Chapter 02
வாணலியில் எண்ணையை விட்டுக் கடுகைப் போட்டாள் பாகீரதி.. அது வெடிக்க ஆரம்பித்த போது..
“கூப்பிட்டிங்களாம்மா..?” என்று வந்து நின்றாள் பூர்ணிமா..
“ம்ம்ம்.. உன் ஸ்கூட்டி என்ன ஆச்சுன்னு அப்பா கேட்கச் சொன்னார்..” நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை வாணலியில் போட்டு வதக்கியபடி திரும்பிப் பார்க்காமல் சொன்னாள் பாகீரதி..
தாய் என்னவோ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட்டதைப் போல விதிர்த்துப் போனாள் பூர்ணிமா.. மலையைப் பெயர்த்துக் கொண்டிருப்பதைப் போல அவளுக்கு வியர்த்துப் போனது.. என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாள்.. சமையலில் கவனமாக இருந்த பாகீரதி மகளின் தவிப்பைக் கவனிக்கவில்லை..
“என்னடி பதிலைக் காணோம்..?” தயாராகியிருந்த பொரியலை வாணலியிலிருந்து பாத்திரத்துக்கு இடம் மாற்றியபடி கேட்டாள் பாகீரதி..
“அதும்மா.. வந்தும்மா.. ஸ்கூட்டிம்மா..”
திக்கித் திணறிய மகளை விசித்திரமாகப் பார்த்து வைத்தாள் பாகீரதி.. மகளிடம் தெரியும் தடுமாற்றத்தை அவளது புத்தி மிகத் துல்லியமாகக் கவனித்து விட்டது.
‘ஏன் இப்படித் தந்தியடிக்கிறா..?’
அதுதான் அவளுக்குத் தெரியவில்லை.. தடுமாறுகிறாள் என்பதால் பூர்ணிமாவைத் தவறாகவும் நினைத்து விட முடியாது.. சின்னச் சமாச்சாரங்களுக்கெல்லாம் பயந்து திக்கித் திணறும் சுபாவம் கொண்டவள் பூர்ணிமா.. அவளது பயம் அவளது அமைதியான அழகை அதிகப்படுத்தும் வல்லமை கொண்டது.. மான் குட்டியைப் போல மருளும் விழிகளுடன்.. இமைகள் படபடக்க அவள் திக்கித் திணறுவதைப் பார்க்கும் எவரும் உடனடியாக பூர்ணிமாவிடம் சரணடைந்து விடுவார்கள்.. பூர்ணிமாவின் மருளலுக்கு அத்தகைய சக்தி உண்டு.. அவளது மருளல் சரணடையாது.. சரணடைய வைக்கும்..
அன்றும் அது போலதான் ஆனது..
“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படித் திக்கித் திணறி பயந்து முழிக்கிற..? காலையிலே காலேஜீக்குப் போனப்ப ஸ்கூட்டியிலே.. போன.. சாயங்காலம் என்னன்னா நடந்து வர்ற.. பக்கத்து வீட்டு மாமிகிட்டப் பழமை பேசற இண்ட்ரெஸ்டில் நானும் அதைப்பத்தி அப்புறமாக் கேட்டுக்கலாம்ன்னு இருந்துட்டேன்.. இப்ப என்னடான்னா அப்பா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டார்.. வாரப்பவே போர்டிகோவில் பூர்ணியோட ஸ்கூட்டி இல்லையே.. இன்னுமா அவ வரலைங்கிற ஆலாபனையோட வர்றார்.. அப்பவே அவ வந்தாச்சுன்னு சொன்னா.. ஸ்கூட்டி எங்கேன்னு கேட்கிறார்.. எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன்னு வைய்யி.. அவ்வளவுதான்.. என் பொண்ணை நீ கவனிச்சுக்கிற லட்சணம் இதானான்னு தாம்தூம்ன்னு குதிக்க ஆரம்பிச்சுருவார்.. முதல்ல நீங்க பிரஷ்ஷாகிட்டு வாங்க.. சொல்றேன்னு அனுப்பி வைச்சிருக்கிறேன்.. இப்ப வந்துருவார்.. வந்ததும் ஸ்கூட்டியைப் பத்தித்தான் கேட்பார்.. என்னன்னு சொல்றது..? அதான் கேட்டேன்.. அதுக்குப் போயி இப்படித் தந்தியடிப்பியா..? தந்தியடிச்ச காலமெல்லாம் மலையேறிப் போயி இப்ப செல்போன் யுகம் வந்துருச்சும்மா.. இதை நீ சொல்லி நான் கேட்டுக்கனும்.. நம்ம வீட்டில என்னன்னா எல்லாமே தலை கீழா இருக்கு..”
