Chapter 01
மலைக்க வைக்கும் மைசூர் மாநகரம் நந்தகுமாரை இருகரம் நீட்டி வாவென்று அழைப்பதைப் போல இருந்தது.. விமானத்தை ஒட்டி இருந்த படிகளில் கால் பதித்தான்.. அந்தக் காலக் கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் விமானத்திலிருந்து வெளிப்படும் கதாநயகனோ.. கதாநாயகியோ.. ஒரு நிமிடம் நின்று.. கையை ஆட்டுவார்கள்.. காத்திருக்கும் கூட்டத்தினர் பதிலுக்கு கையாட்டுவார்கள்.. அதை நினைத்துக் கொண்டான்.. அவனுடைய அம்மாவும், அப்பாவும் கருப்பு வெள்ளைத் திரைப்படங்களுக்கு பரம ரசிகர்கள்.. அவர்களுடன் உட்கார்ந்து அரட்டையடிக்கும் தருணங்களில் பார்த்த படங்கள் அவனை அபத்தமாக யோசிக்க வைக்கிறது.. அனிச்சையாக அவனது கண்கள் கூட்டத்தில் எவரேனும் அவனுக்காக கையாட்டுகிறார்களா என்று தேட முற்பட்டதில்..
‘அடேய்..’ என்று மனதுக்குள் அதட்டிக் கொண்டான்..
அவனை எதிர்பார்த்து யார் காத்திருக்கப் போகிறார்கள்..? அவனே வேலையை ஒப்புக் கொள்ள வந்திருக்கிறான்.. கம்பெனியில் நுழைந்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைக் காட்டி சார்ஜ் ரிப்போர்ட் கொடுத்த பின்னால்தான் அவன் அந்தக் கம்பெனியின் அங்கீகரிக்கப் பட்ட பொறியாளனாக ஆவான்.. விமான நிலையத்துக்கே வந்து, மாலை போட்டு வரவேற்று, வேலையும் கொடுக்கும் முதலாளிகள் இன்னும் பிறந்து வரவில்லை..
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது.. பூத்தூறல்களாக மழை தூறிக் கொண்டிருந்தது.. பனிக்காற்றில் உடல் சிலிர்த்தது.. கையில் உருட்டிக் கொண்டிருந்த பெட்டியைத் தூக்கிக் காட்டி, மக்கள் திலகம் போல படு உற்சாகமாக..
‘புதிய வானம்.. புதிய பூமி..
எங்கும் பனிமழை பொழிகிறது..
நான் வரும்போது எனை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது..’
என்று பாடலாம்தான்.. அறியாத ஊரில் அவனைப் பற்றித் தெரியாதவர்கள் அவனுடைய புத்தி சுவாதீனத்தைக் சந்தேகிக்கக் கூடும் என்று அவனது அறிவு அறுவுறுத்தியதால் குளிரை ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டு செல்போனில் கால் டாக்ஸிக்கு கால் பண்ணினான்..
உள்ளங்கைக்குள் உலகம் அடங்கி விட்டது.. ஒரு காலத்தில் தொலை தொடர்புக்குத் தபால் நிலையங்களை நாடினார்கள்.. அவசரச் செய்திகள் தந்திக் கம்பிகளின் மூலம் பயணித்தன.. காலையில் புக் பண்ணும் டிரங்க் கால் மாலையில் கிடைக்கும்..
“அல்லோ..” என்று உரத்த குரலில் ஊரே அல்லோலகலப் படும்படிக் கத்திப் பேசுவார்கள்..
‘டொக்.. டொக்..’ என்ற சப்தத்தில் வரும் தந்தியின் வாசகங்கள் என்ன சொல்ல வருகின்றன என்று தெரிவதற்குள் அழுது, புரண்டு ஊரைக் கூட்டி விடுவார்கள்.
இப்போது அப்படியல்ல.. வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் கூட வினாடிப் பொழுதுக்குள் பேசி விடலாம்.. சொல்ல வேண்டிய செய்திகளை எஸ்.எம்.எஸ், ஈமெயில், வாட்ஸ் அப் என்று இமைக்கும் நேரத்துக்குள் அனுப்பி விடலாம்.
“இதெல்லாம் சரிதான் நந்து.. தொலை தொடர்பு கடினமா இருந்த அந்தக் காலத்தில கடிதங்களுக்காக நாம காத்திருந்தோம்.. போஸ்ட்மேன் எப்போ வருவார்ன்னு எட்டியெட்டிப் பார்ப்போம்.. ஒரு நொடியில மெஸேஜ் அனுப்பறதில அந்த எதிர்பார்ப்பு தொலைஞ்சு போயிருச்சே.. அதுக்கு என்ன சொல்லப் போற..?” என்பார் வாசுதேவன்.. நந்தகுமாரனின் அப்பா..
அவனது அம்மாவான யமுனாவும் அதை ஆமோதிப்பாள்.. அவள் ஆமோதிக்காமலிருந்தால்தான் அதிசயம் என்பான் நந்தகுமார்.. அந்த அளவுக்கு அவனுடைய அப்பாவும் அம்மாவும் ஒருமித்த கருத்துக்களை உடையவர்கள்.. எந்த ஒரு வியத்தையும் அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்வு பூர்வமாக அணுகுபவர்கள்..
“அதைவிட பேனாவைப் பிடித்து எழுதுகிற பழக்கமே இவர்களுக்கு மறந்து போச்சேங்க.. கீ போர்டில டைப் அடிச்ச காலம் போய் டச் பண்ணினாப் போதும்ங்கிற காலம் வந்துருச்சு.. இது எங்கே போய் விடுமோ..”
