Chapter 15

0Shares

பூர்ணிமாவே முடிவு சொல்லி விட்டதில் மனம் தாங்காமல் மனம் தொய்ந்து போனதைப் போல ஸ்கூட்டி தரைப்பக்கமாக தலை கவிழ்ந்தது..

‘விடு.. விடு.. உன் எஜமானியம்மாவோட காதலுக்கு நீதானே சப்போர்ட் பண்ணனும்..’ மானசீகமாக ஆறுதல் சொல்லி அதைத் தேற்றி நிமிர வைத்தான் லோகநாதன்..

“அப்ப.. கிளம்பறேன்..” எழுந்து கொள்ள மனமில்லாமல் சொன்னாள் பூர்ணிமா..

“கூல்டிரிங்க் குடிக்காம கிளம்புவீங்களா..?” விழிகளை உருட்டினான் ரகுவரன்..

உரிமை கலந்த அவனது உபசரிப்பு பூர்ணிமாவைத் தாலாட்டியது.. அவனருகே இருக்கும் நேரம் நீடிக்கப்பட்டதில் குதூகலமானாள்.. சின்னக்குழந்தை பலூனைப் பார்ப்பதைப் போல ரகுவரனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

ரகுவரனின் பார்வையில் கதிர்வேலன் ஷெட்டில் இருந்த பிரிட்ஜைத் திறந்து கூல்டிரிங் பாட்டிலுடன் வந்தான்..

“நீங்க..?” பூர்ணிமா தயங்கினாள்..

ரகுவரனின் கையிலும் கூல்டிரிங்க் பார்ட்டில் வந்தது..

“இவங்க..?” மற்றவர்களைக் குறித்த பூர்ணிமாவின் தயக்கத்தில் எல்லோரும் கூல் டிரிங்க் பாட்டில்களைக் கைப்பற்றினார்கள்..

பகிர்ந்துண்ணும் அவளது குணத்தில் அவர்களுக்கு அவள்மீது பாசம் வந்தது.. தயாள குணம் கொண்ட ரகுவரனுக்கு ஏற்ற மனைவி இவளாகத்தான் இருக்க முடியுமென்று தங்களுக்குள் தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள்..

எல்லோரும் கூல்டிரிங்ஸை ஒரே மூச்சில் உறிஞ்சிக் காலி பண்ண.. ரகுவரனும் பூர்ணிமாவும் சொட்டுச் சொட்டாக உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்..

என்னதான் சொட்டுநீர் பாசனம் போலச் சொட்டுச் சொட்டாக உறிஞ்சினாலும் ஒரு கட்டத்தில் ஒரு சொட்டுக்கூட மீதமில்லாமல் கூல்டிரிங்க் பாட்டில் காலியாகத்தானே செய்யும்..?

காலியாகிவிட்ட பாட்டில்களை பிரிய மனமில்லாமல் அவர்கள் கொடுக்க.. இரக்கத்துடன் அவர்களைப் பார்த்தபடி வாங்கி மூலையில் வைத்தான் கதிர்வேலன்..

இனிக் கிளம்பித்தான் ஆக வேண்டும் என்ற பெருமூச்சுடன் பூர்ணிமா எழுந்து நின்றாள்..

“ஸ்கூட்டி இங்கே நிக்குது.. நீங்க எப்படி வீட்டுக்குப் போவீங்க..?” புருவங்களை உயர்த்தினான் ரகுவரன்..

அந்தச் சமயம் பார்த்தா வாசலில் ஆட்டோ போக வேண்டும்..? அனிச்சையாக ஆட்டோவை பலராமன் பார்க்க.. அவனைக் கண்டனத்துடன் ரகுவான் பார்க்க..

‘மாட்டிக்கிட்டியாடா மச்சான்..?’ என்று மகிழ்ந்து போய் லோகநாதன் பார்த்தான்..

‘அப்புறமா இருக்குடா மச்சான் உனக்கு..’ பதிலுக்கு பலராமனும் முறைப்பாய் பார்த்தான்..

பறவைகள் பலவிதம் என்பதைப் போல அங்கே பார்வைகள் பலவிதமாக இருந்ததைக் கணக்கிட்டுக் கொண்டிருந்த பிரசன்னா இயல்பாக சொல்வதைப் போல..

“நீயும் வீட்டுக்குத்தானே கிளம்பிக்கிட்டு இருந்த ரகு..? சிஸ்டரோட வீடு உன்னோட அபார்ட்மென்டுக்கு எதிர் வீடுதானே.. உன் காரில நீ டிராப் பண்ணிற வேண்டியதானே..?” என்று எடுத்துக் கொடுத்தான்..

‘நீதாண்டா தோழன்..!’

ரகுவரனின் முகத்தில் பிரசன்னாவைக் கட்டிக் கொள்ளும் உத்தேசம் தெரிந்தது..

‘அதெல்லாம் அப்புறம்..!’ என்று பூர்ணிமாவை விழிகளால் சுட்டிக் காட்டி உடனடியாக நண்பன் ஆற்ற வேண்டிய காதல் கடமையை நினைவுறுத்தி ஆற்றுப் படுத்தினான் பிரசன்னா..

அன்றே கொடுத்து விடுவதாக வாக்களித்திருந்த காரை அம்போ என விட்டு விட்டு.. பூர்ணிமாவை வீட்டில் விடும் கடமையாற்றத் தன் கார்ச் சாவியை கையிலெடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் ரகுவான்..

