Chapter 03

0Shares

இந்தப் பெண் வேண்டாமென்றுதான் தோன்றியது பாகீரதிக்கு.. அதை சமிக்ஞையால் கணவரிடம் தெரிவிக்கத் திரும்பியவள் திகைத்துப் போனாள்..

பெண் பார்க்க வந்திருந்த பாகீரதியின் செல்வப் புதல்வன் செல்வன் பூபாலன்.. செல்வி ஆனந்தியை விழி விலக்காமல் கடித்து உண்ணுவதைப் போல ஆசை பெருகப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் விழிகளில் மையல் சொட்டிக் கொண்டிருந்தது.. அதற்கு ‘ஜொள்ளு’ என்ற திருநாமமிட்டு மகனை மனதுக்குள் தாளித்துக் கொட்டினாள் பாகீரதி..

‘பொண்ணுதான பாக்க வந்திருக்கோம்..? நிச்சயமா பண்ணிப்புட்டோம்..? இப்பவே இவன் பருகு, பருகுன்னு பாத்து ஜொள்ளு விட்டான்னா பொண்ணு வீட்டுக்காரங்க தலைக்கு மேலே ஏறி நிக்க மாட்டாங்களா..?’

அப்படித்தான் ஆனது.. நாள், கிழமையென்று வந்தாலும் அவர்கள் வீட்டுப் பெண்ணான ஆனந்தி துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டாள் என்று ஆனந்தியின் பிறந்த வீடு அறிவித்து விட்டது..

பிறகு என்ன கழுதைக்கு கல்யாணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு வரப் போகிறாள் என்ற எரிச்சல் மண்டினாலும், மகனின் ஆசைப் பார்வையை மனதில் கொண்டு பேசாமல் இருந்து விட்டாள் பாகீரதி..

வலது காலை எடுத்து வைத்து புகுந்த வீட்டில் பிரவேசித்தாள் ஆனந்தி.. கூடவே வந்து போன பாட்டியர் கூட்டம் சமையலுக்கு ஆளை அமர்த்திவிட்டுத்தான் காரேறியது..

சமையலுக்கென வந்த அன்னக்கொடிக்கு சமையலைப் பற்றி அரிச்சுவடிகூடத் தெரியவில்லை.. பின் என்ன அலுவலுக்கு சமையல் அலுவலைப் பார்க்க வந்தாள் என்று பாகீரதிக்கு நெஞ்சுவலியே வந்து விட்டது..

அன்னம் வைக்கக் கூடத் தெரியாத அன்னக்கொடிக்கு சமையலைக் கற்றுத்தர முயன்று தோற்றுப் போனாள் பாகீரதி.. 

“இப்படிச் செய்யனும் அன்னகொடி..” என்று பாகீரதி சமையலைச் செய்து காண்பிக்க..

“அப்படியாம்மா..?” என்றபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்து சமையலைக் கவனிக்காமல் டிவியில் வரும் சீரியல்களைக் கவனித்துக் கொண்டிருப்பாள் அன்னக்கொடி.. மறக்காமல் பாகீரதி செய்து வைக்கும் சமையலை டிபன் கேரியரில் நிரப்பிக் கொண்டு போய் விடுவாள்.. மருமகளுக்குச் சமைத்துப் போடுவதா என்று கௌரவம் பார்த்த பாகீரதி சமையல்காரிக்குச் சமைத்துப் போடுவதைப் போல ஆகிவிட்டதில் இது வேலைக்கு ஆகாது என்று சமையல்காரியை நிறுத்தி விட்டுச் சுதந்திரமாக சமையலறையில் உலா வர ஆரம்பித்து விட்டாள் பாகீரதி..

மருமகளுக்கு மாமியார் சமைத்துப் போடுவதா என்ற மாமியாரின் கௌரவம் அடிக்கடி அவள் மனதில் தலை தூக்கும்தான்.. அப்போதெல்லாம் தலைவலி, காய்ச்சல் என்று பல்வேறு நோய்கள் அவளுக்கு கை கொடுக்க வந்து நிற்கும்..

“அம்மா.. அப்பா.. முடியலையே..” என்று அவள் கட்டிலில் சாய்ந்து விடுவாள்..

கரண்டியை கையில் பிடிக்கும் ஆனந்தி வஞ்சனையில்லாமல் தான் சமையலைச் செய்வாள்.. அவள் செய்து வைக்கும் சமையல்தான் வாயில் வைக்க முடியாமல் பாகிரதியைப் படுத்தி வைத்து படுக்கையிலிருந்து எழுப்பி விட்டுவிடும்..

