Chapter 16
“வெந்நிலவே..! வெந்நிலவே..!
விண்ணைத் தாண்டி வருவாயா..?
விளையாட ஜோடி தேவை..”
காரில் சி.டி இசைத்தது.. துள்ளலும் துடிப்பும் கலந்த பாடலின் இசை மனதுக்குள் நுழைந்து யாழ் மீட்டியது.. பக்கவாட்டில் இருந்த பூர்ணிமாவைப் பார்த்தான் ரகுவரன்.. அவனைப் போல நேர்கொண்ட பார்வை பார்க்காமல் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா தடுமாறிப் போனாள்.. ரகுவரனின் மனமோ மத்தளம் வாசித்தது..
‘இவள் வெந்நிலவுதான்..’
பூரண சந்திரனைப் போன்ற அவளது நிலா முகத்தைப் பார்க்கப் பார்க்க.. இவள் மனதில் நான் எப்படி வந்தேன் என்று ஆச்சரியப் பட்டுப் போனான் ரகுவரன்.
பணக்காரத்தனம் நிறைந்த அந்த அபார்ட்மெண்டில் பிளாட்டை வாங்கியபோது எதிர்வீட்டில் ஒரு நிலவு குடியிருக்கிறாள்.. அவன் வரவுக்காக காத்திருக்கிறாள் என்று எவரேனும் ஆருடம் சொல்லியிருந்தால்..
‘ஹ..’ என்று அலட்சியப் படுத்தியிருப்பான்..
நீ காதலில் விழுவாய் என்று கணித்திருந்தால்..
‘எனக்காவது.. காதல் வருகிறதாவது..’ என்றிருப்பான்..
நிஜமாக ஓர்நாள் அவன் நிலவு முகம் கொண்ட பூர்ணிமாவைப் பார்த்தான்.. முதல் பார்வையில் அவனை ஈர்த்தது அலட்டலில்லாத அமைதி ததும்பும் அவளது சுபாவம்தான்.. மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.. அவனை ஏறிட்டுப் பார்த்த பார்வையில் ஓர் மருட்சி..
அவனுக்கு வியப்பாக இருந்தது.. மானைப் போல மருண்ட அவளது பார்வையில் அவன் மனதுக்குள் சலனம் வந்தது.. ஏன் இப்படிப் பயப்படுகிறாள் என்று யோசித்தான்.. அந்த அபார்ட்மென்டில் அவனுக்கு ‘ரௌடி’ என்று அடையாளம் இருந்தது.. அது தெரிந்ததினால்தான் பயப்படுகிறாள் போல என்று நினைத்துக் கொண்டான்.. அந்த நினைவு ஏமாற்றத்தைத் தந்தது..
அடுத்து வந்த நாள்களில் அவள் எதிர்படும் போதெல்லாம் மருட்சி கொண்ட அவளது விழிகளை உற்றுப் பார்ப்பான்.. அவள் முகம் சிவந்து அவன் மனதில் தென்றலை வர வைப்பாள்.. அவளது மருட்சி இயற்கையானது என்பதைப் போகப் போகப் புரிந்து கொண்டவனுக்கு அவளைப் பிடித்து விட்டது..
ஒரு பெண் அமைதி ததும்பும் அழகோடு இருக்கிறாள்.. பெண்மையின் மென்மையைத் தனது ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிறாள்.. எந்தப் பெண்ணாலும் அசைக்க முடியாத அவன் மனதை அசைத்து விட்டாள்..
இதற்காகவெல்லாம் அவளிடம் காதல் சொல்ல ரகுவரனால் முடியாது.. இயற்கையின் அழகை ரசிப்பவன் தள்ளி நின்று ரசிக்க வேண்டும்.. வேரோடு பறிக்க முயலக் கூடாது என்ற கொள்கையுடையவன் அவன்..
பூ அழகாக இருக்கிறது.. வசீகரிக்கிறது என்பதற்காக அதைச் செடியிலிருந்து கொய்து கசக்கி முகர்வதா..? அது ஆராதனைக்குரியது அல்லவா..?
ஆராதனைக்குரிய பூர்ணிமாவின் அழகைத் தள்ளி நின்று ரசிக்க ஆரம்பித்த போதுதான் அதை அவன் உணர்ந்தான்.. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் பூர்ணிமா அவனிடம் தடுமாறத் தொடங்கினாள்.. அவளது பார்வை அவனைத் தேடியது..
முதலில் அவன் நம்பவில்லை.. இருக்காது என்றுதான் நினைத்தான்.. கட்டுக் கோப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள், தான்தோன்றியாக இருக்கும் ரவுடியை விரும்புவாளா..?
அவள் விரும்பினாள்.. அதை பார்வையில் உணர்த்தினாள்.. ரகுவரனின் வாழ்வில் உயிர்ப்பு வந்தது.. அவன் கடந்து வந்த காலத்தின் துயரங்களை அவளது பாசம் மறக்கடித்தது.. எந்தவிதச் சம்பந்தமுமில்லாத ஒருவனைச் சொந்தத்துடன் பார்த்த அவளது பார்வையில் அவனது தனிமை பொசுங்கிச் சாம்பலானது.. விதி அவனை வஞ்சித்து விட்டது என்ற எண்ணத்துடன் இருந்த கோபக்காரனை உனக்காக நானிருக்கிறேன் என்று சிறு பார்வையில் அவள் அமைதிப் படுத்தினாள்..
