Chapter 04
இல்லை.. அதனால் மட்டும் ரகுவரன் தனித்துத் தெரியவில்லை.. அவனது தார்மீகக் கோபம்தான் அவனைத் தனித்து இனம் பிரித்து நிறுத்தியிருந்தது..
“அவன் பக்கா ரவுடி சார்..”
விஸ்வநாதனுடன் பணி புரியும் பேங்க் ஆபிசர் ஒருவர் எதிர்த்த அபார்ட்மெண்டில் குடியிருந்தார்.. தினமும் வாக்கிங் போகும்போது விஸ்வநாதனிடம் ரகுவரன் செய்யும் அடாவடிகளைப் பற்றி ஒரு மூச்சு அழுது விட்டுத்தான் ஓய்வாராம்..
“நடு ரோட்டில புரட்டிப் புரட்டி அடிச்சிருக்கான்.. சாட்சி சொல்ல ஒரு பய வரல.. ரெண்டு தரம் அடையாள அணிவகுப்பில நிறுத்தி வைச்சேன்.. பயசிக்கலை.. சிக்கியிருந்தா சின்னா பின்னமாகியிருப்பான்..” மீசையை முறுக்கியபடி பூபாலன் உறுமுவான்..
“ஸ்ஸ்ஸ்.. எதுக்காக நீங்க டென்சனாகறீங்க..” ஆனந்தி அமைதிப் படுத்த முயல்வாள்..
“என் டீம் மேட் எதுத்த அபார்ட்மெண்டில இருக்கான் ஆனந்தி.. போலிஸாச்சேன்னு பயப்படாம திமிரா நடந்து போவானாம்.. அவனைப் பார்க்கிறப்ப எல்லாம் என் ரத்தம் கொதிக்குது ஆனந்தி..” என்பான் அவன்..
குடும்பத்தின் ஆண்மகன்களுக்குப் பிடிக்காமல் போன காரணத்தினாலேயே பாகீரதிக்கும், ஆனந்திக்கும் ரகுவரனைப் பிடிக்காமல் போய் விட்டது.. காய்கறி வண்டி வந்தால்கூட எதிர்த்த அபார்ட்மெண்டில் அவன் தலை தெரிகிறதா என்று பார்த்து விட்டுத்தான் காய் வாங்கப் போவார்கள்.. யதேச்சையாக அவன் தென்பட்டு விட்டால் கூடப் போதும்.. காயே வேண்டாமென்று சொல்லி இருப்பதை வைத்து அன்றைய தினத்தை ஒப்பேற்றி விடுவார்கள்..
ரகுவரன் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ள மாட்டான்.. முரட்டு ஜீன்ஸீம், கலைந்த தலைமுடியுமாக நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக அந்த அபார்ட்மெண்ட் வாசிகளை முறைத்தபடி வந்து போவான்..
“காண்டெஸா கார் வைச்சிருக்கேன்.. எனக்குக் கேட்டைத் திறந்து விடாம பராக்குப் பார்த்துக்கிட்டு இருக்கிற வாட்ச்மேன் அவன் காரைக் கண்டா மட்டும் ஓடிப் போயி கேட்டைத் திறந்து விடறாண்டா மச்சி..”
பூபாலனிடம் அவனது நண்பன் புலம்பியதைக் கேட்டதும் அவன் ஆச்சரியப்பட்டுப் போனான்..
“ஏண்டா அப்படி..?”
“ஏன்னா இவன் தகுதி பார்க்காம வாட்ச்மேன் தோள்மேல கை போட்டுப் பேசிக்கிட்டு இருப்பாண்டா.. என்னதான் மெக்கானிக்கா இருந்தாலும் கோடிஸ்வரங்க குடியிருக்கிற அபார்ட்மெண்டில குடியிருக்கான்ங்கிற நினைப்பு வேணாமா..? எப்படித்தான் எங்க அபார்ட்மெண்டில இவனால பிளாட் வாங்க முடிஞ்சதோ.. பி.எம். டபிள்யூ காரை வைச்சிருக்காண்டா..”
“எப்படிப் பணம் வருது..?”