“ஆயிரம்தான் சொல்லு யமுனா.. பேனாப் பிடிச்சு எழுதுகிறப்பக் கிடைக்கிற சுகமும், மனநிறைவும் மத்ததில வருமா.. அனுபவிச்சங்களுக்குத்தான் அது தெரியும்..”
“இதை நாம சொன்னா வயசாகிருச்சுன்னு கேலி பண்ணுவாங்க..”
“அப்படியா சொல்கிற..? எனக்கென்னவோ உன்னைப் பார்த்தா வயசாகிட்ட மாதிரி தெரியலையே யமுனா.. கடலோரக் கவிதைகளிலவர்ற ரேகா டீச்சரைப் போலயில்ல இருக்கிற..”
வாசுதேவனின் விழிகளில் காதல் மின்னும்..
“போதும்.. போதும்..” என்று அழகாக வெட்கப்படும் யமுனா மெய்யாகவே அழகானவள்தான்.. வாசுதேவனைப் போலவே அவளும் ஆசிரியப் பணியில் இருப்பவள்..
“டீச்சரம்மா..” என்றுதான் நந்தகுமார் கொஞ்சுவான்..
கால்டாக்ஸி உடனே கிடைக்கவில்லை.. சிறிது நேரம் தாமதமாகும் என்று சொன்னார்கள்.. டாக்ஸி வரும்வரை விமான நிலையத்தின் உள்ளே இருந்த இருக்கைகளில் ஒன்றில் உட்காரலாம் என்று நினைத்தவன் பெட்டியை உருட்டிக் கொண்டு போனான்.. ஏற்கனெவே அங்கே அமர்ந்திருந்தவர்களில் ஒரு பெண்ணின் கால்மீது அவனது பெட்டி மோதி விட்டது.. அவள் முறைத்தாள்.. அவன்..
“ஸாரி..” என்றான்..
“ஐ டோன்ட் வான்ட் யுவர் ஸாரி..” கண்ணில் மை தீட்டியிருந்த அந்த மயில் கனல் கக்கினாள்..
“இட்ஸ் ஓகே..! சொன்ன ஸாரியை வாபஸ் வாங்கிக்கறேன்..” படு கூலாக இவன் சொன்னதில் உக்கிரமாகி முறைத்தாள்..
‘போடி.. நான் பெரிய கேடி..’
அவளது முறைப்பை சட்டை செய்யாமல் இவன் இரண்டு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்தான்.. அந்தப் பெண்ணின் அருகிலிருந்த பெரியவர்..
“வாட் ஹேப்பன் கோபிகா..?” என்று விசாரித்தார்..
‘கோபிகா..???…’
தன்னையுமறியாமல் அவளை இவன் பார்க்க.. அவள் பெரிய அழகி போல முகத்தைத் தூக்கிக் கெத்துக் காண்பித்தாள்..
‘இவளப் பாரு.. இவ அழகை நான் சைட் அடிக்கிறேனாம்.. நினைப்புத்தான்.. நான் உன்னைப் பார்க்கனும்னு பார்க்கலைடி.. உன் பெயரைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்..’
அதைச் சொன்னால் அவளது பெயர் அவனைக் கவர்ந்து விட்டது என்று அதற்கும் இறுமாப்பு கொள்வாள் என்பதில் அவன் உதட்டை இகழ்ச்சியாகச் சுளித்தான்.. அவளது முகம் சுருங்கி விட்டது.
‘அம்மா உவமை சொல்கிறதா இருந்தா.. சுண்டிப் போனக் கத்தரிக்காயைப் போலன்னு சொல்லுவாங்க..’ அவனுக்கு வெகு திருப்தியாக இருந்தது..
‘கோபிகா’ என்ற பெயரில் ஒருத்தியை அவன் அறிவான்.. அவள் கதாநாயகியைப் போன்ற குணமுள்ளவள் அல்ல.. வில்லி..! பக்கா வில்லி.. அவனுடைய கதாநாயகியை அவனை விட்டுப் பிரிப்பதற்கு உடந்தையாக இருந்தவள்..
“பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..
யாவருக்கும் பொது செல்வமன்றோ..
ஏனோ ராதா.. இந்தப் பொறாமை..?
யார்தான் அழகில் மயங்காதவரோ..?”
இந்தப் பாடலைக் கேட்க நேரிடும் போது நந்தகுமாரனின் கண்கள் சிவக்கும்.. அந்தப் பாடலை கோபிகா பாடியபோது நிகழ்ந்த நிகழ்வை நினைத்து ரௌத்ரம் கொள்வான்.. ஆனால் அவள் மட்டுமா அவனுக்குக் கெடுதல் செய்தாள்..? வேறு ஒருவனும் இருந்தானே.. அவன்தானே அனைத்துக்கும் சூத்திரதாரி..
“ஹா.. ஹா..”
சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்த இளைஞன் ஒருவன் செல்போனில் யாரிடமோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான்.. நந்தகுமாரனுக்குள் சன்னமான பொறாமை கிளர்ந்தது..
‘இவன் காதலில் விழுந்திருக்க மாட்டான்..’
காதல் எனும் மாயவலையில் சிக்காதவர்கள் பாக்கியசாலிகள்.. மருந்தேயில்லாத நோய் அது.. உடலை உருக்கும்.. உயிரைக் குறைக்கும்.. நல்லவேளையாக நந்தகுமாரர் நேர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருந்தான்.. அதனால் வாழ்வே மாயம் என்று பாடியபடி நாயைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு கம்பளியைப் போர்த்திக் கொண்டு ‘லொக், லொக்’ என்று இருமியபடி ரோந்து சுற்றவில்லை..
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.