ரகுவரனின் மனதில் பூர்ணிமா ஆழமாக பதிந்து விட்டாள்.. அதற்காக அளைத் துரத்தித் துரத்திக் காதலிக்க அவன் யத்தனிக்க வில்லை.. அவன் வீட்டின் ஜன்னலின் இருந்து பார்த்தால்,
அவளது வீடு தெளிவாகத் தெரியும்.. அங்கிருந்து பூர்ணிமாவின் நடமாட்டத்தைப் பார்ப்பான்.. தள்ளி நின்று அவளது அழகை ரசித்தால் போதுமென்ற நிறைவுடன் இருந்து விடுவான்.. சந்திப்புகளை உருவாக்க வேண்டுமென்று நினைத்ததில்லை..
அவன் நினைத்திருந்தால் அவன்மீது அவள் காட்டும் ஈடுபாட்டைப் பயன்படுத்திக் கொண்டு அவளிடம் காதலை வலியுறுத்தியிருக்கலாம்.. சந்திப்புகளை உருவாக்கியிருக்கலாம்.. அவள் மனதைச் சலனப் படுத்தியிருக்கலாம்..
அப்படியெல்லாம் செய்ய வேண்டுமென்று அவன் நினைத்தும் பார்த்ததில்லை.. அவனைத் தன் காதலால் கௌரவித்த அவளது காதலை அவன் கௌரவித்தான்.. இடைவெளி விட்டுத் தள்ளி நின்று பார்வையாலே காதல் செய்தவளிடமிருந்து இவனும் தள்ளியே நின்றான்.. இடைவெளியைக் குறைக்க முனையவே இல்லை..
அவன்மீது பற்றுதல் கொண்டவளின் மீது அவனுக்கு இருந்த அன்பு அளவிட முடியாதது.. இருந்தும் அவன் அதை வெளிக் காட்டியதேயில்லை.. எதிர்பாராமல் அவன் வழியில் அவள் எதிர்பட்டு விட்டால் அவன் விழிகளில் தோன்றும் மின்னலைத்தான் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.. ஆவலுடன் அவனைப் பார்க்கும் அவளது நாணப் பார்வையில், அவனது பார்வையைச் சந்திப்பவளிடம் தோன்றும் தடுமாற்றத்தில், நடக்க முடியாமல் அவளது கால்கள் பின்னுவதில் அவனுக்குள் மத்தாப்பூ மலரும்..
அவனைப் பார்க்க வேண்டும் என்ற அவளது ஆசையை அவளது வெட்கம் தடுப்பதில் அவள் திண்டாடித் திணறுவதை உணர்பவனுக்கு சிலிர்ப்பாக இருக்கும்.. கர்வம் பொங்கும்.. அவளால் முடியாததை அவன் செய்து வைப்பான்.. நேர் கொண்ட ஆழ்ந்த பார்வையில் அவளைக் குளிர்விப்பான்.. வேக நடையைக் குறைத்து வெகு நிதானமாக அவளைக் கடப்பான்.. அவளிடம் பேச வேண்டிய தருணங்கள் வாய்த்தால் தடையின்றிப் பேசுவான்.. அதில் அவள் சந்தோசம் கொள்வதை உணர்பவனுக்குள் இதம் பரவும்..
அவனுக்காக உருக ஒரு பெண் இருக்கிறாளா..?
ரகுவரனின் வாழ்க்கை வண்ணமயமானதாக உருமாறியது.. அவனுடைய அபார்ட்மெண்டிற்கு இயல்பாக வந்து போய் கொண்டிருந்த பூர்ணிமாவின் வருகை குறைந்து போனது.. அவளுக்குப் பதில் சுபா எதிர்வீட்டுக்குப் போய் வர ஆரம்பித்ததில் இவன் யோசித்தான்.. ஏனென்று புரிந்து விட்டது..
சுபா பூர்ணிமாவின் மனதை இனம் கண்டிருக்க வேண்டும்.. அவளைப் பார்க்கப் பூர்ணிமா வந்து போனதினால்தான் ரகுவரனின்மீது காதல் கொண்டு விட்டாள் என்று பூர்ணிமாவின் குடும்பத்தார் சுபாவைக் குற்றம் சாட்டி விடக் கூடுமென்று பயந்து அதைத் தவிர்க்க பூர்ணிமாவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறாள்.. நீ என் அபார்ட்மெண்டிற்கு வர வேண்டாம்.. அதற்குப் பதில் நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று புதிய பாதை வகுத்திருக்கிறாள்.
தன் பிளாட்டில் இருந்தபடியே பூர்ணிமாவின் வீட்டை நோட்டமிட்டவனுக்கு பூர்ணிமாவின் தவிப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.. அவனைப் பார்க்க முடியாமல் அவளது முகம் வாடுவதைக் கண்டவனின் மனதில் துயரம் மேவியது..
‘முள்ளின் மீது ஏன் ஆசை கொண்டாய் மலரே..?’ மனதுக்குள் கேட்டுக் கொண்டான்..
சுபாவின் நோக்கத்தில் அவனால் தவறு காண முடியவில்லை.. எந்தத் தோழிதான் சாத்வீகமான பெண் ரவுடியைக் காதலிப்பதை ஒப்புக் கொள்வாள்..?
பூர்ணிமாவின் முக வாட்டத்தைப் போக்க வழி கண்டு பிடித்தான் ரகுவரன்.. அவனுக்காக ஏங்கும் அந்த அமைதியான பெண்ணின் ஏக்கத்தை அவளறியாமல் தீர்க்க பால்கனிக்கு வந்து நிற்க ஆரம்பித்தான்..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.