“தப்பான வழியில வரலை.. அப்படியிருந்தா இழுத்துப் போட்டுச் சாத்த ரீசன் கிடைக்குமேன்னு நானும் நோண்டிப் பார்த்துட்டேன்.. இல்லை.. அப்பன்காரன் திருப்பூர்ல பனியன் கம்பெனி வைச்சிருந்த கோடிஸ்வரனாம்.. பிறக்கிறப்பவே அம்மாவை முழுங்கினவனாம்.. இவன் ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருந்தப்ப அப்பன்காரனும் மாரடைப்பில மண்டையைப் போட்டுட்டானாம்.. சொந்தக்காரங்க சொத்தை வித்துப் பேங்கில் போட்டு விட்டாங்களாம்.. வட்டிப் பணத்தில மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சவன் வேலைக்குப் போகாம மெக்கானிக் ஷாப்பைத் திறந்து ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் விக்கிற கடையொன்னை ஆரம்பிச்சுட்டானாம்.. தொழில் திறமையான வனாம்.. உதவிக்கு நாலு பேர்.. கடையைக் கவனிச்சுக்க ஆள்கள்ன்னு சம்பளம் கொடுக்கிற முதலாளியாம்.. பியூச்சரில கார் தயாரிக்கிற கம்பெனியொன்னை ஆரம்பிக்கனும்ங்கிறதுதான் இவனோட லட்சியமாம்.. எந்த அளவுக்கு டேமேஜான காரைக் கொண்டு போனாலும் ‘ரீ ஸ்டோர்’ பண்ணிக் கொடுக்கறதில கில்லாடியாம்.. அப்புறம் பணம் குமியாம என்ன செய்யும்..?”
பொறாமையுடன் சொன்னான் பூபாலனின் நண்பன்..
இப்படிச் சக குடியிருப்புவாசிகளின் சகலவிதமான கோபங்களுக்கும், பொறாமைகளுக்கும் ஆளாகியிருக்கும் ரகுவரன் பூர்ணிமாவின் கடைக்கண் பார்வைக்கும் ஆளானது தனிக் கதை..
இயல்பாகவே காருண்ய மனம் கொண்ட பூர்ணிமாவிற்கும் எதிர்த்த அபார்ட்மெண்டில் ஒரு தோழி இருந்தாள்..
செமஸ்டர் சமயங்களில் சேர்ந்து படிக்க.. கல்லூரி போகாத நாள்களில் நோட்ஸ் எடுக்க.. விடுமுறை தினங்களில் அரட்டையடிக்க என்று பல்வேறு காரணங்களை முன்னிட்டு பூர்ணிமா எதிர்த்த அபார்ட்மெண்டிற்கு அடிக்கடி போய் வருவாள்..
அப்படிப் போய் வரும் தருணங்களில் எல்லாம் பாகீரதி அவளை எச்சரித்துத்தான் அனுப்பி வைப்பாள்..
“அந்த அபார்ட்மெண்டில ரவுடி ஒருத்தன் குடியிருக்காண்டி.. அவன் கண்ணில படாம போய் வரனும்.. புரிஞ்சதா..? அவன் தலையைக் கண்டாக்கூட ஓடி வந்திரனும்..”
எதற்காக ரகுவரனின் தலையைக் கண்டு ஓடிவர வேண்டுமென்று பூர்ணிமாவிற்குப் புரியவில்லை.. அவன் தலை கலைந்திருந்தால் கூடப் பார்க்க நன்றாகத்தானே இருக்கிறான் என்று அவள் மனம் ஜொள்ளியது.. ரகுவரனின் கண்களில் பூர்ணிமா படவில்லை.. பூர்ணிமாவின் கண்களில்தான் ரகுவரன் பட்டுத் தொலைத்தான்.. எதிரில் வரும் இளம் பெண்ணைக் கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப் போலப் பற்றற்று பார்த்துவிட்டு எனக்கென்ன என்று போகும் ரவுடியைப் பற்றி பூர்ணிமா ஆச்சரியப்பட்ட போது..
“நீன்னு இல்லை.. ஐஸ்வர்யா ராயே எதிரே வந்தாலும் அவன் அப்படித்தான் பார்ப்பான்..” என்று எரிச்சல் பட்டாள் பூர்ணிமாவின் தோழியான சுபா..
அவள் அலட்டல் கேஸ்.. அவளைக் கடந்து போகும் ஆண்கள் அவளைத் திரும்பிப் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்ற எண்ணம் கொண்டவள்.. அப்படிப் பார்க்கா விட்டால் தன்னிடம் என்ன குறையென்று உண்ணாமல், உறங்காமல் கவலைப்பட்டு நொந்து நூலாகி விடுவாள்..
