Chapter 02
கர்நாடகா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் மைசூர்..! மாவட்டத்தின் தலைநகரம்.. மாநிலத்தின் இரண்டாவது தலைநகரம் என்று கூடச் சொல்லலாம்.. ஒருவரின் தற்பெருமையைப் பற்றிக் கிண்டலடிப்ப தென்றால்..
‘ஆமாண்டா.. இவன் பெரிய மைசூர் மகாராஜா பாரு.. பீத்திக்கிறான்..’ என்று சொல்வார்கள்..
மாளிகையை வர்ணிப்பதென்றால்.. ‘அடேங்கப்பா.. மைசூர் மகாராஜாவோட அரண்மனை போலயில்ல இருக்கு..’ என்று முகவாயில் கைவைத்து அதிசயிப்பார்கள்..
மைசூரை ஆண்ட உடையார் ராஜவம்சத்தினர் அத்தகைய செல்வச் செழிப்பைப் பெற்றவர்கள்.. விஜயநகரப் பேரரசு வலிமையாக இருந்த காலகட்டத்தில் ‘மைசூர்’ சிற்றரசாக கிருஷ்ண தேவராயரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.. நாளடைவில் விஜயநகரப் பேரரசு உடைந்துவிட.. மைசூர் தனி ராஜ்யமாக உருக் கொண்டு புத்தெழுச்சி பெற்று எழுந்து நின்றது.. 1971-வரை மைசூர் மகாராஜாக்கள் தனிக்காட்டு ராஜாக்கள்தான்..
பழம்பெருமை மிக்க மைசூரின் விமானநிலையம் ஆள் நடமாட்டம் அதிகமில்லாமல் இருந்ததில் நந்தகுமார் ஆச்சரியம் கொண்டான்.. சென்னையின் மீனம்பாக்கம் விமானநிலையம் இப்படியா இருக்கும்..? சளசளவென்ற பேச்சுக்குரல்களும், கலகலப்புமாக எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும்..!
கால்டாக்ஸி வந்து விட்டதாக போன் வந்தது.. விமான நிலையத்தை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு நந்தகுமார் எழுந்து வெளியில் வந்தான்.. காத்திருந்த கால் டாக்ஸியின் பின்பக்க சீட்டில் பெட்டியைக் கடாசி விட்டு டிரைவரின் பக்கத்தில் அமர்ந்தான்.. ஊருக்கு வெளியே அமைந்திருப்பதைப் போலத் தோன்றிய விமான நிலையத்தை விட்டு டாக்ஸி கிளம்பியது.. இருபுறமும் மரங்கள்.. சாலையொன்றும் சிறப்பானதாக இல்லை..
‘ஏரோடிராம் எப்படியிருந்தா என்ன..? மைசூர்ன்னாலே நினைவுக்கு வருவது பிருந்தாவனம்தானே.. ஏரோ டிராமா..?’ நினைவு ஓடியது..
“பிருந்தாவனத்தில் பூவெடுத்து
பெண்ணே உனக்குச் சூடவா..?”
மெலிதாகப் பாடினான்.. டாக்ஸி டிரைவர் ஆச்சரியத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்து விட்டு..
“நீங்க தமிழா..?” என்றான்..
அவனது உவகையில் நந்தகுமாரன் பங்கு கொள்ளவில்லை.. இதில் என்ன இவ்வளவு சந்தோசம் என்ற எண்ணத்துடன்..
“ம்ம்ம்..” என்றான்..
“எங்கே சார்..? நம்ம ஊரான்னு தெரியாம வாயைத் திறந்து பேச முடியல.. கன்னடத்துக்குப் பிழைக்க வந்துட்டோம்.. நாய் வேசம் போட்டாக் குரைச்சுத்தானே ஆகனும்..?”
அவனது உவமானம் நந்தகுமாருக்கு உவப்பானதாக இல்லை.. அவன் தனித்துத் தன்னை மட்டும் சொல்லிக் கொண்டால்கூட அவனைத்தானே சொல்லிக்கொள்கிறான் என்று விட்டு விடலாம்.. ‘பிழைக்க வந்துட்டோம்..’ என்று நந்தகுமாரையும் கூட்டுச் சேர்த்துக் கொள்கிறானே..