“நீயேன் அலட்டிக்கற..? அதான் மருமகள் இருக்காள்ல.. நிம்மதியா ரெஸ்ட் எடு..” என்று சொல்வார் விஸ்வநாதன்..

வாயில் வைக்க முடியாத சமையலைச் சாப்பிட்டாலும் பரவாயில்லை.. மனைவியின் உடல் நலன் பாதிப்படையக் கூடாது என்ற அவரது அக்கறையில் நெகிழ்ந்து போய் விடுவாள் பாகீரதி.. மாமியார் என்ற நினைவு மாறி விஸ்வநாதனின் மனைவி, பூபாலன், பூர்ணிமாவின் அம்மா என்ற நினைவு வந்து கரண்டியை கையில் எடுத்து விடுவாள்..

ஆஷா பிறந்து அவள் பாட்டியான பின்பு தலைவலி காய்ச்சல் என்ற காரணங்களைக் காட்டி அவள் படுக்கையில் விழுவது குறைந்து விட்டது..

“பாகீ..” விஸ்வநாதனின் குரல் கேட்டதும்..

“அப்பா வந்துட்டார்.. உன் ஸ்கூட்டி என்ன ஆச்சுன்னு கேட்பார்.. நீ சொன்னாத்தான் நானும் சொல்ல முடியும்..”

மருமகளை மறந்து விட்டுப் பரபரத்தாள் பாகீரதி..

“அம்மா.. அது வந்து..” மென்று விழுங்கினாள் பூர்ணிமா..

“அதான் வந்துட்டேல்ல.. சொல்லும்மா..” அலுப்புடன் கெஞ்சினாள் பாகீரதி..

“வழியில் டயர் பஞ்சராகிருச்சும்மா.. மெக்கானிக் செட்டில விட்டுட்டு வந்திருக்கேன்..” பூர்ணிமாவின் விழிகளில் பயம் வந்தது.

“இதுக்கா இத்தனை பயம்..? நல்ல பொண்ணும்மா நீ..” மகளை கடிந்து கொண்டாள் பாகீரதி..

“இல்லேம்மா.. காலையில கிளம்பறப்ப நல்லாத்தான் இருந்தது.. சாயந்திரம்தான்..”

“விடு.. டயர் பஞ்சராகிறது சகஜம்தான்..”

பாகீரதி கணவருக்கு டிபன் காபி கொடுக்கப் போய் விட்டாள்.. பூர்ணிமாவின் சுவாசம் சீரானது.. அவள் மெதுவாக நழுவி மாடிக்குப் போகப் போனாள்..

‘நல்லவேளை.. அப்பாகிட்ட மாட்டலை..’

அவளது நிம்மதி சில வினாடிகள்தான் நீடித்தது..

“பூர்ணி..” விஸ்வநாதன் அழைத்து விட்டார்..

‘அப்பா..!’ பூர்ணிமாவின் நாக்கு புரள மறுத்தது.. 

பாகீரதி கண்டிப்பானவள்தான்.. அவளது தாய்ப்பாசம் எத்தகைய கண்டிப்பையும் மறக்கடிக்க வல்லது.. விஸ்வநாதன் அப்படியல்ல.. அவரது தந்தைப்பாசம் கண்டிப்பை உள்ளடக்கியது..

‘ஸ்கூட்டியைப் பத்திக் கேட்டா என்னத்தைச் சொல்றது..?’

கைகளைப் பிசைந்தபடி டைனிங் ஹாலுக்குப் போனாள் பூர்ணிமா.. அவளது விழிகளில் பயம் அப்பியிருந்தது..