அப்படிப்பட்டவளை ரகுவரன் அதுவரைத் திரும்பியும் பார்த்ததில்லையாம்..
“மனுசனாடி அவன்..?” என்று வெகுண்டாள் சுபா..
“வாட்.. நான்சென்ஸ்..? நீ எதிர்க்க வந்தும் அவன் ஏறெடுத்தும் பார்க்கலையா..?” பூர்ணிமா வேண்டுமென்றே சுபாவுக்கு வெறியேற்றினாள்..
சுபா ரகுவரனை ஜடம், மரம் என பற்பல வார்த்தைகளில் திட்டித் தீர்த்து ஓய்ந்து போய் பிரிட்ஜில் இருந்த ஐஸ் வாட்டரைக் குடித்து வயிற்றெரிச்சலை சமனப்படுத்தினாள்..
‘இவன் கண்ணில பட்டா என்ன ஆகுமாம்..?’
பூர்ணிமாவிற்கு பாகீரதியின் மேல் கோபம் வரும்.. பெண்களிடம் ஒதுக்கம் காண்பிக்கும் ரகுவரனின் மீது மரியாதை தோன்றும்.. சுபாவைப் பார்க்கப் போன ஒருநாளில் மாடிப்படிகளில் ஒருவனை ரகுவரன் அடித்து நொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள் பூர்ணிமா..
“விட்டிரு.. விட்டிரு..”
அடிபட்டவன் ரத்தம் வழிந்தோடக் கையெடுத்துக் கும்பிட்டுக் கதறினான்.. ரகுவரன் விடவில்லை.. மற்ற பிளாட்வாசிகள் தத்தம் வீடுகளின் கதவுகளை அடைத்துக் கொண்டு மறைவாக நின்று வேடிக்கை பார்த்தார்கள்.. ரகுவரனைத் தடுக்க எவரும் முன்வரவில்லை..
எதிர்பாராமல் வந்து விட்ட பூர்ணிமா கண்களில் பயத்தோடு நடுங்கி நின்று விட்டாள்… அப்போதுதான் முதன் முதலாக அவளை நேருக்கு நேராகப் பார்த்தான் ரகுவரன்.. அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த பூர்ணிமாவைக் கண்டதும் அவன் விழிகளில் மின்னல் போல ஏதோ ஒன்று வந்து போனது.. லேசாக வழிவிட்டு..
“சீக்கிரமாப் போயிருங்க..” என்றான்..
அவன்மீது பட்டு விடாமல் ஒதுங்க முயன்றாள் பூர்ணிமா.. அதற்குள் அவன் சுவரோடு சுவராக பல்லி போல ஒட்டிக் கொண்டான்.. பூர்ணிமா அதிசயப் பட்டுப் போனாள்.. அவனை விழி விரியப் பார்த்தபடி அவள் கடந்து போனதில் அவன் பார்வையில் சுவராஸ்யம் வந்தது.. அவள் கடந்து போகும் வரை அவன் நகரவும் இல்லை.. காலுக்குக் கீழ் மிதித்துக் கொண்டிருந்தவனை விடவும் இல்லை..
இதுபோன்ற அடிதடிகளை பூர்ணிமா பார்த்ததே இல்லை.. பூபாலன் போலிஸ் ஆபிசர் என்றாலும் உத்தியோகக் கதைகளை வீட்டில் பேச மாட்டான்.. பழக்கமில்லாத அடிதடியைப் பார்த்து விட்ட மருட்சியை அவள் விழிகளில் பார்த்து விட்ட ரகுவரனின் விழிகளில் படர்ந்த மென்மையில் பூர்ணிமாவின் வியப்பு அதிகமானது..
‘இவன் இப்படி ஷாப்டாக்கூடப் பார்ப்பானா..?’
அவன் விழிகளில் தெரிந்த மென்மைக்கும் அவனது காலடியில் மிதிபட்டுக் கொண்டிருந்தவனின் முகத்தில் வழிந்த ரத்தத்திற்கும் கொஞ்சம் கூட பொருந்தி வரவில்லை.. அந்த முரண்பாடை யோசித்தபடி நகர்ந்தவளை..
“உள்ளே வந்து தொலைடி..” என்று வீட்டுக்குள் இழுத்துக் கொண்டாள் சுபா..