அலுத்துக் கொண்டபடி வாணலியில் பஜ்ஜி போட ஆரம்பித்தாள் பாகீரதி.. இரவு சமையலையும், மாலை டிபனையும் ஒற்றை ஆளாய் செய்யும் அலுப்பு அவள் முகத்தில் அப்பியிருந்தது.. கூடமாட ஒத்தாசைக்கு மருமகள் வந்து நின்றால் தேவலையென்று நினைத்துக் கொண்டாள்.. வெறும் நினைவு மட்டும்தான்.. வெளியில் சொல்ல முடியாது..
பூபாலனின் மனைவியான ஆனந்தி செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள்.. பணத்தில் மட்டுமல்ல.. அரசியல் பின் புலத்திலும் அவள் குடும்பம் செல்வாக்குக் கொண்டது.. அந்தக் குடும்பத்தில் பெண்ணெடுப்பதா என்று பாகீரதியின் மனதில் உதறல் வந்ததெல்லாம் உண்மைதான்.. மகனின் விருப்பம் அவளது.. அபிப்ராயத்தை வாய் விட்டுச் சொல்ல முடியாமல் தடுத்து விட்டது.
பெண் பார்க்கப் போன போதே எங்கள் வீட்டுப் பெண்ணுக்குச் சமைக்கத் தெரியாது என்று ஆனந்தியின் குடும்பத்தினர் அறிவித்து விட்டார்கள்.. நறுக்காக நான்குபேர்கள் கொண்ட குடும்பத்துடன் விஸ்வநாதன் பெண் பார்க்கப் போயிருக்க.. பெண் வீட்டில் அப்பா, அப்பப்பா, அம்மா, அம்மம்மா, பெரியப்பா, பெரியத்தாத்தா, பெரியம்மா, பெரிய பாட்டி, சித்தப்பா, சின்னத்தாத்தா,
சித்தி, சின்னப்பாட்டி மற்றும் அவர்களது உறவினர்கள் என்று ஒரு படையே நிரம்பியிருந்தது..
தாத்தாமார்களின் விசாரணை சொத்துக்களைப் பற்றியிருந்த தென்றால், பாட்டிமார்களின் விசாரணை விஸ்வநாதனின் வீட்டில் இருக்கும் வேலையாள்களைப் பற்றியதாக இருந்தது..
“என்னது..? சென்னையில சொந்தவீடு.. கிராமத்தில வீடும் தோப்பும், துரவும்தானா..? வேற எதுவும் இல்லையா..?”
தாத்தாமார்கள் உதட்டைப் பிதுக்கிப் பலத்த ஆலோசனையில் இறங்கினார்கள்.. இதற்கு மேல் என்ன சொத்து சுகம் இருக்க வேண்டும் என்று விஸ்வநாதன் திருதிருக்க..
“என்னது..? உங்க வீட்டில ஒரேயொரு வேலைக்காரி மட்டும்தானா..?” என்ற பாட்டிமார்களின் கேள்வியில் பாகீரதி கிறுகிறுத்துப் போனாள்..