சிறுவயதில் விஸ்வநாதனின் கிராமத்திருவிழாவிற்கு குடும்பத்துடன் அவர்கள் போயிருந்தார்கள்.. விஸ்வநாதனின் குடும்பம் ஊர்ப் பெரியதனக்காரக் குடும்பங்களில் ஒன்று என்பதால் கிராமத்தில் அவர்களுக்குத் தனிமரியாதை கிடைக்கும்.. சென்னை மகாக்கடலின் ஜனத்தொகையில் அடையாளமில்லாமல் கலந்து விட்ட விஸ்வநாதனுக்கு கிராமத்தில் கிடைக்கும் மரியாதையும், கௌரவமும் வேண்டியிருந்ததால் அவர் கிராமத்திலிருந்த தோப்பு, துரவுகளை விற்று விடாமல் கட்டிக் காத்து வந்தார்.. மேற்பார்வைக் கென்று ஒரு கணக்குப் பிள்ளையும், தோட்டத்துத் தோப்பு வீட்டில் குடியிருந்து விவசாயம் பண்ண கணவனும், மனைவியுமாக 

ஒரு குடும்பமும் விசுவாசத்துடன் வேலை பார்த்ததில் அவரது நிலம் பசுமை குறையாமல் செழிப்பாக விளைச்சலை வாரி வழங்கியது..

விஸ்வநாதன் நல்லவர்.. தாராள மனமுள்ளவர்.. நிலத்தில் வரும் வருமானத்தில் கணக்குப் பிள்ளைக்கும், தோப்பு வீட்டில் குடியிருந்து விவசாயம் பண்ணும் குடும்பத்திற்கும் கணக்குப் பார்க்காமல் சம்பளத்தை அள்ளிக் கொடுத்தார்.. மற்றவர்கள் கொடுக்கும் சம்பளத்தைவிட இரண்டுமடங்கு சம்பளம் அதிகமாகக் கிடைத்ததில் அவர்களும் இடம் மாறாமல் நிலைத்து 

நின்று விஸ்வநாதனுக்கு விசுவாசமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. இன்னொன்றும் உள்ளது. அது நிலத்திற்கு உடையவர்கள் பக்கத்தில் நின்று அதட்டி வேலை வாங்கும் கோராமையில்லாமல் சுதந்திரமாக உழைக்க முடிகிறது என்பது..

வருடாவருடம் நடக்கும் ஊர்த் திருவிழாவுக்கு குடும்பத்துடன் போய் விடுவார் விஸ்வநாதன்.. அவரது பரந்த வீடும், தோட்டமும் சென்னையில் நினைத்தும் பார்க்க முடியாது என்பதினால் பதினைந்து நாள்களுக்கும் குறையாமல் குடும்பத்துடன் தங்கியிருப்பார்.. 

பச்சைப் பசேலென்ற தோட்டத்துக் காய்கறிகள்.. சமைத்துப் போடவும், வீட்டு வேலைக்கும் தற்காலிக சம்பளத்திற்கு சந்தோசமாக வந்து நிற்கும் வேலையாள்கள் என்று பாகிரதிக்கு அந்த இருவாரமும் ஆசுவாசமான நாள்களாக நகர்ந்து பலம் கொடுக்கும்..

சென்னையில் இருப்பதைப் போலச் சன்னக் கரையிட்ட புடவையும், குறைந்த அளவு நகைகளுமாக இருக்காமல் அகல பார்டரில் கெட்டி ஜரிகையிட்ட பட்டுப் புடவைகளும்.. கழுத்து, கை, காதுகளில் கனத்த நகைகளுமாக பெரிய வீட்டம்மாளின் தோரணையில் ஜொலி ஜொலிப்பாள் பாகீரதி.. பிள்ளைகளையும் அதுபோலவே அலங்கரித்து விடுவாள்..

பிடிக்காவிட்டாலும் பாகீரதியின் அதட்டலுக்குப் பயந்து மைனர் செயின், பிரேஸ்லெட் சகிதம் வலம் வருவான் பூபாலன்.. மகனுக்கே அப்படியெனும் போது மகளை சும்மாவா விட்டு விடுவாள்..?

நீண்ட தலைமுடியை இரட்டைப் பின்னலாகப் போட்டு, இருபக்கமும் பூ வழியுமாறு அழகாகப் பூச்சூடி.. கழுத்தில் கனத்த கல் டாலரில் தாமரைப் பூவில் மகாலட்சுமி அமர்ந்திருக்கும் செயினைப் போட்டு.. காதுகளில் கல் ஜிமிக்கியும்.. கைகளில் குழுங்கும் தங்க வளையல்களும்.. பட்டுப்பாவடை, சட்டையும்.. நெற்றியில் நீண்ட வடிவிலிருக்கும் திலகமுமாக சாட்சாத் அந்த அம்மனே குழந்தை வடிவில் அருள் பாலிக்க வந்து விட்டதைப் போல இருப்பாள் பூர்ணிமா..