“ஒட்டு மொத்தமா நாம இந்தியர்ன்னு நினைச்சுப் பழகனும்.. அதை விட்டுட்டு தமிழர், தெழுங்கர், கன்னடர், மலையாளி, ஹிந்திக்காரங்கன்னு மொழியாலே பிரிஞ்சு நின்னா இப்படித்தான் தோணும்.. ஆமாம்.. அதென்ன நாய் பிழைப்புன்னு சொல்கிறிங்க.. எல்லாப் பிழைப்பும் உசத்தியான பிழைப்புத்தாங்க..” என்று கொடுத்துக் கட்டினான்..
“இதைத்தான் கேணப்பிழைப்புன்னு நம்ம ஊர்ப்பக்கம் சொல்லுவாங்க.. இளிச்சவாயன் தமிழன்னு காட்டிட்டிங்கள்ல..” டிரைவர் கோபப்படாமல் சிரித்தான்..
நந்தகுமாரை அந்தச் சிரிப்பு கவர்ந்தது… மைசூரில் காலடி வைத்தவுடன் காதில் கேட்கும் தமிழ்க்குரல்.. வம்புக்கு வந்தால் சண்டையிடலாம்.. நட்புக்கரம் நீட்டுபவனிடம் எப்படி வாள் வீசுவது..?
“இங்கேயும் கன்னடம், தமிழ்ன்னு தகராறு இருக்கா..?” விசாரித்தான்..
“பெங்களூர் அளவுக்கு இல்லை சார்.. இருந்தாலும் எதுக்கு வம்புன்னு நான் கன்னடத்திலதான் பேசுவேன்..”
“கெட்டிக்காரர்தான்.. பிழைச்சுக்குவீங்க..”
“பிழைச்சுக்கிட்டுத்தானே இருக்கேன்.. அந்தப் பிழைப்புக்குத்தான் இந்தப் பாடு..” டிரைவர் அலுத்துக் கொண்டான்.
“டாக்ஸி ஓட்டறதுன்னா சென்னையிலேயே ஓட்டலாமே.. இங்கே கிடைப்பதைவிட அங்கே அதிகச் சவாரி கிடைக்குமே..”
“கிடைக்கும் சார்.. என்னாலதான் போக முடியல..”
“ஏன்..?”
“சின்ன வயசில பஞ்சம் பிழைக்கன்னு என்னோட அப்பாம்மா இந்த ஊருக்கு வந்துட்டாங்க… முருக்குச் சுட்டு விற்கிற வியாபாரம்தான்.. நான் படிச்சதெல்லாம் இங்கேதான்.. வீட்டில தமிழ்.. வெளியில கன்னடம்.. போதாக்குறைக்கு இந்த ஊருப் பொண்ணக் காதலிச்சுத் தொலைச்சுட்டேன்..”
நந்தகுமார் உதட்டைக் கடித்துக் கொண்டான்.. காதலித்துத் தொலைத்து விட்டால் என்னவெல்லாம் கருமாயங்களை அனுபவித்துத் தொலைக்க வேண்டியிருக்கும் என்று அவன் அறிந்து தொலைத்திருக்கிறானே..
“அப்புறம்..?” அசுவராஸ்யம் போலக் காட்டிக் கொண்டான்.
“அப்புறமென்ன.. ஜாம், ஜாம்ன்னு காதலித்தவளையே மைசூர் சாமுண்டிஸ்வரி கோவிலில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..”
‘கல்யாணம் பண்ணிக்கிட்டானா..?’
நந்தகுமார் ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.. கடந்து போன மரங்களை வெறித்தான்.. தொலைதூர தொடுவானில் தொலைந்து போனக் காதலைத் துழாவி ஏமாந்தது அவனது பார்வை.. டிரைவரின் மீது வந்த பொறாமையைத் துரத்த முயன்று தோற்றான்.. மெல்லிய சோகம் மனதினில் சூழ்வதைத் தவிர்க்க முடியவில்லை.. இனம் புரியாத கோபம் வந்தது..
“பிழைக்க வந்த ஊரில செட்டிலாகியாச்சு.. இதுக்கு எதுக்கு புலம்பித்தள்ளறீங்க..?” சிடுசிடுத்தான்..