ரகுவரனுடன் காரில் போகப் போகிறாள் என்பதை நம்பவே முடியாமல் திண்டாடிப் போனாள் பூர்ணிமா.. அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்ததால் ஸ்கூட்டியின் டயரை வேண்டுமென்றே பழுதாக்கி அவனுடைய ஷெட்டிற்கு வந்து நின்றாள்.. அதுவே மனதுக்குள் உதைத்து இம்சை செய்து பாடாய் படுத்தியது.. வீட்டுக்குத் தெரியாமல் அவனைத் தேடி வந்து விட்ட குற்ற உணர்வு அவள் மனதை ஆக்ரமித்திருந்தது..

எல்லாமே அவனைப் பார்க்கும் வரையில்தான்.. அவனைப் பார்த்த நொடியில் குற்ற உணர்வும், உதைப்பும் ஓடிப் போய் விட்டன.. ரகுவரனின் ஆழ்ந்த பார்வை மட்டுமே அவளை ஆளுமை செய்தது..

அவள் கோட்டை போட்டால் அவன் அதில் சாலையை அமைத்து இரு புறமும் பூமரங்களை நட்டுத் தேரை ஓட்டினான். சிறு பொறியையும் நெருப்பாக்கிக் காட்டினான்.. அவளுக்கே தெரியும்.. அவளது ஸ்கூட்டியில் எந்தப் பழுதும் இல்லையென்று.. புத்தம்புது ஸ்கூட்டி அது.. அதிலாவது.. பழுது இருப்பதாவது..

புதுடயரின் மீது குத்தியிருந்த ஆணியை அப்புறப் படுத்திச் சரிபண்ணா சில நிமிடங்களே போதும் என்பதை பூர்ணிமாவும் அறிவாள்.. சில நிமிடங்களை இருபத்தி நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக்கி மறுநாள் தான் ஸ்கூட்டி கிடைக்கும் என்று ரகுவரன் சொல்லியதில் பூர்ணிமாவின் மனம் சிறகை விரித்துப் பறந்தது..

அவளை மறுநாளும் ஷெட்டில் பார்க்க அவன் ஆசைப் படுவதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டதில் மனம் கற்கண்டாகத் தித்தித்தது..

அடுத்த ஜாக்பாட்டாக அவனுடைய காரில் போகலாமென்று அவன் அழைத்ததில் அவளுக்குள் ஆனந்தத் தேன் காற்று அலை மோதியது.. அவனைப் பார்த்தால் போதும் என்று ஏங்கிய மனதுக்கு தெவிட்டத் தெவிட்டக் கிடைத்த சந்தர்ப்பங்களில் மூழ்கிப் போனவளாக மறுக்காமல் அவன் காரில் ஏறிக் கொண்டாள்..

“இந்த மக்லானி ஷேட் வந்தா என்ன சொல்லனும் ரகு..?” என்று எதையோ கேட்பதைப் போல ரகுவரனின் அருகில் வந்த பிரசன்னா சன்னக்குரலில்..

“ஆல் தி பெஸ்ட்..” என்று வாழ்த்தினான்..

“தேங்க்யுடா..” அர்த்தத்துடன் நன்றி சொன்னான் ரகுவரன்..

காரின் பின் பக்கக் கதவின் பக்கம் பூர்ணிமா போனாள்.. அதை மறைத்து நின்று முன் பக்கக் கதவை அவளுக்காக திறந்து விட்டான் ரகுவரன்.. தயங்கியவளை அவன் தீர்க்கமாகப் பார்த்து வைத்ததில் மனம் படபடக்க உதட்டைக் கடித்தபடி முன் பக்கமே ஏறிவிட்டாள்.. ரகுவரனின் முகத்தில் திருப்திவந்தது.. அவனது ஓர் பார்வைக்கு அவள் அடி பணிவதில் அவனது ஆண்மனம் கர்வம் கொண்டது..

கார் கிளம்பியது.. நண்பன் திருமணக் கோலத்தில் ஊர்கோலம் போவதைப் போலக் கண்கள் பனிக்கக் கார் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தான் பிரசன்னா..

“ஜோடிப் பொருத்தம் பிரமாதமா இருக்கு சார்..” என்றான் பலராமன்..

“ஆமாம் ராமு..”

பிரசன்னாவின் மனதில் நண்பனின் காதல் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனை எழுந்தது..

பக்கத்தில் பூர்ணிமா இருக்கக் காரை ஓட்டிக் கொண்டிருந்த ரகுவரனின் மனதில் அதுபோல எல்லாம் பிரார்த்தனை எழவில்லை..  எவரையும் திரும்பிப் பார்க்காமல் கடந்து கொண்டிருந்த ரகுவரனை பூர்ணிமாதான் திரும்பிப் பார்க்க வைத்தாள்.. அவனைக் கண்டதும் அவளிடம் தோன்றிய வெட்கம் கலந்த தடுமாற்றம் அவனை வியப்புடன் பார்க்க வைத்தது.. யார் இவள் என்று கேட்க வைத்தது.. முள் போன்ற அவனது சுபாவத்திற்கு அஞ்சி மற்றவர்கள் எட்டி நின்றபோது மலர் போன்ற பெண்ணொருத்தி அவனிடம் மயங்கி நின்றதை விந்தையிலும் விந்ததையாக உணர்ந்தான்..

நாணத்துடன் அவனை அவள் கள்ளப் பார்வை பார்ப்பதை வெகுவாக அவன் விரும்பினான்.. ரசித்தான்.. அவளது அமைதியான அகல் விளக்குப் போன்ற அழகு அவனை வசீகரித்தது.. பெண்மை மிளிரும் அவளது தன்மை அவனைக் கவர்ந்தது.. அவனிடம் மயங்கும் அவளது பார்வை அவனை ஈர்த்தது..

அவன் மனதோடு உறவாகும் அவளது பார்வையில் அவன் காதல்வசப்பட்டு விட்டான்..

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link