“என்னவாம்டி.. இப்படி அடிச்சு நொறுக்கிறான்..?”
பூர்ணிமாகேட்ட கேள்விக்கு சுபா அளித்த பதிலில் ரகுவரனைப் பற்றிய பிம்பம் பூர்ணிமாவின் மனதில் உயர்ந்து எழுந்து நின்று பதிவானது..
“அடிச்சு நொறுக்காம என்ன செய்வான்..? இந்தப் பொறுக்கி வீட்டில பெண்டாட்டி பிரசவத்துக்காக தாய்வீட்டுக்குப் போயிருக்கிறா.. போன மகராசி ஹஸ்பெண்டைப் பத்தின கவலையில வேலைக்காரப் பெண்ணை நிப்பாட்டாம தினமும் வேலைக்கு வந்து போகனும்ன்னு ஆர்டர் போட்டுட்டுப் போயிட்டா.. அந்தப் பெண்ணும் பாவம்.. சம்பளம் கொடுக்கிற மகராசி சொல்லிட்டாளேன்னு வேலைக்கு வந்து போயிருக்கு.. இந்த நாய் அந்தப் பெண்ணை ரேப் பண்ணப் பார்த்திருக்காண்டி..”
“காட்..” பூர்ணிமா அதிர்ந்து விட்டாள்..
அந்த வேலைக்காரப் பெண்ணை அவள் பார்த்திருக்கிறாள்.. பதினான்கு வயதுகூட நிரம்பாத சிறுமி அவள்.. பள்ளிக்குச் சென்று கொண்டே வீட்டு வேலை பார்க்கிறாள்.. வீட்டு வேலை செய்வதில் கணிசமான சம்பளம் கிடைக்கிறது.. வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற உபகரணங்களால் வேலையும் குறைவு என்பதால் பள்ளிக்குப் போகும் நேரம் போக காலை, மாலை இருவnளையும் அந்த அபார்ட்மெண்டில் இருக்கும் பிளாட்டுகளில் வீட்டு வேலைகளைச் செய்வாள்..
“சம்பள பணத்தை மேற்படிப்புக்கு சேர்த்து வைக்கிறாளாம்.. இவளோட தம்பி பீச்சில சுண்டல் விற்பானாம்.. அம்மா வேறொரு அபார்ட்மெண்டை வீட்டு வேலைக்குன்னு குத்தகைக்கு எடுத்திருக்காம்.. அப்பா ஆட்டோ டிரைவர்.. உழைப்பாளி வர்க்கம்டி..” என்பாள் சுபா..
‘அந்தப் பெண்ணையா இவன் சூறையாட நினைத்தான்..?’
பூர்ணிமாவால் தாங்க முடியவில்லை.. அந்தப் பொறுக்கியை இவள் பார்த்திருக்கிறாள்.. சொந்தமாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்திருக்கிறான் என்று சுபா சொல்லியிருக்கிறாள்.. மடிப்புக் கலையாத உடை, கண்ணியமான தோற்றம் என்று ஜென்டில் மேனுக்கே உரிய சாமுத்ரிகா லட்சணங்களுடன் இருப்பான்..
‘அவனா இப்படி..?’
“இந்தப் பெண் கத்தின கத்தலை எதிர் பிளாட்டில இருந்த இவன் கேட்டிருக்கான்.. மத்தவங்களுக்கும் கேட்டிருக்கலாம்.. யாரும் ஏன்னு கேட்கலை.. இவன் கதவை உடைச்சு உள்ளே போய் அந்த நாயைப் புரட்டி எடுத்து இழுத்துட்டு வந்து மாடிப்படியில போட்டு மிதிமிதின்னு மிதிச்சுக்கிட்டு இருக்கான்.. அவன் வீட்டுக்குள்ளயே விட்டு அடிச்சா மத்தவங்களுக்குத் தெரியாது.. இவன் என் வீட்டுக்குள்ள வந்து அடிக்கிறான்னு அந்த நாய் சொன்னாலும் சொல்லுமில்ல.. அதுக்குத்தான் மாடிப்படி மிதி..”
சுபா விவரிக்க விவரிக்க சரித்திரக் கதாநாயகனைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கும் ஆவல் பூர்ணிமாவின் விழிகளில் மிளிர்ந்தது..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.