Chapter 10
நீ நடந்த பாதையிலே..
நான் தினமும் நடந்தேன்..
உன் கால் பதிந்த தடங்களிலே..
என் கண்ணீர் தடம் பதித்தேன்..
காதலாகி.. கசிந்துருகி..
கன்யாகுமரி அம்மனின் கோயிலில் இருந்து மணியோசை கேட்டது.. கோயில் கோபுரத்தின் உச்சியில் தெரிந்த விளக்கு.. ஜீவாவின் மனதிற்கு ஆறுதலை கொடுக்க விழைவது போல். ஒளிர்ந்து கொண்டிருந்தது.. ஜீவா.. தன் முழங்கால்களை மடித்து.. கைகால் கட்டிக் கொண்டு படகில் தலை சாய்த்துக் கொண்டான்..
திருமணத்தை மறுத்த ஜீவாவிடம் டேனியல் போராடிப் பார்த்து விட்டான்.. ஜீவா உறுதியாக திருமணத்தை மறுத்து விட்டான்..
“இந்தக் கருமத்திற்கு அவளிடம் திரும்பவும் பேசித் தொலைடா..”
“எப்படிடா பேசுவது..?”
“திரும்பவும் வாயால்தான் பேசணும்னு உனக்கு வசனம் சொல்லமாட்டேன்.. இப்படி ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தைபோல் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு இருக்காமல்.. அவளிடம் பேச..”
“டேனியலே.. ஜீவாவின் போனைப் பிடுங்கி.. சந்தியாவின் நம்பரை அழுத்தித் தந்தான்..”
மனம் படபடக்க.. போனைக் காதில் வைத்துக் கொண்டு காத்திருந்தான் ஜீவா.. அவள் குரல் கேட்கப் போகும்.. மகிழ்வில் அவனது கண்கள் பனித்தன..
“இப்படியொரு காதலை அவள் மேல் வைத்திருக்கிறானே இதற்கு அவள் தகுதியானவள் தானா.. இவன் மனதைக் கசக்கி காலடியில் போட்டு அவள் மிதித்துக் கொண்டிருக்கிறாள்… இந்த மடையன்… அவளுக்கு பூப்போட்டு பூஜை செய்து கொண்டிருக்கிறான்.”
டேனியல் எரிச்சலுடன் ஜீவாவைப் பார்த்து அதட்டினான்..
“டேய்.. முதலில் கண்ணைத் துடைடா..”
“ஸ்ஸ்.. அவள் பேசப் போகிறாள்.. நீ பேசாமலிரு..”
“என்னவோ.. விக்டோரியா மகாராணியே பேசப் போவது போல இப்படி பில்ட் அப் கொடுக்கிறானே..” டேனியலின் பார்வையில் கனல் தெறித்தது.
“ஹலோ..” சந்தியாவின் குரல் மறு முனையில் ஒலித்ததும்..
“சந்தியா..” என்றான் ஜீவா பரவசத்துடன்..
“உங்களுக்கு ஒரு தரம் சொன்னால் தெரியாதா..? எதுக்கு எனக்குப் போன் பண்ணுகிறீங்க..”
“இல்லை.. சந்தியா.. உன்னிடம் பேச வேண்டும்ன்னு..”
“என்னிடம் பேச என்ன இருக்கிறது..?”
“என்ன சந்தியா இப்படிச் சொல்லி விட்டாய்.. நாம் உட்கார்ந்து பேசலாம்..”
“பேசி..?”
“ஒரு முடிவுக்கு வரலாம்..”
“என்ன முடிவுக்கு வருவது..”
“ஒரு நல்ல முடிவுக்கு வரலாம்..”
“நல்ல முடிவென்றால்..?”
“நம் கல்யாணத்தைப் பற்றித்தான் சந்தியா..”
“நினைத்தேன்.. அங்கே சுத்தி.. இங்கே சுத்தி.. கடைசியில் இங்கேதான் நீங்க வந்து நிற்பீங்கன்னு எனக்குத் தெரியும்..”
“சந்தியா..!”
“பேசாதீங்க.. உங்களோடு பேசவே எனக்குப் பிடிக்க வில்லை..”
“சந்தியா..”
“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனிதருக்கு ஒரேயொரு வார்த்தை.. அவ்வளவுதான் நான் சொல்வேன்.”
சந்தியா போனை கட் பண்ணிவிட்டாள்.. ஜீவாவிற்கு முகம் கருத்து விட்டது.. டேனியல்.. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..
“என்னடா சொன்னாள்..?”
“ஒன்றுமில்லை..?”
“ஏண்டா பொய் சொல்றே..? அதுதான் அவள் பேசியது எட்டு ஊருக்குக் கேட்டதே.. எனக்குக் காதில் விழாமல் போகுமா நல்ல மாட்டுக்கு ஒரு சூடுங்கிறா.. நீயும் கேட்டுக்கிட்டு மரம் போல நின்னுக்கிட்டு இருக்கே..”
“என்னை வேறு என்னதாண்டா பண்ணச் சொல்கிற..?”
“போடி.. நீயும்.. உன் உறவும்ன்னு தூக்கி எறிய வேண்டாமா..?”
“டேனியல்.. இந்தப் பேச்சை விட்டு விடலாம்..”