டிரைவர் வியப்புடன் பார்த்த பார்வையில் நந்தகுமாருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. தவறுக்கு பிரயாச்சித்தம் போல நட்புடன் சிரித்தான்.. டிரைவரின் முகம் மலர்ந்தது..
“என்னதான் இருந்தாலும் இது நம்ம ஊரு இல்லைங்களே.. அதான் இந்தப் புலம்பல்..” என்றான்..
“மைசூருக்கே மருமகன் நீங்க.. அதை நினைச்சுப் பாருங்க..” நகைச்சுவை போலச் சொன்னான் நந்தகுமார்..
“ஓ.. நீங்க அப்டிக்கா வர்றீங்களா..?” டிரைவர் பெருங்குரலெடுத்துச் சிரித்தான்..
நந்தகுமார் ‘எப்டிக்கா வந்திருக்கேன்..?’ என்று கேட்கவுமில்லை.. டிரைவரின் சிரிப்பில் பங்கெடுத்துக் கொள்ளவுமில்லை.. டிரைவர் பார்க்கும் போது மட்டும் ‘கடனே’ என்று சிரிப்பதைப் போல உதட்டைச் சுழித்து வைத்தான்.. கடுமை காட்டித் தொலைக்கவும் முடியாது.. தேவையில்லாமல் ஒரு சக மனிதனின் மனதை நோகடிக்க நேரும்..
அந்த டாக்ஸி டிரைவர் ஒன்றும் அவனுக்குப் பகைவன் இல்லையே.. அவனுக்கும் இவனுக்கும் என்ன வரப்புத் தகராறு, வாய்க்கால் தகராறா இருக்கிறது..? இதோ.. இன்னும் கொஞ்ச நேரத்தில் அர்ஜீன் தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட் வந்துவிடும்.. வாசலில் இறங்கிக் கொண்டு நந்தகுமார் வழியனுப்பி வைக்கப் போகிறான்.. அதுவரை டிரைவருடன் சிரித்துப் பேசி வருவதால் என்ன குறைந்து விடப் போகிறது..?
தூரத்தில் அபார்ட்மெண்ட்களின் கூட்டம் தெரிந்தது.. உயரமான அடுக்கு மாடிக் கட்டிடங்கள்.. ஒவ்வொன்றிலும் ஒரு தெருவில் இருக்கும் வீடுகளில் குடியிருக்கும் அளவுக்கு மனிதர்கள் குவிந்திருப்பார்கள்.. அந்தத் தெரு முழுவதும் ஒரு கிராமம் என்று கணக்கெடுத்துக் கொள்ளலாமா என்று நந்தகுமார் நினைத்து முடிப்பதற்குள்..
“இந்த ஒத்தைத் தெரு நம்ம பக்க ஒத்தை ஊரு சார்..” என்றான் டிரைவர்..
இவன் நினைத்ததை அவன் சொன்னதில் நந்தகுமார் பல்லைக் கடித்தான்.. இத்தனை நேரமாக கட்டிக் காத்து வந்த பொறுமையைக் காற்றில் பறக்க விட்டு விடக் கூடாது..
“எந்த அபார்ட்மெண்ட் சார்..?”
“பிருந்தாவன்..”
“இதோ இருக்கே..”
வளைவான ஆர்ச்சின் மீது பிருந்தாவன் அபார்ட்மெண்ட்ஸ் என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தன.. உள்ளே குட்டி ஊர்.. வரிசை கட்டி நிற்கும் கட்டிடங்கள்.. பூங்காவைத் தோற்கடிக்கும் பூச்செடிகள்.. புல்வெளிகள்.. அதனருகே அமர சாய்வான மர பெஞ்சுகள்..
“உங்க பெயரென்ன சார்..?”
‘தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போகிற..?’ என்று எரிச்சல் பட்டபடி தன் பெயரைச் சொன்னான் நந்தகுமார்..
“அட..! பிருந்தாவனத்தில் நந்தகுமாரனா..?”
டிரைவர் மகிழ்ந்து போனான்.. இதில் மகிழ்ந்து போக என்ன இருக்கிறது என்ற முறைப்புடன் டாக்ஸியை விட்டு இறங்கினான் நந்தகுமார்..
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.