Chapter 11
சொல்லால் நீயென்ன சுட்டுவிட்டாய்..
சொல்லில் அதைவடிக்க முடியவில்லை..
ரணக்காய மென்றும் ஆறிவிடும்..
மனக்காயம் எந்நாளும் ஆறாது..
காதலாகி.. கசிந்துருகி..
கடற்கரையில்.. அங்கொருவர்.. இங்கொருவராக இருக்க.. ஜீவா.. கண்களை மூடிக் கொண்டு.. கடந்த காலத்தில் சஞ்சரித்தான்..
டேனியல் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்..
“நீ குமாரிடம் பேசிப் பார் ஜீவா.. உன் காதல் நிறைவேறுவது குமாரின் கையில்தான் இருக்கிறது.. அவன் சொன்னால் நிச்சயம் சந்தியா கேட்டுக் கொள்வாள்..”
“காதல் என்பது தானாக வரவேண்டும் டேனியல்.. சிபாரிசு பண்ணி வரக்கூடாது..”
“அவளிடம் உன் மனதைச் சொல்லி குமார் புரிய வைப்பான் ஜீவா.. அதற்காகவாவது அவனிடம் பேசு..”
டேனியல் வற்புறுத்தி விட்டுச் சென்றுவிட்டான்.. ஜீவா.. ஜிம்மிற்குள் சுற்றி வந்தான்.. மனம் வலித்தது.. சந்தியா பேசிய வார்த்தைகள் நெஞ்சைச் சுட்டன..
‘நல்ல மாட்டிற்கு ஒரு சூடு..’ மனம் நொந்தான் ஜீவா.
‘சூடு வைக்கவா நீ காத்திருக்கிறாய்.. சந்தியா..? உன்னை ஒரு முறை பார்த்து விட்டால் கூட எனக்கு அது போதும்.. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும்.. ஒரு நொடியில் வீழ்த்தி விடுவேன்.. எந்தப் பகையையும் வென்று வெற்றி வாகை சூடுவேன்.. உன்னை பார்த்துப் பேச யாராவது எனக்கு உதவி செய்தால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்களை நான் மறக்க மாட்டேன்.. உன்னை நினைத்து நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க.. நீ மட்டும்.. உன் நாவால் என்னைச் சுட்டு விட்டாயே நீ பேசிய பேச்சுக்கள் என்னை நிழல் போல் துரத்தி வருகின்றன.. சந்தியா.. உன்னால் உண்டாக்கப் பட்ட காயங்கள் ஒருநாளும் ஆறாது.. நீ வந்து ஆற்றிவிட்டால்தான் ஆறும்.. வருவாயா.. உன் மனத்தை தருவாயா..? என் மேல் இரக்கம் காட்ட மாட்டாயா..?’
ஜிம்மின் உள்ளே இருந்த எப்.எம்.மில்..
“காதல் வந்தால்.. என்னிடம் சொல்லு..
உயிரோடிருந்தால் வருகிறேன்..”
என்ற பாடல் ஒலித்தது.. ஜீவா ஒரு நிமிடம் நின்றான்..
“மாஸ்டர்..” என்று ஒருவன் அழைக்கவும்.. தொழிலைக் கவனிக்கச் சென்று விட்டான்..
அன்று மாலை.. என்றும் இல்லாத திருநாளாக குமார் ஜீவாவைத் தேடி வந்தான்..
“வா.. குமார்..” ஜீவா.. குமாரை நேரடியாகப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்தான்..
“எப்படியிருக்க ஜீவா பார்த்து ரொம்ப நாளாச்சு..” குமாரின் விழிகள்.. அவனை ஊடுருவின..
“ம்ம்.. ஏதோ இருக்கேன்..” விரக்தியுடன் பதில் சொன்னான் ஜீவா..
“ஏன்.. எதையோ பறி கொடுத்ததைப் போல இருக்கிறாய் ஜீவா..” குமார்.. நேராக ஜீவாவைப் பார்த்தான்.
‘என் நிம்மதியைப் பறிகொடுத்து விட்டேன்..’
மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல முடியாமல் தலையைத் தொடங்கப்போட்டுக் கொண்டு குமாரின் எதிரே அமர்ந்தான் ஜீவா..
இருவரும்.. எதுவும் பேசிக் கொள்ளாமல் மௌனமாக இருந்தனர்.. குமார் மெதுவாக மௌனத்தைக் கலைத்தான்.
“டேனியல் போன் பண்ணியிருந்தான்..”
இதை ஜீவா எதிர்பார்த்திருந்தான்.. திடீரென்று குமார் வந்ததையும்.. அவனது குற்றம் சாட்டும் பார்வையையும் கண்டவுடனேயே அவனுக்கு இது டேனியலின் வேலை என்று புரிந்து விட்டது..
குமார் சொன்னதற்கு மறுமொழியால் எதைச் சொல்வது என்று தெரியாமல் தவிப்புடன் தரையைப் பார்த்தான் ஜீவா..
“பெண்பிள்ளை போல ஏண்டா தலையைக் குனிந்து கொள்கிறாய்..?” குமாரின் கேள்வி காட்டமாக வந்தது..
“குமார்..”