வீடான வீட்டிற்கு வேலைக்காரப் பெண் ஒருத்தி மட்டும் இருந்தால் போதாதா..?
“போதாது..” என்றாள் சின்னப்பாட்டி..
“ஒரு நாளு கிழமைன்னா வேலை அதிகமா இருக்கும்.. அப்ப ஒருத்தி மட்டும் இருந்தா வேலைக்காகுமா..?”
“எங்களுக்கு ஆகும்ங்க.. நாங்க நாலே பேர்தான..?”
யதார்த்தமாக வாய் விட்டு விட்டாள் பாகீரதி.. அவ்வளவுதான் அம்மம்மா, அப்பம்மா, என்று அனைத்துப் பாட்டிகளும் ஒன்று சேர்ந்து பாகீரதியை ஆய்ந்து விட்டார்கள்..
“நாலே பேர்தானன்னா.. என்ன அர்த்தம்..? உங்க வீட்டில ஆள் நிறைய இருக்காங்கன்னு சொல்லிக் காண்பிக்கறீங்களா..?”
“அச்சச்சோ.. அப்படியில்லைங்க..”
“எங்களது ஜனக்கட்டான குடும்பம்..”
“பாத்தாலே தெரியுதுங்களே..”
வயோதிகத்தின் சாயல் துளியும் இல்லாமல் கட்டான உடல் வாகுடன் இருந்த பாட்டிகளைப் பொறாமையுடன் பார்த்தபடி சொன்னாள் பாகீரதி..
“எங்க பொண்ணுக்கு வீட்டு வேலை தெரியாது..”
“அதுக்கென்னங்க.. வேலைக்கு ஆள் வைச்சிருக்கோமில்ல.. ஒரு பிரச்னையும் இல்ல..”
இலகுவாக சொல்லி விட்டாள் பாகீரதி.. அவள் நினைப்பதை போல அது இலகுவான ஒன்றல்ல என்பது போகப் போகப் புரிந்தது.. பாட்டிகளின் கூட்டணி பலமிக்கதாக இருந்தது..
“பிரச்னையில்லைன்னு நீ சொல்லக் கூடாதும்மா.. நாங்க சொல்லனும்…”
இடக்காக வந்த பதிலில் பாகீரதி வாயை மூடித் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்… மாப்பிள்ளையைப் பெற்றவள்
அவள்தானா என்ற சந்தேகம் அவள் மனதில் மேவியது… பெண்வீட்டாரின் சட்டதிட்டங்களில் அவள் பாவம் மருண்டு போனாள்..
“எங்க பொண்ணுக்கு சமைக்கவும் தெரியாது..”
சாப்பிடத் தெரியுமா என்ற கோபமான கேள்வி பாகீரதியின் தொண்டைக் குழிவரை வந்து விட்டது.. ஆனந்தியின் தாத்தா, பெரியப்பா, அப்பா, சித்தப்பாக்களின் முரட்டு மீசையில் தொண்டைக் குழி வரை வந்த கேள்வி வந்த வழியிலேயே திரும்பி ஓடிப் போய்விட்டது..
அதற்கென்னங்க.. எங்க வீட்டில் சமையலுக்கு ஆள் இருக்கிறாங்க என்று சொல்ல முடியாமல் அவஸ்தைப் பட்டுப் போனாள் பாகீரதி..
அதுவரை விஸ்வநாதனின் வீட்டில் சமையலுக்கென்று ஆள் வைத்துக் கொண்டதில்லை.. பாகீரதிதான் சமைப்பாள்.. இதுவரை சமைத்துப் போட்டவள் இனிமேலும் சமைத்துப் போட மாட்டேனா என்று பாகீரதியினால் சொல்ல முடியவில்லை..
மருமகளுக்குச் சமைத்துப் போடும் மாமியார்கள் குறைவு.. பாகீரதி ஒரு அக்மார்க் மாமியார்..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.