. உள்ளேயிருக்கும்.. தண்ணீர் வெளியே வரும்…”

மித்ரன் வெளியே பிகு செய்து கொண்டே.. மனதிற்குள் சந்தோசமாக அவள் வயிற்றில் கை வைத்து அமுக்கினான். அவள் வாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்க.. எழுந்து உட்கார்ந்து கொண்டு.. அவனை முறைத்தாள். மித்ரன் திகைத்தான்.

“சித்தி…! இப்ப இவங்க ஏன்… என்னை முறைக்கிறாங்கன்னு கேளுங்க…”

“அதுக்கு முதலில்.. இவர் ஏன் என்னை தண்ணீருக்குள் போட்டு அமிழ்த்தினாருன்னு கேளுங்க அத்தை…”

மித்ரனுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவனும்.. லலிதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“தண்ணீருக்குள் அமிழ்த்தினானா..? இவன் உன்னைக் காப்பாற்ற வந்தான் தேவி…”

“கிழிஞ்சது போங்க.. யாரை யார் காப்பாற்றுவது..? மீன் குஞ்சு தண்ணீரில் மூழ்கினால் அதைக் காப்பாற்ற இவர் ஓடோடி வந்து விடுவாராமா…?”

மித்ரன்.. அவளை ஏற இறங்கப் பார்த்தவாறு.. அவளுக்கு ஒரு கும்பிடு போட்டான்.

“அம்மா தாயே.. தேவதையே.. நீங்க மீன் குஞ்சாகவே இருந்து விட்டுப் போங்க.. உங்களைக் காப்பாற்ற வந்தது என் தப்புத்தான். ஆனால்.. தண்ணீருக்குள் நீச்சலடிக்காமல்.. தண்ணீருக்கு மேலே தலையைக் காட்டிக் காட்டி.. மூழ்கித் தொலைத்தீங்களே.. அத என்னத்துக்குன்னு.. கொஞ்சம் சொன்னால் தேவலை..”

“என் குடம் தண்ணீருக்குள் விழுந்து விட்டது. அதைத் தேடி எடுத்தேன். அதற்குள் நீங்கள் அவசரப்பட்டு.. என்னை மயக்கம் போட வைத்து விட்டீங்களே..”

“ஏம்மா.. காப்பாற்ற நினைத்தது ஒரு குற்றமா..?”

“அது குற்றமில்லை.. நீச்சலடித்துக் கொண்டிருக்கிறவளின் மூக்கைப் பொத்தி விட்டால்.. அவள் எப்படி மூச்சு விடுவாள்ன்னு யோசிக்காமல் என் மூக்கைப் பொத்தினீங்களே.. அதுதான் குற்றம்…”

“பார்த்திங்களா சித்தி.. யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன வந்தது..? காப்பாற்றப் போனதற்கு.. என் மேல் கொலை முயற்சி பழியே விழுந்து விட்டது.. தேவைதானா எனக்கு..?”

லலிதா படிக்கட்டில் அமர்ந்துகொண்டு விழுந்துவிழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

‘என்னடா இது… அன்றைக்கு இந்தப் பெண் என்னைப் பார்த்து இதே போல்தான் சிரித்து வைத்தாள். இன்றைக்கு சித்தி அதே போல சிரித்து வைக்கிறாங்க.. புன்னை வனத்துக்கு வந்தாலும் வந்தேன். இந்தப் பெண்களின் மத்தியில் ஜோக்கராகவே ஆகிவிடுவேன் போல இருக்கே.. ‘

“ஏன் சித்தி.. நீங்களே இப்படிச் சிரித்து வைத்தால் இவங்க என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க…”

“புதிதாக நினைக்க ஒன்றுமேயில்லை அத்தை. எல்லாம் ஏற்கெனவே நினைத்ததைத்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்..”

லலிதா அவர்களுடைய வார்த்தை மோதலைக் கவனிக்கவே இல்லை. தன்போக்கில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“மித்ரா.. ஹா.. ஹா.. தேவியைக் காப்பாற்றப் போகிறேன்னு பெரிய நீச்சல் வீரன் போலப் போய் விட்டு.. அவளைத் தண்ணீருக்குள் பிடித்து அமுக்கினாயா..? ஹா.. ஹா.. மூக்கை வேறு மூடி.. அவளை மயக்கம் போட வைத்தாயா.. ஹா.. ஹா…”

“போதும் சித்தி.. பல் சுளுக்கிக் கொள்ளப் போகிறது..”

மித்ரன் எரிச்சலுடன் சொன்ன பின்னால்தான்.. ஒரு வழியாக சிரித்து ஓய்ந்தாள் லலிதா. அதற்குள் எழுந்து பாவாடையில் இருந்த ஈரத்தைப் பிழிந்து விட்டு.. குடத்தில் ஆற்று நீரை நிரப்பிக் கொண்டு படிகளில் ஏற ஆரம்பித்தாள் தேவி.. அதைக் கண்ட லலிதா தானும் எழுந்து கொண்டாள்.

“இருட்டப் போகுதுடா மித்ரா.. வந்து ரொம்ப நேரமாச்சு.. உன் சித்தப்பா. ‘இன்னும் வரலையா..?’ன்னு அத்தையிடம் சத்தம் போட்டுக் கொண்டிருப்பார்..”

“ம்ஹூம்.. உங்களுக்கு உங்க கவலை.. ஏன் சித்தி.. சித்தப்பா வீட்டுக்கு வாரதுக்கு நைட் ஆகிவிடுமே.. அப்புறம் ஏன் பயப்படுகிறீங்க…?”

“அதில்லைடா மித்ரா…”

“இந்த பயம் உங்க ரத்தத்தில் ஊறிப் போயிருக்கு..”

“என்னடா செய்யச் சொல்கிற.. விளக்கு வைக்கிறதுக்கு முதலில் வீட்டுக்கு வந்து சேரணும்னு சொல்லிச் சொல்லி எங்கம்மா வளர்த்துச்சு…”

“இப்ப விடிந்து விளக்கு வைக்கும் வரை.. வீட்டுக்குள்ளேயே இருக்கறீங்க.. இந்தப் பிரச்னை இத்தனை நாளும் வரவில்லை..”

லலிதா பேசவில்லை.. இதைப் பற்றிப் பேசி ஆகப்போவதென்ன.. என்ற மனநிலையுடன் அரசமரத்தடி பிள்ளையாரைப் பார்த்தாள். தேவி விளக்கேற்றிக் கொண்டிருக்க, அவளும் போய்.. இன்னொரு விளக்கில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வைத்தாள்.

கிளம்புவதற்கு முன்னால் தேவி.. மித்ரனை ரகசியப் பார்வை பார்க்க.. அதற்காகவே காத்திருந்த மித்ரனின் பார்வை அதை இனம் கண்டு கொண்டு.. பின்னிப் பிணைந்தது.

லலிதா குழந்தைகளை அழைத்துக் கொண்டிருக்க – மித்ரன் தேவியின் அருகே வந்து மெதுவான குரலில் சொன்னான்.

“ஒரு நாள் பார்த்தவுடன் மறந்து போகும் முகமா உங்கள் முகம்..?”

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link