“டேனியல் எல்லாவற்றையும் சொல்லி விட்டான்.. உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை ஜீவா..”
“கடைசியில் நீயும் என்னைப் புரிந்து கொள்ள வில்லையா..?”
“என்னிடம் இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட நீ சொல்லவில்லையே ஜீவா..”
“மறைத்து விட்டேன் குமார்.. உன் முகம் பார்த்து இதைச் சொல்ல முடியாமல்.. போலியாக நடித்து விட்டேன்..”
“அவளிடம் காதலைச் சொல்லுவதற்கு முன்னால்.. என்னிடம் கலந்து பேசவேண்டும் என்று ஏன் உனக்குத் தோன்றவில்லை ஜீவா..”
அதற்கு மேல் தாங்க மாட்டாதவனாக ஜீவா கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து குமாரைப் பார்த்தான்..
“என்னை என்ன செய்யச் சொல்கிறாய்.. சொல்லு நீ சொல்வதை நான் செய்கிறேன்.. காதலுக்கு தூது எதற்கு குமார்..? என் மனதை நானேதான் அவளிடம் தெரியப் படுத்த வேண்டும் என்று நான் நினைத்தது தவறா..?”
“அவள் மனதில் என்ன இருக்கிறதுன்னு தெரிய வேண்டாமா..?”
“ஓ.கே.. நான் அவள் மனதில் இல்லையென்றே வைத்துக் கொள்.. இனி அவள் மனதில் எனக்கொரு இடம் கொடுக்கலாமில்லையா..? காதலிப்பதை என்னவோ.. நான் கொலைக்குற்றம் செய்து விட்டதைப் போல் அவள் பேசுகிறாள்.. என்னை வெறுக்கிறாள்.. என் முகம் பார்க்காமல் விலகிப் போகிறாள்.. இது சரியா..?”
“உனக்குக் காதலைச் சொல்ல உரிமையிருப்பது போல.. அந்தக் காதலை மறுப்பதற்கு.. சந்தியாவுக்கும் உரிமை இருக்கிறது இல்லையா..? அவளுடைய கோபத்தை அவள் எப்படி வெளிப்படுத்துவாள்..? இப்படித்தானே அவளால் வெளிப்படுத்த முடியும்..?”
“கோபப்படட்டும்.. நான் வேண்டாமென்று சொல்ல வில்லை.. என்னைத் திட்டட்டும்.. ஏன் நாலு அடிகூடக் கொடுக்கட்டும்..
ஆனால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாளேடா.. அதைத்தான் என்னால்.. தாங்கிக் கொள்ள முடியவில்லை..”
“ஜீவா.. சந்தியா உன்மீது குற்றம் சொல்லி எனக்குப் போன் எதுவும் பண்ணவில்லை.. நேற்றுக் கூட அவளைப் பார்த்தேன்.. உன்னைப் பற்றித் தவறாய் எதுவும் சொல்ல வில்லை..”
ஜீவாவின் கண்கள் இதைக் கேட்டதும் மின்னின.. அவனுக்கு ஆழ் மனதில் மிகுந்த சந்தோசம் உண்டானது.. அவனுக்கும் சந்தியாவுக்கும் இடையில் நடக்கும் இந்த காதல் யுத்தத்தைப் பற்றி அவள் குமாரிடம் ஒருவார்த்தை கூடச் சொல்லவில்லையென்றால் அதற்கு என்ன அர்த்தம்..?
இந்த யுத்தம் ஜீவாவுக்கும் சந்தியாவுக்கும் இடையில் நடக்கும் தனிப்பட்ட யுத்தம். அதில் வேறு யாரும் தலையிட முடியாது என்றுதானே அர்த்தம்..?
அவன் மனம் கொஞ்சம் நம்பிக்கையின் பக்கம் சாய்ந்தது.. அவன் மனம் விட்டுக் குமாரிடம் பேச தைரியம் கொண்டான்..
“என்னை என்ன செய்யச் சொல்கிறாய் குமார்.. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. அவளை என்னால் மறக்க முடியவில்லை.. ஒருதரமாவது நான் பார்த்துப் பேச வேண்டும்.. உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரியாகிவிடும்.. அதற்கு மட்டும் நீ உதவி செய்..”
ஜீவாவின் கோரிக்கையைக் கேட்ட குமார் யோசனையில் ஆழ்ந்தான்.. பின்னர் நிமிர்ந்து ஜீவாவைப் பார்த்தான்..
“நீ சந்தியாவை போர்ஸ் பண்ணக் கூடாது ஜீவா.. உன்னைப் பற்றி மட்டும் நீ நினைக்காதே.. அவளைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பார்.. நம்மை நம்பி வந்தவர்களை நாம் கைவிடக் கூடாது.. நமக்காக வாழாமல் பிறருக்காகவும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.. சந்தியாவை நீ உண்மையிலேயே காதலிக்கிறாய்தானே.. கொஞ்ச நாள் காத்திரு.. அவள் நிச்சயம் உன்னைத் தேடி வருவாள்.. உன் காதலை ஏற்றுக் கொள்வாள்..”
குமாரும்.. ஜீவாவின் காதலுக்கு உதவி செய்யவில்லை..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.