“அவளை ஒரு வார்த்தை சொல்லி விடக்கூடாதே.. உடனே என்னிடம் முறைத்துக் கொள்வாயே.. உன்னைப் போன்ற ஒரு காதலன் கிடைத்ததற்கு அந்தப் பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. ஆனால் அவளைப் போன்ற ஒரு காதலி கிடைத்ததற்கு நீ பாவம் பண்ணியிருக்க வேண்டும்..”
“என் காதலை அவள் ஏற்றுக் கொள்ளவில்லைன்னா.. அவள் மேல் பழி சொல்வதா..? விடுடா..”
“அவளாகத்தானே உன்னிடம் போனில் பேசினாள்.. அவளுடைய சொந்தக் கதை.. சோகக்கதையை எல்லாம் சொல்லிப் புலம்பினா.. இதை மட்டும்.. உனக்குக் கேட்க விருப்பமா.. விருப்பமில்லையான்னு கேட்டுக்கிட்டா சொன்னாள்..?”
“நானும் அவள் மனசில் என்ன இருக்குன்னு தெரிந்துக்கிட்டு என் காதலைச் சொல்லியிருக்கணும்டா..”
“அவளும்.. உன் மனதில் என்ன இருக்குன்னு தெரிந்துக்கிட்டு பழகியிருக்கணும்..”
டேனியல் சொல்வதில் இருந்த உண்மை.. ஜீவாவுக்கும் தெரிந்து தான் இருந்தது.. ஆனால் அவன் எதுவும் பேசாமல் மௌனம் சாதித்தான்..
“என்னடா வாயடைச்சுப் போய் உட்கார்ந்து விட்ட.. உண்மை சுடுதா..?” என்று பாதி கேலியும்.. பாதி கிண்டலுமாக வினவினான் டேனியல்..
“நீ சொல்வதில் உண்மையிருக்கலாம் டேனியல்.. ஆனால் ஒன்றை மட்டும் நீ நினைவில் வைத்துக் கொள்.. அவளோடு பேசிப் பழகிக் கொண்டிருந்த வரைக்கும் நான் அவ்வளவு சந்தோசமாக இருந்தேன்.. இப்போது ஒரு நடைபிணமாக வாழ்கிறேன்..” ஜீவாவின் வார்த்தைகள் துயரத்துடன் வெளிவந்தன..
“எதைச் சொன்னாலும் அதற்குப் பதில் சொல்லி விடுடா.. அவளை மறக்கப் பார் ஜீவா.. அதுதான் உனக்கு நல்லது.. இப்போது நீயிருக்கும் மனநிலை நீடித்தால்.. உன் ஆரோக்கியம் கெட்டு விடும்மா.. ஜிம் மாஸ்டருக்கு உடல் ஆரோக்கியமும்.. மன ஆரோக்கியமும் நன்றாக இருக்க வேண்டும்.. இரண்டும் மிக மிக முக்கியம்.. அதுதான் உன் தொழிலின் மூலதனம்..” டேனியல் பொறுமையாக நண்பனுக்கு ஆலோசனை சொன்னான்..
“ம்ச்ச்.. அவளில்லாத வாழ்க்கையை வாழ்ந்து நான் என்ன சாதிக்கப் போகிறேன்டா.. என் வாழ்க்கை இவ்வளவு கசப்பானது என்று தெரிந்திருந்தால்.. கருவறையிலேயே நான் இறந்திருப்பேன்.” துக்கத்துடன் ஜீவா சொன்னதும் டேனியல் அதிர்ந்து விட்டான்.
ஜீவானந்தத்தின் முரட்டுத் தோற்றத்தையும் ஆகிருதியையும் பார்த்த எவரும்.. அனுக்குள்ளே.. இப்படி ஒரு மென்மையான இதயம் இருக்கிறது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்..
இப்படிப்பட்ட காதலை சந்தியா புரிந்து கொள்ள வில்லையே என்று டேனியலுக்கு வருத்தமாக இருந்தது.
“குமாரிடம் பேசினாயா..?” என்று மெதுவான குரலில் அவன் வினவினான்..
“இல்லை..” என்றான் ஜீவா..
“ஏன்..? அவன்தானே சந்தியாவிற்கு கார்டியன் போல உதவி செய்து கொண்டிருக்கிறான்.. அவனிடம் நீ இந்த விசயத்தைப் பேசிப் பார்க்கலாமே..”
“இதை எப்படிடா குமாரிடம் நான் சொல்வேன்..?”
“உன் காதலைச் சொல்ல ஏண்டா இப்படித் தயங்குகிறாய்..?”
“குமார் என்னைத் தவறாக நினைத்துவிட மாட்டானா..?”
“அவன் தவறாக நினைக்க இதில் என்ன இருக்கிறது..?”
“அவன்தானே.. சந்தியாவை என்னிடம் அறிமுகப் படுத்தி வைத்தான்..? அவன் அறிமுகப் படுத்தி வைத்த பெண்ணிடம் நான் காதல் சொன்னதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்றே எனக்குத் தெரியவில்லை டேனியல்.. குமாரிடம் சொல்லவும் முடியாமல்.. அவனிடம் என் கஷ்டங்களை வெளிப்படுத்தவும் முடியாமல் கண்ணீரையும் சிந்த முடியாமல் நான் எனக்குள்ளே ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழ்கிறேண்டா.. அதில் நானும் என் சந்தியாவும் மட்டும்தான் இருக்கிறோம்..”
ஜீவா.. ஜிம்மின் வாசலருகே போய் நின்று கொண்டு சூன்யத்தை வெறித்தான்.
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.