அப்படியொரு விழாநாளில் ஊரைச் சுற்றிப் பார்க்கத் தனித்துக் கிளம்பி விட்டாள் பூர்ணிமா.. பிள்ளைகளைத் தனியே விடமாட்டாள் பாகீரதி.. அவள் மதியத் தூக்கத்தில் கண்ணயர்ந்திருந்த சமயம் பார்த்து நழுவி விட்டாள் பூர்ணிமா.. ஊரைச் சுற்றி வரும் போது 

ஒரு வீட்டில் அழுகைச் சப்தம் கேட்டது.. என்னவென்று கேட்டால் வறுமையாம்.. திருவிழாவுக்கு புதுத்துணிகள் எடுக்க முடியவில்லையாம்.. நெல்லுச் சோறும், இட்லியும் கனவாக இருந்தனவாம்.. மனது கேட்காமல் கையிலிருந்த தங்க வளையல்களில் ஒன்றைக் கழட்டிக் கொடுத்து விட்டு வந்து விட்டாள் பூர்ணிமா..

அன்று கூட இந்த அளவுக்கு அவள் பயப்படவில்லை.. வளையல் எங்கேயென்று வீட்டில் கேட்டால் என்ன பதிலைச் சொல்வது என்று தடுமாறவில்லை.. தைரியமாக விஸ்வநாதனை எதிர்கொண்டாள்..

“பாவப்பா.. ஊரெல்லாம் சிரிச்சுக்கிட்டு இருக்கிறப்ப, அவங்க மட்டும் அழுதுகிட்டு இருந்தாங்க.. நம்ம வீட்டில டெய்லி சமைக்கிற சாதத்த ‘நெல்லுச் சோறு’ன்னு ஏக்கமாச் சொன்னாங்கப்பா.. இட்லிதான் அவங்களோட கனவு டிபனாம்.. மனசு கேட்கலைப்பா.. அதான்.. வளையலைக் கழட்டிக் கொடுத்துட்டு வந்துட்டேன்.” என்று தந்தையின் முகம் பார்த்துச் சொன்னாள்..

மகிழ்ந்து போய் விட்டார் விஸ்வநாதன்… மகளைத் தூக்கித் தோளில் உட்கார வைத்து..

“என் மக அன்னபூரணிடி..” என்று பெருமையுடன் கூவினார்..

அப்படி எதையும் தைரியமாக ஒப்புக் கொள்ளும் இரக்க மனம் கொண்ட பூர்ணிமாதான் இன்று ஸ்கூட்டியை பழுது பார்க்க மெக்கானிக் ஷெட்டில் விட்டிருக்கும் செய்தியைத் தந்தையிடம் சொல்ல அஞ்சி நடுங்குகிறாள்..

ஸ்கூட்டி ரிப்பேராவது சாதாரண விசயம்தான்.. அதைப் பழுது பார்க்க மெக்கானிக் ஷெட்டில் விடுவதில் தவறில்லைதான்.. இதை பாகீரதி பெரிதாக எடுத்துக் கொள்ளாததைப் போல, விஸ்வநாதனும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்தான்..

எந்த மெக்கானிக் ஷெட்டில் விட்டிருக்கிறாள் என்பதில்தான் விசயமே அடங்கியிருக்கிறது.. அதை விஸ்வநாதன் கேட்டு விட்டால் பூர்ணிமாவினால் பதில் சொல்ல முடியாது..

அந்த மெக்கானிக் ஷெட்டின் பெயர் ‘ஆரோ மெக்கானிக் ஷெட்..’ அதன் உரிமையாளன் ‘ரகுவரன்..’

அந்தக் குடும்பத்தினர்க்கு ரகுவரனைப் பற்றி நன்றாகவே தெரியும்.. அவன் அவர்களுக்கு அறிமுகமானவன்தான்.. அவர்களின் வீட்டிற்கு எதிரே பரந்து விரிந்து மிகப்பெரிய மைதானத்தில் எழும்பியுள்ள நட்சத்திர ஹோட்டலைப் போன்ற முகப்பைக் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு குடியிருப்பிற்கு சொந்தக்காரன் அவன்.. அந்தக் குடியிருப்புகளில் வசித்து வரும் அனைவரும் உயர்மட்டம் ரகுவரன் மட்டும் விதிவிலக்காக மெக்கானிக் ஷாப் வைத்திருந்தான்.. 

அதனால் மட்டும்தான் அவன் தனிப்பட்டுத் தெரிந்தானா..?

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link